Saturday, September 18, 2010

""முதலமைச்சர் ஆவாரு விஜயகாந்த்!'' -எஸ்.எஸ்.சந்திரனின் ஏளனம்!

தீப்பொறி ஆறுமுகத்துக்கு பதிலடி கொடுக்க, ராஜபாளையத்துக்கு எஸ்.எஸ்.சந்திரனை அழைத்து வந்து பொதுக்கூட்டம் நடத்தியது விருதுநகர் மாவட்ட எம்.ஜி. ஆர். இளைஞரணி.

"நீங்கள் இந்த மேடையில் பேசும் பேச்சுக்காக நிச்சயம் அவதூறு வழக்கு பதிவாக வேண்டும்' என்கிற ரீதியில் நயினார் நாகேந்திரன் உட்பட பலரும் கோரிக்கை வைத்தார்கள். இது போதாதா? எஸ்.எஸ்.சந்திரன் பேச்சு முழுக்க கவிச்சிதான்.

""அப்பல்லாம் அ.தி.மு.க. கூட்டத்துக்கு பெண்கள் வருவாங்க. அந்தக் கூட்டத்தைக் கலைக்க தண்ணி பாம்பைக் கொண்டு வந்து விட்டவன் நான்தான்...'' என்று தனது "முன்னாள் சேவை' குறித்து -அதுவும் அ.தி.மு.க. கூட்டத்திலேயே பேசியவர் ""நம்ம தலைவி முதலமைச்சர் நாற்காலில உட்கார்ந்துட்டா இங்கேயிருக்கிற மைக் செட்காரன் கூட அமைச்சராயிருவான். இந்த மேடைல இருக்கிற யார் யாரெல்லாம் அமைச்சராகப் போறாங் களோ? ஆனா, நான்தான் போலீஸ் மந்திரி... 20-ஆம் நூற்றாண்டு மகாத்மா யாருன்னு தெரியும்ல. நம்ம ஓ.பன்னீர்செல்வம்தான். உன்னைக் கொல்லப் போறேன்னு யாராச்சும் சொன்னா... எப்பக் கொல்லுவேன்னு அப்பா வியா கேட்பாரு. இந்த ஒரு குணத்துக்காகவே அவர முதலமைச்சராக்குனாங்க நம்ம தலைவி. எப்பேர்ப்பட்ட தலைவி! அப்பப்பா... அவங்கள அம்புட்டு ஈஸியா சந்திச்சுற முடியுமா? திருப்பதி வெங்கடா சலபதிக்கு பொம்பள வேஷம் போட்ட மாதிரிதான் நம்ம தலைவி. நாள் கணக்கா கியூல நின்னு காத்துக் கிடந்தாத்தான் தரிசனம் கிடைக்கும்'' என சிலிர்த்தவர், நமீதா, கலா போன்றவர்களையும் விட்டு வைக்கவில்லை. ஏனோ குஷ்புவை மட்டும் நாராச நடையில் அர்ச்சித்தார்.

""குஷ்பு என்ன நம்ம நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த கஸ்தூரி பாயா? குஷ்பு எப்படின்னு எம் மாப்ள கார்த்திக்கிட்ட கேளு. இல்லன்னா மாப்ள விஜயகாந்த் கிட்ட கேளு. நெறயச் சொல்லுவான். நான்கூட விஜய காந்த்கிட்ட கேட்டேன். தமிழ்நாட்டுல அ.தி.மு.க.வும், தி.மு.க.வும்தான் பெரிய கட்சி. கூட்டணிக்கு வாங்கன்னு ரெண்டு கட்சியும் கூப்பிட்டா அதுல ஒரு அர்த்தம் இருக்கு. நீ ஒரு துக்கடா கட்சிய வச்சிக்கிட்டு என்கிட்ட வா கூட்டணிக்குன்னு கூப்பிடறியே... உனக்கே இது ஓவராத் தெரியலியான்னு கேட்டேன். அதுக்கு விஜயகாந்த் மாப்ள "ஜாதகத்துல நான் முதலமைச்சராவேன்னு இருக்கு. அத யாரும் தடுக்க முடியாது. அதான், என் தலைமைல கூட்டணின்னு துணிஞ்சு சொல்றேன்'னு வாய் கூசாம சொல்லுறான். அட, ஜாதகத்த நம்புற மூதேவி. நீ பாட்டுக்கு ஜாதகப் பைய கக்கத்துல வச்சிக்கிட்டு திரிய வேண்டியதுதானே. அரசியலுக்கு ஏன் வந்து மக்களக் குழப்புற? பண்ருட்டி ராமச்சந்திரன் உன்ன இம்சை பண்றான்னு நல்லாத் தெரியுது. என் ஜாதகப்படி இந்நேரம் நான் பிரதமரா இருக்கணும். நானே கம்முன்னு இருக்கேன். நீ ஏன் துடிக்குற?'' -ஏதோ சமிக்ஞை கிடைத்து விட்டதுபோல் கேப்டனைப் போட்டுத் தாக்கினார். ஒரு கட்டத்தில் ""இப்ப கலைஞர் எழுதிக் கொடுத்த கோபாலபுரம் வீடு எம்.ஜி.ஆருக்குச் சொந்தமானது. சொல்லப் போனா, புரட்சித் தலைவிக்கும் அதுல பங்குண்டு...'' என்று எடுத்துவிட, மொத்த கூட்டமும் சிரிப்பாய் சிரித்தது.

No comments:

Post a Comment