Tuesday, September 21, 2010

யுத்தம் 90 நக்கீரன் கோபால்


தம்பி சிவக்குமாரின் குரலில் படபடப்பு அதிகமாகவே இருந்தது. ""அண்ணே.. 20-ந் தேதிக்குள்ளே உங்களைப் பிடிச்சி, ஜெயிலில் போட்டுடணும்ங்கிறது மேலிடத்து உத்தரவாம். அதனாலதான், சுப்ரீம் கோர்ட் பெட்டிஷனைக்கூட அப்புறம் பார்த்துக்கலாம்னும், நீங்க உடனே ரொம்ப தொலைவில், பாதுகாப்பான இடத்துக்குப் போயிடணும்னும் சீனியர் சொல்றார். சி.பி.ஐ. வக்கீல் மூலமா சீனியருக்கு இந்த தகவ லெல்லாம் கிடைத்திருக்கு'' என்றார்.

தம்பி காமராஜை உடனே தொடர்பு கொண்டேன். அவர் தான் சுப்ரீம் கோர்ட் விஷயங்களை பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கும் 20-ந் தேதி கெடு பற்றி தெரிந்திருக்கிறது. ""அண்ணே... உங்களை ஃபிக்ஸ் பண்ணிட்டதா நம்ம சோர்ஸ் சொல்லுது. சுப்ரீம் கோர்ட்டில் நமக்கு சாதகமான எந்த உத்தரவும் வருவதற்குள்ளே அரெஸ்ட் பண்ணிடணும்னு நினைக்கிறாங்க'' என்றார்.

பொடா வழக்கில் ஏற்கனவே கைதானவர் களுக்காக ஆஜராகிக் கொண்டிருந்த பிரபல தி.க. வழக்கறிஞர் துரைசாமி, ""பெரியளவில் பணத்தை கையில் வச்சிக்கிட்டு உங்க எடிட்டரை தேடுறாங்க'' என்று சீனிய ரிடம் சொல்லியிருக்கிறார். காட்டுப்பகுதியில் நான் இருந்தபோது, "பணத்தோடு பிடித்ததாக காட்டவேண்டும்' என்ற நாடகத்தை அரங்கேற்றுவதற்காகத்தானே இப்படி அடிக்கடி பணத்தோடு வாகனத்தில் போலீஸ் அலைந்துகொண்டிருக்கிறது. சீனியருக்கு இந்தத் தகவல் தெரிந்ததால்தான் என்னை எங்கேயாவது பாதுகாப்பான இடத்திற்குப் போகச் சொன்னார்.





தலைமறைவாக இருந்தால் "அறிவிக்கப்பட்ட குற்றவாளி' என போலீஸ் விளம்பரம் செய்யும். அதனால் தான், புத்தக கண்காட்சி போன்ற இடங்களில் தலைகாட்டும்படி நமது வழக்கறிஞர்கள் சொன்னார்கள். நான் அங்கே சென்ற தை தொலைக்காட்சிகளும் பத்திரிகை களும் பதிவு செய்துவிட்டதால், ஆட்சி செய்தவர்களின் வெறி எக்கச்சக்க மாகிவிட்டது. அவர்களிடம் சிக்கினால் குதறிவிடுவார்கள்.

சுப்ரீம் கோர்ட் வழக்கிற்காக டெல்லிக்குப் புறப்படுவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த நமது அட்வகேட் பெருமாள் அந்த சமயத்தில் வக்கீல் துரைசாமியை சந்தித்திருக்கிறார். ""மிஸ்டர் பெருமாள்.. பொடாவில் புதுசா ஒரு அமென்ட்மெண்ட்டை சப்-கிளாஸாக அவசர அவசரமாக சேர்த்து கவர்னரிடம் அரசாங்கம் கையெழுத்து வாங்கிடிச்சி தெரியுமா? அந்த அமென்ட்மெண்ட் வேறு யாருக்காகவுமில்லை.. உங்க நக்கீரன் கோபாலுக்காகத்தான்'' என்றிருக்கிறார் வக்கீல் துரைசாமி.

