
மிக உயர்வான ஒரு சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்திருப்பதை கண்டு தமிழக பட்டதாரிகள் மகிழ்ச்சியில் துள்ளுகிறார்கள். அது என்ன அப்படி ஒரு உயர்வான சட்டம்?
கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் தமிழ் வழிக் கல்வி படித்தோர்க்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் சட்டத்தை இந்த அரசு கொண்டு வரும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தின் அடிப்படையில் தமிழ்வழிக் கல்வி படித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை தற்போது நிறைவேற்றியிருக்கிறார் கலைஞர்.
""தமிழகத்தில் ஆங்கில வழி மோகத்தின் ஆதிக்கம் அதிகரித்துக் கிடக்கும் நிலையில் இப்படி ஒரு சட்டம் வராதா என ஏங்கிக் கொண்டிருந்தனர் தமிழக கிராமப்புற இளைஞர் கள். இவர்களின் நீண்ட கால ஏக்கம் இது. அந்த ஏக்கத்தை போக்கி, தமிழக இளைஞர்களின் கனவை நனவாக்கியிருக்கிறது இந்த சட்டம். இச்சட்டத்தின் மூலம், தமிழ்வழிக் கல்வி படித்தவர்கள் அரசு பணியில் சேர்வது இனி எளிமையாகி விடும்''’’என்கிறார் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில தலைவர் சுப்பிரமணியன்.
இவரைப் போலவே தமிழ் உணர்வாளர்கள், தமிழர் அமைப்புகள், தமிழ் அறிஞர்கள், அரசு அலுவலர் சங்கங்கள், கல்வியாளர்கள், வேலையில்லா பட்டதாரிகள், கிராமப்புற விவசாய குடும்பத்தினர் என பல தரப்பினரும் இதனை வரவேற்றுக் கொண்டிருக்கிறார்கள். அதே சமயம் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பலன் தமிழக இளைஞர்களுக்கு கிடைக்க வேண்டுமானால் சில சிக்கல்களையும் தமிழக அரசு களைவது அவசியம் என்கிற குரல்களும் எதிரொலிக்கவே செய்கின்றன.
அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் முத்துச்சுந்தரம்,’’ ""தமிழ்வழிக் கல்வி படித்தோர்க்கு 20 சதவீத இடஒதுக்கீடு என்பது போற்றுதலுக்குரிய சட்டம்தான். இது கலைஞரின் மிக பெரிய சாதனையாக வரலாற்றில் இடம் பெறும் என்பதிலும் சந்தேகம் இல்லை. ஆனால் இந்த சாதனையின் பலன் உரியவர்களுக்கு கிடைக்கும் வகையில் அடுத்தக்கட்ட நகர்வுகளுக்கு இச்சட்டத்தை கொண்டு போகாவிட்டால்... சாதனை சாதனையாகவே இருக்குமே தவிர வேறு பலனைக் கொடுக்காது''’’என்று முத்தாய்ப்பாக பேசியவர்,’’""இன்றைக்கு அரசு பணியிடங்களில் அதிக எண்ணிக்கையில் இருப்பவர்கள் குரூப் 4 சர்வீஸ் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்தான்.
இந்த குரூப் 4 சர்வீஸ்க்கான அடிப்படை கல்வித் தகுதி என்பது பள்ளி இறுதி வகுப்பை (+2) முடித்திருந்தால் போதுமானது. கடந்த 4 வருடத்தில் இந்த பணியிடங்களுக்கான தேர்வு நடத்த கால்ஃபர் கூட பண்ணவில்லை அரசு. அந்த வகையில் தற்போது 2 லட்சம் பணியிடங்கள் குரூப் 4-ல் மட்டுமே காலியாக இருக்கிறது. இந்த சட்டம் ஏட்டளவில் இல்லாமல் இந்த பணியிடங்கள் நிரப்பப் பட்டால்தான் பலன் இருக்கும். அப்படி நிரப்பப்பட்டால் குருப் 4 பணியிடங்களில் மட்டுமே தமிழ் வழி படித்தவர்கள் 40 ஆயிரம் பேருக்கு (20%) வேலை கிடைக்கும். இன்றைக்கு தமிழ் வழிக் கல்வி படித்து வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்திருப்பவர்கள் மட்டுமே 65 லட்சம் பேர். ஆக, சட்டம் கொண்டு வந்ததோடு தங்கள் பணி முடிந்து விட்டது என்று அரசு கருதாமல் அதனை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் போதுதான் சட்டம் கொண்டு வந்ததன் நோக்கம் நிறைவேறும். 65 லட்சம் பேர் பயன் பெறவும் வழி பிறக்கும்''’’என்கிறார் முத்துச்சுந்தரம்.
