Saturday, September 18, 2010

"ஜெ'வோடு விஜயகாந்த் கூட்டணி சேர்ந்தாலும்'' -போட்டுத் தாக்கும் துரைமுருகன்


தி.மு.க.வை தாக்கிப் பேசும் தனது சுருதியை சமீபகாலமாக அதி கப்படுத்திக் கொண்டிருக்கிறார் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த். இதுகுறித்தும், நடப்பு அரசியல் குறித்தும் தி.மு.க.வின் துணை பொதுச் செயலாளர்களில் ஒருவரும் சட்டத்துறை அமைச்சருமான துரைமுருகனை சந்தித்து கேட்டபோது நக்கலாகவும், சீரியஸாகவும் பதில் தந்தார் துரைமுருகன்.

* தி.மு.க.வை ஆட்சியிலிருந்து இறக்குவதுதான் என் லட்சியம்’என்று விஜயகாந்த் சபதம் போட்டிருக்கிறாரே?

முதலில் இப்படி ஒரு கேள்வியை நான் எதிர்கொள்வதற்காக வருத்தப்படுகிறேன். ஏன்னா... தலைவர் கலைஞருக்கு நிகரான ஒரு தலைவர் கருத்து சொல்லியிருந்தால் அதற்கு நான் பதில் சொல்லலாம் அல்லது தி.மு. கழகத்திற்கு இணையான ஒரு கட்சி கருத்துச் சொல்லியிருந்தால் அதற்கு பதில் சொல்வது பொருத்தமாக இருக்கும். ஆனால் விஜயகாந்த்.... கலைஞருக்கோ கழகத்திற்கோ நிகரான இணையானவரா? அதனால்தான் வருத்தப் படுவதாகச் சொன்னேன். சரி.... கேள்விக்கு வருவோம்.... பாவம் விஜயகாந்த்... தேர்தலுக்கு தேர்தல் தலையைத் தூக்கி நான் இருக்கிறேன் என காட்டுபவராக இருக்கிறார். இதைத் தவிர அவரிடம் என்ன இருக்கிறது?


ஒவ்வொரு வருஷமும் பொங்கல் சமயத்தில் வண்டிமாடுகள் மஞ்சுவிரட்டுக்காக அலங்கரிக்கப்பட்டு ஓடும். இதற் காகவே அந்த சமயத்தில் மாடுகள் தலையைத் தூக்கும். அது போல தேர்தலுக்கு தேர்தல் தலையைத் தூக்குகிற விஜயகாந்த், தி.மு.க. வை ஆட்சியில் இருந்து இறக்கு வேன் என சபதம் போடுகிறாரா? நல்ல கதை. ஒவ்வொரு நாளும் பொழுது விடியும், அவருக்கு தெளியும். யாராவது பக்கத்தில் இருப்பவர்கள் தேர்தல் வருவதைப் பற்றி அவருக்குச் சொல்லுவார்கள். இவரும் ஒரு நாளைக்கு மக்களோட கூட் டணி என்பார். மறு நாளைக்கு நான் இல்லாம யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்பார், இன்னொரு நாளைக்கு அவரை விட மாட்டேன், இவரை விடமாட்டேன் என்று கதறுவார். சில நேரங்களில் அரசியலில் இவரைப்போல ஜோக் அடிக்கிற போர்வழிகள் தேவைப்படு கிறார்கள். அந்த வரிசையில் அவர் இருந்துவிட்டுப் போகட்டும்.

தேர்தல் நேரத்தில் ஒரு அப்பாவியை அழைத்து அவர் பாக் கெட்டில் இருக்கிற பணத்தை எடுத்து டெபாஸிட் கட்டவைத்து தேர்தலில் நிற்கவைப்பார். அவருக்கு டெபாஸிட் போய்விடும். அடுத்த தேர்தலில் இன்னொரு அப்பாவி மாட்டுவார். அவருக்கும் டெபாஸிட் போய்விடும். தேர்தலில் டெபாஸிட் இழப்பதையே தொழிலாக கொண்ட ஒரு கட்சியை நடத்தும் விஜயகாந்த், தி.மு.க.வை விமர்சிப்பதா? தி.மு.க. ஒரு அகன்ற ஆறு. விஜயகாந்த் ஒரு வாய்க்கால் கூட இல்லை. அப்படிப் பட்டவருக்கு சவால் விடவும் சபதம் போடவும் தகுதியுமில்லை, மக்கள் செல்வாக்கும் இல்லை.

* ஜெயலலிதாவும் விஜயகாந்த்தும் தேர்தல் கூட்டணிக்காக நெருங்கி விட்டதால்தான் தி.மு.க.வை விஜயகாந்த் தாக்குகிறார் என்கிறார்களே?

தேர்தல் காலத்தில் யாரும் யாரோடும் கூட்டணி சேரலாம் அல்லது சேராமல் போகலாம். ஆனால் யார் யாரோடு கூட்டணி சேர்ந்தாலும் தி.மு.க. கூட்டணியின் வெற்றியை யாரும் தடுத்து விட முடியாது. ஜெயலலிதா-விஜயகாந்த் கூட்டணி எல்லாம் ஓட்டப் பந்தயத்திற்கு உதவாத கூட்டணி.

