Thursday, September 2, 2010

பிணம் எரியும்போது..,! -மரணகானா விஜி


தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட விஜி தொடர்ந்தார். ""பசிக்கொடுமையால திருடற பழக்கம் எங்ககிட்டே சேர்ந்துடுச்சு. திருட ஆரம்பிச்சோம். போலீஸ் புடிக்கும். சிறுவர் சீர்திருத்த ஜெயிலுக்கு அனுப்பிடுவாங்க. அங்க நல்லா சோறு கெடைக்கும். சாப்பிடறதுக்காகவே ஏதேனும் திருடிட்டு ஜெயிலுக்குப் போறதை வழக்கமா வெச்சிக்கிட் டோம். இதுக்கு இடையில சேகர், பீடைன்னு ரெண்டு ஃப்ரண்ட்ஸ் எங்களுக்குக் கெடைச்சாங்க. இவங்க ரெண்டு பேரு கதையும் எங்களைவிட மோசமா இருக்கும்.

இப்படியே வாழ்க்கை போய்க்கிட்டு இருந்துச்சு. பிளாட்பாரத்துல கெடக்கிற எங்கள மாதிரி அனாதைப் பசங்களுக்கு பாதுகாப்புங்கிறதே கேள்விக்குறிதான். அதுவும் ராத்திரியாயிட்டா சொல்லவே வேணாம். மெரினா பீச்சுல பொண்ணு கெடைக்காதவனுங்க ஆம்பளப் பசங்கள இழுத்துக்கிட்டு போய்டுவானுங்க. ஒருமணி நேரம், ரெண்டு மணி நேரம் விடமாட்டானுங்க. வலி உயிரு போயிடும். அந்த ஆபத்துல என்னைத் தவிர மத்த மூணு பேருமே மாட்டிக்கிடு வாங்க. ஒருநாள் இதப்பத்தி கவலையா பேசிக்கிட்டு இருந்தோம். இனி எவனாவது வந்து இழுத்தா... பீர் பாட்டிலாலா ஒரே குத்து குத்திட்டு ஓடிடணும். இப்படியெல் லாம் வன்முறை எண்ணம் வந்தது. இதனால எப்பவும் எங்க தலைமாட்டுல பீர் பாட்டில்கள வெச்சுக்கிட்டே தூங்குவோம். ஒருநாள் அந்த வெறிபுடிச்ச ஆளுங்க வந்தானுங்க. நாங்க 4 பேரும் பீர் பாட்டில ஒரே நேரத்துல அடிச்சி ஒடைச்சோம். அவனுங்கள நோக்கி பாபு, சேகர், பீடை மூணுபேரும் குத்துறதுக்குப் பாய... விழுந்தடிச்சிக்கிட்டு ஓடினாங்க. இதப் பார்த்த போலீஸ் எங்களை நோக்கி வர... என்னைத் தூக்கி தன் தோள்மேல வெச்சிக்கிட்டான் பாபு. என்னோட கட்டை வண்டியை சேகர் எடுத்துக்கிட் டான். நாங்க வேக வேகமா ஓடினோம். போலீசும் தொறத்துனுச்சு. கண்ணுமண்ணு தெரியாம அந்த இருட்டுல ஓடினோம். ஓடிக்கிட்டே இருந்தோம்.

ரொம்பவும் இருட்டா இருந்த எடத்துல அப்படியே பதுங்கிக்கிட்டோம். நாங்க பதுங்கியிருந்த இடத்துல பெரிய மதில் சுவர். அதுல ஒரு பெரிய நாய் நுழையற மாதிரி ஓட்டை இருந்துச்சு. அதுக்குள்ள நுழைஞ்ச பீடை, "டேய்... இங்கு ஏதோ பெரிய மைதானம் மாதிரி இருக்குடா. படுக்கிறதுக்கு வசதியா திண்ணை போட்டி ருக்காங்கடா'ன்னு சொல்ல. நாங்க எல்லோரும் அந்த ஓட்டை வழியா நுழைஞ்சு உள்ளே போனோம். அங்கி ருந்த திண்ணை மேல ஏறி படுத்துக்கிட்டோம். ரொம்ப நேரம் ஓடி வந்ததுனால அடிச்சுப் போட்ட மாதிரி தூக்கம் வந்துடுச்சு.

