Saturday, September 18, 2010

கண்ணைக் கசக்கும் தென்னை விவசாயிகள்!


"தென்னையைப் பெத்தா இளநீரு, பிள்ளையைப் பெத்தா கண்ணீரு' என்று கவியரசு பாடினார். ஆனால் "தென்னையை வளர்த்த நாங்களும் கண்ணீர் வடிக்கிறோம். எங்கள் வாழ்க்கையில் வென்னீர் ஊற்றியதுபோல் துடிக்கிறோம்' என்று கதறுகிறார்கள் தென் னை விவசாயிகள்.

வானம் பார்த்த பூமி என்பதால் நெல்லு விவசாயம் குறைந்துவிட்ட நிலையில்... ஓரளவு விவசாயிகளுக்கு கஞ்சி ஊத்திக்கொண்டிருந்தது தென்னை விவசாயம் தான். ஆனால் இதற்கு ஆதரவளிக்க வேண்டிய விவசா யத்துறை அதிகாரிகள் ஒருபக்கம் இவர்களைப் புறக்கணிக்க, கொள்முதல் செய்யும் வியாபாரிகளோ மறுபக்கம் கழுத்தை நெரிக்க, மரங்களையெல்லாம் வெட்டி சட்டமாக்கிவிட்டு பஞ்சம் பிழைக்க ஏதாவது ஊருபக்கம் போய்விட தீர்மானித்து வருகிறார்கள் தென்னை விவசாயிகள்.

தங்களுடைய நிலையை அரசுக்குத் தெரிவிக்கும் வகையில் பல்வேறு கோரிக்கைகளுடன் ராமநாதபுரத்தில் உண்ணாவிரதமிருந்த அவர்களிடம் பேசினோம்.

தென்னை விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் செல்லத்துரை அப்துல்லா, ""ராமநாதபுரம் மாவட்டத்தில் கொஞ்சம் நஞ்சம் மிச்சமிருப்பது தென்னை விவசாயம் தான். எங்களுக்கு என்ன கஷ்டம் வந்தாலும் பிள்ளை களை பாதுகாப்பதுபோல் தென்னைகளை பாதுகாத்து வர்றோம். அதே நேரத்தில் அரசும், விவசாயத்துறையும் எங்களுடைய பிரச்சினைகளைக் கண்டுகொள்வதில்லை. நாட்டில் மக்களிடையே தேங்காய் பயன்பாடும் அதிகமிருந்தாலும் அதை உற்பத்தி செய்யும் எங்களுடைய நிலை மோசமாக உள்ளது.

தேங்காயை கிலோ 15 ரூபாய் என்ற கணக்கில் அரசே கொள்முதல் செய்ய வேண்டும். அதேபோல் மாவட்டத்தில் கொப்பரை கொள்முதல் இல்லை. அதை அமைத்து கிலோ 60 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் தென்னை விவசாயிகள் வாழ்க் கையில் மகிழ்ச்சி பிறக்கும்'' என்றார்.

தென்னை விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் தோழர் ஞானவாசகம், ""பயிர் இன்சூரன்ஸ் இருப்பது போல் தென்னைக்கும் இன்சூரன்ஸ் வேண்டுமென்று கோரிக்கை வைத்தோம். சமீபத்தில் அதை அமல்படுத்தினார்கள்.

அதில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்க்காமல் புறக்கணித்துள்ளார்கள். உடனடியாக ராமநாதபுரம் மாவட் டத்தை இன்சூரன்ஸ் திட் டத்தில் சேர்க்க வேண்டும். தென்னை விவசாயிகள் சொட்டு நீர்ப்பாசன வசதி செய்துகொள்ள உரம், மருந்து, மின்விசை மோட்டார் உள்ளிட்டவைகள் வைப்ப தற்கு அரசு தரும் மானி யத்தை தனியார் கம்பெனி களுக்கு கொடுக்காமல் நேரடியாக விவசாயி களிடம் கொடுக்க வேண்டும்'' என்றார்.

இஸ்மாயில் என்பவர், ""அந்தக் காலத்துலயிருந்து தென் னந்தோப்பு வச்சிட்டு வர்றோம். சரியான காய்ப்பும் இல்லை. தண்ணியும் உப்பாகிப் போச்சு. இருந்தாலும் விடாம விவசாயம் செய்யுறோம். நஷ்டமானாலும் தொடர்ந்து செய்யுறோம். காரணம், தென்னைமேல எங்களுக்குள்ள ஈடுபாடு. ஆனா, வேளாண்துறையோ எங்களுக்கு எந்த விதமான நன்மையும் செய்யுறதில்லை. அவ்வப்போது தென்னைகளுக்கு வாடல் நோய் வந்திடுது. காண்டாமிருக வண்டு வந்து தென்னைகளை நாசம் பண்ணுது. இதுக்கு கண்டிப்பா அரசு எங்களுக்கு நஷ்ட ஈடு தரணும்'' என்றார்.

இன்னொரு விவசாயியோ... ""தென்னை விவசாயத்தைப் பொறுத்த வரைக்கும் தொழிலாளிகளுக்கு எந்தவிதப் பிரச்சினையுமில்லை. அவர்கள் பார்க்கின்ற வேலைகளுக்கு உடனுக்குடன் கூலி கொடுத்து விடுகிறோம். முதலீடு செய்கிற முதலாளிகளான எங்களுக்குத்தான் பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது. நஷ்டம் வருமென்று தெரிந்தும் எத்தனையோ உருப்படாத தொழில்களுக்கு கடன் கொடுக்கும் வங்கிகள், எங்களைப் போன்றவர்களுக்கு கடன் கொடுத்தால், நாங்கள் பிரச்சினையில்லாமல் தொழில் செய்ய முடியும்'' என்றார்.

தென்னை விவசாயிகளின் பிரச்சினைகள் பற்றி மாவட்ட வேளாண் இணை இயக்குனரிடம் பேசினோம். ""எங்களால் முடிந் தவரை தென்னை விவசாயிகளுக்கு நன்மை செய்து கொண்டிருக்கிறோம். இன்சூரன்ஸ் திட் டத்தைப் பொறுத்த வரையில் தென்னை சாகுபடி அதிக அள வில் நடக்கும் மாவட் டங்களில் மட்டும் நடைமுறைக்கு வந்துள் ளது. அங்கு சக்சஸ் ஆனவுடன் நமது மாவட்டத்திற்கும் கொண்டு வரப் படும். கொப் பரை தேங்காய் களை அரசு கொள்முதல் செய்யாது. கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும்'' என்றார்.

தென்னை விவசாயம் செய்யும் விவசாயிகள் கேரளாவில் நிம்மதியான வாழ்க்கை வாழ்வதற்கு, அங்குள்ள அரசு அவர்களுக்கு அனைத்துவிதமான சலுகைகளையும் வழங்கி வருகிறது. ஏற்றுமதிக்கான சந்தைகளை உருவாக்கிக் கொடுத்துள்ளது. அதுமட்டுமில்லாது, தென்னைக் கழிவுகளில், பல வகையான பொருட்களை உற்பத்தி செய்து சர்வதேச அளவில் கொண்டு செல்கிறது. தென் மாவட் டத்தில் அதுபோன்று தென்னை விவசாயத்தை ஊக்குவிக்க அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

No comments:

Post a Comment