Wednesday, September 15, 2010

நக்கீரனிடம் திணறிய விஞ்ஞானி!


இந்தியாவுக்கு வந்து சிகிச்சை பெற்றுச் செல்லும் வெளிநாட்டி னர்களை அந்தந்த நாட் டின் விமான நிலையத்திலேயே பரிசோதனை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். குறிப்பாக சென்னையிலிருந்து செல்லும் வெளிநாட்டினருக்கு கொஞ்சம் கூடுதலாகவே பரிசோதனை செய்யப்பட்டு வருகிறதாம்.

காரணம்? வேறென்ன... தமிழக விஞ்ஞானி கே.கார்த்தி கேயன் குமாரசாமியுடன் இணைந்து லண்டன் விஞ்ஞானிகள் செய்த ஆராய்ச்சியில் எந்த மருந்துக்கும் கட்டுப்படாத "சூப்பர் பக்' கிருமியால் பாதிக்கப்பட்டவர்கள் உலகத்திலேயே இந்தியாவில் -அதுவும் சென்னையில்தான் அதிகமாக (44 பேர்) இருக்கிறார்கள். மேலும்... இந்தியாவிலிருந்துதான் இந்த பாக்டீரியா கிருமி உலகம் முழுக்க பரவுகிறது. அதனால், இந்தியாவுக்கு போய் சிகிச்சை எடுத்துக்கொள்பவர்களுக்கு ஆபத்து என்றெல்லாம் பிரபல பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலான "தி லான்செட்' இதழில் இந்த விஞ்ஞானிகள் வெளியிட்ட செய்திதான் இந்தளவுக்கு பரபரப்பையும் சர்ச்சையையும் உருவாக்கியிருக்கிறது.

இந்த சூப்பர் பக் ஆராய்ச்சியின் முடிவு குறிப்பிட்ட மல்ட்டி நேஷனல் மருந்து கம்பெனியின் மருந்துக்கு (ஆன்டிபயாடிக்) விளம்பரமாகவே அமைந்திருக்கலாமோ? என்ற கேள்வியை கடந்த ஆகஸ்ட் 18-ந் தேதி நக்கீரனில் "திக் திக் சூப்பர் பக்' என்ற கட்டுரையில் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பியிருந்தோம்.

இந்த நிலையில்தான்... "யாரிடம் அனுமதி பெற்று "சூப்பர் பக்' ஆராய்ச்சியைச் செய்தீர் கள்? இதற்கான பதிலை 14 நாட் களுக்குள் தெரியப்படுத்த வேண்டும்' என்று தமிழக விஞ்ஞானிகள் உட்பட இந்த ஆராய்ச்சியில் சம்பந்தப்பட்ட அனைத்து இந்திய விஞ்ஞானிகளுக்கும் கெடு விதித்து அதிரடி நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது மத்திய மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை. இன்னும் பலவித சந்தேகக் கேள்விகள் நம் இதயத்தில் பக்பக்கை உண்டாக்க... "சூப்பர் பக்' சர்ச்சையை கிளப்பிய சென்னை தரமணியிலுள்ள மைக்ரோபயாலஜி துறையின் விஞ்ஞானியான கே.கார்த்தி கேயன் குமாரசாமியிடமே கேட்டோம். பலவித தயக்கத்திற்குப் பிறகே நம்மிடம் பேச ஆரம்பித்தார்.

உலகம் முழுக்க இந்த பாக்டீரியா கிருமி இருப்பதாக சொல்லப்படுகிறது. அப்படியிருக்க இந்தியாவிலிருந்துதான் பரவுகிறது என்று எப்படி சொல்ல முடியும்? உலகத்திலேயே சென்னையில்தான் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக எதை வைத்து ஆராய்ச்சிக் கட்டுரை எழுதினீர்கள்?

உலகம் முழுக்க இந்தக் கிருமி இருப்பது உண்மைதான். ஆனால் இந்தியாவிலிருந்து சிகிச்சை பெற்றுச் செல்லும் வெளிநாட்டுக் காரர்கள் இந்த நோய் தொற்றியிருப்பதால் லண்டன் விஞ்ஞானியான திமோதி ஆர்.வால்ஷும், டேவிட் எம்.லிவர்மோரும் அப்படி குறிப்பிட்டிருக்கிறார்கள்.

சென்னையிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனைகளிலும், மூன்று அரசு மருத்துவமனைகளிலும் உள்ள நோயாளி களிடம் செய்த ஆய்வில்தான் 44 பேர் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

சரி... எத்தனை நோயாளிகளிடம் செய்த ஆய்வில் 44 பேருக்கு இந்த சூப்பர் பக் கிருமி தொற்றியிருக்கிறது?

அது வந்து... (நா தடுமாறுகிறது) சரியான புள்ளிவிபரத்தை பார்த்துவிட்டுச் சொல்றேங்க. (இதழ் அச்சாகும் வரை சொல்லவில்லை).

