Saturday, September 4, 2010

யுத்தம் 85 நக்கீரன் கோபால்




பொதுமேலாளர் தம்பி சுரேஷின் குரலில் பதட்டம் தெரிந்தது.

""அண்ணே... ..வீட்டுக்கு இரண்டு பக்கமும் போலீஸ்... மஃப்டியில் சுத்திக்கிட்டிருக்காங்க. வீட்டுக்கு ஒரு பக்கம் வேன் நிக்குது. இன்னொரு பக்கம் ஜீப் நிக்குதாம்.''

-வீட்டில் செக்யூரிட்டியாக இருக்கும் கண்ணன் தான் தம்பி சுரேஷூக்கு போன் செய்து விவரம் சொல்லியிருக்கிறார். மீண்டும் போலீஸ் முற்றுகை என்றதும் பதட்டமான தம்பி சுரேஷ் எனக்கு போன் செய்து தகவலைச் சொன்னார். எனக்கு பதட்டம் இல்லை. இதையெல்லாம் எதிர்பார்த்துதானே இருந்தோம்.

தம்பி காமராஜ் கொண்டு வந்து தந்த ஃபேக்ஸ் காப்பிக்குப் பிறகு, இந்த ஆட்சியில் நக்கீரனுக்கு எதுவும் நடக்கலாம் என்ற நிலைமை பட்டவர்த்தன மாகத் தெரிந்துவிட்டது. கர்நாடக முன்னாள் டி.ஜி.பி. தினகர் எழுதிய அவதூறு புத்தகம் தொடர்பாக சட்ட ரீதியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, அட்வகேட் ஜெயப்பிரகாஷிடம் நடத்திய டிஸ்கஷன் ஏறத்தாழ 2 மணி நேரம் தொடர்ந்தது. டிஸ்கஷன் முடிந்ததும் தம்பி குருவுக்குப் போன் செய்தேன்.

""வீட்டைச் சுற்றி போலீஸ் குவிக்கப்பட்டி ருப்பதா சுரேஷ் சொன்னாரு. நீ நேரா வீட்டுக்குப் போயிடு. யாரும் பயப்படவேணாம். நான் இங்கே அட்வகேட்ஸ்கூடத்தான் இருக்கேன். சீனியர்கிட்டேயும் பேசிட்டேன். எல்லாத்தையும் சட்டரீதியா எதிர்கொள்ள லாம். வீட்டுல உள்ளவங்களை தைரியமா இருக்கச் சொல்லு. வீட்டில் செக்ரிட்டிய டைட் செஞ்சுடு. அப்புறம், வீட்டுல 2 சூட்கேஸ்களை ரெடியா வச்சிருக்கேன். அதை ராஜேந்திரன் ஆட்டோவில் ஏற்றி, டிரைவர் மோகன் வீட்டில் வைக்கச் சொல்லிடு'' என்றேன். குரு வேக வேகமாக வேலைகளில் இறங்கினான். அங்கிருந்து எனக்குத் தகவல்கள் வந்து கொண்டே இருந்தன. போலீசார் நடமாட்டத்தை அப்படியே பதிவு செய்ய வேண்டும் என முடிவெடுத்தேன்.





தம்பி சுரேஷை மறுபடியும் தொடர்புகொண்டு, ஃபோட்டோகிராபர் இளங்கோவனை உடனே பேசச் சொன்னேன். இளங்கோவன் லைனுக்கு வந்தார்.

""தம்பி.. நீங்க உடனே வீடியோ கேமராவோடு வீட்டுக்குப் போயிடுங்க. அங்கே போலீஸ் சுத்திக்கிட்டி ருக்கு. யார், யார் இருக்கான்னு வீடியோ பண்ணிடுங்க. போலீஸ் வண்டிகளையும் நம்பரோடு வீடியோ எடுத்துக்குங்க.''

""சரிங்கண்ணே...''