விடிஞ்சதும் பார்த்தா... பயந்து போயிட்டோம். நாங்க இருக்கிறது வெளையாட்டு மைதானம் இல்லே, ராயபுரம் சுடுகாடு. நாங்க படுத்திருந்தது திண்ணை இல்லே கல்லுக அடுக்கி வெச்ச சமாதிகள்'' என்ற ஒருவித திகிலுடன் விஜி, ""காலையில கறுப்பு பறையன்னு ஒரு வெட்டியான் வந்தாரு. எங்களைப் பார்த்து "யாருடா நீங்க? இங்க என்ன பண்றீங்கன்னு அதட்டுனாரு. அப்ப நான், "ஐயா நாங்கள்லாம் காகிதம் பொறுக்கிறவங்க. வெளியில நிம்மதியா எங்கள இருக்கவிடமாட்டேங்கிறாங்க. இந்தப் பொணங்களோட பொணமா நாங்களும் இங்கேயே படுத்துக் கிறோம்யா'ன்னு கெஞ்சினேன். "சரி... சரி... இருந்துக் குங்க... ஆனா இந்தப் பொணங்களை ஏதும் தொந்தரவு பண்ணிடாதீங்க'ன்னு உத்தரவு போட்டாரு.

அதுல இருந்து பகலானா பீச்சுலயும் ராத்திரி யானா ராயபுரம் சுடுகாட்டுலயும் தஞ்ச மடைஞ்சோம். மரணங்களுக்கு மத்தியிலயும் பொணங்களுக்கு மத்தியிலயும் எங்க வாழ்க்கை ரணமாத்தான் போய்க்கிட்டிருந்திச்சு. சில சமயங்கள்ல, நான் சுடுகாட்டுலயே இருந்துக்குவேன். மத்த மூணுபேரும் வெளியில போய் காகிதம் பொறுக்குவாங்க.

சுடுகாட்டுக்கு வர்றவங்க ஏதேனும் பலகாரம். சோறுன்னு வெச்சிட்டுப் போனா அதை எடுத்துச் சாப்பிடுவேன். கறுப்புப் பறையனும் தன்கிட்டே இருக்கிறதை எனக்குச் சாப்பிடக் கொடுப்பாரு.

இன்னைக்கு சென்னையில வீடுகள்ல நான் கானா பாடுறேன்னா... அதுக்குக் காரணம் கறுப்பு பறையன்தான். சுடுகாட்டுக்கு பொணம் வந்ததும் அதுக்கு சம்பிரதாயங்கள் பண் ணிட்டு கொள்ளி வச்சிட்டு போய்டுவாங்க. பொணம் கொழுந்துவிட்டு எரியும். தன்கிட்ட இருக்கிற கஞ் சாவை எடுத்துக் கொடுத்து அத சுருட்டுல போட்டு கொடுடான்னு சொல்லுவாரு கறுப்பு பறையன்.

நானும் போட்டுக் கொடுப்பேன். கஞ்சாவை ஒரு வலி வலிச்சிட்டு, கொழுந்துவிட்டு எரியுற தீயைப் பார்த்து, "நீயே மாயை நீயே உலகம் நீயே வந்தியோ... நீயே இருந்த நீயே இறந்த உன்னில் மறப்பாயோ!' என்று அடிவயிறு புடைக்க, உச்சஸ்தாயில் ராகம் எடுத்துப் பாடுவாரு. பொணத்தை எரிச்சிக்கிட்டு விடிய விடிய பாடுவாரு. பாட்டெல்லாம் மரணத்தை பத்தியேதான் இருக்கும். அப்போதைக்கு இந்தப் பாட்டுக்கெல்லாம் அர்த்தம் தெரியாது. ஆனா, போகப் போக புரிய வெச்சாரு கறுப்பு பறையன். எனக்கு புரிய ஆரம்பிச்சதும் அவரோடு சேர்ந்து நானும் பாடுறதை வழக்கமா வெச்சிக்கிட்டேன்.

