Monday, September 13, 2010

யுத்தம் -நக்கீரன் கோபால் (87)


மாணவன் பக்தவத்சலத்தை வீரப்பன் கொலை செய்த வழக்கில், எனக்கு சர்ச் வாரண்ட் கேட்டு போலீசார் மனுதாக்கல் செய்திருந் தனர். நீதிபதி ஜஸ்டின் டேவிட் முன்பாக இந்த மனு விசாரணைக்கு வந்தது. போலீசாரின் உள்நோக்கத்தை அவர் அறிந்திருந்தார். ஆனாலும், சட்டப்படிதானே அவரால் செயல்படமுடியும்! அரசுத் தரப்பில் தாக்கல் செய்த மனுவில் டெக்னிக்கல் மிஸ்டேக் இருக்கிறது என்று சொல்லி, மனுவைத் திருப்பி அனுப்பினார். அரசுத்தரப்பு அந்த மனுவில் உள்ள குறைகளைக் களைந்து, புதிய மனு தாக்கல் செய்யவேண்டும். நாம் மீண்டும் ஒரு முறை மூச்சு விடுவதற்கு நேரம் கிடைத்தது.

சர்ச் என்று வந்தால் நமக்கு சொந்தமான எந்த இடத்தையும் போலீசார் விட்டுவைக்கமாட்டார்கள் என்று வழக்கறிஞர்கள் சொன் னார்கள். நக்கீரன் அலுவலகம், என் வீடு, தம்பி காமராஜின் வீடு, நக்கீரன் தம்பிகளின் இருப்பிடங்கள், நக்கீரனுக்கு தொழில்ரீதியாக உதவுவோரின் அலுவலகங்கள், நக்கீரன் நலன்விரும்பிகளின் வீடுகள் என அனைத்தையும் 2001 முதலே போலீசார் கண்காணித்துக்கொண்டுதானே இருக்கிறார்கள். அதனால், சர்ச் என்ற பெயரில் அவர்கள் எங்கே வேண்டுமானாலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நுழையலாம். இதுதான் நமது வழக்கறிஞர்களின் எச்சரிக்கையாகவும் இருந்தது.

போலீசார் ரெய்டுக்காக வரும்போது நம் பக்கத்தில் வழக்கறிஞர்கள் இருந்தால்தான், காக்கிகளின் சட்டமீறல்களைத் தடுக்கமுடியும். அதனால் அட்வகேட் பெருமாள் ஜூனியர்கள் சி.டி.பெருமாள், கீதாஞ்சலி, ராஜலட்சுமி, அட்வகேட் ராஜகோபால், அவருடைய ஜூனியர்கள் பரசுராமன், பிரபு, சைதாப்பேட்டை அட்வகேட் பாபு ஆகியோரிடம் போலீசார் சர்ச் வாரண்ட் பற்றி நாம் சொன்னதும், "கவலைப்படாதீங்க... எந்த நேரத்தில் போலீஸ் வந்தாலும் நாங்க அங்கே வந்திடுவோம்' என்று உறுதியும் நம்பிக்கையும் கலந்த குரலில் சொன்னார்கள்.

உளவுப் பிரிவான ஐ.எஸ்.சைச் சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர் எனது செயலாளர் தம்பி சிவக்குமாரிடம் பேசிக்கொண்டிருந்திருக்கிறார்.

""கர்நாடகா முன்னாள் மந்திரி நாகப்பாவை வீரப்பன் கடத்திக்கிட்டுப் போனப்ப, அவரை யாருக்கும் தெரியாம மீட்கப் போறோம்னு தமிழ்நாடு அதிரடிப்படை காட்டுக்குள் நுழைஞ்சதே.. அப்ப நடந்த சண்டையில், அதிரடிப்படை போலீஸ்காரர் வேல்முருகன் குண்டு பாய்ஞ்சு இறந்துட்டாரு. அது சம்பந்த மான டாக்குமென்ட்ஸ் நக்கீரன்கிட்டே இருக்கிறதா எங்களுக்கு இன்ஃபர்மேஷன் வந்திருக்குது. அதை நீங்க வெளியிடப் போறதாகவும் தகவல் வந்திருக்குது. நீங்க அந்த டாக்குமென்ட்ஸை வெளியிடுறதுக்கு முன்னாடி அதை எடுத்திடணும்ங்கிறதுக்காகத்தான் எங்க போலீஸ் தரப்பில் சர்ச் வாரண்ட் கேட்குறாங்க''.