அடுத்ததாக, ஃபோட்டோகிராபர் சம்பத்தை லைனில் பிடித்தேன்.

""அண்ணே...''

""தம்பி.. நீங்க உடனே வீட்டுக்குப் போயிடுங்க. போலீஸ் டீம் இருக்கும். ஒருத்தரையும் மிஸ் பண்ணாம ஃபோட்டோ எடுத்திடுங்க. இளங்கோகிட்டே வீடியோ எடுக்கச் சொல்லிட்டேன்.''

""சரிங்கண்ணே.. இதோ கிளம்பிட்டேன்..''

""தம்பி காமராஜ், போலீஸ் சைடில் அடுத்தடுத்த கட்டமாக என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை தனக்குரிய சோர்ஸ்கள் மூலமாக விசாரித்துக்கொண்டி ருந்தார். அவரைத் தொடர்பு கொண்டு, என்னென்ன மூவ்மென்ட்ஸ் நடக்கப் போகுது'' என்று கேட்டேன்.

""ரொம்ப சீரியஸா மூவ் பண்ணுவதா நம்ம சோர்ஸ் சொல்லுதுங்கண்ணே'' என்றார் தம்பி.

என் வீடு இருந்த கீழ்ப்பாக்கம் கார்ட னுக்குப் பக்கத்தில்தான் தம்பி சுரேஷின் வீடு இருந்தது. அதனால் அதிகாலை 3 மணி வாக்கில் சுரேஷ் அங்கே போய், போலீசின் நடமாட்டம் எப்படி இருக்கிறது என்பதை கவனித்துவிட்டு எனக்குப் போன் செய்தார்.

அண்ணே... வண்டிகளும் நிக்குது. போலீஸ்காரங்களும் சுத்திக்கிட்டிருக்காங்க.

அதிகாலை 4 மணிக்கு நமது பிரிண்ட்டிங் மேனேஜர் பெருசு சுந்தர் அங்கே போய் நோட்டம் விட்டார். அவரும் அதையேதான் சொன்னார். அதன்பிறகு, பொழுது விடிஞ்சதும் டிரைவர் மோகனை அனுப்பி நிலைமையைப் பார்த்துவிட்டு வரச்சொன்னேன்.

அவர் போனபோதும் அதே நிலைமைதான். போலீசிடம் அநாவசியமாக பேச்சு எதுவும் கொடுக்காமல் நோட்டம் விட்டபடி தெருமுனைக்கு வந்த மோகன், அங்கே பால்காரர் ஏழுமலையைப் பார்க்கிறார். அவர் மோகனிடம், ""3 நாளா இந்த ஏரியாவிலேயேதான் போலீஸ் ஜீப் சுத்துது. அண்ணனை கவனமா இருக்கச் சொல்லுங்க'' என்கிறார். அங்குள்ள ஆட்டோ டிரைவர்களும் இதையேதான் சொல்கிறார்கள். ஏரியா நிலவரத்தை விசாரித்துவிட்டு மோகன் எனக்குப் போன் செய்து இதையெல்லாம் சொன்னார்.

அலுவலகமும் பரபரப்பாகத் தான் இருந்தது.

அட்வகேட் பெருமாள் சார் லைனில் வந்தார். ""அண்ணாச்சி, போலீஸ்காரங்க ரொம்ப வெறியா இருக்காங்களாம். டி.எஸ்.பி. நாக ராஜன் தலைமையில் இன்ஸ்பெக்டர் கள் லட்சுமணசாமி, பெரியசாமி, கோபால்சாமினு பெரிய டீமே சென் னைக்கு வந்திருக்குது'' என்றார்.

