Thursday, September 16, 2010


'வெனிஸில் இருந்து வீடு திரும்பி இருப் பார்!' என்ற நம்பிக்கையில், 'சந்திப்போமா'


என எஸ்.எம்.எஸ். அனுப்பியதும், 'பார்க் ஷெரட்டன் காபி ஹவுஸ்!' என்று பதில் வந்தது, விக்ரமிடம் இருந்து.

"வெனிஸ் பயணம் எப்படி இருந்தது?"

"நான், மணி சார், சுஹாசினி மேடம் மூணு பேரும் வெனிஸ் சினிமாத் திருவிழாவுக்குப் போய்இருந்தோம். மணி சாருக்கு அவரோட சினிமா பங்களிப்புக்காக 'Jaeger-Lecoultre glory' விருது கொடுத்தாங்க. இந்தியாவில் இதுவரை யாரும் வெல்லாத விருது இது. 600 பேருக்கு மேல் இருக்கும். அநேகமா எல்லோருமே வெளிநாட்டுக்காரர்கள். 'ராவணா' படத்தின் ஒவ்வோர் அம்சத்தையும் துல்லியமா ரசிச்சாங்க. படம் முடிந்ததும் சில விநாடிகள் நிசப்தம். அடுத்து எல்லோரும் எழுந்து நின்னு ஸ்டேன்டிங் ஓவேஷன். கை தட்டிட்டே இருந்தாங்க. என்னைப் பார்க்கிறப்ப எல்லாம் 'வீரா'ன்னு கூப் பிட்டாங்க. மணி சாரைப் பார்த்து 'மேஸ்ட்ரோ'னு உரக்கச் சொல்றாங்க. அது மாதிரி ஒரு மேடையில் கௌரவப்படுத்தப்பட்டதில் ரொம்பவே சந்தோஷம். என் வாழ்க்கையில சில சிறப்பான தருணங்கள் இருக்கு. 'சேது' சூப்பர் ஹிட் ஆனப்போ, 'பிதாமகன்' தேசிய விருது கிடைச்சப்போ, இப்போ வெனிஸ் நகரத்தில் மணி சாரோடு நின்னுட்டு இருந்தப்போ... குட்... எல்லாமே நல்லா இருக்கு!"

"அபிஷேக்பச்சனைவிட 'ராவணா'வில் நீங்க பிரமாதப்படுத்திட்டீங்கன்னு பெயர் எடுத்துட்டீங்கள்ல?"

"அப்படி எல்லாம் எங்களை நடிப்பில் ஒப்பிட முடியாது. அபிஷேக்கின் திரை வாழ்க்கையில் 'குரு'வைவிட 'ராவணா'தான் பெஸ்ட்னு நினைப்பேன். இரண்டு பேரும் வெவ்வேறு ஸ்கூல். அபிஷேக்கைவிட நல்லா நடிச்சிருந்தேன்னு சொன்னால், அதை நான் சரின்னு சொல்ல முடியாது. சில இடங்களில் நானும் இதே மாதிரி செய்திருக்கலாம்னு யோசிக்கவும் சில தருணங்கள் இருந்தன. எல்லா சினிமாவிலும் என்னை வெளிப்படுத்துறது ஒரு வேள்வி மாதிரிதான் இருந்திருக்கு. 'நல்லா நடிச்சிருக்கே!'னு தோளில் தட்டிக்கொடுங்க. அது இன்னொரு நடிகரைக் காயப்படுத்திட்டு வரும்னா... எனக்கு வேண்டாம். படம் பார்த்துட்டு 'உன்னைப் பார்க்க மதம் பிடிச்ச யானை மாதிரி இருக்கு'ன்னு பாலா சொன்னார். இதுமாதிரி விஷயங்கள் போதும்னு நினைக்கிறேன். சஞ்சய் லீலா பன்சாலி, விஷால் பரத்வாஜ் எல்லோரும் ராவணாவைப்பத்தி பேசி இருக்காங்க. நிறைஞ்சு நிக்கிறேன்!"

"ஒவ்வொரு படத்துக்கும் நீங்க ரொம்ப டைம் எடுத்துக்கிறீங்க. மத்தவங்க தடதடன்னு ஓடிட்டே இருக்காங்க..."

"எனக்கு டைம் முக்கியம் இல்லை. எனக்கு முன்னாடி எத்தனை பேர் இருக்காங்க. 20 பேர்கூட இருக்கட்டுமே. அதுக்கென்ன இப்போ?