-இதுதான் தம்பி சிவக்குமாரிடம் ஐ.எஸ். போலீஸ்காரர் சொன்ன தகவல். சிவக்குமார் எந்த ரியாக்ஷனும் காட் டாமல் அமைதியாகத் திரும்பிவிட்டார். அதிரடிப்படை நுழைந்து நடத்திய தாக்குதலால்தான் மாஜி மந்திரி நாகப்பாவின் உயிர் பறிபோனது என்பதை அவரது குடும்பத்தினரின் வாக்குமூலம் வாயிலாகவே நக்கீரன் வெளியிட்டது. ஆனால், "கர்நாடக காட் டுப்பகுதிக்குள் தமிழ்நாடு அதிரடிப்படை நுழையவேயில்லை' என்று ஜெய லலிதாவும் தேவாரமும் முழுப்பூசணிக் காயை சோற்றில் மறைக்கப் பார்த் தார்கள். இப்போது நாகப்பா மட்டு மில்லை, அதிரடிப்படையின் போலீஸ்காரர் ஒருவரே உயிர்ப்பலியாகியிருக்கிறார் என்பதும் அந்தத் தகவல் , காட்டைவிட்டு வெளியே கசியாதபடி அரசாங்கத் தரப்பு கவனமாக இருந்துள்ளது என்பதும், நக்கீரனிடம் ஆதாரம் இருக்கிறது என்ற பயத்தில் அதிகாரத்தைப் பயன்படுத்தி, சர்ச் வாரண்ட் வாங்க முயற்சிக்கிறது என்பதும் நமக்குத் தெரியவந்தது.

இந்து பத்திரிகையின் கோர்ட் நிருபரான சுப்ரமணியம், "நீங்க அந்த டாக்குமென்ட்டை வைத்து, வேல்முருகன் எங்கேன்னு ஹைகோர்ட்டில் ஹேபியஸ் கார்பஸ் பெட்டிஷன் போடப்போறீங் களாமே?' என்று சிவக்குமாரிடம் கேட்க, சிவக்குமார் என்னிடம் சொல்ல, நான் "அப்படி எந்த ஐடியாவும் இல்லை' என்று கூறியதை சிவக்குமார் பதிலாக சொல்லி யிருக்கிறார். ஆட்சியாளர்களின் பயம் தான் பத்திரிகையாளர்களுக்குத் தகவ லாக வந்து, நம்மிடம் கேள்வியாக வெளிப்பட்டிருக்கிறது. நம் மீது பொய் கேஸ் போட்ட அரசாங்கம், தன் தரப்பு உண்மையை மறைப்பதற்காக எந்தவித எல்லைக்கும் செல்லத் தயாராக இருந்தது.

இந்த பரபரப்பான நேரத்தில், தினமலர், தினகரன் பத்திரிகைகளில் ஒரு செய்தி வெளியானது. "வீரப்பனுக்கு பொதுமன்னிப்பு வேண்டுமாம். கேசட் அனுப்பியிருக்கிறான்' என்பதுதான் அந்த செய்திக்கானத் தலைப்பு. அதைப் படித்ததும் எனக்கு, காட்டில் வீரப்பனுடன் பேசிக்கொண்டிருந்த பழைய சம்பவங்கள் ஞாபகத்துக்கு வந்தன.

ராஜ்குமார் காட்டில் பிணைக் கைதியாக இருந்தார். மீட்பு முயற்சியின் மூன்றாவது கட்டப் பயணம். நமக்கு நாமே கொஞ்சம் கர்வப்படக்கூடிய அளவுக்கு வலிமையான முறையில் பேச்சுவார்த்தையை நடத்திக்கொண்டிருந்தேன். "வீரப்பனும் அவனுடன் இருந்த தமிழ் அமைப்பினரும் சிறையில் இருக்கும் தங்கள் கூட்டாளிகளை விடுவிக்க வேண்டும்' என்று நிபந்தனை விதித்திருந்தனர். "அவர்களை விடுதலை செய்து, ராஜ்குமாரையும் அவருடன் கடத்தப் பட்டவர்களையும் மீட்டு வரலாம்' என நினைத் திருந்த நேரத்தில்தான், சிறையில் உள்ளவர்களை விடுவிக்க உச்சநீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டது. அடுத்த மூவ் என்னவென்று தெரி யாமல் எல்லோருமே கை பிசைந்து கொண்டிருக் கிறோம்.

