Thursday, September 9, 2010

"தமிழக டீச்சர்தான் எங்கள் தெய்வம்' நெகிழும் கேரள கிராமம்!


"கல்வி அறிவு பெற்ற முதன்மை மாநிலம் எங்கள் மாநிலம்தான்' என சேட்டன்களும், சேச்சிகளும் பெருமிதப்பட்டுக் கொள்வார்கள்.

அப்படிப்பட்ட கேரளாவிலேயே... அந்த மாநிலத்தின் தாய்மொழியான மலையாளத்தை அறியாத கிராமம் ஒன்றும் இருக்க... அந்த கிராம மக்களுக்கு மலையாளம் சொல்லிக் கொடுத்து மலைப்பை ஏற்படுத்தியிருக்கிறார்... தமிழ்நாட்டில் இருந்து சென்ற சிந்து...

அந்த சிந்துவை எழுத்தறிவித்த இறைவனாக ஒரு மாவட்டமே கையெடுத்துக் கும்பிட்டுக் கொண்டிருக்கிறது.

கேரள இடுக்கி மாவட்டத்தில் "கட்டப்பன்'யில் இருந்து 18 கி.மீ. தூரத்தில் இருக்கிறது அந்த அட்டபாடி கிராமம். மரம், செடி, கொடிகள் என புடைசூழ பச்சை பசேலாக காட்சி தரும் அந்த கிராமத்தில் 350-க்கு மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. காட்டு பயிர்களை விவசாயமாக ஏற்றுக் கொண்ட அந்த கிராமத்தில், கேரள அரசால் ஒரு பள்ளிக்கூடம் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கூடம் இருந்தும் அங்கிருக்கும் ஒருவருக்குக் கூட கல்வியறிவைக் கேரள அரசால் கொடுக்க முடியவில்லை. அதற்குக் கார ணம் அந்த மக்களுக்குத் தெரிந்த ஒரே மொழி மலைவாழ் மக்கள் பேசுற எழுத்து உருவமே இல்லாத ஒரு மொழி. இதனால் பாடம் சொல்லிக் கொடுக்கப் போன வாத்தியார்களுக்கு இம்மக்களின் மொழியும், இந்த மக்களுக்கு வாத்தியார்கள் பேசிய மலையாள மொழியும் தெரியவில்லை. இதனால் மாநில தாய்மொழியான மலை யாள மொழியை அந்த மக்களிடம் கொண்டு செல்ல அரசு எடுத்த எல்லா முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தது.

எல்லாம் தெரிந்த படித்தவர்களால், கல்வியறிவு இன்றி நாகரீகமின்றி காணப்பட்ட அங்குள்ள சிறுமிகளுக்கும், பெண்களுக்கும் பாலியல் கொடுமை மட்டும் வழக்கமாக நடந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் 8 ஆண்டுகளுக்கு முன் இடுக்கி மாவட்டத்துக்கு மருமகளாக நம்மூர் நெல்லை மாவட்ட வள்ளியூர் தமிழ்ப்பெண்... 27 வயது சிந்து போனார். அதன்பிறகு அந்த கிராமத்தில் நடந்ததை அவரே நம்மிடம் விவரிக்கிறார்.

""கேரள அரசின் மக்கள்தொகையில் இந்த கிராம மக்களின் எண்ணிக்கையும் உள்ளது. அவர்களுக்கென்று அரசு ஒரு நடுநிலைப் பள்ளியை மட்டும் கட்டி கொடுத்திருக்கிறது. இவர்களுக்கு தாய்மொழியான மலையாள மொழி தெரியாததால் எந்த அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் அந்த கிராமத்தின் பக்கமே போவது கிடையாது. பள்ளிக்கூடத் துக்கு ஆசிரியர்களும் வருவது இல்லை. பனிஷ்மெண்ட் டூட்டியில் வரும் ஆசிரியர்கள் கூட அந்த மக்கள் பேசும் மொழியை கேட்டு அன்றைக்கே தலையை பிய்த்துக் கொண்டு ஓடி விடுவார்கள்.

