Thursday, September 9, 2010

உலகத்தில் பெரிய வியாதி! -மரணகானா விஜி


கறுப்பு பறையன் காணாம போனதக்கப்பறம் சுடுகாட்டு சூழல்ல இருந்து மெல்ல மெல்ல விலகிக்கிட்டு இருந்தேன். அப்போ என்னை தத்தெடுத்துக்கொண்டது மரண வீடுகள்தான். கறுப்பு பறையனின் மரண சித்தாந்தத்தையும் ஆயிரம் விளக்கு செல்வாவின் கானாவையும் இணைச்சி மரணகானாங்கிற புதிய விசயத்தை உருவாக்குனேன். மெட்ரஸ்லயும் அத சுத்தி இருக்கிற கிராமத்துலயும் மரண வீடுகள்ல ஒலிச்சது என்னோட கானா.இதனால குடிசைவாசிகள்டயும் தாழ்த்தப்பட்ட மக்கள்டயும் நான் பாப்புலராயிட்டேன்.

ஒரு நாள்... ஸ்டேன்லி ஆஸ்பெட்டல இருந்து சுமதின்னு ஒரு பொண்ணு என்கிட்ட பேசினா. அந்த சுமதி,’""அண்ணே.. எங்க அப்பா சாக கெடக்கிறாரு. 10,15 நாளுக்கு மேல அவரு உசிரு இழுத்துக்கிட்டே இருக்குண்ணே. நேத்து ராத்திரி என் அப்பா என்னிட்ட "நான் இனி பொழைக்க மாட்டன் குட்டி. கடைசி கடைசியா ஒரு ஆசை... கானா விஜிய கூப்பிட்டு எனக் காக ஒரு கானா பாட சொல்ல வெப்பியா? அத கேட்டு நிம்மதியா செத்துப்போவேன் குட்டி'ன்னு சொன்னாரு அண்ணா. எங்கப்பா ஆசைய நிறைவேத்துவீங்களா அண்ணா. என்கிட்ட கொஞ்சம் காசு இருக்கு அத தர்றேன்''னு சொன்னா.

அத கேட்டு எனக்கு என்னம்மோ ஆச்சு. உடனே வர்றேன்மான்னு சுமதிக்கிட்டச் சொல்லிட்டு ஸ்டான்லி ஆஸ்பெட்டலாண்ட போனேன். 4-வது மாடியில இருந் தாரு சுமதியோட அப்பா. ராத்திரியிலயிருந்து அசைவே இல்லாம இருக்காருண்ணான்னு சொன்னா சுமதி. உறவுக்காரங்கன்னு ரெண்டே ரெண்டு பேரு அங்கிருந் தாங்க. சுமதியோட அப்பா நெஞ்சுல கையவெச்சு பாட ஆரம்பிச்சேன்.


"முதலாம் மாசம் நெஞ்சடைக்குதடா.. ரெண்டாம் மாசம் விந்து வளருதடா...மூணாம் மாசம் முதுகு தண்டு மொளைக்குதடா... நாலாம் மாசம் நரம்பு தளழுதடா... அஞ்சாம் மாசம் ஐம்புலன்களும் ஊறுதடா...ஆறாம் மாசம் அழகு முகம் மலருதடா... ஏழாம் மாசம் இதயம் துடிக்கு தடா... எட்டாம் மாசம் எட்டி எட்டி உதைக்குதடா... ஒம்பதாம் மாசம் வளகாப்பு நடக்குதடா... பத்தாம் மாசம் பனிக்குடம் ஒடைஞ்சு, ரத்த பிண்டமாய், சதைப் பிண்டமாய் குடல் கிழிந்து உடல் கிழிந்து குருதிக் கொட்ட மண்ணில் கொழந்தை பொறக்கு தடா....'’ன்னு ஒரு மனுஷனோட பொறப்பு எப்படி நடக்குதுங்கிறதை அடித்தொண்டையிலிருந்து கானாவா பாடுனேன். அவரோட உடம்பு குலுங்கியது. அப்போ அவரோட வாயி எதையோ சொல்ல நெனைச்சது.ஆனா முடியல. அடுத்த ஒரு நிமிஷத்துல மூச்சு அடங்கிடுச்சு அவருக்கு. என் கையை புடிச்சிக்கிட்டு அழுதா சுமதி. 10,15 நாளா உயிரு போவாம எங்கப்பா அவஸ்தைப்பட்டது எனக்குதான்ணா தெரியும். அவரு நிம்மதியா செத்துப் போகணும்னு நான் வேண்டாத கடவுள் இல்லண்ணா... ஆனா... நடக்கல.இப்போ நிம்மதியா செத்துப்போயிருக்காரு. ரொம்ப நன்றி அண் ணான்னு சொல்லி, அவ கையில இருந்த 100 ரூவாய கொடுத்தா. அத வாங்க மறுத்துட்டு சுமதி யோட அப்பாவை அவளோட சேந்து அடக்கம் பண்ணிட்டு வந்தேன். இதையெல்லாம் பாத்தா மரணம்ங்கிறது ஒன்னுமே இல்லை.மரணத்தை அது போக்குலயே ஏத்துக்கிட்டா பெருசா துக்கம் வராதுன்னு எனக்கு தோணுச்சு.

