Monday, September 13, 2010

தெப்பக் குளத்தில் விஷம்!

கொடிய நோய்களில் இருந்து கடலூர் மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்றால், உடனடியாக என்ன செய்ய வேண்டும்?

கடலூர் மக்களை அகதிகளாக அறிவித்து மாவட்டத்தை விட்டு உடனே கடத்த வேண்டும் அல்லது கடலூர் மாவட்ட மண்ணை, தண்ணீரை, காற்றைக் கொடிய விஷமாக்கிக்கொண்டிருக்கும் கெமிக்கல் கம்பெனிகளை இழுத்து மூடவேண்டும்.

அந்த அளவுக்கு விஷம் கடலூர் மக்களைத் தாக்கிக்கொண்டிருக்கிறது.

கடலூர் மாவட்டத்தில், இளநீரைப்போல சுவையாக, சுத்தமாக இருந்த தண்ணீர் இப்போது முழுக்க முழுக்க விஷமாகி வாய்க்கால்களில், குளம் குட்டைகளில் தேங்கி நிற்கிறது. அந்த நீரை தொட் டாலே கை கால்களில் படை, சொறிசிரங்கு வந்து விடுகிறது. வாய்ப்புண் இல்லாத ஆடு, மாடுகளே இங்கே இல்லை. ""காற்றிலும் மண்ணிலும் நீரிலும் அதிக மாசு ஏற்பட்டுவிட்டது. இங்குள்ள உயிரினங்கள் கொடிய நோயால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது'' என்று கடலூருக்கு வந்த ஐ.நா.சபை உணவுப் பாதுகாப்பு ஆய்வாளர் குழு எச்சரித்துவிட்டுப் போயிருக்கிறது.

அருவருப்போடு தனது கைகளை நம்மிடம் காட்டிய சங்கிலிக்குப்பம் விவசாயி லட்சுமணன், ""இந்த வாய்க்கால் தண்ணியில தெரியாத்தனமா கையை வைத்துவிட்டேன். பாருங்க... படையும் புண்ணும் தழும்பும்... என்னை மாதிரி எத்தனையோ பேர் வெளியே போயிட்டு இந்தத் தண்ணியில கால் கழுவி காணக்கூடாத இடத்திலெல்லாம படையும் பத்தும் புண்ணும்தான். மக்களையும் மக்கள் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க வேண்டிய அரசாங் கம்... அந்த ரசாயனக் கம்பெனிகளுக்கு பாதுகாப் பாக இருக்கிறதே...'' -வேதனையைக் கொட்டினார்.

கடலூர் சிப்காட்டில் 35 ரசாயனக் கம்பெனி கள். இவைகளில் 16 கம்பெனிகள் ரசாயனத் தின் விலை வீழ்ச்சியால் மூடப்பட்டன. எஞ்சிய 19 கம்பெனிகள் செயல்படுகின்றன. குறிப்பாக காசன், டான்பாக், ஏசியன் போன்ற கம்பெனிகள் ரசாயனக் கழிவுகளை வாய்க்கால் களில்தான் திறந்துவிடுகிறார்கள். இந்தக் கழிவு குளம் குட்டைகளில் தேங்கி நின்று பாதிப்பை உண்டாக்கும். தேங்கிநின்று பாதிப்பை உண் டாக்குவதோடு, நிலத்தடி நீரையும் விவசாய நிலங் களையும் பாழ்படுத்திக்கொண்டிருக்கிறது.
""இங்குள்ள விவசாயிகள், மீனவர்கள், தென்னங்கீற்று பின்னி விற்பவர்கள் என்று அத்தனை பேர் உடலிலும் பாதிப்பை உண் டாக்கிவிட்டது இந்த ரசாயனக் கழிவுநீர் கலப்படம். இது மட்டுமா? மண்ணும் தரம் இழந்துவிட்டது. ஏக்கருக்கு 60 டன் விளைந்த கரும்பு இன்றைக்கு 30டன் கூட விளைவதில்லை. இந்த விஷக்கழிவால் பலர் புற்றுநோயாளி களாக நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தச் சங்கிலிக்குப்பம் தெப்பக்குளத் தோட கதியைப் பாருங்க. பல நூறு வருஷமா பால் மாதிரி இருந்த தண்ணி இப்ப கன்னங் கரேல்னு கெட்டுப் போச்சு. ஆடு, மாடு இறங்கி னால் கெட்டுப்போகும்னு பாதுகாத்த கோயில் குளத்துல இப்ப மனிதர்கள் இறங்கி முகம் கழுவ முடியலை. அவ்வளவு ஸ்மெல் வருது. கையை நனைச்சாலே அரிப்பு... பத்து, படைன்னு வருது. ரசாயனக் கம்பெனிக் கழிவுகள் கலந்ததால ஏற்பட்டதுதான் இது'' என்கிறார் சங்கிலிக்குப்பம் ராமலிங்கம்.

