Thursday, September 2, 2010

முதல்வர் ஸ்விட்ச் போர்டு மாற்றினால் இரண்டு ஆண்டு சிறை!""என்னோட நண்பன் ரொம்ப சாதுவான டைப் சார். அவன் வீடு மகாபலிபுரம் ஐந்து ரதம் கோயிலுக்குப் பக்கத்துல இருக்கிற பழைய வீடு. கூட்டுக் குடும்பம். ஜனநடமாட்டம் வீட்டுக்குள்ள அதிகம். மழை பெஞ்சா ஒருபக்கம் சோவென தண்ணி ஒழுகும். அவனுக்குக் கல்யாணம் ஆச்சு. புதுசா வந்த பொண்டாட்டி, நமக்குன்னு தனியா ஒரு பாத்ரூம் கட்டுங்கன்னு சொன்னா. பொண்டாட்டிக்காக ஒத்தக்கல் சுவரு போட்டு ஆஸ்பெஸ்டாஸ் கூரையைப் போட்டு ஒரு பாத்ரூம் கட்டினான் பாருங்க... அடுத்தநாளே கவர்மெண்டு அதிகாரிங்க வந்து பாத்ரூமை இடிச்சுட்டாங்க. ஈ.பி.க்காரன் வந்து கரண்டை கட் பண்ணிட்டான். உங்க வீட்டை ஏன் நாங்க இடிக்கக்கூடாதுன்னு இரண்டு பக்கத்துக்கு பெரிய நோட்டீஸை இங்கிலீஷ்ல கொடுத்துட்டாங்க. எல்லாம் மருமவளாலதான் வந்துச்சுன்னு குடும்பமே சொல்ல... அந்தப் பொண்ணு கிருஷ்ணாயில தலையில ஊத்தி தற்கொலை பண்ணப் போயிட்டா'' -என ஒரு சோகக் கதையை விளக்குகிறார் செங்கல்பட்டு வழக்கறிஞர் லோகு.

லோகுவின் நண்பர் குடும்பத்திற்கு மட்டுமல்ல... தமிழகத்தின் 4 லட்சம் கிலோமீட்டர் பரப்பளவில் தலைநகர் சென்னை தொடங்கி மகாபலிபுரம், திருப்போரூர், மதுரை, திருநெல்வேலி என தமிழகத் தின் கால் பாதம் அமைந்துள்ள கன்னியாகுமரி வரை வசிக்கும் அனைவருக்கும் இதுதான் கதி.

தமிழகத்தின் ஒட்டுமொத்த பரப்பளவில் இரண்டு சதவிகிதம் நிலத்தை மத்திய அரசு தனது ஆளுமைக்கு கொண்டுவந் துள்ளது. இந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் பாத்ரூம் கட்டுவதில் தொடங்கி உடைந்து கிடக்கும் கால்வாயை சுத்தம் செய்வது வரை அனைத்து வேலை களுக்கும் டெல்லியில் உள்ள மத்திய அரசின் தொல்பொருள் துறையிடம் தான் அனுமதி வாங்க வேண்டும் என எப்பொழுதும் சத்தத்துடனும் உறுப் பினர்களின் எதிர்ப்பு கோஷங்களுக் கிடையேயும் நடைபெறும் இந்திய பாராளுமன்றத்தில் சத்தமில்லாமல் கடந்த மார்ச் மாதம் 30-ந் தேதி ஒரு சட்ட திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவந்து நிறைவேற்றியது.

அதன்படி புராதன நினைவுச் சின்னங்கள் அமைந்துள்ள இடத்தில் 100 மீட்டர் தொலைவு தடை செய்யப்பட்ட பகுதி. அதற்குப் பக்கத்தில் உள்ள 200 மீட்டர் பகுதி வரையறுக்கப்பட்ட பகுதி என மொத்தம் தமிழகத்தில் 350 இடங் களை தனது நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டது.

இந்தப் பகுதிகளில் மத்திய தொல்பொருள் துறையின் அனுமதியின்றி எந்த வளர்ச்சிப் பணிகளும் நடைபெறக்கூடாது. தொல்பொருள் துறையின் ஆளுமைக்குட்பட்ட செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் அலுவலகத்தில் புதிதாக ஒரு ஸ்விட்ச் போர்டு மாற்றினால் கூட இந்த சட்டத்தின்படி தவறு.

அதையும் மீறி தொல்பொருள் துறையின் அனுமதியின்றி முதல்வர் செய்வாரேயானால் அவருக்கு இரண்டு ஆண்டு சிறை, ஒருலட்ச ரூபாய் அபராதம். இந்தத் தண்டனையை எதிர்த்து சாதாரண கோர்ட்டில் மட்டு மல்ல சுப்ரீம் கோர்ட்டில் கூட வழக்குத் தொடர முடியாது.

""இலங்கை போன்ற சர்வாதிகார நாடுகளில் கூட அமல்படுத்த அஞ்சும் இந்த சட்டத்தை உடனடியாக அமல் படுத்துங்கள்'' என்கிறார் சத்யபாமா பத்ரிநாத் என்கிற வெறும் கண்காணிப்பாளர் அந்தஸ்து பெற்ற ஒரு அதிகாரி.

