Monday, September 20, 2010

தேடி வரும் பகையை ஓட வைக்கும் பகளா தந்திரம்!


நம் வாழ்க்கைப் பாதையில் நமது எதிரிகளைப் பற்றி ஆராய்ந்து பட்டியலிட்டால் அது நீண்டு கொண்டே போகும். வேத சாஸ்திரங்களில் உத்தியோக சத்ரு, பஹிர் சத்ரு, அந்தர் சத்ரு என்று பிரித்துச் சொல்லி இருக்கிறார்கள். சத்ரு என்ற வார்த்தையை சத்+ரு என்று பிரிக்கலாம். சத்- நம்மிடம் உள்ள பொருட்களை- சத்துகளை உறிந்து கொண்டு, ரு- நம்மைக் கடனாளி ஆக்கிவிட்டுப் பிரிந்து சென்று விடுபவர் என்று இதற்குப் பொருள். தொழிற்கூட்டாளியாகச் சேரும் மனிதர்கள் லாபம் வரும் போது சேர்ந்திருந்து, நஷ்டம் வரும் என்று தெரிந்தால் பொருளைப் பிரித்துக்கொண்டு சென்றுவிடுவது. கடனை ருணம் என்றும் பிரிவோரை சத்ரு என்றும் பொருள்படக் கூறி உள்ளார்கள்.

ஒரு மனிதன் எதிரிகளைச் சந்திப்பதும், எதிரியாக ஆகி விடுவதும் அவரவர் ஜாதக நிலைப்படிதான். லக்ஷ்மீதரரின் வாக்கியத்தில், "ஆறாம் இடத்தில் நீசரும் சுபரும் கூடினால்கூட எதிரிகள் வலுப்பர்' என்பது குறிப்பிடத் தகுந்தது.

பகையும் எதிரியும் சேரும் ஜாதகம்நல்ல பெயர், பட்டம், சமூக அந்தஸ்து, புகழ் ஆகியவற்றுக்கு ஒரு காரகனாக சந்திரன் விளங்கு வதால், 6-ல் சந்திரன் இருக்கப் பிறந்தவர் கள் ஜென்ம விரோதிகளை உடையவர்களாக விளங்குவர்.

ஆறாம் இடத்தில் செவ்வாய் இருக்கப் பெற்றவர்களுக்கு கொடுக்கல்- வாங்கலின் வழியாக எதிரிகள் ஏற்படுவார்கள். ஆனால் எதிர்ப்போரை விலகி ஓடச் செய்துவிடும் ஆற்றலையும் கொடுத்து விடுவார். அதேசமயம் கடகச் செவ்வாயானால் எதிரி வெற்றி பெற்று விட வாய்ப்பு உண்டு.

ஆறாம் இடத்தில் புதன் இருந்தால் தவளை தன்னுடைய வாயால் கெட்டது போன்று அதிகமாகப் பேசி, தேவையில்லாத ஒப்பந்தங் களைச் செய்துவிட்டு, தொழில் செய்யுமிடத்தில் எதிரிகளை உருவாக்கிக் கொண்டு அவஸ்தைப் படுவார்கள்.

எட்டாம் இடத்தில் சனி இருக்க அதுவே மேஷமாகிவிட்டால், ஒரு பெரிய சண்டையின் வழியாக தொழிலில் எதிரிகளைச் சேர்த்துக் கொண்டு விலக முடியாமல் தத்தளிப்பார்கள். அதேசமயத்தில் ஆறாம் வீட்டில் சனி அமர்ந்து விட்டால் விரோதிகளை அடக்கும் ஆள்பலம், பணபலம் ஆகியவற்றைப் பெற்றி ருப்பார். ஆனால் ஆயுதங்களால் ஆபத்து வரலாம். சற்று கவனமாக இருத்தல் நல்லது.

ஒருவர் ஜாதகத்தில் புதன் நீசமாகிவிட்டால், உறவினர்களையே எதிரிகளாக ஆக்கிக் கொள்வார். ஆனால் உச்சமாகவும் 2-க்குடைய வரோடும் சேர்ந்துவிட்டால் விரோதமே விருப்பமாக மாறிவிடும்.