* அ.தி.மு.க. கூட்டணியில் தற்போது இருக்கும் கட்சிகளின் அடிப்படையில் அந்த கூட்டணிக்கு 35 சதவீத வாக்கு பலம் இருக்கிறது. அந்த நிலையில் அ.தி.மு.க.வுடன் 8 சதவீத வாக்குபலம் கொண்ட விஜயகாந்த்தின் தே.மு.தி.க. கூட்டணி வைக்கும் பட்சத்தில் அ.தி.மு.க. கூட்டணியின் பலம் 43 சதவீதமாக அதிகரித்துவிடும். இது தி.மு.க. கூட்டணியின் வெற்றிக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்கி றார்களே?

அ.தி.மு.க. கூட் டணியில் கட்சிகளின் எண்ணிக்கை கூடலாமே தவிர அவர்களின் வாக்கு எண்ணிக்கை கூடப் போவதில்லை. அவர்கள் போடும் வாக்கு சதவீத மனக்கணக்குகளை யெல்லாம் மாற்றி அமைக்கும் வல்லமையும் ராஜதந்திரமும் கலைஞருக்குத் தெரியும். அதனால் இந்த சதவீத கணக்குகளைச் சொல்லியெல்லாம் எங்களை பயமுறுத்த முடியாது.

* தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வலிமையாக இருப்பதாக சொல்கிறீர்கள். ஆனால், ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் கடுமையான விமர்சனங்களால் தி.மு.க. கூட்டணி பலகீனமடைந்துள்ளதாக காங்கிரஸ்காரர்களிடமே எதிரொலிக்கிறதே?

காங்கிரஸ் கட்சி தி.மு.க.வோடு இருக்கிறபோதும் சரி... அ.தி.மு.க.வோடு இருக்கிற போதும் சரி... இரண்டு கட்சிகளுக்கிடையே குறுக்குசால் ஓட்டுகிறவர்கள் இருப்பது உண்டு. அப்படி குறுக்குசால் ஓட்டுபவர்கள் ஒரு கட்டத் துக்குப் பிறகு அடிபட்டு போவதும் உண்டு. அப்படிப் பட்டவர்களின் விமர்சனங்களால் எல்லாம் கூட்டணி பலவீனமாகிவிடாது. இதுபோன்ற சலசலப்புகள் எல்லாம் இந்த கூட்டணியின் பயணத்தின் வேகத்தைக் குறைத்து விடவும் முடியாது. அதனால், இதையெல்லாம் நாங்கள் பெரிதுபடுத்துவது இல்லை.

* தி.மு.க. கூட்டணிக்குள் மீண்டும் நுழைவதற்கு பா.ம.க. முயற்சிக்கிறது. இது தொடர்பாக ஜி.கே.மணி உங்களை அடிக்கடி சந்திக்கிறார். ஆனால், டாக்டர் ராமதாஸோ தி.மு.க.வை விமர்சிக்கிறார். இந்த நிலையில் பா.ம.க.வைப் பற்றி தி.மு.க.வின் நிலைப்பாடுதான் என்ன?

ஜி.கே.மணி தலைமையில் பா.ம.க. குழுவினர் ஒருமுறை கலைஞரை சந்தித்து ஆலோசித்து விட்டுப் போனார்கள். அதன்பிறகு, அவர்களிடத்திலிருந்து எந்தத் தொடர்பும் இல்லை. அவர்களின் கட்சி நலன் சார்ந்து எந்த முடிவும் எடுக்கலாம். என்ன முடிவு எடுப்பார்கள்ங்கிறது எனக்குத் தெரியாது. ஆனால், யேசுநாதர் சொன்னதுபோல, "இதய சுத்தியுடன் என்னிடத்தில் வருவோரை புறம் தள்ளுவதில்லை' என்பது எங்கள் சித்தாந்தம்.

* தமிழக சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிகள் எப்படி அமையும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

கூட்டணிகள் எப்படி அமையும் என்று அனுமானிக்கக் கூடிய கட்டம் இன்னும் வரவில்லை என்பதுதான் என் கணிப்பு. ஒரு கட்சி கூட இன்னும் தேர்தல் கிரவுண்ட்டுக்கு வரவில்லை. எல்லா கட்சிகளுமே தனித்தனியாக மரத்தடியில் நின்றுகொண்டு எக்ஸர் சைஸ்தான் பண்ணிக் கொண்டிருக்கின்றன.

ஆனால், ஒன்றை மட்டும் என்னால் கணிக்க முடியும். அது... தி.மு.க. -காங்கிரஸ் -விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணி நிலை யானது என்பதுதான். எங்கள் கூட்டணிக்குள் மேலும் சிலர் இணையலாம். ஆனால், இணையத் துடிப்பவர்கள் ரெண்டு, மூணு சீட்டுகளை அதிகம் பெற வெளியில் பிகு செய்துகொண்டிருக்கிறார்கள். இந்த விறைப்பும் முறைப்பும் தேர்தலில் நாமினேசன் காலம் நெருங்க நெருங்க வெயிலில் உருகும் பனிக்கட்டிபோல கரைந்து விடும். இதனை பல தேர்தல்களில் பார்த்தவன் நான்.