கர்நாடகத்திலும் தமி ழகத்திலும் கொந்தளிப்பான நிலைமை. அந்தக் கொந்தளிப்பு, வீரப்பனிடம் தாக்கத்தை ஏற்படுத்தி, பிணைக் கைதியாக இருக்கும் ராஜ்குமாருக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்திவிடக்கூடாது என்ற எச்சரிக்கையோடு 8 நாட்களில் 20 முறை சமாதானப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து கொண்டிருந்தேன்.

ராஜ்குமாரையும் அவருடன் இருப்பவர்களையும் மீட்டுச் செல்ல வேண்டுமென்றால் என்ன செய்யலாம் என்று வீரப்பனும் சேத்துக்குளி கோவிந் தனுமே ஒரு வழியைச் சொன்னார்கள். தூதுவராக இருந்த நான், இந்த வழி முறை பற்றி வெளியில் சொல்லக்கூடாது என்று வீரப்பன் சொல்லியிருந்ததால், இப்போதுதான் அதுபற்றி சொல் கிறேன்.





""ஆசிரியரே.. எனக்கு ஜனாதிபதி மூலம் பொதுமன்னிப்பு குடுக்குறதா இருந்தா, பெரியவரையும் மத்தவங்களையும் விடுதலை பண்றேன். அதுக்கு முயற்சி பண்ணிட்டு வா.''

""உங்களுக்குப் பொதுமன்னிப்பு தர்றது பற்றி 96-ஆம் வருஷத்திலிருந்து ஆலோ சனை நடந்துக்கிட்டிருக்குது. ஆனா, உங்க கூட இருக்கிற தமிழ் அமைப்பைச் சேர்ந்தவங்க மேலே தீவிரவாதிகள்னு போலீஸ் முத்திரை விழுந்திருக்குது. அவங்களுக்கு பொதுமன்னிப்பு கிடைக் காது. அவங்களை விட்டுவிட்டு உங்களுக்கு மட்டும் பொதுமன்னிப்பு கேட்கணுமா?''

""என்னோட இந்த ஐடியா பற்றி அவங்களுக்குத் தெரியாது. நீயும் சொல்லாதே.. ஜனாதிபதி மூலமா பொதுமன்னிப்புக்கு ஏற்பாடு பண்ணிட்டு வா. அவங்களை நான் சரிபண்ணிக்கிறேன். நான் சொன்னா கேட்டுக்குவாங்க. இதோ பாரு ஆசிரியரே... நீ முயற்சி பண்ணி முடியாம போயிடிச்சின்னா, இதைப் பற்றி வெளியிலே சொல்லக்கூடாது. அவங்களுக்கு இப்படி ஒரு முயற்சி நடந்தது தெரியக்கூடாது. என்ன புரியுதா?'' -என்றான் வீரப்பன்.

ஜனாதிபதி மூலம் பொதுமன்னிப்பு என்கிற முயற்சியை எப்படி தொடங்குவது என்று யோசித்துக்கொண்டிருந்தேன். மீட்பு முயற்சி தொடர்பாக கர்நாடக முதல்வர், மந்திரிகள், அதிகாரிகள்தான் தமிழ்நாட்டுக்குப் போகிறார்கள் என் றும், தமிழனான வீரப்பன் கன்னடரான ராஜ்குமாரை கடத்தியிருக்கிற நிலைமையில், தமிழ்நாட்டிலிருந்து ஒருவர் கூட பெங்களூருக்கு வரவில்லை என்ற வருத்தம் கன்னடத்தரப்பில் இருப்பதாகத் தகவல் வந்ததும், கலைஞர் என்னை பெங்களூருக்கு அனுப்பியதையும், எனக்கு துணையாக ரஜினி வந்ததையும் முன்பே விவரித்திருக் கிறேன்.