சூப்பர் பக் நோய்க்கிருமி "பாசிட்டிவ்' ஆனவர்கள் எந்த மாதிரியான அறிகுறி களோடு வந்திருந்தார்கள்? எந்தெந்த மருத்துவமனையில் எடுத்தீர்கள் என்கிற விபரங்களை (ப்ரஃபோர்மா) தர முடியுமா?

ஸாரி... மருத்துவ எத்திக்ஸ்படி அந்த விபரங்களை தரக்கூடாது.

எந்த பரிசோதனை மையத்தில் ஆய்வு செய்து 44 பேருக்கு நோய் தொற்றி யிருப்பதை உறுதி செய்தீர்கள்?

நம்ம தரமணியில் இருக்கிற "லேப்'லதான்.

இல்லையே.. நீங்க லண்டனுக்கு அனுப்பி ஆய்வு செய்ததாகத்தானே எங்க ளுக்குத் தகவல் கிடைத்தது?

ஆ... ஆமாம்.... இந்த லேப்ல கன்ஃபார்ம் பண்ணிட்டு அதுக்கப்புறம்தான் லண்டனுக்கு நோயாளிகளிடம் எடுக்கப்பட்ட ஸாம்பிளை அனுப்பி வெச்சேன்.

லண்டனில் ஆய்வு செய்த லேப் தரச்சான்று பெற்ற லேப்தானா?

நிச்சயமாக... லண்டனில் உள்ள பிரபல கார்டிஃப் பல்கலைக்கழகத்தின் மிகப்பெரிய தரச்சான்று பெற்ற லேப்லதான் சோதிக்கப்பட்டது.

நோயாளிகளின் உடம்பிலிருந்து எடுக்கப்பட்ட ஸாம்பிள்களை அவ்வளவு எளிதாக வெளிநாட்டுக்கு அனுப்ப முடியாதே? ஐ.சி.எம்.ஆர். உள்ளிட்ட அரசு சார்ந்த அனுமதிகள் வாங்கணுமே?

சிறு அமைதிக்குப் பிறகு... ""ஸார்... எங்களோட நோக்கம் இந்தியாவில் (சென்னையில்) பாதிக்கப்பட்டவர் களுக்கு எந்த மருந்தைக் கொடுத்தா குணமாக்கலாம்? 44 எண்ணிக்கையை படிப்படியாக எப்படி குறைப்பதுங் கிறதாத்தான் இருந்தது. அதனால அவசரத்துல முழுமையான அனுமதி பெற முடியல.

இப்போ அந்த 44 பேஷன்டுகளின் நிலைமை?

அது... அந்தந்த மருத்துவமனையின் டாக்டர்கள் பார்த்துப்பாங்க சார். நாம தலையிட முடியாது. (அய்யய்யோ!)

முதன் முதலில் இந்த நோய்க்கிருமியை யார் கண்டுபிடிச்சது?

ஸ்வீடன் நாட்டில் வாழும் இந்தியருக்கு இந்தக் கிருமி தொற்றியிருப்பது தெரிஞ்சுதான் 2008-ல் ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானிகள் இதற்கு "மெட்டல்லோ பீ-லேக்டமஸ் 1' என்று பெயர் வெச்சாங்க.
அப்புறம் எப்படி "மெட்டல்லோ பீ-லேக்டமஸ் 1'-ங்கிற பெயருக்கு முன்னால, நியூ டெல்லிங்கிற பெயர் வந்தது?

ஆன்டிபயாடிக் மருந்தையே எதிர்க்கும் திறன்கொண்ட இந்த கிருமி குறித்து லண்டன் விஞ்ஞானிகளான திமோதி ஆர். வால்ஷ், டேவிட் எம்.லிவர்மோர் என்கிற இரண்டு பேரும்தான் நோய் பாதிக்கப்பட்ட ஸ்வீடன் நாட்டுக்காரர் இந்தியர் என்பதால் அப்படி ஒரு பெயரை சூட்டிட்டாங்க. அதுக்கப்புறம்தான் நக்கீரனில் குறிப்பிட்டிருந்த மாதிரி மும்பை பி.டி.ஹிந்துஜா மருத்துவ ஆராய்ச்சி மைய டாக்டர்கள்... முதன் முதலில் "ஜர்னல் ஆஃப் தி அசோசியேஷன் ஆஃப் ஃபிஸிஷியன் இன் இண்டியா' (ஜே.ஏ.பி.ஐ.) இதழில் மூணு மாசத்துக்கு முன்னால கட்டுரை எழுதினார்கள். அந்தக் கட்டுரையைத்தான் அப்பல்லோ மருத்துவமனை யின் மைக்ரோ பயாலஜி துறையின் தலைவர் டாக்டர் அப்துல் கஃபூரும் ஆதரிச்சு எழுதினாரு. அதுக்கப்புறம்தான் உலகளாவிய ஆய்வில் சென்னையில் அதிகமா இருக்குன்னு "லான் செட்' இதழில் வெளியிட்டோம்.

