Saturday, September 18, 2010

பசங்க பாஸ்!


அரை டவுசர் பசங்களின் லந்து, அலப்பரை, நக்கல், நையாண்டி, வாலுத்தனம் இதற்கெல்லாம் வீட்டில் உதை கிடைத்துதான் பார்த்திருக்கிறோம். நாட்டில் விருது கிடைக்கும் என்று எதிர்பார்த் திருக்கிறோமா? மேலே குறிப்பிட்ட அத்தனை அடா வடிகளும் கொண்ட "பசங்க' படத்திற்கு 4 தேசிய விருது களை அறிவித்திருக்கிறது மத்திய அரசு.

பசங்களின் விளையாட் டுத்தனமான செயல்பாடு ஒவ்வொன்றிலும் சினிமா ஹீரோ, வில்லன், ஹீரோயின் ஆகியோர் ஊடுருவியிருப்பதை பசங்களையே பாத்திரமாக வைத்து, சினிமா மூலமாகவே சொன்ன படம்தான் சசிகுமார் தயாரிப்பில்-அறிமுக இயக்குநர் பாண்டிராஜின் பசங்க. "அடுத்தடுத்த ரீலில் நாங்க வளர்ந்திடுவோம்னு நினைக்காதீங்க. கடைசிவரைக்கும் இப்படியேதான் இருப்போம்' என்று படத்திலேயே ஓப்பனாக டயலாக் வைத்து, இது சிறுவர்கள் நடித்த சிறுவர் படம் என்பதை உணர்த்தி, ரசிகர்களைக் கவர்ந்தது பசங்க. அலப்பரை பார்ட்டிகளைப் பெற்றோரும் ஆசிரியர்களும் சரியாக ட்யூன் செய்தால், போட்டிப் போட்டுக்கொண்டு படிப்பிலும் மற்ற அம்சங்களிலும் மாணவர்கள் ஆர்வம் காட்டுவதுடன், பகை மறந்து நண்பர்களாக கைகோர்ப்பார்கள் என்பதையும் சுவாரஸ்யமான திரைக்கதை மூலம் பசங்க படம் அழுத்தமாகப் பதிவு செய்தது.

ஹீரோ அன்புக்கரசு ஐ.ஏ.எஸ். (ஸ்ரீராம்), வில்லன் ஜீவா சி.எம். (கிஷோர்) இருவரும் அசத்திய அசத்துக்கு சிறந்த குழந்தை நட்சத்திரங்களுக்கான தேசிய விருதுகளைப் பெறுகிறார்கள். இயக்குநர் பாண்டிராஜுக்கு சிறந்த வசனகர்த்தா (திரைக்கதை) விருது. படத்தை தயாரித்த சசிகுமாருக்கு சிறந்த தமிழ்ப்படத்திற்கான விருது. ஒரு புதிய முயற்சிக்கு வணிக ரீதியாகவும் விருதுகளுக்கான தேர்விலும் வெற்றி கிடைப்பது, திரையுலகத்திற்கு பெரும் நம்பிக்கை யளிக்கும் அம்சம். பசங்க அந்த நம்பிக்கையை புதியவர்களுக்கு அளித்துள்ளது.

இந்த ஆண்டுக்கான தேசிய விருது பட்டியலில் வேறு தமிழ்ப்படங்கள் எதுவும் இல்லாத நிலையில், மலையாளப் படமான பழசிராஜாவுக்காக நம்ம இளையராஜாவுக்கு சிறந்த இசையமைப் பாளருக்கான (பின்னணி இசை) தேசிய விருது கிடைத்திருப்பது தமிழர்களுக்கு ஆறுதலையும் பெருமையையும் தந்துள்ளது. சிறந்த நடிகராக அமிதாப்பிற்கு விருது வாங்கித் தந்துள்ள "பா' படத்திற்கும் ராஜாதான் இசையமைப்பாளர். மத்திய அரசின் தேசிய விருது பட்டியலில் பாலிவுட்டின் கொடியே படபடக்கும் இந்த ஆண்டில், தமிழுக்கு கிடைத்திருக்கும் விருதுகள் அபூர்வமான குறிஞ்சிப்பூ, அதிசயமான அத்திப்பூ வகைகள்.

No comments:

Post a Comment