ரஜினியோடு பெங்களூரு போனபோது, முதல்வர் கிருஷ்ணாவிடம் ஜனாதிபதி மூலம் வீரப்பன் பொதுமன்னிப்பு கேட்டது பற்றி நானும் ரஜினியும் சொன்னோம். உச்சநீதிமன்றம் கொடுத்த தடையைத் தொடர்ந்து, வீரப்பன் விவகாரத்தில் டெல்லியின் பார்வையும் கோணமும் வேறுமாதிரியாக இருந்ததால், பொதுமன்னிப்பு கோரிக்கை எடுபடவில்லை. அப்போது முடியாமல் போனது, இப்போதாவது கிடைக்குமா என்று எதிர்பார்த்து வீரப்பனிடமிருந்து கேசட் வந்திருக்கலாம் என்று பத்திரிகைச் செய்தியைப் படித்ததும் நினைத்தேன்.

அந்த ஆட்சியிலேயே கிடைக்காமல் போன பொதுமன்னிப்பு, இந்த ஆட்சியில் எப்படி கிடைக்கும்? வீரப்பனுக்கு இது தெரியாதா என்ன என்று நினைத்துக்கொண்டேன். நான் பழைய சம்பவங்களை நினைத்துக் கொண்டு நண்பர் ஜெயராஜ் வீட்டு மாடியில் உள்ள சின்ன அறையில் இருந்தேன். போலீசாரோ என்னையும் நக்கீரனையுமே நினைத்துக் கொண்டிருந்தார்கள். தேடும் படலத்தில் ரொம்பவும் தீவிரமாக இருந்தது காவல்துறை.

தமிழ்நாடு முழுவதும் 2000 போலீசார் இதே வேலையாக இருந்தார்கள். நான் எங்கே இருப்பேன் என்று சல்லடை போட்டுத் தேடிக்கொண்டிருக்கும் விவரம் தெரிந்தது. நக்கீரன் அட்டைப்படத்திற்காக கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் செய்கிற இடத்தையும்கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை. அங்கே நுழைந்து நான் இருக்கிறேனா என்று தேடிப் பார்த்திருக்கிறார்கள். அங்கே இல்லை என்றதும் அவர்கள் சென்ற இடம் நமது ஆடிட்டர் மோரீஸின் அலு வலகம்.

""நக்கீரன் கோபால் வந்தாரா?'' - மிரட்டும் தொனியில் கேள்வி வெளிப்பட்டிருக்கிறது.

""இங்கே வரலை.''

""மூணு அட்டெம்ப்ட் பண்ணிட்டோம். உங்க ஆளு தப்பிச்சிட்டாரு. அடுத்த முறை விடுவதா இல்லை'' - பல்லைக் கடித்தபடி சொல்லியிருக்கிறார் ஒரு போலீஸ் அதிகாரி. நான் அவர்களிடம் சிக்கினால், என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்பதுபோல அவரது குரல் இருந்திருக்கிறது.

ஆடிட்டர் மோரீஸ் எப்படியோ என் நம்பரைத் தெரிந்துகொண்டு லைனுக்கு வந்தார். ""அண்ணே... போலீஸ் ரொம்ப தீவிரமா இருக்குது. பாண்டிச்சேரி வரைக்கும் ஈ.சி.ஆர். ரோட்டில் செக்கிங் நடக்குது. அதே மாதிரி என்.ஹெச்.45-லும் செக்கிங் பலமா இருக்குது. கவனமா இருங்க.''

நான் ரொம்பவும் எச்சரிக்கையோடுதான் இருந்தேன். ஆனால், எத்தனை நாட்களுக்கு இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தைத் தொடரமுடியும்? ஏன் ஓடி ஒளியவேண்டும்? நேரடியாகப் போலீசை எதிர்கொண்டால் என்ன? எனக்குள் தொடர்ச்சியாக எழுந்த கேள்விகளால் அட்வகேட் பெருமாளையும் ப.பா.மோகனையும் தொடர்புகொண்டேன்.

""போலீஸ்கிட்டே சரண்டரானா என்ன?''

-நான் இப்படி கேட்பேன் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ரொம்பவும் யோசித்தார்கள். ""சீனியரிடம் டிஸ்கஸ் செய்வோம்'' என்றனர்.

சீனியர் கே.எஸ்ஸிடம் அவர்கள் இதைப் பற்றி டிஸ்கஸ் செய்தபோது, சீனியர் கேட்ட கேள்வி.

""கோபால் சரண்டரானா, அடுத்து என்ன நடக்கும் தெரியுமா?''

-(யுத்தம் தொடரும்)

No comments:

Post a Comment