Thursday, September 16, 2010

தற்கொலைப் படை... தடுத்த ஜெ!



வெளியே திடீர் அடைமழை... அவித்த கடலையைக் கொரித்துக்கொண்டு இருந்த கழுகார், லேசாக ஜன்னலை விலக்க... வெளியே மின்னலும் இடியுமாக வானம்

கிழிபடுவதைப்போல சத்தம். ''அர்ஜுனா... அர்ஜுனா...'' என 'சக்தி விகடன்' டீமில் யாரோ சத்தமிட, ஜன்னலை மூடிய கழுகார், ''இடி இப்படி சிலரை சொல்லவைக்கிறது... அடிக்கடி எடுக்கும் வலி முதல்வரை எப்படித் துடிக்கவைக்கிறது தெரியுமோ?'' - பீடிகையோடு ஆரம்பித்தார் கழுகார்.

''முதல்வர் கருணாநிதிக்கு தோள் வலி. ஏற்கெனவே முதுகு வலிப் பிரச்னையால் ரொம்பவே அவதிப்பட்டவர், அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஓரளவுக்கு நடமாடினார். சமீப காலமாக மருத்துவர்களின் ஆலோசனையுடன் சில உடற்பயிற்சிகளையும் செய்தார். இதற்கிடையில் அடிக்கடி முதல்வருக்கு தோள் வலி வரத் தொடங்கி இருக்கிறது. 'சுருக்' என ஏற்படுகிற வலியில் துடித்துவிடுகிறாராம் முதல்வர். கடந்த வாரத்தில் ஒரு நாள், திடீரென முதல்வருக்கு தோள் வலி எடுக்க... 'நித்யா...' என அலறி இருக்கிறார். முதல்வரின் உதவிக்கு இருக்கும் இளைஞரான நித்யா இதை உடனே சண்முகநாதன் உள்ளிட்டவர்களிடம் சொல்ல... அடுத்த கணமே ராமச்சந்திரா மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் வரவழைக்கப்பட்டார்.''

''அப்புறம்..?''

''முதல்வரின் உடலை முழுக்கப் பரிசோதித்து இதர பரிசோதனைகளை எல்லாம் நடத்தி, இன்ஜெக்ஷன் போட்ட பிறகுதான் வலி குறைந்ததாம். அன்று முழுக்கப் படுக்கையிலேயே ஓய்வு எடுத்தவர், அடுத்த நாளே வழக்கம்போல் ஓய்வுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு வெளி நிகழ்ச்சிகளுக்குக் கிளம்பினார். 'வெளியூர் விழாக்களையாவது தவிர்க்க லாமே...' என மருத்துவர்கள் சொன்னபோதும், 'விழா ஏற்பாடு செஞ்சவங்க மனசு வருத்தப்படுவாங்க...' எனச் சொல்லி விட்டாராம் முதல்வர். திருச்சி தி.மு.க. விழாவில் கலந்துகொண்டு தொண்டர்களை ஏக உற்சாகத்தில் ஆழ்த்திய முதல் வருக்கு, அடுத்த நாள் இரவு மீண்டும் தோள் வலியாம். அவர் வலியில் அலற... மருத்துவர் ஓடோடி வந்திருக்கிறார்!''

''இந்த வயதிலும் பம்பரமாகச் சுழல்கிறாரே என எத்தனை பேரின் கண் பட்டதோ!''

''முக்கியமாக டாக்டர்களின் கண் பட்டிருக்கிறது. 'திடகாத்திர உடல்வாகு கொண்டவர்களாலேயே செய்ய முடியாத அளவுக்கு அதிகாலையில் விழிப்பு, உடன்பிறப்புக்குக் கடிதம், அன்றைய நிகழ்வுகள் குறித்த அறிக்கை, அரசு மற்றும் கட்சி விழாக்கள் என உடல் நலனைப்பற்றி சட்டையே செய்யாமல் முதல்வர் பிஸியாக இருந்தால், வலி வரத்தானே செய்யும்!' என்கிறார்கள் மருத்துவர்கள். 'அரை மணி நேரத்துக்கு மேல் ஒரே இடத்தில் அமரக் கூடாது; அதனால் எந்த விழாவுக்கு ஒப்புக்கொள்வதாக இருந்தாலும், விழா முடியும் நேரத்தில் மட்டும் சென்று7 பேச வேண்டியதை சில நிமிடங்கள் பேசிவிட்டு வாருங்கள்!' என்கிற ஆலோசனையையும் மருத்துவர் வழங்கி இருக்கிறார். அதனால், வெளியூர் விழாக்களுக்கு செல்வதை முதல்வர் இனிமேல் குறைத்துக்கொள்ளக்கூடும் என்கிறார்கள்!''