ரொம்ப நாள் கழிச்சு பாபு என்னைத் தேடி வந்தான். அவன்கிட்டே இந்த பாட்டை பாடி காண்பிச்சேன். டேய் மச்சான் என்னடா கானாவெல்லாம் பாடுறேன்னு ஆச்சரியப் பட்டான். அதுக்குப் பெறகுதான் கானாங்கிற வடிவம் புரிஞ்சது. அந்த காலத்துல கானா கட்டிக்கிட்டு இருந்த ஆயிரம் விளக்கு செல்வாகிட்டே என்னைக் கூட்டிட்டு போனான் பாபு. அவரால பாடப்பட்ட பாடல்களை உள்வாங்கிட்டு, நானாக வார்த்தைகளையும் மெட்டுக்களையும் போட்டு பாட... கானா எனக்கு புரிய ஆரம்பிச்சிது.

கறுப்பு பறையனோட ரொம்ப நாளா சுடுகாட்டுலயே இருந்ததினால, மரணங்களை மட்டுமே கானா எடுத்து பாடுறதுன்னு முடிவு செஞ்சேன். பேதமில்லா பெருவாழ்வு மரணம் மட்டும்தான். சமரசம் உலாவும் இடமே சுடுகாடுதான்னு தனது மரண சித்தாந்தங்களை சொல்லி கொடுத்தாரு கறுப்பு பறையன்.

ஒருநாள் இவரும் காணாமப் போய்ட்டாரு. இவருக்கு என்ன ஆச்சுன்னு இதுவரை யாருக்குமே தெரியாது.

ஒருமுறை ராயபுரம் சுடுகாட் டுல நான் இருந்தப்போ எரிஞ்சு போன பாடி ஒண்ணு கொண்டாந் தாங்க. அந்த பாடி மாசமாயிருந்தது. நம்ம சுடுகாட்டுல ஒரு ரூல்ஸ் வெச்சிருக்காங்க. அதாவது, இறந்து போனது பொண்ணாயிருந்து, அதுவும் மாசமாயிருந்தா வயித்துல இருக்கிறது ஆணா, பொண்ணான்னு பார்த்துட்டுத் தான் சுடுகாட்டுல ரசீது போடு வாங்க. அப்புறம் தான் அந்த பாடியை எரிக்கவோ, பொதைக்கவோ முடியும்.

அப்போ சுடுகாட்டுல பாடியை அறுக்கிறதுக்கு ஆளு இல்லாததால அந்த பொணத்தை கொண்டு வந்தவங்க முழிச்சுக்கிட்டு இருக்காங்க. அப்ப நான், "சாரே, பாடியை நான் அறுக்கிறேன். எவ்வளவு தருவீங்க?' என்று கேட்க, "நீயா? சின்ன பையனாட்டம் இருக்கே!' என்று ஒருத்தன் கேட்டான்.

"சின்ன பையன், பெரிய பையனெல்லாம் என்ன சாரே இருக்கு. ஒரு பிளேடு இருந்தா... ஒரு நிமிடத்துல காரியம் முடிஞ்சிடும். என்ன சொல்றீங்க? எனக்கு காசு வேணும். தருவீங்களா?' என்றதும் ஒருத்தர் என்கிட்டே வந்து 400 ரூபாயை கொடுத்தாரு. ஒரு பிளேடு வாங்கி வரச் சொன்னேன். பிளேடு வந்ததும், அந்த பொண்ணு (பாடி) போட்டிருந்த துணியை காலிலிருந்து தூக்கினேன். "வேணா, வேணா... துணியை கழட்டாம வயித்துல கிழிச்சு எடு'ன்னு புருஷன்காரன் பதறினான். எனக்கு என்னமோ மாதிரி ஆய்டுச்சு.

வயித்தை ஒரு கிழி கிழிச்சேன். வெள்ளையா ஒரு தோல் வந்துச்சு. ரெண்டாவது கிழியில ரத்தக் கட்டிகள். என் ரெண்டு கையையும் வெச்சு கிழிசலை அகலப்படுத்தி, கையை உள்ளே நுழைச்சு கொழந்தையை வெளியே எடுத்தேன்.

