Thursday, September 9, 2010

""ஜெயலலிதா என்ன யோக்கியமா?'' -விளாசிய விஜயகாந்த்!
""தலைவன வரவேற்கணும்ல... புதுசு புதுசா வார்த்தயப் போட்டு ப்ளக்ஸ் வைக்கிறதுக்குள்ள தாவு தீர்ந்து போச்சு...''

வேண்டுமென்றே சலித்துக்கொண்டார் அந்த தே.மு.தி.க. தொண்டர்.

"அப்படி என்ன புதுமை பண்ணிட்டீங்க?'

""சிவகாசிக்கு வர்றாருன்னா சும்மாவா? ஆக்டோபஸ்ன்னு ஒரு பேனர் வச்சோம். அருவருப்பா இருக்குன்னு பப்ளிக் ஃபீல் பண்ணுச்சு. வாழும் காமராஜரேன்னு வச்சோம்... இது நாடாக்கமாரு ஊருல்ல... காமராஜருக்கும் விஜயகாந்த்துக்கும் என்னய்யா சம்பந்தம்னு கேள்வி கேக்குறாங்க. புதிய புரட்சித் தலைவரேன்னு போஸ்டர் ஒட்டினோம்... அப்ப எம்.ஜி.ஆர். பழைய புரட்சித் தலைவராயிட்டாரா? தமிழ்நாட்டுக்கு ஒரே புரட்சித் தலைவர்தான்னு எம்.ஜி.ஆர். ரசிகர் ஒருத்தரு மல்லுக்கு நின்னாரு. அண்ணா, எம்.ஜி.ஆரோட அரசியல் வாரிசுன்னு வச்சோம்... அ.தி.மு.க.காரங்க சண்டைக்கு வந்துட்டாங்க. எந்தலைவன் வந்தா பொறாமைல எத்தனை பேரு எதிர்க்கு றாங்க பாருங்க. அவரு முதலமைச்சரு நாற்காலில உக்கார்ற வரைக்கும் நாங்க இந்தப் பாடுபட்டுத்தான் ஆகணும். அதான் 2011-ன் ஆட்சி மாற்றமேன்னு எங்க மனசு குளிர்ற மாதிரி போஸ்டர் ஒட்டினோம். ஒரு சனமும் எதிர்க்கல. அப்பவே தெரிஞ்சுப் போச்சு. அடுத்து கேப்டனோட ஆட்சிதான்னு...'' -அத்தனை நம்பிக்கையோடு பேசினார் அந்தத் தீவிரத் தொண்டர்.

சிவகாசி-எம்.ஜி.ஆர். திடலில் தே.மு.தி.க.வின் முப்பெரும் விழா மேடைக்கு முன்பாக ஓரளவு பெண்கள் கூட்டம். ""சுள்ளுன்னு அடிக்கிற இந்த வெயில்லயும் இம்புட்டுச் சனம் காத்துக் கிடக்குல்ல. சத்தியமாச் சொல்லுறேன்... கருப்பு எம்.ஜி.ஆருன்னா எம்புட்டுப் பொருத்தமா இருக்கு'' -பெருமிதத்துடன் சொன்னார் அதே தொண்டர்.

"நீங்க எந்தக் கட்சி?'

பெண்கள் பகுதியில் நின்றுகொண்டிருந்த கோமதி யிடம் கேட்டோம்.

""அதுவா?'' என்று தலையைச் சொறிந்தவர் ""எம்.ஜி.ஆரு கட்சி. ரெட்டை இலைக்கு ஓட்டுப் போடு வேன். பெண்கள் குழு வுல இருக்கேன். எங்க எல்லா ருக்கும் முட்டை பிரியாணி பொட் டலம், ரெண்டு தண்ணி பாக்கெட்டு, கையில அம்பது ரூபான்னு கொடுத்து பஸ் பிடிச்சு கூட்டியாந்தாங்க...'' என்று கூட்ட ரகசியத்தைப் போட்டு உடைத்தார் வெள்ளந்தியாக.

உள்ளூரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு முப்பெ ரும் விழாவில் மைக் பிடித்த விஜய காந்த், ஆவேசத்தில் சகட்டு மேனிக்கு கலைஞரை விமர்சித்துவிட்டு ""ஜெயலலிதா மட்டும் என்ன யோக்கியமா? அவங்க ஆட்சியில அப்படி என்ன நல்லது பண்ணிட்டாங்க? நான் ஜெயலலிதாக்கும் பயப்படமாட்டேன். யாருக்கும் பயப்படமாட்டேன். 30, 40 சீட்டுக்காக நான் கட்சி ஆரம்பிக்கல. மக்களுக்கு நல்லது பண்ணணும்னுதான் கட்சி ஆரம்பிச்சேன். மக்களுக்கு நல்லது பண்ணணும்னு நெனைக்குற வங்க கூடத்தான் நான் கூட்டணி வைப்பேன். அது மக்கள் விரும்புற கூட்டணியா இருக்கும். அதுவும் மக்கள்ட்ட கருத்து கேட்டுட்டு, மக்கள் மத்தியிலதான் கூட்டணிய அறிவிப்பேன். தி.மு.க., அ.தி.மு.க. மட்டும்தான் தமிழ்நாட்டுல கட்சியா? வேற கட்சியே கிடையாதா? அந்த ரெண்டு கட்சியுமே வறுமைய ஒழிக்காத கட்சிக. அத நம்பிப்போனா நாசமாத்தான் போகணும். தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் பணம் கொடுத்து கூட்டத்தக் கூட்டுது. நான் அப்படியில்ல. என்னோட கொள்கைக்காக தானா வந்த கூட்டம் இது... '' என்று கூட்டத்தை நோட்ட மிட்டவர் ""பத்திரிகைகள்தான் மக்களைக் குழப்புது. யாரும் குழம்ப வேணாம். நான் தெளிவாயிருக்கேன். நீங்களும் தெளிவா இருங்க'' என்று திரும்பத் திரும்பச் சொன்னார்.

விஜயகாந்த்தின் இந்த "அரசியல் தெளிவு' குறித்து அக்கட்சித் தொண்டர்களிடம் கருத்துக் கேட்டோம்.

ராஜபாளையத்திலிருந்து வந்திருந்த அய்யனார், ""மக்கள் விரும்புற கூட்டணின்னு கேப்டன் சொல்லுறது ரொம்ப குழப்பமா இருக்கு. அவருக்கு யோசனை சொல்லுற இடத்துல நாங்க இல்ல. இனியும் தனிச்சு நின்னா சாமர்த்தியமில்லை. இருந்த பணம் அத்தனையையும் செலவழிச்சிட்டு ஒண்ணுமில்லாம நிக்கிறோம். காங்கிரஸ், பா.ம.க.ன்னோ, பி.ஜே.பி.ன்னோ தோதான கட்சிகூட கூட்டணி வச்சிக்கிறது தப் பில்ல...'' என்றார் விட்டேத்தியாக.

காளிராஜ் என்ற இளைஞர், ""கேப்டன் சொன்னது எனக்கு சரியா வௌங்கல. பக்கத்துல இருந்தவன்கிட்ட கேட்டேன். அவனும் புரியாத மாதிரி தலைய ஆட்டுனான்'' என்றவர், கைநீட்டிய திசையில்... "அரசியல் விழிப்புணர்ச்சியே!' என விஜயகாந்த்தை வரவேற்ற பேனர் கண் சிமிட்டியது.

No comments:

Post a Comment