Thursday, September 9, 2010

""அம்மன் சொன்னா குழந்தை கொடுப்பேன்!'' -பூசாரியின் புது டெக்னிக்!""கல்யாணமாகிப் பல வருடங்களாகக் குழந்தை பாக்கியம் இல்லையா? என்ன குழந்தை வேண்டும்? ஆணா, பெண்ணா? தீராத நோயால் துன்பப்படு கிறீர்களா? கிரகம் சரியில்லையா? வாருங்கள்! தஞ்சை மாவட்டம் அதிராமப்பட்டினம் வண்டிப் பேட்டை காமாட்சி அம்மன் கோயிலுக்கு வாருங்கள்! காமாட்சி அம்மன் கடைக்கண் காட்டுகிறாள். பூசாரி குண சேகரன் பூர்த்தி செய்கிறார்!'' என்ற பூசாரி குணசேக ரனின் பிட் நோட்டீஸ் விளம்பரங் களுக்கு நல்ல பலன் கிடைத்தது. பூசாரி குணசேகரனைத் தரிசிக்கக் கூட்டம் கட்டி ஏறுகிறது.

வண்டிப்பேட்டை வயல் வெளியில் சின்னஞ்சிறிய காமாட்சி அம்மன் கோயில் தென்னங்கீற்றால் ஆன முன் மண்டபக் கொட்டகை.

காலை 11 மணிக்கு அம்ம னுக்குப் பூசையைத் தொடங்கி னார் பூசாரி குணசேகரன். தீப ஆராதனை முடிந்ததும் தென் னங்கீற்றுக் கொட்டகையில் ஓரமாக உட்கார்ந்தார். ""உங்கள்ல யார் யார் என்ன வரத்தை அம்ம னிடம் கேட்கப் போறீங்க? ஒவ் வொருத்தரா வாங்க!'' -பக்தர்களை அழைத்தார்.

வரிசையில் முன்னால் நின்ற சிவா என்பவர் போனார். ""அய்யா எனக்குத் தீராத வயித்துவலி. செய்யாத வைத்தியம் பாக்கி இல்லை. மெட்ராசுக்கு கூட போய் பார்த்துட்டு வந்துட்டேன். தீரலை!'' உட்கார்ந்து சட்டையைத் தூக்கி வயிற்றைக் காட்டினார்.

""பேனா பேப்பர் இருக்கில்ல... ஒரு சீட்ல இங்கிலீஷ் வைத்தி யம்னும், இன்னொரு சீட்ல மூலிகை வைத்தியம்னும் எழுதி சுருட்டி அம்மன் காலடிகிட்ட போட்டு பக்தியோட கும்பிடுங்க. அப்புறம்... ரெண்டு சீட்ல ஒண்ணை மட்டும் எடுத்துட்டு வாங்க!'' என்றார் பூசாரி. சொன்னபடியே செய்தார் சிவா. "மூலிகை வைத்தியம்' என்று எழுதப்பட்ட சீட்டை எடுத்து வந்து பூசாரியிடம் கொடுத்தார்.

சில மூலிகைப் பொடிகளோடு, வேப்பிலையைச் சேர்த்து அரைத்து, அதில் அம்மனின் திருநீறையும் கலந்து சிவாவுக்கு கொடுத்த பூசாரி, ""இதுமாதிரி 15 நாள் சாப்பிடுங்க. அம்மா குணப்படுத்தி விடுவாள். தட்சணை எதுவும் வேணாம். விருப்பம் போல உண்டியல்ல போட்டுட்டுப் போங்க!'' என்றவர் அடுத்த பக்தரை அழைத்தார்.

""சின்னதா போட்டோ ஸ்டுடியோ வச்சிருக்கேன். வருமானம் சரியில்லை...!'' என்றபடி தயா என்ற பக்தர் சென்றார்.

""இதே தொழிலைச் செய்யலாம், வேற தொழில் செய்யலாம்னு ரெண்டுல எழுதிப் போட்டுக் கும்பிட்டு ஒரு சீட்டைக் கொண்டு வாங்க!'' என்றார்.

"இதே தொழில்' என்ற சீட்டு வந்தது. ""பயப்பிடாதீங்க. தொழில் நல்லா டெவலப்பாகும்... இந்தாங்க அம்மன் படம்... ஸ்டுடியோவில் வச்சு நம்பிக்கையோட கும்பிடுங்க!'' அவரை அனுப்பிவிட்டு, மூன்றாவதாக நின்ற நம்மை அழைத்தார். ""உங்களுக்கு என்ன பிரச்சனை...?'' கேட்டார்.

""நீங்க கொடுக்கிற சீட்டால பயன்பெற்ற வர்கள் யாராவது உண்டா? சொல்ல முடியுமா?'' என்றோம். நம்மை ஏற இறங்கப் பார்த்த பூசாரி ""நீங்க யாரு?'' என்றார்.

""நான் நக்கீரன் நிருபர்!''

""நீங்க கேட்டதுக்கு நான் பதில் சொன்னா சரியாயிருக்காது. இங்கே வந்திருக்கிற பக்தர்கள்ட்ட கேளுங்க. சொல்லுவாங்க!'' பக்தர்களைக் கைகாட்டினார்.

