Thursday, September 2, 2010

கடவுள் பெயரில் லஞ்சம்! -அரசு ஊழியர்களின் புது டெக்னிக்!

லஞ்சம் வாங்கும் போது கையும் களவு மாக கலெக்டர் அலுவலக ஊழியர் சிக்கிக் கொண்டார், காவல்துறை அதிகாரியும் சிக்கிக் கொண்டார். வருவாய்த்துறை அதி காரியும் சிக்கிக் கொண்டார் என தினந் தோறும் எதாவது ஒரு அரசுத்துறை ஊழியர் லஞ்சத்தில் சிக்கிக் கொள்ளும் செய்தி தினசரிகளில் தினமும் வருவதால், அரசு ஊழியர்கள் மீது பொதுமக்களுக்கு இருக்கும் நம்பிக்கை தேய்ந்து கொண்டே போகிறது.

இந்த சூழ்நிலையில் "சீனிகிழங்கு தின்ன பன்றி, செவி அறுத்தாலும் நிக்குமா?' என்ற கிராமத்து பழமொழிக்கேற்ப கையூட்டு வாங்கிய அதிகாரிகளின் கை சும்மா இருக்கு மா? மீண்டும், மீண்டும் வாங்க தூண்டுவதால் விஜிலென்ஸ் கையில் சிக்காமல் இருக்க நம்மூர் லஞ்ச அதிகாரிகள் புதிய டெக்னிக் மூலம் லஞ்சத்தை வாங்குகிறார்கள். அந்த டெக்னிக்தான் என்ன?

சம்பவம்:-1

குமரி மாவட்ட மின்சார வாரியத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கிறார் பக்தி பரவசமான அந்த உயர்ந்த அதிகாரி. தடிக் காரன்கோணம் பகுதியைச் சேர்ந்த தனியார் எஸ்டேட் முதலாளிகள் சிலர், எஸ்டேட் டுக்கு மின்சாரம் வேண்டி அந்த அதிகாரியை சந்தித்தனர். அதிகாரியோ வழக்கம் போல், மின்சாரம் கொண்டு செல்வதில் சிரமம் இருப்பதாகக் கூறியதால் இறுதியில் அந்த எஸ்டேட் முதலாளிகள் ""உங்களுக்கு வெட்ட வேண்டியதை வெட்டுறோம்'' என்ற ஒரு பிட்டைபோட, அதை எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த அதிகாரியோ, ""நான் அதை என் கையால தொடமாட்டேன். ஒரு கோயிலை சொல்லுறேன். அந்த கோயிலில் இரண்டு லட்சம் ரூபாய் நன்கொடையாக கட்டிவிட்டு ரசீதை கொண்டு வாருங்கள். உடனே மின்சாரத்துக்கு ஏற்பாடு செய்கிறேன்'' என்று கூறியிருக்கிறார். இதற்கு எஸ்டேட் முதலாளிகளும் சம்மதம் தெரிவித்தனர்.

இந்த விஷயம் இன்னொரு அதிகாரி மூலம் நம் காதுக்கு எட்ட, உடனே நாம் அந்த அதிகாரி கூறிய பூதப்பாண்டி அருகேயுள்ள அந்த அம்மன் கோயில் நிர்வாகியை துருவினோம். நிர்வாகி சொன்ன தகவல் பலத்த அதிர்ச்சியாக இருந்தது.

""விஜிலென்ஸுக்கு பயந்து அந்த அதிகாரி நேரிடையாக லஞ்சம் வாங்க மாட்டார். இப்படி கோயிலில் கட்ட சொல்லிவிடுவார். நாங்களும் பணத்தை வாங்கிட்டு நன்கொடை ரசீது கொடுத்துவிடுவோம். அதன்பிறகு அந்த அதிகாரி யிடம் பணத்தைக் கொடுக்கும்போது அவர் ஒரு லட்சத்துக்குக் கீழ் இருந்தால் 20 பர்சன்டேஜும், அதற்கு மேல் இருந்தால் 30 பர்சன்டேஜும் கோவிலுக்கு தந்து விடுவார்.