மெரினா பீச்சாண்டா நடந்த சில சம் பவங்கள சொன்னா மனசு கஷ்டமா இருக்கும். இன்னைக்கும் அத நெனச்சன்னா கூட... என்னையும் அறியாம அழுவேன். மரணங்களை பாத்து பாத்து மனசு மரத்து போயிருந்தாலும் சில சம்பவங்கள் பாதிப்பை ஏற்படுத்திடுது.15 வருஷத்துக்கு முன்னால மெரினா பீச்சுல மீனாட்சி பாட்டின்னு ஒருத்தி இருந்தா. அவளுக்கு 60 வயசு இருக்கும். ஒரு விபச்சாரி. ஆனா 60 வயசுல இருக்கிற அவள யார் விரும்புவா? அதனால வேற ஸ்டைலில் இறங்கிட்டா. அதுக்கு 5 ரூவான்னு சொல்லிக்கிட்டே மெரினாவ ஒரு சுத்துசுத்தி வருவா. ஒரு நாளைக்கு 50 ரூவா சம்பாதிச்சுடுவா மீனாட்சி பாட்டி. ஒரு முறை எனக்கு முன்னாலயே அவளோட பிஸ்னஸ் நடந்துச்சு. அத பாத்துக்கிட்டு என்னால இருக்க முடியல. கொஞ்சம் அப்பால தள்ளிப்போய்ட்டேன். அரைமணி நேரத்துல, அவ கிட்ட இருந்த ஆளுங்க கிளம்பி போனதும் அவளும் அந்த இடத்த விட்டு நகந்து வந்தா. அப்போ நான் அவள கூப்பிட்டேன். என்கிட்ட வந்த மீனாட்சி பாட்டி,’என்னா 5 ரூவா இருக்கா?’ன்னு கேட்டா. அதுக்கு நான், உன்ன அதுக்கு கூப்பிடல. இதெல்லாம் ஒரு பொழப்பா? இதுக்கு செத்து போயிடலாம்.. நீ என்ன ஜென் மம்?ன்னு கோபமா கேட்டுட்டேன். இன்னைக்கு வரைக்கும் அந்த பாட்டிய பாத்து நான் ஏன் அப்படி கேட்டன்னு எனக்குத் தெரியாது. அதுக்கு மீனாட்சி பாட்டி,’ எனக்கு திருட தெரியாது தம்பி. அதான் எனக்கு தெரிஞ்சத செய்றேன். மானம் ஈனமெல்லாம் பசி பாக்காது தம்பி'ன்னு சொல்லிட்டு போய்ட்டா. அவ நடையில ஒரு வெறுமை தெரிஞ்சது எனக்கு. அவக்கிட்ட அப்படி கேட்டிருக்க கூடாதோ? அந்த சம்பவத்துக்கு பெறகு 4,5 நாளா மீனாட்சி பாட்டிய நான் பாக்கவே முடியல. பீச்சாண்டயும் அவ சுத்தி வந்த மாதிரியும் தெரியல. மனசு என்னமோ அவளை பாக்க துடிச்சது..

