Monday, September 20, 2010

கொடநாட்டுக்குப் போனதா கார்?


இறக்கைகளில் ஏ.ஸி-யைப் பொருத்தியது போல ஜில்லென வந்து இறங்கினார்

கழுகார். ''இரண்டு நாள் முகாம்... சிலுசிலு காற்று... நிறைய செய்திகள்...'' என்றவரை ஏற இறங்கப் பார்த்தோம். ''முக்கியமான சோர்ஸ் ரொம்ப ரகசியமாக அழைத்ததால் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் கொடநாடு போய் வந்தேன். அங்கே பரபரப்பாக அடிபடும் விஷயம் என்ன தெரியுமா? 'ஜெயலலிதாவை பார்க்க விஜயகாந்த்தின் திருமதி பிரேமலதா ரகசியப் பயணமாக வந்தாரா?' என்பதுதான். கடந்த வாரத்தில் ஒரு நாள் மாலையில் சொகுசு கார் ஒன்று கொடநாடு பங்களாவுக்குப் போய் இருக்கிறது. அதில் இருந்தவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதாதான் என கொடநாட்டில் 'குபீர்' கிளம்பிக் கிடக்கிறது. அ.தி.மு.க - தே.மு.தி.க கூட்டணி ஏற்பட்டுவிடவே கூடாது என்பதில் ஏகத் தீவிரம் காட்டுபவர்கள், இந்தத் தகவலை விசாரித்தபோது உறுதிப்படுத்திக் கொள்ள முடியவில்லையாம்!''


''உண்மையாகவே அப்படி ஒரு சந்திப்பு நடந்ததா?''

''அது போகப் போகத் தானாகத் தெரிந்துவிடும். இப்போதைக்கு நான் கேள்விப்பட்டதெல்லாம், விஜயகாந்த் தரப்பு மீது ஜெயலலிதா சமீபத்தில் கோபமானார் என்பது. ஒரு பக்கம் தங்களோடு கூட்டணிக்கான முயற்சி செய்துகொண்டே, தி.மு.க. தரப்புடன் முற்றிலும் வேறொரு வகையான பேச்சை தே.மு.தி.க. தரப்பு நடத்துவதாக ஜெ-வுக்கு தகவல் போனதாம். 'எனக்குக் கிடைத்த தகவலை அப்படியே மதுரைக் கூட்டத்தில் போட்டுக் கிழிக்கவா?' என்று ஜெ. சீறியதாகவும்... இது உடனே தே.மு.தி.க. தலைமையின் காதுக்குப் போனதாகவும் சொல்கிறார்கள். 'தி.மு.க-வுடன் தனி பேரங்கள் எதுவுமில்லை' என்று ஜெ-விடம் விளக்க ஸ்பெஷல் தூதர் அனுப்பப்பட்டார் என்றுகூட ஒரு பேச்சு உண்டு! 'இரண்டு வாரத்தில் நடத்தப் போகிற பிரமாண்ட கூட்டத்தில், இதுவரை இல்லாத அளவுக்கு தி.மு.க-வை கேப்டன் போட்டுத் தாக்கப் போகிறார். அதிலேயே நீங்கள் புரிந்துகொள்ளலாம்' என்று ஜெ-வுக்கு அந்த தூதர் கூறியதாகவும்... இப்போதைக்கு ஜெ. கூலானதாகவும் கூறுகிறார்கள்!''

''நீர் கூறுவதை எல்லாம் பார்த்தால் அ.தி.மு.க-வுடன் கூட்டணி என்பதில் ரொம்ப முன்னேற்றமோ..?''

''அப்படிச் சொல்ல முடியாது! தி.மு.க-வை மறுபடி ஆட்சிக்கு வரவிடாமல் செய்வதில் ஒரே நோக்கோடு இருக் கிறார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம்...'' என்ற கழுகார்,

''காங்கிரஸோடு விஜயகாந்த் கட்சி கூட்டணியாகப் போனால்... அதையும் ஜெ. உள்ளூர வரவேற்பாராம். அவர் கணக்குப்படி காங்கிரஸ், தே.மு.தி.க. கூட்டணியாக நின்றால்... தி.மு.க-தான் பலவீனம் அடையும் என்றும், இந்தப் பிரிவினையால் அ.தி.மு.க. அலேக்காகத் தொகுதிகளை அள்ளும் என்றும் ஒரு கணக்கு வைத்திருக்கிறாராம். தனது கணக்கை மேலும் சரிபார்த்துவிட்டு, அதற்கேற்ப பா.ம.க-வை ஏற்பதா... வேண்டாமா என்றும் முடிவெடுப்பாராம்!''

''பயனுள்ள கணக்குதானா இது?''

''அது தெரியாது! ஆனால், மேற்கு வங்காளத்தில் மம்தா கட்சி பற்றி ராகுல் காந்தி பேசும்போது, காங்கிரஸின் கூட்டணி தர்மம் என்ன என்று வெளுத்து வாங்கியிருப்பதை கவனியும். 'குட்டக் குட்ட குனிய மாட்டோம்!' என்று உறுதியாகச் சொல்லியிருக்கிறார். அதேபோல், அக்டோபரில் நடக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸின் நிலவரத்தைப் பார்த்துக்கொண்டு, தமிழ்நாட்டுக்கும் வந்து முழங்குவாராம் ராகுல் காந்தி. பீகார் தேர்தல் முடிந்ததுமே தமிழ்நாட்டில் தன் மனக் கணக்கை வெளிப்படையாக காங்கிரஸ் செயல்படுத்த ஆரம்பித்துவிடும். அப்போதுதான் தெரியும் - தி.மு.க-வுடன் கூட்டணி தொடருமா... அல்லது விஜயகாந்த் கட்சியுடன் பேச்சுவார்த்தை வேகம் பிடிக்குமா என்பதெல்லாம்!''