கடலூர் சிப்காட்டில் உள்ள கம்பெனி கள் எல்லாம் சேர்ந்து "கூட்டு கழிவுநீர் வடி கால் சுத்திகரிப்புத் திடடம்' என்று ஒரு பிளாண்டை வைத்திருக்கிறார்கள். பிளாண்ட் இருக்கிறது, அதில் ஒரு மோட்டார்கூட ஓடவில்லை.

""சுற்றுப்புறச் சூழலை, காற்றை, தண்ணீரை, மண்ணை கெடுத்துக் கொண்டிருக்கும் உங்கள் கம்பெனிகளை உடனே மூடுங்கள்'' என்று உத்தரவிட்டது தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம். கம்பெனி முதலாளிகள் கோர்ட்டுக்குப் போனார் கள். அரசின் தடைக்கு இடைக்காலத் தடை வாங்கினார்கள். எந்த இடைஞ்சலும் இல்லாமல் ரசாயனக் கழிவுகளை வாய்க்கால்களில் திறந்து விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

மத்திய சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு வாரியமும், டில்லி ஐ.ஐ.டி.யும் தனது ஆய்வாளர்களை கடலூர் பகுதிக்கு அனுப்பி ஆய்வு செய்து ""அபாயகரமான நிலையில் உள்ளது இந்தப் பகுதி. இந்தியாவில் மாசுபட்ட மாவட்ட வரிசையில் கடலூர் மாவட்டம் 16-வது இடத்தில் இருக்கிறது'' என்று அறிக்கை கொடுத்திருக்கிறது.

""மக்களின் உயிரோடும் உடலோடும் விளையாடும் இந்த ரசாயனக் கம்பெனிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முடியாதா?'' -கடலூரின் பிரபல வழக்கறிஞர் ராஜ்குமாரிடம் கேட்டோம்.

""மக்களின் உயிருக்கு ஆபத்தை, தொற்றுநோயை பரவச் செய்யும் அந்தத் தொழிற்சாலைகளின் மீது சட்டப்பிரிவு 268, 269-ன்படி காவல்துறையே நேரடியாக நடவடிக்கை எடுக்க முடியும். இதை விட்டுவிட்டு, இந்தக் கம்பெனிகளின் கழிவுநீரால் பாதிக்கப்படும் மக்கள் மீதே வழக்குப் பதிவு செய்கிறார்கள் என்றால்... எவ்வளவு தவறான செயல்'' என்கிறார் ராஜ்குமார். கடலூர் மக்களின் கடுமையான குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் சாசன் கம்பெனி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கச் சென்றோம்.

""அதிகாரிகள் இல்லை. இருந்தாலும் யாரையும் பார்க்க முடியாது'' என்று அலட்சியமாகச் சொன் னார் அங்கிருந்த ஒரு அதிகாரி.

No comments:

Post a Comment