* பிகு பண்ணுகிறார்கள் என்று நீங்கள் சொல்வது பா.ம.க. வைத்தானே?

தனிப்பட்ட எந்த ஒரு கட்சியையும் குறிப்பிட்டு நான் சொல்லவில்லை. பொது வாகத்தான் சொல்கிறேன். அதேசமயம் யார், யார் பிகு காட்டுகிறார்கள் என்பது எங்களைவிட நக்கீரனுக்கு நன்றாகவே தெரியும்.

* எம்.ஜி.ஆர். காலத்திலும் அரசியல் செய்திருக்கிறீர்கள். ஜெயலலிதா காலத்திலும் அரசியல் செய்கிறீர்கள். இப்போது புதிதாக விஜயகாந்த். இதனை எப்படிப் பார்க்கிறீர்கள்?

தி.மு.க.வால் உருவாக்கப்பட்டவர் எம்.ஜி.ஆர். தி.மு.க.வை விட்டு அவர் பிரிந்த பிறகும் பகையான பிறகும்கூட சில அரசியல் மரபுகளை மீறியதில்லை. முறித்ததும் இல்லை. உதாரணமாக.... சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கலைஞர் ஒருமுறை, சட்டமன்றத்தை விட்டு வெளியேறி... எம்.எல்.ஏ. அலுவலக வளாகத்தில் இருந்த தி.மு.க. கட்சி ஆபீசுக்கு வந்துவிட்டார். ஆனால், கலைஞர் சட்டசபைக்கு வரவேண்டுமென விரும்பினார் எம்.ஜி.ஆர். உடனே க.ராசாராம் தலைமையில் அமைச்சர்கள் சிலரை அனுப்பி கலைஞரை அழைத்துவரச் செய்தார். அரசியல் பண்பாடும் நாகரிகமும் எம்.ஜி.ஆரிடத்தில் பட்டுப்போகவிலை என்பதற்கு இது உதாரணம்.

அதேபோல, ஒருமுறை சட்டமன்றத்தில் எம்.ஜி.ஆரை எதிர்த்துப் பேசி அங்கேயே மயங்கி விழுந்துவிட்டேன் நான். பதறிப்போன எம்.ஜி.ஆர்., தனது இருக்கையிலிருந்து எழுந்து எதிர்க்கட்சி லாபிக்கு ஓடிவந்து என்னைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டு முதலுதவி சிகிச்சைக்கு உடனடியாக ஏற்பாடு செய்தார். வீட்டுக்கு அனுப்பி வைத்ததோடு அல்லாமல் ஒருமணி நேரத்துக்கு ஒருமுறை "துரைமுருகன் நல்லா இருக்கிறாரா?' என்று விசாரித்துக்கொண்டே இருந்தார். தி.மு.க.வில் இப்போது இணையவரும் எம்.ஜி.ஆர். காலத்து அ.தி.மு.க. விசுவாசிகள், "கலைஞர் பெயரை கருணாநிதி என்று யார் சொன்னாலும் அதைப் பொறுத்துக்கொள்ள மாட்டார் எம்.ஜி.ஆர்.' என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன்.

ஒரு முறை கலைஞரை சிறையில் வைத்தார் எம்.ஜி.ஆர். அதேசமயம் சட்டத்துறை அமைச் சர் நாராயணசாமி முதலியாரை சிறைக்குச் சென்று கலைஞரின் நலன் விசாரித்துவிட்டு வரச் சொன்னார் எம்.ஜி.ஆர். இப்படி நிறைய சம்பவங்களை நான் பார்த்திருக்கிறேன். ஆக எம்.ஜி.ஆர்., அண்ணாவிட மும் தி.மு.க.விடமும் பெற்ற பண்பாட்டு உணர்வுகளை மதித்தவர். அதனை பாதுகாத்தவர். அரசியல் பண்பாடும், நாகரிகமும் எம்.ஜி. ஆரிடத்தில் பட்டுப்போகவே இல்லை. ஆனால் ஜெயலலிதாவிடம் தி.மு.க.வின் அரசியல் பண்பாடும், அண்ணாவின் அரசியல் நாகரிகமும் ஏன்... குறைந்தபட்சம் எம்.ஜி.ஆரின் மனித உணர்வும் கூட இருப்பதில்லை. ஜெயலலிதாவைப் பற்றி ஒரு வரியில் சொல்வதானால், அண்ணாவின் வார்த்தைகளால் சொல்லலாம். அது... "விளைந்த காட்டில் திரிந்த குருவி' ஜெயலலிதா. அதனால், இவரிடம் அரசியல் பண்பாட்டை எதிர்பார்க்கக் கூடாது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவோடு ஒப்பிட்டுப் பேசக்கூடியவர் அல்ல விஜயகாந்த் என்பதால்... இதுவெல்லாம் அவருக்குத் தெரியாது. பாவம் விஜயகாந்த் அவரை விட்டு விடுங்கள்.

No comments:

Post a Comment