Monday, September 20, 2010

அல்லாடும் தோழி...அலை பாயும் தோழர்!


கடந்த சட்டமன்றத் தேர்தலின் ஹீரோ தி.மு.க-வின் தேர்தல் அறிக்கைதான்!

அதைத் தயாரித்தவர் பேராசிரியர் நாகநாதன். திருவல்லிக்கேணி சட்ட மன்றத் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு, ஜெயலலிதாவின் தோழி பதர் சயீத்திடம் தோற்றுப்போனார்.

வரும் தேர்தலில் இந்த இரண்டு பேருமே மீண்டும் போட்டியிட முடியாத நிலை. காரணம், தொகுதி மறுசீரமைப்பில் திருவல்லிக்கேணி தொகுதியே காணாமல் போய்விட்டது. நாகநாதன், கருணாநிதியின் காலை நேர வாக்கிங் தோழர். கடந்த சட்டசபைத் தேர்தல் நேரத்தில் தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கும் குழுவில், பொருளாதாரம் அறிந்த நாகநாதனை நியமித்தார் கருணாநிதி. 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, இலவச கலர் டி.வி., 2 ஏக்கர் நிலம், விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி... என தி.மு.க-வின் கவர்ச்சியான தேர்தல் அறிக்கையைத் தயாரித்துக் கொடுத்தார் நாகநாதன். இந்த அறிவிப்புகள் மக்களை வெகுவாக ஈர்த்தன. குறிப்பாக, இலவச கலர் டி.வி. ஆசை மக்களை மயக்கிவிட்டது!

தனது பேராசிரியர் பதவியை ராஜினாமா செய்துவிட்டுப் போட்டியிட்ட நாகநாதன் தோற்றுப்போனார். அவர் ஜெயித்திருந்தால்... நிச்சயம் அமைச்சர் ஆகி இருப்பார் என்ற பேச்சு இருந்தது. தோற்றாலும், அவரை மாநிலத் திட்டக் குழுத் துணைத் தலைவராக நியமித்தார் கருணாநிதி. இந்த முறையும் அவரைக் களம் இறக்கத் தயாராகி வருகிறது தி.மு.க. திருவல்லிக்கேணி தொகுதி சேப்பாக்கத்துடன் சேர்ந்து விட்டதால், நாகநாதனுக்கு தொகுதி கிடைப்பதில் சிக்கல். அண்ணாநகர், துறைமுகம், விருகம்பாக்கம், வேளச்சேரி, தி.நகர் ஆகிய தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் நாகநாதன் நிறுத்தப்படலாம்.

பதர் சயீத்துக்கும் இதே நிலைதான். ஜெயலலிதாவின் பள்ளித் தோழியான பதர் சயீத், 2004-ம் ஆண்டு எம்.பி. தேர்தலில் தென் சென்னைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். எப்படியாவது அவரை மக்கள் பிரதிநிதி ஆக்கிப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட ஜெயலலிதா, கடந்த சட்டசபைத் தேர்தலில் திருவல்லிக்கேணியில் நிறுத்தி வெற்றி பெறவைத்தார். ஆனால், உள் கட்சிப் பிரச்னைகளில் இவரைப் பின்னுக்குத் தள்ளிவிட்டனர். ஏதாவது சின்னப் பிரச்னை என்றாலும், 'அம்மாவுக்கு போன் போடட்டுமா?' என்று கட்சியினரை மிரட்டுகிறார் என்று பதர் சயீத்தின் எதிர் கோஷ்டியினர் புலம்புகிறார்கள்.

சமீபத்தில் திருவல்லிக்கேணிப் பகுதியில் ஜெயலலிதா கலந்துகொண்ட ரம்ஜான் நோன்பு நிகழ்ச்சி அழைப்பிதழில் பதர் சயீத் பெயரையே கட்சியினர் தவிர்த்துவிட்டனர். இருந்தும், பதர் சயீத் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். 'அம்மாவின் கோஷ்டி நான்' என்று அடிக்கடி சொல்லிக்கொள்ளும் இவரை, கட்சியினர் பயம் கலந்த மிரட்சியுடன்தான் பார்க்கிறார்கள்.

ஜெயலலிதாவுக்கு இவர் மீது நட்பு கலந்த பாசம் எப்போதும் உண்டு. எனவே, பதர் சயீத்துக்கு மீண்டும்வாய்ப்புக் கிடைக்கலாம். மயிலாப்பூர் அல்லது தி.நகர் தொகுதி தோழிக்குக் கிடைக்கலாம்!

No comments:

Post a Comment