மார்க்கெட்டில் எனக்கு ஒரு நல்ல இடம் இருக்கு. தமிழ் சினிமாவில் என்னுடையது தனிக் குரல். 'பீமா'வும் 'கந்தசாமி'யும்தான் டைம் லிமிட் தாண்டிப்போச்சு. அதற்கான காரணம் இப்போ தேட வேண்டாம். நான் எங்கேயும் போயிடலை. தமிழின் டாப் ஆர்ட்டிஸ்ட்களில் நானும் ஒருவன். எனக்கு எந்த அவசரமும் இல்லை. ஐ லவ் சினிமா. ஆனா, எந்த அளவுக்கு நான் சினிமாவை நேசிக்கிறேன்கிற அந்தத் தீவிரத்தை, காதலை என்னால் வார்த்தைகளில் சரியா சொல்ல முடியலை. நல்ல சினிமா பண்ணணும். இனி, நிறைய வரும். நல்ல இயக்குநர்களைத் தேர்ந்தெடுத்து இருக்கேன். அடுத்து இயக்குநர் விஜய் எனக்குக் கதை செய்திருக்கார். என்னோட நடிப்புத் திறனை நம்பி இருக்கேன்னு சொல்லிட்டு சொன்னார். இப்ப இருக்கிற பொசிஷன்... எனக்கு ரொம்பவே ஹேப்பி!"

"உங்களுக்குள் ஒளிஞ்சிட்டு இருக்கும் டைரக்டர் எப்போ வெளியே வருவார்?"

"எல்லா நடிகர்களுக்குமே அந்த ஆசை இருக்கு. அர்ஜுன் மாதிரியானவங்க எல்லாம் அப்படி வந்தவங்கதான். பாலாகூட, 'நீ டைரக்டர் ஆகவே போய்ட்டு இருக்கே'னு சொல்வார். நல்ல ஸ்க்ரிப்ட் கிடைச்சா நாளைக்கேகூடப் படம் ஆரம்பிப்பேன். அப் படி நான் டைரக்ட் செய்தால், நிச்சயம் அதில் நான் நடிக்க மாட்டேன். விஜய், அஜீத்... ஏன் சூர்யா கூட நடிக்கலாம். இப்ப எல்லா டைரக்டர்களும் நடிக்க வந்துடுறாங் களே. 'அமீர், உங்க டைரக்ஷன் பெரிய விஷ யம். நடிக்கப் போயிடாதீங்க'ன்னு இன்னிக்கு வரைக்கும் அவருக்குச் சொல்லிட்டே இருக்கேன். மணி சார், ஷங்கர் சார், பாலா இவங்க எல்லாம் நடிக்க வந்துட்டா... அப்பு றம் எங்களை யார் டைரக்ட் பண்ணுவாங்க?"

"நீங்க அடுத்து பாலா படத்தில் நடிக்கப்போறதா தீவிரமா பேச்சு அடிபடுதே?"

"பாலா எப்பக் கூப்பிட்டாலும் உடனே ஒரு மேஜிக்குக்கு ரெடியா இருப்பேன். 'ஏதாவது ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணுங்க பாலா'ன்னு சொல்லிக்கிட்டே இருக்கேன். திடீர்னு ஒரு நாள் போன் வந்துடும். நாங்க ரெண்டு பேர் சேர்ந்தால், அதுக்கான விஷயமும் பெரிசா அவரிடம் இருக்கும். நான் ரெடி. பாலா ரெடியான்னு காலம் போய்ட்டு இருக்கு!"

"பெரிய ஸ்டார்கள் சேர்ந்து நடிச்சு இந்தியில் படமெல்லாம் வந்துட்டு இருக்கு. நீங்க கமல், ரஜினி கூட நடிப்பீங்களா?"

"நமக்கு அவங்க படத்தில் என்ன இருக்கும். சின்னதா ஒரு ரோல் இருக்கும். சமமான ரோல் இருந்தா நல்லா இருக்கும். 'பிதாமகன்' ரோல் மாதிரி கொடுத்தும் சூர்யா ரோலை கமல் சார்கிட்டே கொடுக்கலாம். இப்படி யோசிச்சுப் பார்த்தா நல்லாவே இருக்கும். ஏன், ராவணா மாதிரி ஒரு ரோல் கொடுத்துக்கூட நடிச்சுப் பார்க்கலாம். என் மூச்சு இருக் கும் வரை நடிக்கணும் அவ்வளவுதான். நடிப்பினால் எதையும் ப்ரூவ் பண்ணணும்னு விருப்பம் இல்லை. I Just Act. இதுதான் விக்ரம். விக்ரம் நடிச்சுட்டே இருப்பான். அவ்வளவுதான்!"

"சசிகுமார் இயக்க, நீங்க தயாரித்த படம் என்ன ஆச்சு?"

"சசிகுமாரும் நானும் நல்ல ஃப்ரெண்ட்ஸ். தொழில்ரீதியாகவும் நண்பர்கள். நாங்க படம் பண்ணினபோது, பட்ஜெட் கொஞ்சம் ஜாஸ்தி ஆச்சு. 'என்னப்பா இது'ன்னு பேசியபோது 'நானே எடுத்துக்கிறேன்'னு சொன்னார். இப்ப அவரே தயாரிக்கிறார். எங்களுக்கு நடுவிலே ஒண்ணும் கிடையாது. எல்லாமே சுமுகமா இருக்கு. 'சசி... ஒரு நல்ல ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணு. நடிக்கிறேன்'னு சொல்லி இருக்கேன். அவரும் சரின்னு சொல்லி இருக்கார். பார்க்கலாம்!"

No comments:

Post a Comment