8-ஆம் இடத்தில் செவ்வாய் வலுப்பெற்றால் சகோதரர்களின் உறவில் விரிசல் ஏற்படும். திருடர்களாலும் பகைவர்களாலும் தொழில் மட்டுமல்ல; வாழ்க்கைக் காலமே மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகும்.

பன்னிரண்டில் செவ்வாய் அமர, அவரோடு ஒரு பெண் கிரகம் கூடியிருந்தால், பெண்களே எதிரிகளாகி பொருட்களை அபகரித்துச் சென்றுவிடக்கூடிய காலகட்டம் உருவாகிவிடும்.

4-ல் குரு இருக்க 6-ல் ஒரு பாப கிரகம் நீசமடைந்து விட்டால், ஜாதகரை நல்ல மனிதராக வாழ வைப்பார். ஆனால், எதிரிகளால் தொல்லைகள் தொடர்ந்து வந்து நிம்மதி யைக் கெடுத்து விடும்.

ஆறாம் இடத்தில் குரு வக்ரகதி அடைந்து லக்னத்தில் சுபர்கள் இருப்பினும், மறைமுகப் பகைவர்கள் நிம்மதியைக் கெடுக்கக் கூடிய சில்மிஷங்களைச் செய்ய வைப்பார்.

பூர்வ புண்ணிய ஸ்தானமாகிய 5-ல் சனி அமர்ந்திருக்க 6-ல் சுபர் இருப்பினும், புத்தி மந்தத்தையும் பகைவர்களால் மீளாத துயரை யும் உண்டாக்கித் தருவார். சில நேரங்களில் மனநிலையும் தொழில் எதிரியால் பாதிப்ப டையக் கூடும்.

பன்னிரண்டில் சனி இருந்தாலும் 6-ல் ராகு- கேது அமர்ந்திருந்தாலும் ஜாதகருக்குப் பகைவர் தொல்லையே பழக்கத்திற்கு வந்து விடும். இதனால் கோர்ட், வக்கீல் செலவு, அவமானம் ஆகியவை கடுமையாக வந்து சேரும்.

ராகு ஏழில் அமர்ந்திருக்க, 6-ல் சுபர்கள் இருந்தாலும், அந்நியர்களது கூட்டுத் தொழில் வழியாகப் பிரச்சினை ஏற்பட்டு எதிர்ப்புகள் உருவாகும். இதனால் பெருத்த பொருட் செலவும் வரக்கூடும். மேலும், "10-ஆம் ராகு படிந்து செல்வோர்க்கும் பகை தருவார்' என்பது ஜோதிட விளக்கம். அதேசமயம் கேது 6-ல் அமர்ந்திருக்கும்போது 10-ல் ஒரு சுபர் அமர்ந்தால் எதிரியையும் தந்து எதிர்க்கும் துணிவையும் தருவார்.

"மனித வாழ்க்கை என்பது ரோஜா மலர் தூவிய படுக்கை அறை அல்ல; அது ஒரு போர்க்களம் போன்றது' என ஒரு தத்துவஞானி கூறினார். அந்த போர்க்களத்தில் புதிது புதிதாய் எதிரிகள் முளைக்கத்தான் செய்வார் கள். ஜனன ஜாதக- தசா புக்திகளை ஆராய்ந்து, எதிரிகள் வரும்முன் காப்போம். பகளா தேவியின் கருணையை நாடுவோம்.

பகளா தந்திரப் பிரயோகம்:

தசமகா வித்யை என்னும் சக்தி அவதார நூலில் உள்ளவாறு பத்து அவதாரங்களில் எட்டாவது சக்தியாக வருபவளே ஸ்ரீ பகளாமுகீ தேவி.