''கேட்கையிலேயே கிறுகிறுக்குதே!''

''இதையும் கேட்டால் இன்னும் கிறுகிறுக்கும்... தே.மு.தி.க-வுக்கு 40 ஸீட் தரத் தயாராம் அ.தி.மு.க.! ஆனால், முதல்கட்ட தூதுப் பேச்சுகளில் தே.மு.தி.க. கேட்கும் பல தொகுதிகள் எம்.ஜி.ஆரின் ஓட்டு வங்கி இப்போதும் பலமாக உள்ளவை! இது கொடநாட்டை கொஞ்சம் சலிப்பில் ஆழ்த்தியிருப்பதாகவும் சொல்கிறார்கள்!''

''சரிதான்!''

- தொண்டைக்கு இதமாக தூதுவளை மிட்டாய் கொடுத்தோம் கழுகாருக்கு. கனைத்தபடி கம்பீரக் குரலில் கனஜோராகத் தொடர்ந்தார் - ''காஷ்மீர் தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டம் டெல்லியில் நடந்தது. பிரச்னையை அனைவரும் சும்மா மென்று முழுங்கிப் பேசியபோது விடுதலைச் சிறுத்தைகள் திருமாவளவன் அதிகமாகவே சீறியிருக்கிறார். அவர் பேசியதை உன்னிப்பாக கவனித்திருக்கிறார் சோனியா...''

''என்ன சொன்னதாம் சிறுத்தை?''

''சோனியா பேசும்போது 'ஜம்மு காஷ்மீரத்து மக்களும் நம் மக்களே' என்று சொல்லியிருக்கிறார். இதைச் சுட்டிக்காட்டிய திருமா, 'இப்படி அம்மாநிலத்து மக்கள் நினைக்கவில்லை. அந்த மாநிலத்து மக்களின் உணர்வுகளை இந்த இந்திய அரசு உணர்ந்திருக்கிறதா? இந்திய அரசாங்கத்துக்கும் ஜம்மு காஷ்மீர் மக்களுக்குமான இந்த முரண்பாட்டை முதலில் களைய வேண்டும்' என்றபோது பிரதமரும் புருவம் உயர்த்தினாராம்!''

''அப்படியா?''

''ஆயுதப்படைகள் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதைச் சொல்லித்தானே இத்தனை கலவரமும் நடக்கிறது. அந்த சட்டத்தை உடனே திரும்பப் பெறுங்கள் என்று சொன்ன திருமா, 'நெருப்பை நெருப்பால் அணைக்க முடியாது, ஆயுதத்தை ஆயுதத்தால் நசுக்க முடியாது' என்று சொல்லும்போது குரலை கொஞ்சம் உயர்த்தியிருக்கிறார்.''

''இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் காஷ்மீரைப் பற்றி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்துவதோ?'' என்று வருத்தம் தெரிவித்தோம்!

''அந்தக் கவலை இருக்கட்டும். சமீபகாலமாக நிருபர்கள் மீதான தாக்குதல் அதிகமாவதைப் பற்றி தலைமைச் செயலாளர் மாலதி ரொம்பவே கவலைப்பட்டாராம். இதைதொடர்ந்து அரசு உயர் அதிகாரிகள், மூத்த பத்திரிகையாளர்கள், அதற்கான அமைப்புகள், போலீஸ் அதிகாரிகள் கொண்ட கமிட்டி ஒன்றை விரைவில் அமைப்பதற்கான திட்டங்களைத் தீட்டி வருகிறாராம் மாலதி. நல்லதே நடக்கட்டும்!'' என்றபடி கழுகார் ஜூட்!

இளங்கோவன் கோபத்துக்கு இதுதான் காரணம்?!

சென்னையில் தொழில் அதிபர் ஒருவரின் திருமண விழாவுக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வந்திருக்கிறார். அந்த விழாவுக்கு தி.மு.க. சார்பாக வந்திருந்த முக்கியப் புள்ளியைப் பார்த்த இளங்கோவன், அவர் அருகில்போய் அமர்ந்து இருக்கிறார். ''கூட்டணியில் இருந்துட்டே ஏன் இப்படி எங்களை வறுத்து எடுக்குறீங்க?'' என்று தி.மு.க. புள்ளி கேட்க... ''உங்க கட்சியில் யார் மேலேயும் எனக்கு வருத்தம் இல்லை. என்னோட டார்கெட்டே அமைச்சர் பொன்முடிதான்! என்னமோ, இந்தியாவுக்கே ஜனாதிபதியாகிட்ட மாதிரி யாரையும் மதிக்காமல் அவர் போடுற ஆட்டம் கொஞ்சமா... நஞ்சமா? காங்கிரஸ் ஆளுங்களைக் கண்டாலே அவருக்கு ஆகலை. அவர் அடங்குற வரைக்கும் எங்க குரல் ஒலிச்சுட்டுதான் இருக்கும்!'' எனக் கொந்தளித்தாராம் இளங்கோவன்.

No comments:

Post a Comment