"பாருங்க, ஆம்பளை கொழந்தை'ன்னு காட்டினேன். அத காட்டி சுடுகாட்டுல ரசீது போட் டுட்டு, பெறகு அந்த பாடியை எரிச்சிட்டு போ னாங்க. இவ்வளவு கால மாகியும் இந்த சம்பவம் என்னை ஏதோ ஒரு வகையில நெருடிக்கிட்டே தான் இருக்கு.

இப்படி தெனம் தெனம் மரணங்களை, பாடிகளை சந்திச்சுக்கிட்டே தான் இருந்தேன். கறுப்பு பறையன் விட்ட பணியை நான் தொடர்ந்தேன். ராயபுரம் சுடுகாட்டுல எந்த பொணம் வந்தாலும், நான் உச்சஸ்தாயில் மரணத்தைப் பத்தி கானா பாடுவேன். அந்த பகுதியே அது எதிரொலிக்கும். என் பாட்டுக்குப் பெறகுதான் பாடி நல்லா வேகும். கொள்ளி வச்சிட்டு எல்லாரும் போன பெறகும் பாடி எரிந்து முடியிற வரைக்கும் பறை அடித்து கானா பாடிக்கிட்டே இருப்பேன். நடு நிசியை தாண்டியும் என் பாட்டு ஒலிக்கும்.

இப்படியே வாழ்க்கை ஓடிக்கிட்டு இருக்கு. எங்க ஃப்ரண்ட் மச்சான் சேகர் பல் வலின்னு ஆஸ்பெட்டலுக்கு போனான். பல் புடுங்கிட்டு வந்தவன் வலி அதிகமா இருக்குன்னு சொல்லிக்கிட்டு எங்கக் கூடவே படுத்துட்டான். காலையில எழுந்திருச்சு பார்த்தா தலகாணி முழுக்க ரத்த கறை. செத்துப் போயிருந்தான் சேகர். பல்லை புடுங்கின டாக்டரு சரியா புடுங்கி, பஞ்சை சரியா வெக்காததினால ராத்திரி முழுக்க ரத்தம் கசிந்துகிட்டே இருந்திருக்கு. அதான் அவன் செத்துட்டான்னு சொன்னாங்க. ஏழைங்க உசிருக்கு இவ்வளவுதான் மரியாதையா?ன்னு நெனைச்சிக்கிட்டேன்.

ராயபுரம் சுடுகாட்டுல நாங்க 4 பேரும் மொத மொத படுத்திருந்தோமே அதே இடத்துல சேகரை நாங்க பொதைச்சோம். மச்சான் சேகரோட மரணம் என்னால தாங்கிக்க முடியலை. சேகர் மரணத்துக்குப் பிறகு மிச்சம் இருந்தது நாங்க மூணு பேருதான். அதுல, பீடை ஓவரா கஞ்சா அடிச்சி மெண்டலாயிட்டான். சேகர் மரணத்துக்கு பின் பீடை யாருக்கிட்டயும் சரியா பேசுறதில்லை. இதனால, மனநிலை பாதிக்கப்பட்டவன் மாதிரி தனியா திரிய ஆரம்பிச் சான். அவனை ஒரு டாக்டர் கிட்ட காட்டி, மெண்ட்டல் ஆஸ்பிட்டலுக்கு அனுப்பி வெச்சோம்.

கூட இருந்தவனுங்க, எங்க மேல பிரியம் வெச்ச வங்க, நாங்க அனுபவிச்ச பொண்ணுங்க எல்லாரும் ஏதோ ஒரு விதத்துல மரணமடையறது தொடர்ந்து நடந்துக்கிட்டே இருந்தது. மரணமும் பிரிவும் எங்களை கசக்கி பிழிஞ்சது. எல்லாத்துக்கும் மேல ஒரு பெரிய இடி என் மேல் விழும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை.

(தொடரும்)

No comments:

Post a Comment