ருத்ரயாமள தந்திரத்தில் எதிர்ப்புகளை விலக்கிவிடும் பிரம்மாஸ்திரம் போன்ற ஸ்ரீ பகளாமுகி தந்திரம் இதுவே. மூவுலகங் களிலும் பிரசித்தி பெற்ற இந்த வித்தை லட்சுமி கடாட்சம், புத்திர- பௌத்திரர்கள், எதிரி விலக்கம் ஆகிய நற்பலன்களைத் தரக்கூடிய ஆற்றல் வாய்ந்தது. இதை உபதேசம் பெற்றுவிட்டால் கண்ட நபர்களிடம் தராமல் வாக்கு, உடல் சுத்தமாக இருக்க வேண்டும் என்று விதியில் உள்ளது. மொத்தம் பதினேழு அனுவாகங்களில் வெவ்வேறு சௌபாக்கியப் பலன்கள் வருகின்றன. அவற்றில் பத்தாவது அனுவாகமாக வருவதே இந்த எதிரி விலகும் தந்திரம். இதன் மூலத்தையும் துதியையும் யந்திர வரைவையும் எழுதி (தாமிரத் தகட்டில்) தாயத்து போன்று கட்டிக் கொள்வதால்

அரசன், மோசமான எதிரிகள், பாம்பு, விலங்குகள் மயங்கி ஓடிவிடும் என்பது அனுபவம். நன்மைக்கு மட்டுமே இதைப் பயன்படுத்த வேண்டும். யாருக்கும் கெடுதல் நினைத்தல் கூடாது.

காலையில் குளித்தவுடன் மடியுடுத்தி மூன்று முறை பகளாமுகியின் ப்ராத ஸ்மரணம் கூற வேண்டும்.

"ப்ராத: ஸ்மராமி பகளாம் கமலாய தாக்ஷீ ம்

இந்து ப்ரசன்ன வதனாம் பரிவீத வர்ணாம்/

பாணித் வயேன தததீம் ச சீலாம் கிரீந்த்ரே

த்வேஷ்யாம்ச வாஸன கதாம் மதமத்த சித்தாம்//

ப்ராதர் நமாமி பகளாமுகீ தர்ம மூர்த்திம்

காருண்ய பூர்ண நயனாம் முகமந்த ஹாஸாம்/

இந்து ப்ரஸன்ன வதனாம் பரிமீத வர்ணாம்

பீதாம்பராம் ருசிர கஞ்சுக சோபமானாம்//

ப்ராதர்ப் பஜாமி யஜமான ஸீ சௌக்யதாத்ரீம்

காமேஸ்வரீம் கனக பூஷண பூஷிதாங்கீம்/

கம்பீரதீர ஹ்ருதயாம் ரிபு புத்தி ஹந்த்ரீம்//

ஸம்பத் ப்ரதாம் ஜகதி பாத ஜுஷாம் நராணாம்/

ச்லோகத் ரயமிதம் புண்யம் பகளாயாஸ்து ய: படேத்

ரிபுபாதாதி பிர்முகதோ லக்ஷ்மீ ஸ்தை யர்யம் அவாப்னுயாத்//'

தொடர்ந்து, செந்நிறப் பட்டில் பகளாமுகி யின் யந்திர வரைவை வைத்து, ஐங்காயம் தடவி பூஜை உபசாரங்கள் செய்து, ஏழு முறை முக்கியமான பகளா தந்திர ஸ்துதி கூற வேண்டும்.

"மாதர்ப் பைரவி பத்ரகாளி விஜயே

வாராஹி விஸ்வாக்ரயே

ஸ்ரீவித்யே ஸமயே மஹேசி பகளே

காமேசி ராமே ரமே/

மாதங்கி த்ரிபுரே பராத் பரதரே

ஸ்வர்க்காப வர்க்கப்ரதே

தாஸோஹம் சரணாகத: கருணயா:

விச்வேச்வரி த்ராஹி மாம்//'

மூலமந்திரம்

"ஓம் ஹ்ரீம் பகளாமுகி சர்வதுஷ்டானாம்

வாசம் முகம் ஸ்தம்பய

ஜிஹ்வாம் கீலய கீலய புத்திம்

நாசய ஹ்ரீம் ஓம் ஸ்வாஹா.'

1 comment:

  1. ஸ்ரீ ஸ்ரீ பகளாமுகி அன்னைக்கு உகந்த நைவேத்யங்கள் என்னவென்று கூறமுடியுமா அய்யா ?

    gurukaruna2006@gmail.com இது அடியேனின் முகவரி


    அன்புடன் கருணாகரன்

    ReplyDelete