Sunday, August 1, 2010

மதுரை மண்டலத்தின் கள நிலவரம்


ஒவ்வொரு சாலையும் ரோம் நகரம் நோக்கியே செல்கின்றன என்பது போல, அரசியலில் ஒவ்வொரு நடவடிக்கையும் தேர்தலை மனதில் வைத்தே நடைபெறுகிறது. ஆளுங்கட்சியின் தலைமையை எதிர்த்து எதிர்க்கட்சியும், எதிர்க் கட்சியின் தலைமையை எதிர்த்து ஆளுங்கட்சியும் போராட்டம் நடத்துகின்ற வித்தியாசமான அரசியலைக் காண்கிறது தமிழகம். தினம்தோறும் அறிக்கைகள், பதிலறிக்கைகள், விவாதங்கள், விளக்கங்கள் என விறுவிறுப்பைக் கூட்டிக் கொண்டே இருக்கிறது அரசியல் களம். தனிப்பட்ட செல்வாக்கு உள்ள அரசியல் பிரமுகர்கள் எந்தப் பக்கம் போவார்கள், கட்சிகள் எந்தக் கூட்டணிப் பக்கம் சாயும் என்பதெல்லாம் உற்று கவனிக்கப்பட்டு வரும் நிலையில், நக்கீரனின் கள ஆய்வு முடிவுகள் மிக உன்னிப்பாக நோக்கப்படுகின்றன.

தமிழக அரசியலைத் தீர்மானிப்பதில் தென்மாவட்டங்களுக்கு தனி முக்கியத்துவம் உண்டு. கட்சி செல்வாக்கின் அடிப்படையிலும், சமுதாயங்களின் பலத்தின் அடிப்படையிலும் தென்மாவட்டங்கள் மீது அரசியல் கட்சிகள் சிறப்பு கவனம் செலுத்து கின்றன. தென் மண்டலத்தின் மிகப் பெரிய நகரமாக விளங் கும் மதுரையை மையமாகக் கொண்ட மதுரை மண்டலத்தின் கள நிலவரம் இந்த இதழில் இடம்பெறுகிறது....


வைகைப் பாசனமும், அதனையே நீர் ஆதாரமாகவும் கொண்டிருக்கிற மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் நாடாளு மன்றத் தொகுதிகளே இந்த மண்டலத்திற்குள் வரையறுக்கப் பட்டுள்ளன. இந்த 3 நாடாளுமன்றத் தொகுதி களுக்குட்பட்ட மேலூர், மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, மதுரை மத்தி, மதுரை தெற்கு, மதுரை வடக்கு, திருமயம், ஆலங்குடி, காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை, அறந்தாங்கி, திருச்சுழி, பரமக்குடி, திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் ஆகிய 18 சட்டமன்றத் தொகுதிகளின் கள நிலவரமே இங்கு வெளியாகியுள்ளது.

மாவட்டத் தலைநகரங்களுடன் கிராமப்புறங்கள் அதிகளவில் இணைந்த இந்த மண்டலத்தில் விவசாயமும் சிறு அளவிலான தொழில்களுமே மக்களின் வாழ்வாதாரம். கடலோர மாவட்டமான ராமநாதபுரத்தில் மீனவர்களின் அன்றாட வாழ்க்கைப் போராட்டமும் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சமாகும். பெரியளவில் தொழிற்பேட்டைகளோ, பன்னாட்டு நிறுவனங்களோ அமைந்திடாத இந்த மண்டலத்தில் கட்சிகளின் செல்வாக்கினை வரைபடம் காட்டுகிறது.

மதுரை

ஆளுந்தரப்பின் முழு நம்பிக்கையும் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மீதுதான். அவருடைய தேர்தல் ஃபார்முலா தங்களை ஜெயிக்க வைக்கும் என்பது உடன்பிறப்புகளின் நம்பிக்கை. ஒருகாலத்தில் மதுரையைத் தனது கோட்டையாக வைத்திருந்த அ.தி.மு.க., தற்போது அழகிரி போடும் ஓட்டையிலிருந்து கட்சியைக் காப்பாற்றும் நோக்கத்திலேயே செயல்படுகிறது. எம்.ஜி.ஆர். விசுவாசிகளின் நிரந்தர ஓட்டு வங்கியையும், கூட்டணிக் கட்சிகளின் செல்வாக்கையும் வைத்து ஆளுங்கட்சியை எதிர்கொள்ள முடியும் என நினைக்கிறது அ.தி.மு.க. சமுதாயரீதியாக முக்குலத்தோர், பிள்ளைமார், முஸ்லிம், தலித், நாயுடு, யாதவர்கள் எனப் பல சமூகத்தினரும் ஒவ் வொருவிதமான தாக் கத்தை ஏற்படுத்தக் கூடியவர்களாக இருக் கிறார்கள்.