இவர்களை எப்படி சரிப்படுத்துவது என்று கேரள கல்வித்துறை கைபிசைந்து கொண்டிருந்த நிலையில்...

இந்த கிராமத்தை நேரில் சென்று பார்த்த நான் அந்த மக்களுக்கு எப்படியாவது கல்வியறிவு ஊட்ட வேண்டும் என்ற வைராக்யம் எடுத்துக் கொண்டேன். தமிழில் எம்.எஸ்.சி. பி.எட்., படித்த நான் அரைகுறையாக தெரிந்த மலையாள மொழியை கணவர் ஷாஜன் உதவியுடன் முழுமையாக கற்றேன். அந்த மக்களுக்கு நான் ஆசிரியையாக பணியாற்ற அரசிடம் கோரிக்கை வைத்தேன். கேரள அரசோ... நான் தமிழ்ப் பெண் என்பதால் மறுத்து விட்டது. இருந்தும் என்னுடைய முயற்சியை விட்டு விடாமல் இரண்டு ஆண்டுகளாக அந்த மக்க ளோடு பழகி அவர்கள் பேசும் மொழியைத் தெரிந்து கொண்டேன். உதாரணத்துக்கு மரச்சீனி கிழங்கு என்றால் அவர்கள் மொழியில் தவளை என்றும் அரிசி என்றால் உயிர் என்றும் அர்த்தம் இருந்தது.

பின்னர் அந்த கிராமத்து குழந்தைகளுக்கும் இளைஞர்களுக் கும் மலையாள மொழியைக் கற்றுக் கொடுத்தேன். இதற்காக கேரள அரசின் பாட புத்தகங்களை சொந்த செலவில் வாங்கினேன். 3 ஆண்டுகளில் 350 குழந்தைகள் மலையாள மொழியை பேசத் தொடங்கினார்கள். இதனைப் பார்த்த கேரள கல்வித்துறை அதிகாரிகள் ஆச்சர்யத்தோடு தமிழச்சியான என்னை அந்தப் பள்ளியிலேயே ஆசிரியராக அமர வைத்தனர். தற்போது 4-ம் வகுப்பில் 250 குழந்தைகள் படிக்கிறார்கள். கடந்த ஆண்டு 80 சதவீத தேர்ச்சியை கொடுத்து இருக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை இப்போது தான் கேரளா முழுமையான கல்வி அறிவு பெற்ற மாநிலமாக மாறியுள்ளது. இந்த பெருமை என்னை பெற்றெடுத்து ஆளாக்கிய தமிழுக்குத்தான் சேர வேண்டும். இந்த குழந்தைகளின் கல்விக்காக இரவு, பகல் உழைக்க வேண்டுமென்ற காரணத்தினால் குழந்தை பெறுவதைக் கூட தள்ளி வைத்துவிட்டேன்'' என்றார் உற்சாகமாக.

மாநிலமொழியான மலையாளத்தில் பேசி அசத்தும் அட்டபாடி கிராம மாணவர்களிடம் பேசினோம். ""தமிழ்நாட்டிலிருந்து வந்து எங்களை இந்த அளவுக்கு மாற்றிய அந்த டீச்சர்தான் எங்களுக்கு தெய்வம். என்றைக்கும் எங்களோடுதான் இருக்க வேண்டும். நாங்கள் படித்து வேலைக்கு போவதை அந்த டீச்சர் பார்க்க வேண்டும். சிந்து டீச்சர் மூலம் தமிழை யும் நாங்கள் விரைவில் கற்றுவிடுவோம். எங்கள் ஊருக்கே அந்த சிந்து டீச்சரின் பெயரை சூட் டப் போகிறோம்'' என் றார்கள் நெகிழ்ச்சியாய்.

கல்வியாளர்களும், இடுக்கி மாவட்ட மக்க ளும் சிந்துவின் புகழை எப்போதும் பாடிக் கொண்டே இருக்கிறார்கள்.

தமிழகத்தோடு எப்போதும் வம்பு செய்துகொண்டிருக்கும் கேரள அரசு தமிழர் களின் உணர்வை இனி யேனும் உணருமா?

No comments:

Post a Comment