பொடா சட்டத்தின் 4(ஹ) பிரிவில்தான் இந்த திருத்தத்தை செய்து, கவர்னரிடம் கையெழுத்து வாங்கியிருந்தது ஜெயலலிதா அரசாங்கம். இந்தப் பிரிவின்படி, ஒரு மாநிலத் தில், கலவரம் ஏற்படும் என அறிவிக்கப்பட்ட (நோட்டிஃபைடு ஏரியா)பகுதியில் கைது செய்யப்பட்டால் அவர் மீது உடனடியாக பொடா சட்டத்தைப் பாய்ச்ச முடியும். தமிழகத்தைப் பொறுத்தவரை 98-ல் தொடர் குண்டுவெடிப்பு கொடூரத்திற்குள்ளான கோவையும் வீரப்பன் காட் டுப்பகுதியும்தான் நோட்டிஃபைடு ஏரியா. ஆனால், ஜெ அரசு செய்த திருத்தத்தினால், Under Explanation to section 4 of the Preventive of Terrorism Act 2002 (central act 15 of 2002) the Governor of Tamilnadu hereby specifies the whole of the State of Tamilnadu as notified area for the purpose of section 4 of the said Act என்று அரசாங்க கெஜட்டில் அப்போதைய உள்துறைச் செயலாளர் சையத் முனீர் ஹோடாவினால் வெளியிடப்பட்டது. அதாவது, என்னைப் பிடித்து பொடாவில் தள்ளவேண்டும் என்பதற்காகவே ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் கலவரம் ஏற்படும் என அறிவிக்கப்பட்ட பகுதியாக சட்டத்திருத்தம் செய்தது அரசாங்கம். "என்ன கொடுமை பாருங்க. என் ஒருத்தனுக்காக நல்லா இருக்குற தமிழ் நாட்டையே தீவிரவாத மாநிலமாக்கி அரசாணை?'

ஜனவரி 21-ந் தேதி. இன்னும் இரண்டு நாளில் கோபி கோர்ட்டில் ஆஜராகவேண்டும். வக்கீல்கள் யோசிக்கிறார்கள். நானோ "கட்டாயம் ஆஜராகவேண்டும்' என்கிறேன். டெல்லியிலிருந்த பெருமாள் சார் போன் செய்கிறார்.

""அண்ணாச்சி... முகமது அலி உள்ளிட்ட மொத்த போலீஸ் அதிகாரிகளும் டெல்லியில்தான் குவிஞ்சிருக்காங்க'' என்றார். கோர்ட்டில் நமது வழக்கு விசாரணைக்கு வரும் நாளில் பதட்டம் அதிகமாகவே இருந்தது என்றார். தம்பி காமராஜ் போன் செய்தார். ""அண்ணே.. வழக்கு விசா ரணையை 2 வாரத்துக்கு தள்ளி வைச்சிருக்காங்க. கவர்மென்ட் தரப்பில் நம்ம வழக்கு அட்மிட் டாகாமல் தள்ளுபடி செய்யப்படும்னு நினைச்சாங்க. சீனியரோட ஆர்க்யூமென்ட்டை கேட்டதும் வழக்கை அட்மிட் பண்ணி, விசாரணையை ஒத்திவச்சிருக்காங்க'' என்றார்.


"சுப்ரீம் கோர்ட்டில் நமக்கு சாதகமான மூவ் நடந்திருப்பதால், நிச்சயமாக கோபி கோர்ட்டில்தான் அரசும் போலீசும் செக் வைக்கும். அதிலிருந்து எப்படி தப்பிப்பது' என ஆலோசித்தேன். ஒட்டுமொத்த போலீஸ் அதிகாரிகளின் பார்வையும் கோபி பக்கம் திரும்பியிருந்தது. சுப்ரீம் கோர்ட்டில் நம் வழக்கு 2 வாரத்துக்கு ஒத்தி வைக்கப் பட்டிருப்பது என்பதை காப்பி போட்டு சீனியரிடமிருந்து வாங்கும் படியும், அந்த விவரத்தை சீனியரே அட்வகேட் ப.பா.மோகனுக்கு தந்தி மூலமாகத் தெரிவிக்கும்படியும் சொன்னேன். அவரும் அனுப்பி வைத்தார். சுப்ரீம் கோர்ட் சம்பந்தப்பட்ட காப்பியை நேரில் வாங்குவதற்காக சிவக்குமாரும் கௌரியும் ஏர்போர்ட்டுக்கே போய்விட்டார்கள்.