அப்படியென்றால் அவர்கள் நம் வீடு, அலுவலகம் உள்ள ஏரி யாவில்தான் சுற்றிக்கொண்டிருப்பார் கள். சிவாவை ஆத்தூரிலிருந்து கடத்திச் சென்றதுபோல நம் மையும் தூக்கிச் செல்லத் தான் திட்டமிட்டிருப் பார்கள். ஏற்கனவே போலீஸ் ஜீப்பில் பணக்கட்டுகளை வைத்துக்கொண்டு, நம்மைத் தேடி சுற்றியவர்களாயிற்றே! நக்கீரன் கோபாலை லட்சக்கணக்கான பணத் தோடு காட்டில் கைது செய்தோம் என்று பொய்க் குற்றம் சுமத்தி உள்ளே தள்ள வேண்டும் என்பதுதானே ஜெயலலிதா அரசாங் கத்தின் நோக்கம்!

அலுவலகத்திலிருந்த ராஜாமணியை வீட்டின் பாதுகாப்புக்காகப் போகச் சொன்னேன். செக்யூரிட்டிகளுடன் அவரும் இருந்தால் கூடுதல் பாதுகாப்பாக இருக்கும் என்பதால்தான் இந்த ஏற்பாடு.

ஃபோட்டோகிராபர் சம்பத் அங்கிருந்த போலீசாரையெல்லாம் படம் பிடிக்க, இளங்கோ எல்லோரையும் வீடியோ வில் பதிவுசெய்து கொண் டிருந்தார். இதைக் கவ னித்த போலீசார் தங்கள் முகத்தை மூடிக் கொண்டு வேனுக்கும் ஜீப்புக்குமாக ஓட்டம் பிடிக்க, அவர்கள் ஏறியதும் ஜீப்பும் வேனும் அவசர அவசரமாகக் கிளம்பி, அந்தத் தெரு வைவிட்டுச் சென்றது. சம்பத், இளங்கோ இரண்டு பேரும் அவர் களை விடவில்லை. விரட்டி விரட்டி வீடியோ வும் ஸ்டில்லும் எடுத்த படியே போலீஸ் வண்டி களைத் துரத்திச் சென்றனர். இரண்டு தெருக்கள் தள்ளி ஓரிடத்தில் வண்டிகளை நிறுத்திவிட்டு, போலீசார் காத்திருந்தனர்.

டிரைவர் மோகனிடம் ஜீப்பை எடுக்கவேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அப்பாவின் காரை பயன்படுத்துவதையும் மாற்ற வேண்டும் என முடிவு செய்தேன். மெக்கானிக் அண் ணாதுரையின் ஒர்க் ஷாப்பில் சோனைமுத்து மச்சானின் மாருதி கார் சர்வீசுக்காக வந்தி ருந்தது. அதை எடுத்துக் கொள்ளத் தீர்மானித்தேன்.

அட்வகேட் பெருமாள் சார் மீண்டும் லைனில் வந்தார். ""இன்னமும் வெறி குறையாமல்தான் இருக்காங்க. நீங்க வழக்கமா இருக்கிற இடங்களில் இருந்தால் ஆபத்துதான்'' என்றார்.

தம்பி காமராஜிடம் சொல்லி, கொடைக்கானலில் உள்ள அவ ருடைய நண்பர் கிட்டா மூலம் அங்கே தங்கலாமா என ஆலோ சித்தேன். தம்பியும் உடனடியாக கிட்டாவிடம் பேசி, அதற்கான ஏற்பாடுகளை செய்துகொண்டி ருந்தார். எல்லா வழியிலும் செக்கிங் பலமாக இருக்கிறது என்று போலீஸ் சோர்ஸ் களிடமிருந்து அடுத்த தகவல் வந்தது.

""அண்ணே.. நீங்க ஜீப்பிலேயோ காரிலேயோ போகும்போது மடக்கித் தூக்கிச் செல்றதுங்கிறது தான் அவங்க திட்டம்'' என்ற தம்பி காமராஜ், போலீசின் திட்டங்களைப் பற்றியும் தற்போதைய நிலைமைகளையும் கலைஞரிடம் சொல்லிவிட்டு வருவதாக கிளம்பிச் சென்றார்.

