Monday, September 20, 2010

சீக்ரெட் பிரபுதேவா


பிரபுதேவா - நயன்தாரா ரகசியத் திருமணத்தின் அடுத்த எபிசோடு ஆரம்பம்!

இதுவரை எதுவும் பேசாமல் இருந்த பிரபுதேவா, ''நயன்தாராவைத் திருமணம் செய்வதில் உறுதியாக இருக்கிறேன்!'' என்று மீடியாக்களிடம் சொன்ன தாக தகவல்கள் வெளியாகிவரும் நிலையில்... இதற்கு அவர் முதல் மனைவி ரம்லத் எந்த பதிலோ... மறுப்போ சொல்ல வில்லை. இந்த நிலையில், ஃப்ளாஷ்பேக்கில் இருந்தே ரம்லத்தின் பழைய காதலையும், கல்யாணத்தையும் எடுத்து வைப்போம்...



முதல் கல்யாணம்... முறையான கல்யாணமா?

சென்னை வடபழனியில் பிறந்த ரம்லத், பிரபுதேவாவின் அப்பா டான்ஸ் மாஸ்டர் சுந்தரத்திடம் குரூப் டான்ஸராக சினிமாவுக்குள் நுழைந்தார். பிரபு தேவாவும்


படிப்பை விட்டுவிட்டு அப்பாவின் நடனக் குழுவில் சேர்ந்தார். அதோடு, முறையாகப் பரதம் பயின்று, தனியாக ஒரு நடனக் குழுவை ஆரம்பித்தார். அந்தக் குழுவுக்கு 'இன்சார்ஜ்' ரம்லத். அவரை நியமித்தவர் சுந்தரம்!

1991-ம் வருடம் 'தளபதி' படத்தின் நடன ஒத்திகைக்காக மைசூர் போனபோதுதான் பிரபுதேவாவுக்கும் ரம்லத்துக்கும் காதல் மலர்ந்தது. தொடர்ந்து 95-ம் வருடம் டிசம்பர் மாதத்தில் வெளியில் தெரியாமல் ரம்லத்தின் வீட்டில் அவர்கள் திருமணம் நடந்தது. அதில் மொத்தமே ஐந்து பேர்தான் கலந்துகொண்டனர். அவர்களும் ரம்லத் வீட்டினர் மட்டுமே! அந்தக் கல்யாணத்தை எங்கும் பதிவு செய்யவில்லை. விஷயம் வெளியில் தெரிந்தபோது, பிரபுதேவாவின்வீட்டில் எள்ளும்கொள்ளும் வெடித்தது. கன்னட பிராமணக் குடும்பமான சுந்தரம் மாஸ்டரின் உறவுகள், முஸ்லிம் குடும்பத்தில் சம்பந்தம் வைத்துக்கொண்டதுபற்றிப் பெரிதாக விவாதித்தன. எதிர்ப்பைத் தாங்க முடியாத பிரபுதேவா, ரம்லத்தைப் பிரிந்தார். ரம்லத் அவரது வடபழனி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார். பிரபுதேவா, அப்போது 'காதலன்' படத்தில் பிரபலமாகி உச்சத்தில் இருந்தார். அந்த சமயத்தில் அவருக்கு ஆறுதலாக இருந்தவர்கள், ரஜினிகாந்த், பி.வாசு, எஸ்.தாணு ஆகியோர் மட்டுமே!


பேர் சூட்டிய ரஜினி!

பிரபுதேவாவைக் கண்காணிக்க சுந்தரம் மாஸ்டர் சிறிய படையை உருவாக்கினார். அந்தப் படை எப்போதும் பிரபுதேவாவுடன்இருந்தது. ஒரு நாள் சுந்தரம் மாஸ்டரை அழைத்து ரஜினி பேசினார். சுந்தரம் வந்தபோது, அவரைப் பார்த்ததும் ரம்லத் காலில் விழுந்து வணங்கினார். சுந்தரம் எதுவும் சொல்லாமல் போய்விட்டார். அந்த ஜோடி நேராகப் போனது ரஜினியின் போயஸ் வீட்டுக்கு. ரம்லத்துக்கு, ரஜினி தைரியம் சொன்னார். அவரது வீட்டில்தான் ரம்லத் இந்து மதத்துக்கு மாறுவது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டது. இந்த விஷயம் சுந்தரத்துக்கு எட்ட, கொஞ்சம் கோபம் குறைந்தது. ரம்லத் தனக்கு சாந்தி என்ற பெயர் பிடிப்பதாகச்சொல்ல, ரஜினியின் குடும்பமோ ரம்லத்துக்கு சூட்டிய பெயர் லதா. அண்ணா நகரில் சாந்தி காலனியில் 'சிங்கிள்' பெட்ரூம் வீட்டில் ஜோடி குடியேறியது!