ஒரு நா..நண்பர்களோட ஜி.ஹெச்சுக்கு போற வேல ஒன்னு வந்துச்சு. அப்படி போயிக்கிட்டு இருக்கிறப்போ சென்ட்ரல் ஜெயிலுக்கு பக்கத்துல இருக்கிற சுடுகாட்டுல நிறைய குப்பை குவிஞ்சு கெடந்துச்சு. அந்த குப்பையோட குப்பையா ஒரு பாடியும் கெடந்துச்சு. அது என் கண்ணில் பட நண்பர்களுக்கிட்ட,’டேய்... அங்கு ஒரு பாடி கெடக்குதடா..ன்னு சொல்ல அங்கே நாங்க போனோம். குப்பைக்குள்ளார புதைஞ்சு கெடந்தது அந்த பாடி. அத கால புடிச்சு இழுத்தோம். பாடி வெளியேவர அத திருப்பி போட்டு பாத்தா... அது மீனாட்சி பாட்டி. என் நெஞ்சல்லாம் அடைக்கிற மாதிரியாய்டுச்சு. கூட இருந்த நண்பர்கள் ’இது நம்ம மீனாட்சி பாட்டிடா.. இவ எப்படிடா செத்து கிடக்கிறா? பசி கொடு மையால செத்துருப்பாடான்னு சாதாரணமா சொன்னானுங்கோ. எனக்கு ஏதோ உறைக்கிற மாதிரி இருந்துச்சு. செத்து போய்டலாம்னு 4 நாளைக்கு முன்னால நாம சொன்னத செஞ் சுட்டாளா மீனாட்சி பாட்டி? மனசு முழுக்க ஏதேதோ கேள்விகள் கேட்டுகிட்டே அந்த இடத்தை விட்டு நகந்தோம். ஒரு வேளை அன்னைக்கு நான் அவக் கிட்ட மிருகத்தனமாக அப்படி கேட் காம இருந்திருந்தா மீனாட்சி பாட்டி இன்னைக்கு உயிரோட இருந்திருப்பாளோ? தெரியல. ஆனா, இன்னைக்கு வரைக்கும் என் மனசை அரிச்சிக்கிட்டு இருக்கிற விஷயம் இது.

மீனாட்சி பாட்டியை போலவே சுபத்ராங்கிற ஒரு விபச்சாரிக்கிட்டயும் கேள்வி கேட்டேன். அதுக்கும் அவ சொன்ன பதிலும் என் மனச உறுத்திக் கிட்டுதான் இருக்கு. சுபத்ரா ஒரு தெலுங்கு பொண்ணு. 25,30 வயசு இருக்கும்.நல்லா கலரா வும் இருப்பா. சின்ன வயசுலயே கல்யாணம் செஞ்சு கொடுத்து...நிறைய கொடுமைகள அனுபவிச்சிருக்கா சுபத்ரா. புருஷனே விபச்சாரத்துல தள்ளிவிட்டுட்டான். 2... 3 கொழந்தைங்க வேற.மெரினாவுல அன்னைக்கு சுபத்ரான்னா ரொம்ப ஃபேமஸூ. என்கிட்டயும் அவளுக்கு நல்ல பழக்கம். அன்பா பேசுவா. ஒரு நாளைக்கு எப்படியும் 10,12 கஸ்டமர பார்த்துடுவா சுபத்ரா. ஒரு நா....ஒரே சமயத்துல 5 பேருக் கிட்ட போய்ட்டு வந்த சுபத்ரா...கொஞ்சம் ரெஸ்டு எடுக்கிறதுக்காக என்கிட்ட வந்து உக்காந்தா. அப்போ நான்...’ என்ன சுபத்ரா... ஒரே நேரத்துல இத்தன பேருக் கிட்ட போறியே பெரிய வியாதி கியாதி வந்துராதா? வியாதி வந்துச்சுன்னா என்ன பண்ணுவே?’ன்னு கேட்டேன்.கலகலன்னு சிரிச்ச அவ,’"இந்த ஒலகத்துல எல்லா பெரிய வியாதிய காட்டிலும் ஒரு பெரிய வியாதி இருக்கடா விஜி. அந்த பெரிய வியாதி....வேறு எதுவும் இல்ல... அதான் ... பசி.என்ன நம்பி 5 வயிறு இருக்குடா விஜி. அதனால இந்த வியாதிய பத்தி கவலப் படல. இருக்குற வரைக்கும் பசியில் லாம இருப்போம்'ன்னு சொன்னா சுபத்ரா. அதுக்கு பெறகு இது மாதிரி கேள்வி எதயும் நான் கேட்டதே இல்ல. இன்னைக்கு அந்த சுபத்ரா இருக்கிறாளா? இல்லையா?ன்னு தெரியல. இருட்டும் திருட்டும் இல்லைன்னா... மெட்ராஸ்ல பல ஜீவன்கள் தெனம்தெனம் செத்துப் போயிக் கிட்டே இருப்பாங்க. அதுக்கு பசிதான் காரணமா இருக்கும்.

