Monday, September 20, 2010

இருட்டு சென்னையின் முரட்டு முகம்!



சமீபத்தில் எப்போதாவது இரவு 11 மணிக்கு மேல் சென்னையின் பிரதான

சாலைகளில் பயணித்து இருக்கிறீர்களா? சீறி வரும் கார்கள்... மரண வேகத்தில் மிரட்டும் பைக்குகள்... நடுரோட்டு ரகளைகள் எனக் கண்ணில் படும் கலவரங்கள் ஈரக்குலையை நடுங்கவைக்கின்றன. 'காவல் துறையின் இரவு நேர ரோந்துப் பணியே இல்லாமல் போய்விட்டதா?' என எண்ணுகிற அளவுக்கு, இரவு கவிழத் தொடங்கினாலே, சென்னையின் க்ரைம் ரேட் எகிறத் தொடங்குகிறது. பணத்துக்குப் பஞ்சம் இல்லாத உயர்தர வர்க்கம்தான் இரவு நேர சென்னையின் இதயத்தை உலுக்கி வருகிறது.



சமீபத்தில் சென்னை அண்ணா சாலையில் உள்ள பிரபல ஹோட்டல் வாசலில் நடந்த தகராறு இது. இரவு 12 மணி வரை அந்த ஹோட்டலில் ஆட்டம் போட்டுவிட்டு, காரில் வெளியே வரும் மூன்று இளைஞர்கள், மிதமிஞ்சிய போதையில் சாலையில் ஏறும்போதே பைக் ஒன்றின் மீது மோதினார்கள். பைக் மனிதர் தடுமாறி விழ, காரில் இருந்து ஜன்னல் கண்ணாடியை இறக்கிய ஒருவன், 'டேய், என் காரோட ரேட் தெரியுமா உனக்கு?' எனக் காறித் துப்பிவிட்டுப் போகிறான். 'நடப்பது சென்னையில்தானா?' என அந்த பைக் மனிதரால் நம்பக்கூட முடியவில்லை. தடுமாறி எழுந்தவர், தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்துக்குப் போய் நடந்த சம்பவத்தைச் சொல்ல... காரின் நம்பர் குறித்து விசாரித்தவர்கள், 'பெரிய இடத்து விவகாரம்... பிரச்னை பண்ணாமல் கிளம்புப்பா!' என விரட்டி இருக்கிறார்கள்.

அண்ணா சாலை சம்பவம், ஒரு சாம்பிள்தான். கடற்கரைச் சாலை, வள்ளுவர் கோட்டம், வடபழனி 100 அடி ரோடு, தி.நகர் உள்ளிட்ட சென்னையின் இதயத் துடிப்பு ஏரியாக்களில் இரவு நேரங்களில் இப்படிப்பட்ட ராவடிகள் அதிகமாகிவிட்டன. இதைச் சுட்டிக்காட்டிப் பேசிய போலீஸ் அதிகாரி ஒருவர், ''வெளியே சொன்னால் வெட்கக்கேடு... நம்பர் பிளேட் இல்லாத கார்களில் வலம் வருகிற அண்ணா நகர் இளைஞர்கள் கும்பல் நள்ளிரவில் தங்கள் நகர்வலத்தை ஆரம்பிக்கிறார்கள். கூத்தும் கும்மாளமும் ஒரு புறம்... டிக்கியில் ஸ்பீக்கர்கள் கட்டிய காரில் அவர்கள் பயணிக்கும்போது, மியூஸிக் ஓசை வீதிகளை அதிரவைக்கிறது. கேட்டால், 'கார் ஓனர் யார் தெரியுமா?' என்று சிரித்தபடி கேட்டுவிட்டு தமிழகத்தின் வி.வி.ஐ.பி-யின் பெயரைச் சொல்லி மிரட்டுகிறார்கள். அதைக் கேட்டு நொந்துபோகும் போலீஸார், ஒதுங்கி வழிவிடுகிறார்கள்.

சென்னையில் பெரிய இடத்துப் பையன்களின் பெயர்களைச் சொல்லி 50-க்கும் மேற்பட்ட கும்பல்கள் சென்னையை ஆட்டிப் படைக்கின்றன. பிரபல மருமகன் ஒருவர் இரவு மூச்சு முட்டக் குடித்துவிட்டு கார் ஓட்டி, சாலையில் படுத்துக்கிடந்த நான்கு பேர் மீது ஏற்றிவிட்டார். அடுத்த நிமிடமே, அங்கே போலீஸ் ஆஜரானது. ஆனால், காயம்பட்டவர்களை ஆஸ்பத்திரியில் சேர்க்கும் வேலையை மட்டுமே போலீஸால் செய்ய முடிந்தது. அதை விபத்து எனப் பதிவு செய்யக்கூட முடியவில்லை.