டீச்சர் ரம்லத்,
கருணாநிதி வீட்டு சேலை!

பிரபுதேவா பிஸியான நடிகராகிவிட்ட பிறகு, ரம்லத் வீட்டில் தனிமையானார். ஆகவே, பெரும் பாலும் ரஜினியின் வீட்டில்தான் அவரது வாசம். ஒரு நாள் எதேச்சையாக ரஜினி, 'சும்மா இருக்காம நம்ம ஸ்கூல்ல ஏதாவது வேலை பார்க்கலாமே?' என சொல்ல, ரம்லத் 'ஆஸ்ரம்' பள்ளியில் டீச்சர் வேலையில் சேர்ந்தார். சில வாரங்கள் அந்தப் பள்ளிக்குச் சென்று வந்தவர், ப்ரீ கேஜி பிள்ளைகளைப் பார்த்துக்கொண்டார். 'வி.ஐ.பி.' படப்பிடிப்புக்கு நடுவில் வீட்டுக்கு வந்த பிரபுதேவா, ரம்லத்துக்கு பட்டுச் சேலை எடுத்துத் தர ஆசைப்பட்டார். அவர் பிரபலமான ஹீரோ. அவரே கடைக்குப் போனால், கூட்டம் கூடும் என்பதால்... தனக்கு நெருக்கமான வீட்டுக்குப் போனார். அங்கு இருந்து கருணாநிதியின் மகள் செல்விக்கு போன் போனது. செல்வி நடத்தும் 'எஸ்.எஸ்.சாரீஸ்' நிறுவனத்தில் இருந்து 30 பட்டுப் புடவைகள் வந்தன. அதில் அரக்கு கலர் புடவையை செலக்ட் செய்து மனைவிக்குக் கொடுத்தார் பிரபுதேவா. அதுதான் ரம்லத்துக்கு அவர் வாங்கிக் கொடுத்த முதல் பரிசு!

பாஸ்போர்ட் ஆதாரம்!

தனது திருமணத்தை வெளியில் சொல்லாமல் ரகசியம் காத்த பிரபுதேவா, முதல் தடவையாக அந்தத் தகவலை ஆனந்த விகடனுக்கு சொன்னார். இருவரும் கொடுத்த பேட்டிதான் அந்தக் கல்யாணத்தின் முதல் ஆதாரம். அதற்குப் பிறகு பிரபுதேவா, தனது பாஸ்போர்ட்டில் ரம்லத்தைத் தன் மனைவியாகப் பதிவு செய்தார். அடுத்தடுத்துக் குழந்தைகள் பிறக்க, அவர்களின் பிறப்புச் சான்றிதழிலும் பிரபுதேவா தன்னை அப்பாவாக அடையாளம் காட்டினார். இந்து மதம் மாறிய ரம்லத், தனது பிறந்த வீட்டுக்குக்கூட போகாமல், தொலைபேசி வழியாக மட்டுமே தன் உறவுகளைத் தொடர்ந்தார். ஏனோ, ரம்லத்தின் சொந்தங்களை பிரபுதேவா தனது வீட்டுக்குள் சேர்க்கவில்லை. இந்த சமயத்தில் அவர் நடிப்பை விட்டு இயக்குநரானார். அதிலும் அவருக்கு சக்ஸஸ். அப்போதுதான் அவருக்கு நயன் தாராவின் அறிமுகம்.

நயன்தாரா எப்போதும் தி.நகரில் இருக்கும் ஓர் ஹோட் டலில்தான் தங்குவார். அங்கு இருவரும் சந்தித்த விஷயங்கள் ரம்லத்தின் காதுக்கு வந்து சேர்ந்தன. இருவருக்கும் இடை யிலான காதலை ரம்லத் உறுதி செய்தபோது, அவருக்கும் பிரபுதேவாவுக்கும் வார்த்தைகள் தடித்தன.