நிருபர் ஜீவாவைப் பிடித்து, ""உடனடியா ஒரு புது சிம் வாங்கி ப.பா.மோகன்கிட்டே கொடுத்து, அதில் எனக்குப் பேசச் சொல்லுங்க'' என்றேன். அப்படியே பேசினார் ப.பா.மோகன். நான் அவரிடம், ""சார்.. போலீஸ்காரங்க கண்கொத்தி பாம்பா சுத்திக்கிட்டிருக்காங்க. எப்படி கோர்ட்டில் ஆஜராகிறதுன்னு தெரியல. எக்காரணத்தைக் கொண்டும் வாரண்ட் வந்திடக்கூடாது.''

""பிரச்சினையில்லீங்க சார்.. நான் பார்த்துக்கிறேன்.''

இரவு 10.45 மணிக்கு, சுப்ரீம்கோர்ட்டிலிருந்து வாங்கி வந்த காப்பியை ப.பா.மோகனுக்கு ஃபேக்ஸ் செய்கிறார்கள் தம்பிகள் சிவாவும் கௌரியும்.

மறுநாள் 22-ந் தேதி மதியம். சென்னையில் பெருமாள் சாரிடமிருந்து போன். ""அண்ணாச்சி... 1 மணிக்கு சீனியர் வரச் சொன்னார். ஆனா கொஞ்ச நேரம் கழித்து அவரே போன்செய்து, அவரோட வீட்டை போலீஸ் சர்வைலன்ஸ் பண்றதாகவும், ஒன்றரை மணிக்கு வாங்கன்னும் சொன்னார். ஏதோ சீரியஸ்னு நினைக்கிறேன்'' என்றார்.

12.30 மணி. தம்பி சிவக்குமாருக்கு போன் செய்தேன். ""அண்ணே... சீனியர் தன்னோட சேம்பருக்கே வரச்சொல்லிட்டார். பெருமாள் சாரோடு போய்க்கிட்டிருக்கேன்'' என்றார். 1.30 மணிக்கு பெருமாள் சார் லைனில் வந்தார். ""அண்ணாச்சி, ரொம்ப சீரியஸா இருக்கு போலிருக்கு. உங்க மேலே கோபி கோர்ட்டில் வாரண்ட் வாங்கிவிட்டதாகவும், போலீஸ் இங்கே வந்துக்கிட்டிருப்பதாகவும் நாம என்ன செய்யப்போறோம்னும் சீனியர் கேட்கிறார்.''





""இருக்காதுங்க சார்... வாய்தா நாளைக்குத்தானே... அதற்குள் எப்படி வாரண்ட் வாங்குவாங்க? நாளைக்கு ஆஜராகலைன்னா வாரண்ட் வாங்கணும்னு பேசியிருப்பாங்க. அது இப்படி பாஸ் ஆகியிருக்கும்''.

""அண்ணாச்சி அவங்க சீரியஸாகத்தான் இருக்காங்க. ஹைகோர்ட்டில் நாம போட்டிருக்கிற 6 ரிட் வழக்கும் என்னைக்கு போஸ்டிங்னு செக்ஷனுக்குப் போய் விவரம் கேட்டிருக்கிறார் சீனியர். அங்கே இருந்தவங்க, "இப்பதான் போலீஸ் ஆஃபீசர்ஸ் வந்து உங்க பண்டல்களை வாங்கிட்டுப் போனாங்க'ன்னு சொல்லியிருக்காங்க''

-பெருமாள் சார் சொன்னபோது, போலீஸ் எந்தளவுக்கு வேகமாகப் போய்க்கொண்டிருக்கிறது என்பது புரிந்தது. பண்டல் களை அட்வகேட் ஜெனரல் அல்லது அடிஷனல் பி.பி.தான் வாங்க வேண்டும். அவர்களுக்குத் தெரியாமலேயே போலீசார் வாங்கிச் சென்றிருக்கிறார்கள்.

போலீசின் வேகத்தைவிட நமது தரப்பு வேகமாகச் செயல் பட்டால்தான் சட்டப் பாதுகாப்பை பெற முடியும். மாலை ஆறரை மணிக்கு அட்வகேட் பெருமாளை வரச்சொல்லியிருந்த சீனியர் கே.எஸ்., மறுபடியும் போன் செய்து.. ""4 மணிக்கெல்லாம் வந்தி டுங்க'' என்றிருக்கிறார். "ரொம்ப அவசரம்' என்று சீனியர் சொன்ன தால், அடுத்த சில நிமிடங்களில் அவரை சந்தித்தார் பெருமாள்.