உங்களின் ஆராய்ச்சிக்கு பண உதவி செய்த "வைத்' என்கிற மல்டி நேஷனல் மருந்துக் கம்பெனியின் மருந்துதான் இந்த நோய்க்கு சரியான மருந்து என்று பரிந்துரை செய்திருக்கிறீர்களே? இது வியாபார நோக்கமாக இல்லையா?

வைத் கம்பெனி எனக்கு லண்டன் போறதுக்கு ஃப்ளைட் சார்ஜ் மட்டும்தான் பண்ணினது. ஆனா, மீதியெல்லாம் எங்க நிலம், சொத்து பத்தெல்லாம் விற்று ஏழு லட்சம் செலவு பண்ணி (?) இந்த ஆய்வை பண்ணி யிருக்கேங்க.

ஐரோப்பிய யூனியனும், வெல்கம் ட்ரஸ்ட்டும் லண்டன் விஞ்ஞானிகளின் ஆய்வுக்குத்தான் பணம் கொடுத்தாங்க. இந்தியாவுல எந்தத் தொண்டு நிறுவனமும் பணம் கொடுத்து எனக்கு உதவலைங்க..

அப்படீன்னா வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள்+ஆன்டிபயாடிக் மருந்து கம் பெனிகள், வெளிநாட்டு விஞ்ஞானிகள் உங்கள் திறமையையும், வறுமையையும் பயன் படுத்திக்கிட்டு இந்தி யாவின் பொருளா தாரத்தை சீர் குலைக்க ஆரம் பிச்சுட்டாங்க. அதுக்கு உங்களை யும்... அப்பல்லோ மருத்துவமனையின் டாக்டர் அப்துல் கஃபூரையும் கரு வியா பயன்படுத்தி யிருக்காங்க இல் லையா?

அமைதியாக இருக்கிறார்... பதில் இல்லை.

இதுவே லண்டனிலிருந்து தான் சூப்பர் பக் கிருமி பரவுதுன்னு லண்டன் விஞ்ஞானி இந்திய விஞ்ஞானியோடு சேர்ந்து ஜர்னலில் செய்தி வெளியிட்டா... லண்டன்காரன் அந்த லண்டன் விஞ்ஞானியை சும்மா விட்டுருவானா? என்றபோது...

""இதுக்கு நான் எதுவும் சொல்ல விரும்பலைங்க'' என்று பேச்சை முடித்துக்கொண்டார்.

சரி... இந்த நோய்க்கிருமி தொற்றாமல் பாதுகாத்துக்கொள்வது எப்படி? பி.டி.கத்திரிக்காய்க்கு தடை விதிக்கப் போராடிய பிரபல விஞ்ஞானி பார்கவா, "எவ்வளவு பெரிய நோய்க்கிருமியா இருந்தாலும் நமது செல்லுக்குள் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்தாமல் பாதுகாக்கும் தன்மை (Membrance Stabilizing effect) நம் ஊரிலுள்ள மஞ்சளுக்கு இருக்கிறது.

இதை ஆய்வு செய்தால் இந்த சூப்பர் பக் கிருமிக்கு நமது நாட்டிலேயே மருந்து கண்டுபிடித்து விடலாம்' என்றிருக்கிறார். இதைச் சுட்டிக்காட்டும் டாக்டர் அபிராமியோ, ""மருந்து கண்டுபிடிக்கும்வரை தினமும் சமையலில் மஞ்சள் பொடியை 1/4 டீஸ்பூன் அளவு பயன்படுத்தினாலே போதும்... மஞ்சளை தனியாக சாப்பிட வேண்டாம். அப்படியே பாலில் கலந்து சாப்பிட வேண்டும் என்றால் கூட 2 பல் பூண்டை நசுக்கி கொதிக்கிற பாலில் போட்டு ஒரு சிட்டிகை அளவு (ஒரு கிளாஸ் பாலுக்கு) பயன்படுத்தினாலே போதும். பெரும்பாலும் கசப்பு, துவர்ப்பு சுவை உணவுகளை சாப்பிடுவது நல்லது. வயிற்றைச் சுத்தமாக வைத்துக் கொண்டு இயற்கையான உணவு வகைகளைச் சாப்பிட்டாலே சூப்பர் பக் என்ன... சூப்பர் கிக்கு, சூப்பர் கொக்கு... என எந்த நோய்க்கிருமியும் அண்டாது'' என்கிறார் ஆலோசனையாக.

ஒவ்வொரு வருடமும் உலக சுகாதாரத்தினத்தன்று பரபரப்பு நோய் குறித்து அலசப்படும். இந்த வருட (2011 ஏப்ரல்) உலக சுகாதார மையத்தின் (WHO) ஹாட் டாபிக்கே "சூப்பர் பக்' பற்றிதான். ஆக... உண்மையிலேயே மக்களுக்கு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தால் தமிழக விஞ்ஞானி கே.கார்த்திகேயனை இந்திய அரசு பாராட்டி கௌரவிக்க வேண்டும். வீண் வதந்தி யையும் பீதியையும் பரப்பியிருந்தால் தண்டிக்க வேண்டும்.

No comments:

Post a Comment