''தேர்தல் நெருங்கும் நேரம் ஆயிற்றே..!''

''கட்சிக்காரர்கள் மட்டுமல்லாது முதல்வர் குடும்பத்தினரின் கவலையும் இதுதான். கருணாநிதியின் சூறாவளிப் பிரசாரம் இல்லாவிட்டால்... கட்சியை மீண்டும் ஆட்சிக் கட்டிலுக்குக் கொண்டுவருவது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது எல்லோருக்கும் உள்ள கேள்விதானே. அதனால், தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வரை முதல்வரின் பணிச் சுமையை வெகுவாகக் குறைத்து, விழாக்களையும் முடிந்த மட்டும் தவிர்த்து ஓய்வெடுக்கச் சொல்லி இருக்கிறார்களாம். இதற்கிடையில் மொத்தக் குடும்பத்தினரையும் ஒருசேர அமரவைத்து, சீரியஸான சில விஷயங்களையும் பேசி முடிக்கும் மூடில் இருக்கிறாராம் முதல்வர்!''

''சரி, அம்மையார் நிலை எப்படி?''

''மதுரை ஆர்ப்பாட்டத்துக்கு அடுத்த மாதம் 18-ம் தேதி என நாள் குறித்திருக்கும் ஜெ. கோவை, திருச்சியை மிஞ்சும் அளவுக்கான கூட்டத்தை மதுரையில் திரட்டச் சொல்லி இருக்கிறாராம். இதற்கிடையில், கடந்த 8-ம் தேதி கோவையில் அ.தி.மு.க. எம்.பி-யான சுகுமார், பேரூர் எம்.எல்.ஏ-யான வேலுமணி, முன்னாள் அமைச்சர் தாமோதரன் உள்ளிட்டவர்கள் அடங்கிய ஆலோசனைக் கூட்டத்தில், 'அம்மாவுக்கு அரணாக தற்கொலைப் படையை உருவாக்க' தீர்மானம் இயற்றப்பட்டு இருக்கிறதாம். இந்த விஷயம் கொடநாடு வரை எட்ட... 'உணர்ச்சிவசப்பட்டு யாரும் இப்படிப் பேசக் கூடாது!' என உத்தரவு வந்ததாம்.''

''ஓஹோ..!''

''அதே நேரம் முக்கியமான நிர்வாகிகள் மூலமாக கோவை உக்கடத்தில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோயிலில் 'ஜெயலலிதாவின் ஜாதகத்தை' வைத்து வெகு சிறப்பான பூஜை ஒன்று நடத்தப்பட்டு இருக்கிறது. சமீப காலமாக ஜெ-க்கு ஜாதக பலன்களை கணித்துத் தரும் ஜோசியர் ஒருவர் மொத்தம் ஒன்பது ஆலயங்களில் அவரது ஜாதகத்தை வைத்து சிறப்பு பூஜை நடத்தும்படி சொல்லி இருக்கிறாராம். லட்சுமி நரசிம்மர் கோயிலும் அதில் ஒன்றாம். அங்கே பூஜை முடிந்த பின், பரிகார பூஜைக்கும் நாள் குறிக்கப்பட்டதாம்!''

சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை கழுகாருக்கு எடுத்து வைத்தோம்.