முக்குலத்தோர் அதிகமாகவும் அவர்களின் வாக்குகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் தலித் மக்களும் வசிக்கும் மேலூர் தொகுதி, கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு சாதக மாக அமைந்தது. எனினும், நாடாளுமன்றத்தேர்தலில் மதுரை எம்.பி. தொகுதிக் குட்பட்ட இங்குதான் மு.க.அழகிரிக்கு அதிக லீடிங் கிடைத்தது. அழகிரி மகள் கயல்விழி இங்கு போட்டி யிடக்கூடும் என்ற எதிர்பார்ப்புடன் உ.பி.க்கள் தேர்தல் ஆயத்தங்களை மேற்கொண்டுள்ளனர். கோட்டையைக் கோட்டைவிட்டுவிடக்கூடாது என அ.தி.மு.க. வரிந்து கட்டுகிறது. காங்கிரசுக்கு இங்குள்ள பாரம்பரியமான வாக்குகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. எனவே கூட்டணி அடிப்படையில் முடிவுகள் அமையும் என்பதே மேலூர் நிலவரம்.

பிறன்மலைக் கள்ளரும் நாயுடு ஓட்டுகளும் கணிசமாக உள்ள மதுரை தெற்கு தொகுதியில் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும்தான் வரிந்து கட்டுகின்றன. அழகிரியின் அட்வைஸ்படி தொகுதிக்குள் மா.செ. தளபதி வலம் வந்து கொண்டிருப்பதை அ.தி.மு.க தரப்பும் கவனிக்கத் தவறவில்லை. அ.தி.மு.க-தி.மு.க நேரடி போட்டி கடுமையாக அமையக்கூடிய தொகுதியாக இருக்கிறது மதுரை தெற்கு.

சி.பி.எம். எம்.எல்.ஏ. நன்மாறனின் எளிய அணுகுமுறையும், பொதுமக்கள் பிரச்சினைகளுக்காக முன்னிற்கும் தன்மையும் மதுரை கிழக்குத் தொகுதி மீது தோழர்களுக்கு மீண்டும் நம்பிக்கையை உண்டாக்கியிருக்கிறது. தி.மு.க. மா.செ. மூர்த்தி கடந்த 1 வருடமாக இந்தத் தொகுதியைச் சுற்றி வந்து கொண்டிருக்கிறார். யாதவர்களும் முக்குலத்தோரும் சரிசமமான வாக்கு வங்கியைக் கொண்டுள்ள இத் தொகுதியில் அ.தி.மு.க. மாஜிகளான கண்ணப்பனும், ஓ.பன்னீர்செல்வமும் தொடர்ந்து வலம் வருகிறார்கள். கூட்டணிக்கட்சிக்கா, கழகங்களுக்கா என்று தொகுதி முடிவாகும்போது போட்டி விறுவிறுப்பாகும்.

காங்கிரஸ் கட்சியின் சிட்டிங் தொகுதியான மதுரை மேற்கு தொகுதியில் முக்குலத்தோர் அதிகம். தொழிலாளர்களும் அதிகம். அதனால் கம்யூ னிஸ்ட்டுகளை தனது அணியில் கொண்டுள்ள அ.தி.மு.க. புதிய நம்பிக்கை பெற்றிருக்கிறது. காங்கிரசுக்கே மறுபடியும் சீட் கொடுத்தால் அழகிரிதான் ஜெயிக்க வைக்கவேண்டும் என்று தி.மு.க.வினரே சொல் கிறார்கள்.

பி.டி.ஆரின் மரணத்தால் இடைத்தேர்தலை சந்தித்து, அழகிரியின் தேர்தல் ஃபார்முலாவை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த மதுரை மத்திய தொகுதியில் முஸ்லிம் வாக்குகள் அதிகம். அவர்களையடுத்து, யாதவர்கள், முக்குலத்தோர், தலித், பிள்ளைமார் என்ற வரிசையில் வாக்குவங்கி உள்ளது. முஸ்லிம் ஓட்டுகள் ஆளுந்தரப்புக்கு சாதகமாக இருக்கிறது. யாதவர்கள், முக்குலத்தோர் வாக்குகளை மொத்தமாகப் பெற அ.தி.மு.க. கணக்குப்போட, தி.மு.க. அங்கும் தன் செல்வாக்கைச் செலுத்திக்கொண் டிருக்கிறது. விஜயகாந்த்தின் சொந்தப் பகுதி என்பதால் தே.மு.தி.க. வாக்குவங்கியும் முக்கியத்துவம் பெறுகிறது. கேப்டனே இங்கு நிற்கப்போகிறார் என தே.மு.தி.க.வினர் எதிர்பார்க்கின்றனர்.