வரிசையில் அமர்ந்திருந்த காமாட்சி அம்மன் பக்தர்களிடம் சென்றோம்.

சங்கரானந்தம்-லதா : கல்யாணமாகி 6 லருஷமா புள்ளையில்லை. எல்லா இங்கிலீஷ் வைத்தியமும் பாத்திட்டுதான் கடைசியா இங்கே வந்தோம். சீட்டெழுதிப் போட்டோம். அம்மன் அருளால, பூசாரியய்யா தந்த மூலிகை மருந்தால ஒரே வருஷத்தில இதோ இந்தப்பய பொறந்தான் அந்த நன்றி மறக்காமத்தான் வாராவாரம் இங்கே வர்றோம்.

கணபதி (50 வயது) : என் வயித்தில பெரிய கட்டி. வலியோ வலி. தஞ்சை டாக்டர் முரளி, இது புற்றுநோய்... ஆபரேஷன் செய்யலாம். செஞ்சா எதுவும் நடக்கலாம். முத்திப் போச்சுனு சொன்னார். உயிர்ப் பயத்தில அழுதுகிட்டிருந்த என்னை இங்கே கூட்டி வந்தாங்க. சீட்டுப் போட்டு பாத்துவிட்டு, பயப்படாம ஆபரேஷன் பண்ணிக்க சரியாயிடும்னு சீட்டு வந்தது. ஆபரேஷன் செஞ்சுக்கிட்டேன். இப்ப எந்த பயமும், வலியும் இல்லை.

ஆறுமுகம் : என் தங்கச்சி ஜெயந்தியை காரைக்குடியில கட்டிக் கொடுத்தோம். 38 வயசாச்சு. குழந்தை இல்லை. இங்கே வந்து போன பிறகு இப்ப குழந்தை பிறந்திருக்கு. அதான் அம்மாகிட்ட விபூதி வாங்க வந்தேன்.

கோவிந்தம்மாள் (கீழத் தோட்டம்) : எம் மகள் ஜெயலட்சுமிக்கு 29 வயசு. கல்யாண மாகலை. இங்கே வந்து சீட்டெழுதிப் போட் டேன். வீட்டுக்குப் போ... உன் மகளுக்கு மாப்பிள்ளை வீடு தேடி வருவார்னு சீட்டுல வந்துச்சு. அடுத்த வாரம் கல்யாணம், பூசாரியய் யாட்ட அந்த நல்ல சேதியைச் சொல்லிட்டுப் போகலாம்னு தான் வந்தேன்.

பஞ்சவர்ணம் : என் புருஷனுக்கு கால்ல பெரிய கட்டி... அதிராமபட்டினம் ஆஸ்பத்திரி யில பார்த்தோம். புண்ணுதான் பெரிசாச்சு. காலு எலும்பே தெரிஞ்சுச்சு... இங்கே வந்தோம். எழுதிப் போட்டுப் பார்த்து பூசாரி மருந்து தந்தாக. இப்ப புண்ணு ஆறிருச்சு. என் புருஷன் வேலைக்கு போறாக!

சுப்பிரமணி-தேவிகா தம்பதியும், கோபு-உமா தம்பதியும் தங்கள் ஆண் குழந்தைகளோடு வந்திருந்தார்கள். காமாட்சியின் கிருபையும், பூசாரியின் மருந்தும் தங்களுக்கு வாரிசைக் கொடுத்ததாக சொன்னார்கள்.

பக்தர்களை சந்தித்துவிட்டு கிளம்பத் தயாரானபோது, நம்மிடம் வந்த பூசாரி குணசேகரன் ""என்கிட்ட எந்த மாயமந்திரமும் இல்லை. எந்தச் சக்தியும் இல்லை. அம்மனிடம் வேண்டி சீட்டு எழுதிப் போட்டு கேட்கிறேன். அம்மன் அனுமதி கொடுத்தா... குழந்தைவரம் உள்பட எல்லாம் நடக்கும். ஏதோ எனக்கு தெரிஞ்ச மூலிகைகளை அரைச்சுக் கொடுக்கிறேன். மக்கள் என்னை நம்பி வரலை. காமாட்சி அம்மனை நம்பி வர்றாக...!'' என்றபடி நம்மை வழியனுப்பி வைத்தார்.

ஊருக்குள் நாம் சந்தித்த இளைஞர்களோ ""பூசாரி குணசேகரனுக்கு சித்த வைத்தியம் தெரியும். அம்மன் பேரைச் சொல்லி அந்த வைத்தியத்தைச் செய்றாரு... சாதாரணமா சித்த வைத்தியம்னு சொன்னா யாரும் வரமாட்டாங்க. அம்மன் அருள்னா பயபக்தியோடு வருவாங்களே... அதுதான் டெக்னிக். அந்த அம்மனாலும், பூசாரியாலும் எங்க ஊர் வளருது... ஊருக்கு பேரும் புகழும் கூடுது!'' என்றார்கள்.

No comments:

Post a Comment