சில மிடறுகள் விழுங்கித் தொண் டையை நனைத்துக்கொண்டவர், ''அண்ணா பிறந்த நாளை ஒட்டி காஞ்சிபுரத்தில் ஏற்பாடாகும் ம.தி.மு.க. மாநாட்டுக்கு ஏகப்பட்ட முட்டுக்கட்டைகளாம். மாநாடு நடைபெறும் இடம் தனியாருக்கு சொந்தமான நிலமாம். அவர்களிடம் முன் அனுமதி வாங்கி போலீஸிடமும் முறைப்படி அனுமதி வாங்கிய நிலையில், திடீரென்று 'இங்கே எப்படி மாநாடு நடத்தலாம்?' என்று தாசில்தாரும் மற்ற அதிகாரிகளும் களத்தில் குதித்து பிரச்னை கிளப்பிவிட்டார்களாம். வரவேற்பு ஏற்பாடுகளைச் செய்யவும் கடுமையான கெடுபிடி காட்டப்பட்டதாம். இதை எல்லாம் சட்டை செய்யாமல், மாநாட்டுக்காக ம.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் வெங்கடேசன் பல இடங்களிலும் விளம்பரம் செய்திருக்க... அடுத்த கணமே அவர் மீது சாராய வழக்கைப் பாய்ச்சி இருக்கிறதாம் போலீஸ். இதற்கிடையில், ம.தி.மு.க. மாநாட்டைப் பிசுபிசுக்க வைக்கும் வகையில், தி.மு.க-வும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அண்ணா பிறந்த நாளை அமர்க்களமாகக் கொண்டாடத் தயாராகிறது. மாவட்டம் முழுக்க தி.மு.க. கொடிகளே தெரியும் வண்ணம் அனைத்து இடங்களையும் ஆக்கிரமித்த கட்சியின் முக்கியப் புள்ளி, பண விஷயத்திலும் தூள் கிளப்பினாராம். இதெல்லாம் வைகோவின் காதுகளை எட்ட... 15 வக்கீல்கள் அடங்கிய 'லீகல் செல்'லை மாநாட்டுக்காக அமைத்துவிட்டாராம்.''

- கவர் ஸ்டோரியைப் புரட்டிய கழுகார், ''காங்கிரஸ் கட்சியின் 125-வது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக திருச்சியில் சோனியா காந்தி கலந்துகொள்ளும் பொதுக் கூட்டம் அக்டோபர் முதல் தேதி நடைபெறுகிறது. அதில், பி.ஜே.பி-யில் இருந்து காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமான திருநாவுக்கரசர், தனது ஆதரவாளர்களையும் இணைக்கிறார். விழா இடத்தை திருநாவுக்கரசரும், தங்கபாலுவும் பார்வையிட்டு, பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்துவதாக செப்டம்பர் 13-ம் தேதி ஏற்பாடு.''

''ம்!''

''சென்னையில் இருந்து திருநாவுக்கரசருக்கு

முன்னதாகவே திருச்சி வந்துவிட்ட தங்கபாலு, திருச்சி மேயர் சுஜாதா மற்றும் தனது ஆதரவாளர்கள் சகிதம் சங்கம் ஹோட்டலில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அங்கு ஆவேசமாக வந்த காங்கிரஸின் திருச்சி மாநகர் மாவட்டத் தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ், 'திருநாவுக்கரசர் புதுக்கோட்டையில் இருந்து கார்ல வந்துட்டு இருக்காரு. அதுக்குள்ள இவருக்கு என்ன அவசரம்? கூட்டத்துக்கு பணம் செலவு பண்றது அவரு... பேரு வாங்கிட்டு போறது இவரா..?' என தங்கபாலுவின் காதில் படும்படியாகவே சில கெட்ட வார்த்தைகளையும் வீசினாராம். இதைக் காதில் வாங்காதவராக தனது அறையை நோக்கிப் போய்விட்டார் தங்கபாலு.''

''அடடே!''

''சற்று நேரத்தில் அங்கு வந்த திருநாவுக்கரசர், ஜெரோம் ஆரோக்யராஜை சமாதானப்படுத்தி, தங்கபாலு தங்கி இருந்த அறைக்கு அழைத்துப் போனாராம். உள்ளே என்ன நடந்ததோ... வெளியில் வரும்போது பிணக்குகள் மறந்தவர்களாக வந்திருக்கிறார்கள்.''

''காங்கிரஸ் என்றாலே, கலகமும் கைகுலுக்கலும் சகஜம்தானே!'' என்று சொல்லிவிட்டு சொய்ங் ஆனார்!

No comments:

Post a Comment