நாம் அவசரமாக வரச் சொன்னதையடுத்து அட்வகேட் ப.பா.மோகன், சென்னைக்கு வந்து சேர்ந்திருந்தார். அவரும் பெருமாள் சாரும் சிவக்குமாரும் தம்பி காமராஜூடன் சீனியர் கே.எஸ் ஸிடம் டிஸ்கஸ் செய்வதற்காகப் புறப்பட்டுச் சென்றனர். கோபியில் நடந்த 10 நாள் விசாரணை தொடர் பாக ப.பா.மோகனிடம் ஒரு அஃபிட விட் வாங்கித் தாக்கல் செய்வதென சீனியருடன் டிஸ்கஷன் நடந்தது.

திரும்பி வந்த ப.பா.மோகன், ""போலீஸ் ஏன் உங்க வீடு இருக்கிற பகுதியில் சுத்திக்கிட்டே இருக்க ணும்? வீடியோ எடுக்கும்போது ஏன் ஓடணும்? எந்த கேசுக்காக அரெஸ்ட் டுன்னு வாரண்ட் இருந்தா நேரா வந்து அரெஸ்ட் பண்ணலாமே? அவங்க வேற ஏதோ ஒரு பெரிய திட் டத்திலே இருக்காங்க சார்..'' என் றார். பக்கத்தில் இருந்த அட்வகேட் பெருமாள், ""சிவா மாதிரி உங் களை தூக்கிட்டுப்போய் இன் னொரு குரூப்பிடம் கொடுக்கிற ப்ளான் இருக்கலாம் அண் ணாச்சி'' என்றார். ""அப்படி பழிவாங்குற எண்ணம்தான் கவர்மென்ட்டுக்கு இருக்கும்'' என்றார் ப.பா.மோகன்.

நக்கீரன் மீதான வழக்கு கள் நிலுவையில் உள்ள கோர்ட் டுகளில் ஏதாவது வாரண்ட் வாங்கியிருக்கிறார்களா என்று விசாரித்தோம். எந்த வாரண் டும் வாங்கப்படவில்லை என்பது தெரிந்தது. நமது வழக்கறிஞர் களின் சந்தேகம் சரிதான். எந்த வாரண்ட்டும் இல்லாமல் நம்மை தூக்கிச் செல்வது என்பதுதான் அவர்களின் திட்டம்.

"50 போலீசார் தலைமை யில் கோபால் வீடு நோட்டம்'- என தினமலர் பத்திரிகையில் செய்தி வெளியானது. அதைப் பார்த்த பெருமாள் சார், ""அண் ணாச்சி, இந்த செய்தியை மற்ற பத்திரிகைகளிலும் சேனல்களி லும் வரச் செய்யணும். அது ஒரு ஸ்ட்ராங்க் எவிடென்ஸ்'' என் றார். உடனே தலைமைத் துணை யாசிரியர் தம்பி லெனினை பத்தி ரிகைகளுக்கு கொடுப்பதற்கு பிரஸ் ரிலீஸ் ரெடிபண்ண சொன் னேன். தம்பிகள் சுரேஷ், பிரான் சிஸ், சிவக்குமார் மூவரையும் அழைத்து, ""எல்லா பத்திரிகை களுக்கும் சேனல்களுக்கும் தம்பி லெனின் எழுதி கொடுக்கும் பத்திரிகைச் செய்தியை ஃபேக்ஸ் பண்ணிடுங்க. வழக்கம் போல் எல்லா இடங்களுக்கும் தந்தி கொடுத்திடுங்க'' என்றேன். போலீசின் நடவடிக்கைகள் பற்றி எல்லா இடங்களுக்கும் தக வல்கள் பறந்துகொண்டிருந்தன.

என் வீட்டைச் சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டு, நோட்டமிட்டபடியே இருந்தனர். நான் சென்ற இடம்.. ..

-யுத்தம் தொடரும்

No comments:

Post a Comment