""அந்த பொம்பளை ரொம்ப சீரியஸா இருக்காம். எப்படியும் உள்ளே தூக்கிப் போடணும்னு சத்தம் போட்டிருக்குது. டெல்லியிலிருந்து சுப்ரீம் கோர்ட் அட்வகேட் ரேவதிராஜன்ங்கிறவர் இங்கே வந்து கேம்ப் போட்டிருக்கிறார். நாளைக்கு கோபியில் வாரண்ட் வராமல் பார்த்துக்கணும். அதனால , கோபாலை ஆஜராகச் சொல்லிடுங்க. வாரண்ட் விழுந்திடிச்சின்னா, சுப்ரீம் கோர்ட்டில் உள்ள நம்ம வழக்கில் பிரச்சினையாயிடும். கோர்ட்டை நாம் மதிக்கலைன்னு ஆயிடும்.''

""நான் அண்ணாச்சிகிட்டே சொல்லிடுறேன் சார்..''

""மிஸ்டர் பெருமாள்.. டெல்லியிலே அ.தி.மு.க தரப்பிலிருந்து 2 பேர் வந்து என்னை இந்தக் கேஸிலிருந்து ஒதுங்கிக்கச் சொன்னாங்க. பத்திரிகைகாரர் விஷயத்திலிருந்து நீங்க ஒதுங்கிக்குங்க. நானும் ஒதுங்கிக்கிறேன்னு சொன்னேன்.''

-சீனியர் சொன்ன விஷயங்களை என்னிடம் தெரிவித்தார் அட்வகேட் பெருமாள். பெருமாள் சார் சொன்னதை அப்படியே ப.பா. மோகனிடம் சொன்னேன். ""சார்.. நான் வாய்தா வாங்கிடுறேன். நீங்க கவலைப்படவேண்டாம்.''

""வாய்தா தேதியை 2 வாரம் கழிச்சி வாங்குங்க சார். நாம் ஆஜராகும்போது வேற கேஸில் கைது செய்தால் என்ன செய்யமுடியும்?''

""நீங்க சொல்றதும் சரிதான்.''

அங்கிருந்து பெருமாள் சாரை தொடர்புகொண்டேன். ""சார்... கோபியில் ஆஜரானால் என்ன ப்ளஸ், என்ன மைனஸ்னு நீங்க ஒரு பேப்பரில் எழுதிக்குங்க. நானும் எழுதிப் பார்க்கிறேன். ரெண்டு பேரும் டிஸ்கஸ் பண்ணிக்குவோம்.''

அவரிடம் பேசியபின், என் வீட்டுக்குப் போய்விட்டு இரவு 3 மணிக்கு மேல் கோபி செல்வதாக திட்டம்.. போலீஸ் நடமாட்டம் தெரியவில்லை. நள்ளிரவு கடந்திருந்தது. என் மகள்களும் தம்பி பையனும் என்னுடைய கட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டி ருந்தார்கள். நான் எழுதிக் கொண் டிருக்கிறேன். ப்ளஸ், மைனஸ் விஷயங்களையும், அன்றைக்கு முழுவதும் என்ன நடந்தது என்பதையும் நோட்டில் விரிவாக எழுதிக்கொண்டிருந்தேன். வாரண்ட் விழுந்தால் நிச்சயமாக சர்ச் என்ற பெயரில் போலீசார் வந்துவிடுவார்கள். அவர்களிடம் சிக்கக்கூடாது என்பதால் பெட்டியில் துணிகளை தயாராக எடுத்துவைத்துவிட்டுத்தான் எழுதிக்கொண்டிருந் தேன். கதவருகே ஏதோ நிழல்..

திரும்பிப் பார்க்கிறேன். என் துணைவியார் நின்று கொண்டிருக்கிறார். அவர் முகத்தில் கலக்கம் தெரிகிறது.

""நீங்க வீரப்பனை பார்க்கப் போனப்பகூட இவ்வளவு பயம் வரல. இப்ப ரொம்ப பயமா இருக்குது. ஏன் இப்படியெல்லாம் நடக்குது? இந்த பொம்பளை நம்மையெல்லாம் என்னதான் செய்ய நினைக்குது?'' -பேசப் பேச அவரது கண்களில் கண்ணீர். நான் தைரியப்படுத்துகிறேன்.

மணி 3.30. அந்த இரவு நேரத்தில், போலீஸ் ஜீப் சத்தம்... ...

-யுத்தம் தொடரும்

No comments:

Post a Comment