Thursday, September 9, 2010

காஞ்சி Vs சிருங்கேரி! யாக ஃபைட்!


காஞ்சி ஜெயேந்திரருக்கு எதி ராக சிருங்கேரி சங்கராச் சாரியாரும், சிருங்கேரிக்கு எதிராக ஜெயேந்திரரும் மாறி மாறி யாகம் நடத்திய விவகாரம் ஆன்மீக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. ஏன்? எதற்கு? விசாரித்தோம்.

நம்மிடம் பேசிய ஆன்மிக நண்பர் ஒருவர்...

""காஞ்சி மடத்தின் மீது எப்போதுமே மரியாதை கொடுத்ததில்லை சிருங்கேரி மடம். ஆதிசங்கரர் உருவாக்கியது மொத்தமே நான்கு மடங்கள்தான். அதில் காஞ்சி மடம் வராது. எப்படியோ பிற்காலத்தில் பிரபலமாக்கிவிட் டார்கள். அதேபோல் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அர்ச்சகர்களாக பணிபுரியும் அனைவரும் சிருங்கேரி சங்கராச்சாரியாரின் கட்டுப்பாட்டில் உள்ளவர்கள். அங்கு தீட்சை பெறாதவர்கள் யாரும் இங்கு பணியாற்ற முடியாது. இந்த விஷயத்திலும் இவர்களுடன் காஞ்சி சங்கராச்சாரியார் பலமுறை போட்டி போட்டும் ஒன்றும் முடியவில்லை. கோயில் கும்பாபிஷேகம்கூட சிருங்கேரி மடாதிபதி தலைமையில்தான் நடந்தது. அதை பெரிய அளவில் லாபி செய்து, தானும் கலந்துகொண்டார் ஜெயேந்திரர். இந்திய அளவில் பிரபலமான சாமியாராக இருந்தும் சிருங்கேரியிடம் தன்னுடைய பாச்சா பலிக்கவில்லை என்பது ஜெயேந்திரருக்கு வருத்தமாகவே இருந்தது. ராமேஸ்வரம் கோயிலில் தன்னுடைய பவர் இருக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டுமென்று யோசித்தார். மொட்டையாகி நிற்கும் வடக்கு, தெற்கு கோபுரங்களை எடுத்துக் கட்டினால் என்ன என்று யோசித்தவர், உடனே ஸ்பான்சர்களை பிடித்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டார். அப்போதைய அ.தி.மு.க. ஆட்சியில் அதற்கு அனுமதி கொடுக்கப் பட்டது.

2001-ம் வருடம் பெரும் ஆரவாரமாக வடக்கு கோபுரம் கட்டுவதற்காக ஜெயேந்திரரால் அடிக்கல் நாட்டப்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக பேஸ்மட்டம் கிளம்பி 10 அடிக்கு உயரம் வந்துவிட்டது.

இந்த நிலையில்தான் 2004-ல் சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் உள்ளே போனார். அதோடு அவருடைய வங்கிக் கணக்குகள் முடக்கப்பட் டன. ஜெயேந்திரர் சார்பாக யாரும் கோபுரம் கட்டுமான வேலைகள் ஆரம்பிக்கக்கூடாது என்று ஜெயலலிதா கடுமையான உத்தரவைப் போட்டார்.

அதோடு கோபுரக் கட்டுமானப் பணி அப்படியே நின்றுபோனது. ஜெயேந்திரர் வழக்கு முடிந்து வந்தாலும் அவர் மூலம் கட்டுமானப்பணி நடக்கக் கூடாது என்று பெரும்பாலான புரோகிதர்கள் மற்றும் அறங்காவல் குழுவில் உள்ளவர்கள் சிருங்கேரி மடாதிபதியிடம் தெரிவித்தனர். அதோடுதான் அதற்கான பரிகார பூஜைகளை நடத்தியது மட்டுமல்லாமல் இனி கோபுரம் கட்டுமா னப் பணிக்கு எந்த வகையிலும் தடங்கல் வரக்கூடாது என்று யாகங்களும் நடத்தினார்கள் சிருங்கேரி மடத்தைச் சேர்ந்தவர்கள்'' என்றார் அவர்.

சிருங்கேரி மடாதிபதியின் பக்தரான கோவை தொழிலதிபர் வசந்தகுமார் என்பவர் வடக்கு கோபுரத்தைக் கட்டித் தரும் செலவை முழுவதுமாக ஏற்றுக் கொண்டுள்ளார். தெற்கு கோபுரத்தின் செலவை சிருங்கேரி மடமே ஏற்றுக்கொண் டுள்ளது.