இப்படி பல லட்சம் ரூபாய்க்கு இங்கிருந்து ரசீது கொடுத்து இருக்கிறோம். அவர் புண்ணியத் தில் எங்கள் கோயிலின் கட்டிடங்கள் உயருது'' என்றார்.

சம்பவம்:-2

வரதட்சணை கேஸ் என்றால் அங்கு "தட்சணை' கொடுத்தால் போதும். எல்லாம் சரியாகிவிடும். கடற்கரை யோர அந்த மகளிர் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் அமைதிக்கு பெயர் கொண்ட அந்த பெண் எஸ்.ஐ.யை கையும் களவுமாகப் பிடிக்க அந்த பகுதி வர்த்தக நண்பர்களும், விஜிலென்சும் பொறி வைத்தனர். அதை எப்படியோ மோப்பம் பிடித்து விட்டார் அந்த எஸ்.ஐ.

பாலியல் ரீதியாக கொடுமைக்கு ஆளான ஒரு புது மணப்பெண் தனது கணவர் மீது புகார் கொடுக்க எஸ்.ஐ.யிடம் வந்தார். வசதி படைத்த அந்த புது மணமகனிடம் இருந்து கரன்சியை கறக்கவும் வேண்டும், விஜிலென் சிடம் மாட்டிக் கொள்ளவும் கூடாது என யோசித்தார் எஸ்.ஐ.

அதற்காக அந்த பெண் எஸ்.ஐ. மேற்கொண்டது கோயில் பாலிசி. மணமகனிடம், ""நீ செய்த பாவம் தொலைய வேண்டுமானால் எனது ஊரில் இருக்கும் பிள்ளையார் கோயிலுக்கு 50 ஆயிரம் ரூபாய் நன்கொடை கொடு, உன் மீது நடவடிக்கை எடுக்கமாட்டேன்'' என்றதும், மணமகனும் உடனே அந்த பணத்தை கோயிலில் சென்று கட்டி விட்டார்.

இதில் கோயிலுக்கு 15 ஆயிரம் ரூபாய் போக மீதியை எஸ்.ஐ. வாங்கிச் சென்றார். பாதிக்கப்பட்ட புது மணப்பெண் உடல் முழுக்க பாலியல் கொடுமை தழும்போடு கதறிக் கொண்டிருக்கிறார்.

சம்பவம்:-3

லஞ்சம் தலைவிரித்தாடும் பத்திரப் பதிவுத்துறையை சொல்லவே வேண்டாம். துறை மந்திரியின் சொந்த தொகுதியில் இருக்கும் மலையடிவார பதிவு அலுவலகத்தில் ரியல் எஸ்டேட் அதிபர்களின் ஆதிக்கம்தான் அதிகம். ஆனால் அதன் பதிவாளர், ரியல் எஸ்டேட் அதிபர்களின் தில்லுமுல்லுகளை கண்டுகொள்ளாமல் இருக்க, கோயில் பாலிசியைத்தான், ஒரு பத்திரப் பதிவு எழுத்தர் மூலம் முறைப்படுத்தி வருகிறார். தோவாளையில் உள்ள ஒரு தேவசம்போர்டு கோயிலிலேயே லஞ்ச பணத்தை செலுத்தி ரசீது வாங்கிக் கொள்கிறார்கள். நம் விசாரணையில் கோயில் நிர்வாகி ஒருவர் இதற்கென்றே போலி ரசீது அடித்து வைத்து இருப்பதாக தெரிய வந்தது.

இன்னும் பல அதிகாரிகளும் இதேபோல் கோயில் பாலிசியை பின்பற்றி வருகிறார்கள். பாதிக்கப்படும் மக்களோ, ""தெய்வத்தின் பெயரால் இந்த புது டெக் னிக்கை பயன்படுத்தும் லஞ்ச அதிகாரிகளுக்கு தெய்வம் நிச்சயம் கூலி கொடுக்கும்'' என்கி றார்கள்.

No comments:

Post a Comment