தமிழ் அறிஞரான இலக்குவனார் திருவள்ளு வன்,’’""தமிழகத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளின் எண்ணிக்கை மொத்தம் 9582. தனியார் பள்ளிகளோ 10,934 இருக்கிறது. தமிழ்வழியில் அரசும் ஆங்கில வழியில் தனியாரும் கல்வியை போதிக்கிறார்கள். ஆனால் ஆங்கிலத்தில் படித்தால்தான் அரசு வேலைகள் கிடைக்கும் என்கிற நிலையிருப்பதால் அரசு பள்ளிகளுக்கு மாணவர்கள் வருவதைவிட தனியார் பள்ளிகளையே தேடி ஓடுகின்றனர். இந்த நிலையை மாற்றுவதற்கு இந்த சட்டம் உதவும். ஆனால் இதுபோன்று மொழிக்காக கொண்டுவரப்பட்ட பல சட்டங்கள், வெறும் சட்டமாகவே இருக்கின்றன.
உதாரணமாக, அலுவலக மொழி யாக தமிழ் என்பது 1956-லிருந்து இருக் கக்கூடிய சட்டம். இதனை கடுமையாக நாம் நடைமுறைப்படுத்தியிருக்கிறோமா? இல்லையே. அதனால்தான் எங்கும் தமிழ் இருப்பதில்லை. அந்த சட்டங்களைப் போல இதுவும் ஆகி விடக்கூடாது. அதனால் இதனை நடைமுறைப்படுத்த அவசர நடவடிக்கையில் அரசு கவனம் செலுத்த வேண்டும்''’’என்கிறார்.
இது ஒரு புறமிருக்க இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் இன்று ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். எனும் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக அதிகரித்துகொண்டே வருகிறது. இதற்கு கிராமப்புற மாணவர்களிடம் உள்ள ஆர்வம்தான் காரணம். இந்த தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கையில் 90 சதவீதம் பேர் தமிழ்வழி படித்தவர்கள்தான்.
ஆனால் இவர்களின் தேர்ச்சி விகிதம் மிக குறைவாகவே இருக்கிறது. இதற்கு என்ன காரணம்? புதிய சட்டத்தால் இதற்கு ஏதேனும் பலன் உண்டா? என்று ஒவ்வொரு வருஷமும் பல ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். அதிகாரிகளை உருவாக்கிக் கொண்டிருக்கும் சைதை துரைசாமியின் மனிதநேய ஐ.ஏ.எஸ். அகாதமியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பாலமுருகனிடம் கேட்டபோது,’’""இன்றைக்கு தமிழகத்தில் விவசாய குடும்பங்களின் எண்ணிக்கை இரண்டரை கோடிக்கும் மேல். அந்த குடும்பங்களிலிருந்து ஐ.ஏ.எஸ். உருவாக வேண்டுமென்பது எங்களின் கனவு.
அதன்படி நாங்கள் வைக்கும் நுழைவு தேர்வினை வருஷத்திற்கு சுமார் 15 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள். இவர்களில் 80 சதவீதம் பேர் தமிழ் வழி படித்தவர்கள்தான். இவர்களுக்கு சிவில் சர்வீஸ் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் தமிழில் கிடைப்பதில்லை.
ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் இருப்பதுபோல தமிழில் புத்தகங்கள் இல்லை. அப்படியே ஒன்றிரண்டு இருந்தாலும் அவைகளும் 1970 களில் வெளிவந்த புத்தகங்களாக இருப்பதால் பயன்படுவதில்லை. பதிப்பகத்தாரும் தமிழ்வழியில் புத்தகம் போடுவது லாபம் இல்லை யென்பதால் அவர்களும் இதில் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் தமிழ்வழி மாணவர்கள் ஆங்கில புத்தகங்களை மொழிபெயர்த்து படிப்பதற்கு சிரமப்படுகின்றனர். இத்தகைய போக்கினால்தான் தமிழ்வழி படித்தவர்களின் தேர்ச்சி குறைவாக இருக்கிறது. தற்போது இப்படி ஒரு சட்டத்தை கொண்டுவந்துள்ள தமிழக அரசு சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களையும் தமிழில் கொண்டு வரவேண்டும். அப்போது இந்த புதிய சட்டத்தின் மூலம் தமிழ்வழி படித்த மாணவர்கள் நிறையபேர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ்., ஐ.ஆர்.எஸ்., என்கிற உயர்ந்த பதவிக்கு வர வழி பிறக்கும். இதனையும் அரசு கவனத்தில் கொண்டால் தமிழக இளைஞர்களின் பல்வேறு கனவுகள் நிறைவேறும்''’ என்கிறார் புதிய சிந்தனையில்.
No comments:
Post a Comment