கடந்த மாதம் இதற்கான வேலைகள் ஆரம்பமானது. இதற்கிடையே இந்த வேலைகள் நடைபெறக்கூடாது என்று ஜெயேந்திரர் சில பூஜைகளை காஞ்சியில் செய்கிறார் என்ற தகவல் சிருங்கேரி தரப்புக்குத் தெரியவர, அதை முறியடிக்கும் பூஜைகளை ராமேஸ்வரத்தில் கடந்த வாரம் முழுவதும் நடத்தினர்.


தடங்கல் செய்ய நினைப்பவர்களை துவம்சம் செய்யும் மிருத்யுஞ்சய ஹோமம், சிருங்கேரி மட மேனேஜர் நாராயணன் மேற்பார்வையில் ராமநாத சாஸ்திரிகள் தலைமையிலான புரோகிதர்கள் மூலம் நடத்தப்பட்டது. இப்படியே தினமொரு யாகம் நடத்தப்பட்டு கணபதி ஹோமத் தோடு நிறைவுபெற்றது.

நாம் இது சம்பந்தமாக கேட்பதற்கு ராமேஸ்வரத்திலுள்ள சிருங்கேரி மடத் திற்குச் சென்றோம். மேனேஜர் நாரா யணனோ, ""இது சம்பந்தமாக தற்போது எதுவும் பேச முடியாது'' என்று கிளம்பி விட்டார்.

தெற்கு கோபுரம் அருகே யாகப் பொருட்களுக்கு காவலாக நின்ற கோயில் ஊழியரிடம் பேசினோம்.
""கோபுர பேஸ் மட்டத்திலிருந்து 20 அடி வரைக்கும் கருங்கல்லில்தான் கட்டவேண்டும். அது ஆகம விதி மட்டுமல்ல, கோபுரம் ஸ்ட்ராங் காகவும் இருக்கும். ஆனால், ஜெயேந்திரரோ 10 அடி மட்டும் கருங்கல்லால் கட்டிவிட்டு மீதியை செங்கலால் எழுப்பி யிருக்கிறார். இதனால் செலவை மிச்சம் பண்ணலாம் என்று நினைத்திருக்கிறார். அதுதான் அவர் வாழ்க்கையில் விளையாடிவிட்டது. இப்போது சிருங்கேரி, அந்த செங்கல் கட்டுமானத்தை உடைத்தெறிய சொல்லிவிட்டார்'' என்றார்.
என்னதான் சிருங்கேரி மடாதிபதி சொன்னாலும் ஒரு பேச்சுக்கூட ஜெயேந்திரரிடம் ஒரு தகவலும் சொல்லாமல் கோபுர வேலைகளை கோயில் நிர்வாகம் செய்துவிட்டதாக வருத்தம் அடை கிறார்கள் ஜெயேந்திரரின் பக்தர்கள்.

நம்மிடம் பேசிய பா.ஜ.க. தேசியக்குழு உறுப்பினர் முரளிதரன், ""பல வருஷங்களா யாருமே கண்டுகொள்ளப்படாமல் இருந்ததை, காஞ்சி சங்கராச்சாரியார்கள்தான் கண்டுகொண்டு வடக்கு, தெற்கு கோபுரங்களைக் கட்டுவதற்குண்டான ஏற்பாடுகளை செய்தனர். இங்கே மட்டுமல்ல தமிழ்நாட்டின் பல கோயில்களுக்கும் இப்படித்தான் நன்மைகளை செய்துகொண் டிருக்கிறார்.

வழக்கு இருப்பதால் அவர் குற்றவாளி ஆகிவிடுவாரா? ஆனால் கோயில் நிர்வாகம், அவர் உருவாக்கிய பணியை, வேறு மடாதிபதி செய்யப்போவதை "கர்ட்டசி'க்குக்கூட சொல்லவில்லை என்பதுதான் வருத்தமாக உள்ளது.

பூஜை, யாகமெல்லாம் மீண்டும் ஒரு தடங்கல் வரக்கூடாது என்பதற்காகத்தான் செய்கிறார்கள். வேறு நோக்கமல்ல.

ஆன்மிகவாதிகளுக்கு அதிகப்படியான மரியாதை கொடுக்கும் கலைஞர் ஆட்சியில் காஞ்சி சங்கராச்சாரியாருக்கு தகவல் தெரிவிக்காமல் கோபுர வேலைகள் ஆரம்பித்ததுதான் நெருடலாக உள்ளது'' என்றார்.

இன்னும் மூன்று வருடங்களில் இரண்டு கோபுரங்களும் கம்பீரமாக எழுந்து நிற்கும். அதன் பெருமை தனக்குக் கிடைக்குமென்று நினைத்தார் ஜெயேந்திரர். ஆனால் அதன் பெருமை சிருங்கேரி மடாதி பதிக்குத்தான் கிடைக்குமென்றால் விதியை என்ன சொல்வது?

No comments:

Post a Comment