என் உசிருக்கு உசிரா இருந்த பீடை சேகர் செத்துப் போனதுக்குப் பெறகு எனக்கு கெடச்ச ஒரு ஃப்ரெண்டு பீட்டரு. நல்லா வசதிக்கார பையன். சூளமேட்டுல அவனுக்கு பெரிய வீடெல்லாம் இருக்கு. ஒருமுறை கண்ணம்மாபேட்டை சுடுகாட்டுக்கு அவன் வந்தப்போ என் னோடு நல்லா பழகிட்டான். அதுலயிருந்து ரொம்ப நாளைக்கு ஃப்ரெண்ட்ஸா இருந்தோம். ஒருநா... காலையில என்ன பாக்க அவசரம் அவசரமா ஓடிவந்த பீட்டரு, ""மச்சான், என் தங்கச்சி தூக்கு மாட்டி செத்துப் போயிட்டா. ஏன், எதுக்குன்னு அப்புறம் சொல்றேன். இப்போ என் தங்கச்சியோட பாடி ஜி.ஹெச்.சுக்கு போயிருக்கு. மார்ச்சுவரியிலயிருந்து என் தங்கச்சியை சீக்கிரமா கொண்டுவர நீதாண்டா உதவணும். ஜி.ஹெச்.சுல எனக்கு யாரையும் தெரியாதுடா''ன்னு சொன்னான்.

சரி வாடான்னு அவன அழைச்சிக்கிட்டு ஜி.ஹெச்.சுக்கு போனேன். அங்க மார்ச்சுவரியில குய்யான்னு எனக்குத் தெரிஞ் சவன் இருக்கான். அவன பாக்கப் போனோம். ஆனா, பிணவறை இன்னும் திறக்கல. 2 மணி நேரம் காத்துக் கிடந்தோம். ரெண்டு நாளா சோறு எதுவும் திங்காததினால, பசி வேறு வயித்த கிள்ளிச்சு. ஒரு டீயும் பன்னும் சாப்பிட்டா தேவலாம்னு தோணுச்சு. பீட்டருக்கிட்ட கேட்டேன். மொறைச்சிப் பார்த்தான்.

கொஞ்ச நேரத்துல குய்யான் வந்து பிணவறையை தெறந்தப்போ, அவன்கிட்டே போனோம். என்னப் பார்த்து, "என்ன மச்சான் ஆளையே ரொம்ப நாளா காணோம்?'ன்னு கேட்டான் குய்யான். நான் வந்த விபரத்தைச் சொன்னேன். அவனே ஓடிப்போய் சில காரியத்தை முடிச்சிட்டு, எங்களை உள்ளே அழைச்சிட்டுப்போன குய்யான், "யாருப்பா இதுல உன் தங்கச்சி'ன்னு பீட்டருக்கிட்ட கேட்க, அங்கே அடுக்கி வெச்சிருந்த ஒவ்வொரு பாடியையும் பார்த்துட்டு ஒரு பாடிய அடையாளம் காட்டினான் பீட்டரு. அந்த பாடியப் புடிச்சி இழுத்து கீழப்போட்டான் குய்யான். பீட்டரு பதறித் துடிச்சு, "மெதுவாடா.. அவ என் தங்கச்சி'ன்னு அழுதான். நான் அவன்கிட்ட "உனக்குதான் அவ தங்கச்சி, இவனுக்கு இது ஒரு பாடி, அவ்வளவுதான்'னு சொன்னேன்.

அப்போ, போண்டாவும் டீயும் கொண்டாந்து வச்சிட்டுப் போனான் ஒரு பையன். அத என்கிட்ட கொடுத்தான் குய்யான். நான் எந்த உணர்ச்சியும் காட்டாம சாப்பிட்டேன். அத பாத்த பீட்டரு, ""என்னடா இது... என் தங்கச்சி செத்துட்டா. நீ கவ லையே படாம டீயை குடிக்கிற''ன்னு கோபப்பட... "கவலப்படற தால உன் தங்கச்சி வந்துருவாளா? இல்லல்ல... அப்புறம் எதுக்குடா பசியோட இருக்கணும்'னு சொன்னேன். எல்லாம் முடிஞ்சு பாடியயும் வெளியே எடுத்துட்டு வந்தப்புறம் என்கிட்ட ஒரு 500 ரூபாயை தூக்கிக் கெடாசிட்டு, "இனி என் முகத்துல யே யே முழிக்காதடா'ன்னு காறித் துப்பாத கொறையா சொல்லிட்டுப் போனான் பீட்டரு. இதுல நான் செஞ்ச பாவம் என்ன? போண்டாவும் டீயும் சாப்பிட்டதுதானா? இன்னைக்கும் அந்த பீட்டரு இருக்கான். ஆனா... பிரிஞ்சு போன எங்க ஒறவு மட்டும் சேரவே இல்லை.

-(தொடரும்)

No comments:

Post a Comment