புதிய தயாரிப்பாளர், சமீபத்தில் தி.நகரில் நண்பர்களுக்கு ட்ரீட் கொடுத்தார். முழு போதையில் வெளியே வந்த அவரின் நண்பர்கள், என்ன ஜாலியோ... சாலையில் நடந்து போன அப்பாவிகளை விரட்டி விரட்டி அடித்திருக்கிறார்கள். விஷயம் தெரிந்தும், போலீஸ் அந்தப் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. காரணம், ஏற்கெனவே அந்த வி.ஐ.பி-யின் விவகாரத்தை விசாரிக்கப்போனவர்கள் எங்கே தூக்கி அடிக்கப்பட்டார்கள் என்பது காக்கி வட்டாரத்துக்குத் தெரியும்.

அரசியல் மட்டுமல்ல... சினிமா உலகத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் பலத்தை நிரூபிக்கும் களமாக இரவு நேரத்தைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். சமீபத்தில் சென்னையில் இரவு நேரத்தில் நடந்த 20-க்கும் மேற்பட்ட தகராறுகள், சினிமாப் புள்ளிகளால் ஏற்பட்டவை. ஜிலுஜிலு நடிகர், மோசடி விவகாரத்தில் சிக்கிய முன்னெழுத்துப் புள்ளி, பாட்டுக்கார வித்தகர், புதிதாக தயாரிப்பு பக்கம் வந்திருக்கும் தாதா உள்ளிட்டவர்களின் சமீபத்திய வம்பு வழக்குகள் போலீஸ் ரெக்கார்டில் குறிக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால், மேலிடத்து நெருக்கடிகளுக்கு பயந்தே அவர்களை போலீஸ் கைவைப்பது இல்லை!'' எனச் சொன்னார் ஆதங்கம் அடங்காமல்.

சென்னையின் இருட்டு முகத்தை ஏற்கெனவே உணர்ந்துவைத்து இருந்த வழக்கறிஞர் ஒருவர், ''ஒரு நாள் இரவு ஒரே ஒரு ஏரியாவுக்கு மட்டும் என்னுடன் வாருங்கள்... அங்கு நடப்பதை நீங்களே நேரில் பார்த்தால்தான் புரியும்!'' என நெல்சன் மாணிக்கம் சாலை வழியே அழைத்துப் போனார். சுரங்கப் பாதையைத் தாண்டிய உடனேயே சாலையின் இரு ஓரங்களிலும் நின்றுகொண்டு இருந்த கார்களைக் காட்டியவர், ''ஒவ்வொரு காருக்குள்ளும் உற்றுப் பார்த்தால்தான் உள்ளே என்ன நடக்கிறது என்பது தெரியும். இந்தப் பக்கம் காரில் வரும்போது, தெரியாமல் கூட காரையோ பைக்கையோ நிறுத்திவிடக் கூடாது. தப்பித்தவறி நிறுத்தினால், சட்டென சில பெண்கள் மொய்த்துக்கொள்வார்கள். ஒரு முறை இந்தப் பக்கமாக வந்தபோது, செல்போனில் அழைப்பு வர, காரை ஓரம்கட்டி விட்டேன். அவ்வளவுதான்... கார் கண்ணாடியை ஒரு பெண் தட்ட, இன்னொரு பெண் காரை எடுக்கவிடாமல் முன்னால் வந்து நின்றாள். அவர்களின் நோக்கம் அறிந்து, கண்ணா டியை இறக்கி, 'நான் அப்படிப்பட்ட ஆள் இல்லை!' எனச் சொன்னேன். 'நீ எவனா இருந்தா என்ன? எங்களுக்கு ரூபாயை வெட்டிட்டுப் போ!' என மிரட்டி பணத்தைப் பறித்துக்கொண்டுதான் கிளம்பினார்கள். டி.பி சத்திரம் ஏரியாவில் கஞ்சா வாங்கிக்கொண்டு, நேரே இந்த ஏரியாவுக்கு வரும் கல்லூரி மாணவர்கள், சாலை ஓரத்திலேயே அசிங்கக் கூத்து நடத்துகிறார்கள். இவ்வளவு நடந்தும் இது வரை இந்தப் பக்கம் போலீஸ் கண் காணிப்பு காட்டிய சரித்திரமே இல்லை!'' என்றார்.

விடிந்தால் பரபரப்பும் விறுவிறுப்புமாக சுழலும் சென்னை... இரவு நேரத்தில் இப்படி ஒரு கொடூர முகத்தோடு இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இரவு நேர சென்னையின் அபாயத்தை முழுக்க முழுக்க அறிந்திருக்கும் காவல் துறை 'ஆளும் கட்சி...' என்கிற ஒற்றை வார்த்தையை அஸ்திரமாக்கி இன்னும் எத்தனை காலத்துக்குக் கண்ணயர்ந்து கிடக்கப்போகிறதோ?

No comments:

Post a Comment