குஷ்புவின் ராஜா அண்ணாமலைபுரம் ஃப்ளாட்டில் தற்காலிகமாகக் குடியிருந்த பிரபுதேவா - ரம்லத் ஜோடி, அதன் பிறகு தாங்கள் சொந்தமாகக் கட்டிய அண்ணா நகர் வீட்டுக்கே குடி போனார்கள். அங்கு போன பிறகு, பிரபுதேவா அவ்வளவாக வீட்டுக்கு வரவில்லை. இந்திப் பட இயக்கத்தில் பிஸியாக எட்டு மாதங்கள் மும்பையில் தங்கினார். இது இடைவெளியை அதிகப்படுத்தியது. 'எந்திரன்' படப்பிடிப்பின்போது பிரபுதேவாவுக்கு ரஜினி, 'இரண்டாம் கல்யாணம் வேண்டாம்' என்று அட்வைஸ் கொடுக்க... வீட்டுக்கு வந்தார் பிரபுதேவா. இந்த சமயத்தில்தான் வெளிப்படையாக நயன்தாராவைப்பற்றிய பிரபுதேவாவின் கமென்ட் வந்து சேர்ந்தது!

நயன் - ரம்லத் நியாயங்கள்!

நயன்தாராவும் ரம்லத்துமே உட்கார்ந்து பேசி ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள். அதனால்தான் ரம்லத் தன் கணவரிடம் பெரிதாக எதிர்ப்புக் காட்டவில்லை என்று கோலிவுட்டில் தகவல் படபடக்கிறது. அதே செய்தியில் பெரும் மதிப்பிலான வைர நகைகளை நயன்தாரா, ரம்லத்துக்கு வாங்கிக் கொடுத்து தன் அன்பை வெளிப்படுத்தியதாகவும் ஒரு தகவல் பரவியது. கேரளாவில் சொத்து, சென்னையில் வீடு, ஹைதராபாத்தில் நிறைய சொத்துகள் என நயன்தாராவின் வளர்ச்சியையும் கோடம்பாக்கம் ஆச்சர்யத்தோடுதான் பார்க்கிறது. சினிமா வட்டாரத்தின் உள்வட்டங்களைப் பொறுத்த வரை பிரபுதேவாவின் அறிவிக்கப்படாத மனைவி அவர்தான்!

'அண்ணன் என்ன? தம்பி என்ன? சொந்தம் என்ன பந்தம் என்ன?' என்ற ரஜினியின் பாடல் வரிகள்தான் இப்போது ரம்லத்தின் காலர் டியூன். அதோடு அவர் செல்போனில் வேறு சில பாடல்களும் மாறி மாறி இடம்பெறுகிறது. அதில் பாதி சோகம், மீதி உற்சாக டியூன் என்று கலவை! ''பிரபு தேவாவின் கல்யாண அறிவிப்பு முதலில் வெளியானது, ஓர் இணையதளத்தில்தான்.அதில் பிரபுதேவா கொடுத்த பேட்டியாக வந்து இருக்கிறது. அந்த இணையதள செய்தியாளர், நயன்தாரா கூடவே இருக்கும் அவரது ஊர்க்காரர். பிரபுதேவாவின் பேட்டியைப் போடச் சொன்னதே நயன்தாராதான். இந்த பேட்டி வருவதற்கு சில நாட்களுக்கு முன்பாக, அதே செய்தியாளர், 'இனி நயன்தாரா நடிக்கப்போவதில்லை. படங்களைக் குறைத்துக்கொண்டார்' என்று செய்தி போட்டார்...'' - இது ரம்லத் வட்டாரம் சொல்லும் பதில்.

இது குறித்து பலரும் ரம்லத்திடம் தொலைபேசி மூலம் விசாரித்து வருகின்றனர். அவர்களிடம் ''இப்போது என் கணவர் மும்பையில் இந்திப் படப்பிடிப்பில் இருக்கிறார். ஆகவே, அவரை நான் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. என் கணவர் மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. என்னையும் குழந்தைகளையும் அவர் மிகவும் நேசிக்கிறார். மீடியாக்களில் வரும் செய்திகளை வைத்து என் கணவரை நான் சந்தேகப்பட மாட்டேன். மற்றவர்களுக்காக எனது வாழ்க்கையை எப்போதும் நான் பங்கு போட எந்த சமாதானத்தையும் ஏற்க மாட்டேன்!'' என்று திட்டவட்டமாக சொல்லி வருகிறாராம்.

பிரபுதேவாவின் மனதில் என்ன இருக்கிறதோ?

No comments:

Post a Comment