விலைவாசி உயர்வு, மின்வெட்டு போன்ற பொதுப்பிரச் சினைகளும் தொகுதிகளுக்கான தனிப்பட்ட பிரச்சினை களும் பின்தள்ளப்பட்டு, கட்சி செல்வாக்கு, ஜாதி பலம், தனிமனிதர்களின் ஆளுமை, கூட்டணி நிலவரம் இவற்றை மையமாக வைத்தே மதுரையின் தேர்தல் களம் அமைந்துள்ளது.

சிவகங்கை

தொகுதி சீரமைப்புக்குப்பின் புதுக்கோட்டை மாவட்டத்தின் இரு சட்டமன்றத் தொகுதிகளைத் தன்னுள் கொண்டுள்ள சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதிக்குள் காரைக்குடி, மானாமதுரை, திருப்பத்தூர், சிவகங்கை, ஆலங்குடி, திருமயம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. இவற்றில் பெரும்பான்மையாக இருப்பவர்கள் முக்குலத்தோர்தான். அவர்களிலும் கள்ளர் சமுதாயத்தினர் இங்கு அதிகம்.

இவர்களின் ஆதரவைப் பெற்று முன்னிலையில் இருப்பது அ.தி.மு.க. அடுத்த இடம், காங்கிரசுக்கு. ஆளுங் கட்சியான தி.மு.க.வை ஆதரிக்கும் கள்ளர் சமுதாயத்தினர் குறைவு என்பதை நம் கள ஆய்வில் காண முடிந்தது. முக்குலத்தோரில் மற்றொரு பிரிவினரான அகமுடையார் சமுதா யத்தினரில் பெரும்பாலானவர்கள் தி.மு.க. அனுதாபிகளாக உள்ளனர். மறவர் சமுதாயத்தினர், அ.தி.மு.க. சார்பாக உள்ளனர்.

எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் இருப்பவர்கள் தலித் மக்கள். இவர்களில் தேவேந்திரகுல வேளாளர்களும் ஆதிதிராவிடர்களும் சம அளவில் உள்ளனர். புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கான வாக்குகள் ஓரளவு இருந்தாலும், தலித் சமுதாய வாக்கு களில் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் தங்களுக்கானப் பங்கைக் கொண் டிருக்கின்றன.

வாக்காளர் பலத்தில் மூன்றாவது இடம் முத்தரையர் களுக்கு. நான்காவதாக யாதவர்கள் உள்ளனர். இவர்கள் மத்தியில் ராஜ.கண்ணப்பனுக்குள்ள தனிப்பட்ட செல்வாக்கு, அ.தி.மு.க.வுக்கு சாதகமாகிறது. அந்த வாக்குகளை தி.மு.க.வுக்குத் திருப்ப, அமைச்சர் பெரியகருப்பன் போராடிக் கொண்டிருக்கிறார்.

குறிப்பிடத்தக்க அளவில் உள்ள உடையார் சமுதாயத்தினரில் பெரும்பாலானவர்கள் காங்கிரஸ், தி.மு.க. அனுதாபிகளாக உள்ளனர். சிறுபான்மையினரான முஸ்லிம், கிறிஸ்தவர்களும் தி.மு.க. பக்கமே அதிகளவில் உள்ளனர். காரைக் குடி, திருமயம் தொகுதிகளில் உள்ள செட்டியார் சமுதாயத்தின ரில் பெரும்பகுதியினர் பாரம்பரிய மாக காங்கிரசுக்கு வாக்களிக் கின்றனர்.

அரசின் இலவச திட்டங்கள் மூலமாக அனைத்து தரப்பு மக்களிடமும் தி.மு.க. ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் தேர்தல் நேரத்தில் கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டங்களை காங்கிரசும் பிரச்சாரம் செய்து வருகிறது. மத்திய அரசில் 3-வது இடத்தில் இருக்கும் அமைச்சரான ப.சிதம்பரத்தின் சொந்த நாடாளுமன்றத் தொகுதி என்பதால் காங்கிரசின் கவனம் இங்கு கூடுதலாக உள்ளது.

அதே நேரத்தில், காரைக்குடி நகரம் வளர்ந்த அளவுக்கு மற்ற நகரங்கள் வளரவில்லை என்ற குற்றச்சாட்டு, பொதுமக்களிடம் உள்ளது. விவசாயத் தொழிலாளர்கள் நிறைந்துள்ள இந்த மாவட்டத்தில் விவசாய வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் உரிய அளவில் எடுக்கப்படவில்லை. காளையார் கோவில் பகுதியில் நடந்த அணைக்கட்டு, கண்மாய் சீரமைப்புப் பணிகளில் ஊழல் என விவசாயிகளும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் பெரும் போராட்டம் நடத்தியும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

இந்த அதிருப்திகளை தனக்கு சாதகமாக்கும் விதத்தில் அ.தி.மு.க. தரப்பு செயல்பட, அதைத் தடுக்கும் வியூகங்களை தி.மு.க. வகுப்பதால் சிவகங்கை மாவட்டத்தில் போட்டிக்களம் விறுவிறுப்பாகவே உள்ளது.