"ஊரான் ஊரான் தோட்டத்துல ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்காய். காசுக்கு ரெண்டு விக்கச் சொல்லி காயிதம் போட்டானாம் வெள்ளைக்காரன்' என்பது மாதிரி தமிழக அரசின் அனைத்துத் துறைக்கும் 350 இடங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கும் கடிதம் எழுதியுள்ளார். தொல்பொருள் துறையின் உத்தரவை மீறினால் அதிகாரிகளுக்கும் கடும் தண்டனை என வரும் கடிதத்தில் உரிய கட்டளைகளை வெள்ளைக்காரன் உத்தரவை அப்படியே அமல்படுத்திய ஜமீன்தாரர்கள் போல் மாநில அதிகாரிகளும் படிப்படியாக அமல்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.

அது எப்படி நடக்கிறது என்பதை சிறுதாவூர் கிராமத்தைச் சேர்ந்த முரளி சொல்கிறார். ""சிறுதாவூர் கிராமத்துல ஒரு மலையில் பழங்காலத்துல இறந்தவர்களை புதைச்ச முதுமக்கள் தாழி இருக்கு. அதுக்குப் பக்கத்துல அம்பேத்கர் நகர்னு குடிசைப் பகுதியில் மக்கள் ரொம்ப காலமா வசித்து வந்தாங்க. அந்தப் பகுதிக்கு பட்டா கொடுங்கன்னு போனமாசம் திருப்போரூருக்கு எம்.எல்.ஏ. மூர்த்தி தலைமையில் போய் ஆர்ப்பாட்டம் செஞ்சாங்க. அடுத்தநாளே மத்திய அரசு அதிகாரிங்க புல்டோசர் வச்சு குடிசைகளையெல்லாம் இடிச்சுத் தரைமட்டமாக்கிட்டாங்க'' என்கிறார்.

திருப்போரூர் நகராட்சிக் கவுன்சிலர் சசிகலா, ""திருப்போரூர் முருகன் கோயில் சன்னிதானத்துல முருகனை கழுவுற தண்ணி போகிறதுக்கு ஒரு குழாய் போட நகராட்சி முடிவு செஞ்சு வேலையை ஆரம்பிச்சது. அதற்கு தொல்பொருள்துறை தடை விதித்துவிட்டது. கடந்த ஒரு மாசமா முருகனுக்கு அபிஷேகம் ஒழுங்கா நடக்கலை'' என்கிறார்.

மகாபலிபுரம் சிற்பிகள் பாஸ்கரன், ஆனந்தன்... ""நாங்கள் ஐந்து ரதத்திற்கு எதிரே சிற்பக்கூடம் அமைத்து வருகிறோம். ஏற்கனவே அரசு எங்களுக்கு பூஞ்சேரி கிராமத்தில ஒரு சிற்பக் கலைக்கூடம் அமைக்க ஏற்பாடு செய்தது. அது நிறைவேறவில்லை. இப்பொழுது தொல்பொருள் துறை எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி எங்களது கட்டட வேலைகளை நிறுத்திவிட்டது'' என்கிறார்கள்.

இதுபோன்ற குரல்கள் தமிழ்நாடு முழுவதும் கேட்க ஆரம்பித்துள்ளது. ""இந்தியா முழுவதும் தொல்பொருள் சின்னங் களை பாதுகாக்க கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டம், தமிழ்நாட் டுக்கு பொருந்தாது. வடநாட்டில் பல இடங்களில் கல்லறைகள்தான் இருக்கிறது. தமிழ்நாட்டில் கோயில்கள்தான் உள்ளது. கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற கொள்கை யோடு வாழ்ந்த குடிகளை, கோயி லின் பழைமையைக் காட்டி கொடுமைப் படுத்துவது எந்தவிதத்தில் நியாயம்'' என்கிறார் ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளரான மல்லை சத்யா.

மாவட்ட அமைச்சரான தா.மோ.அன்பரசன், ""காஞ்சி மாவட்டத்தில பல்வேறு இடங் களில் இந்த பிரச்சினை என் கவனத்திற்கு வந்தது. இதையெல் லாம் மத்திய தொல்பொருள் துறையிடம் பேசி மக்களுக்கு மின்சாரம், குடிநீர் போன்றவற்றை ஏற்பாடு செய்து தர கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளேன்'' என்கிறார்.

ஏற்கனவே மத்திய அரசு கொண்டுவந்த மீன்பிடி சட்டம் போன்ற மக்கள் விரோத சட்டத்தை எதிர்ப்பின் காரணமாக மத்திய அரசு அமல்படுத்துவதை நிறுத்தி வைத்தது. அதேபோல் தமிழக முதல்வர் இதில் தலையிட்டு இந்த கொடுமைகளுக்கு முடிவு கட்ட வேண்டும்.

No comments:

Post a Comment