ராமநாதபுரம்

தமிழக மீனவர்கள் நேரடியாக இலங்கைக் கடற்படையினரால் பாதிப்புக்குள்ளாகும் மாவட்டம் என்பதால் ராமநாதபுரம் மாவட்டம் எப்போதுமே அரசியல் பதற்றம் நிறைந்ததாக இருக்கிறது. பரமக்குடி, முதுகுளத்தூர், ராமநாதபுரம், திருவாடானை ஆகியவற்றோடு புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து அறந்தாங்கியும், விருதுநகர் மாவட்டத்திலிருந்து புதிதாக உருவான திருச்சுழியும் ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளாக உள்ளன.

பெரியளவிலான தொழிற்சாலைகள் எதுவுமில்லாத இந்த மாவட்டத்தில், மீன்பிடித் தொழிலை நம்பி 2 லட்சம் பேர் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு லட்சம் பேர் வெளிநாடுகளில் வேலை பார்த்து, தங்கள் குடும்பங்களுக்கு பணம் அனுப்பிக் கொண்டி ருக்கிறார்கள்.

சமுதாய ரீதியில் முக்குலத் தோரே இந்த மாவட்டத்தில் அதிகம். அவர்களில் மறவர், அகமுடையார் அதிகம். கள்ளர் சமுதாயத்தினர் குறைந்த அளவு உள்ளனர். இந்த 3 பிரிவினரில் 60 சதவீதம் பேர் அ.தி.மு.க. ஆதரவாளர்களாகவும், 30 சதவீதம் பேர் தி.மு.க. பக்கமும் இருக்கிறார்கள்.

இரண்டாவது பெரிய சமுதாயமான தலித் மக்களில், தேவேந்திரகுலவேளாளர்கள் மிக அதிகமாகவும், ஆதி திராவிடர்கள், அருந்ததியர்கள் குறைவாகவும் உள்ளனர். கடந்த தேர்தலில் தி.மு.க.வுக்கு வாக்களித்த தேவேந்திரகுல வேளாளர்களின் வாக்குவங்கியை தற்போது தன் பக்கம் வைத்திருப்பதில் புதிய தமிழகம் முன்னிலையில் இருக்கிறது. எனினும், அக்கட்சிக்கு அமையும் கூட்டணி, அக்கட்சி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் ஆகியோரைப் பொறுத்தே இந்த வாக்குகள் தேர்தல் நேரத்தில் பதிவாகிறது.

ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில், மூன்றாவது பெரிய சமுதாயத்தினர், இஸ்லாமியர்கள். மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் ஆகியவற்றில் இவர்கள் இடம் பெற்றிருந்தாலும் தேர்தலில் வாக்கு என்று வரும்போது இஸ்லாமியர்களில் முக்கால்வாசி பேர் தி.மு.க.வையே ஆதரிக்கிறார்கள்.

மீனவர்கள் பிரச்சினை தீர்க்கப்படாமலேயே இருப்பதால் அவர்கள் மத்திய -மாநில அரசுகளின் மீது கோபத்தில் உள்ளனர். இதனை அ.தி.மு.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களுக்கு சாதகமாக்கிக்கொள்வதில் முனைப்பாக இருக்கின்றன. யாதவர்கள் வாக்குகளை மொத்தமாக அ.தி.மு.க. பக்கம் திருப்பும் அசைன்மென்ட் ராஜ.கண்ணப்பனிடம் வழங்கப்பட்டிருக்கிறது.

வானம் பார்த்த பூமி எனப்படும் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓரளவு விவசாயம் நடைபெறும் ஆர்.எஸ்.மங்கலம், நயினார்கோவில், திருவாடானை, பரமக்குடி பகுதிகளில் போதிய பாசன வசதி இல்லை. சிட்டிங் எம்.எல்.ஏக்களில் பலருக்கும் இமேஜ் டேமேஜ் ஆகியிருக்கிறது.

இந்நிலையில், ராமநாதபுரம் கூட்டுக்குடிநீர்த்திட்டம், அரசின் மக்கள் நலத்திட்டங்கள் ஆகியவற்றை தேர்தல் நேர அறுவடையாக்கும் முயற்சியில் ஆளுந்தரப்பு மும்முரமாக இருக்கிறது. எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தன் பழைய பலத்தை நிரூபிக்க முயற்சிக்கிறது.

மதுரை மண்டலம் இரு கழகங்களின் கௌரவப் போட்டிக் களமாக உருவெடுத்திருப்பதை நமது கள ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.

(வரும் இதழில் திண்டுக்கல் மண்டலம்)

No comments:

Post a Comment