Sunday, August 29, 2010

கமலை அவமதித்த மலையாள நடிகர்கள்!


குழந்தை நட்சத்திரமாக கலைப் பயணத்தை தொடங்கிய கமல் அரை நூற்றாண்டு களை எட்டி வெற்றி நடை போட்டுக் கொண்டி ருக்கிறார். நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், பாடகர், பாடலாசிரியர், விநியோகஸ்தர், கதாசிரியர், வசனகர்த்தா, திரைக்கதாசிரியர், டான்ஸ் மாஸ்டர், ஒப்பனையாளர், தொழில்நுட்ப வல்லுநர்.... என பன்முகத் தன்மையோடு இந்தியாவையும் தாண்டி வெளிநாடுகளிலும் தன் முத்திரையை பதித்துக் கொண்டிருப்பவர். இங்கிலாந்து அரசி இந்தியா வந்தபோது கமலை வியந்து புகழ்ந்து "மருத நாயகம்' படப்பிடிப்பை துவக்கிவைத்தார். அவ்வளவு தூரத்திற்கு இண்டர்நேஷனல் கலைஞராக இருப்பதால்தான் உலகநாயகன் என கமலை மக்கள் கொண்டாடுகிறார்கள். இந்திய சினிமா விற்கு புதிய தொழில்நுட்ப அறிவியலை அறிமுகப்படுத்தி சேவை செய்வதோடு தன் ரசிகர்கள் நற்பணி இயக்கம் மூலம் ரத்ததானம், உடல்தானம், கண்தானம் என சமூக சேவையை யும் செய்து வருகிறார். வருமானவரி கட்டுவதில் முதல் ஆளாக இருந்து சிறந்த இந்தியக் குடிமகனாகவும் திகழ்கிறார் கமல். அதனால் தான் கமலின் 50-வது ஆண்டு கலையுலக சேவையை கௌரவிக்கும் விதமாக மத்திய அரசு சில மாதங்களுக்கு முன் விழா எடுத்து கௌர வித்தது.

தமிழனாக இருந்தாலும் கமல் எப்போதுமே கேரளத்தின் செல்லப்பிள்ளைதான். ஏகப்பட்ட மலையாளப்படங்களில் நடித்து ஒருகட்டத்தில் கமல் பேசுகிற தமிழ் கூட மலையாள வாடைதான் அடித்தது.


"அந்தரங்கம்' படத்தில் "ஞாயிறு ஒளி மழையில்' என்கிற பாடலை கமலை பாடவைத்தார் எம்.எஸ்.விஸ்வநாதன். அந்தப் பாடல் வெளிவந்து சில வருடங்களுக்குப் பிறகு ஒரு நாள் தனிமையில் இளையராஜா அந்த பாடலை கேட்டுக் கொண்டிருந்தபோதுதான் கமலின் உச்சரிப்பில் ஒரு தவறு இருப்பதை இளையராஜா கண்டுபிடித்து கமலிடம் சொன்னார். அதாவது ‘"திங்கள் குளிக்க வந்தாள்' என்பதற்குப் பதிலாக ‘"திங்ஙள் குளிக்க வந்தாள்' என கமல் பாடியிருந்தார். அந்த அளவுக்கு கமலுக்குள் மலையாளம் ஆட்கொண்டிருந்தது.

இப்படி பன்முகத்தன்மையோடு விளங்கும் கலைஞனை கௌரவிக்க கேரள அரசு முடிவு செய்தது. அதற்காக கடந்த 22-ந் தேதி கேரளாவில் அரசு பாராட்டு விழா நடத்தியது. ஆனால் இந்த விழாவில் மலையாள நட்சத்திரங்களோ, தொழில்நுட்ப கலைஞர்களோ ஒருவர் கூட கலந்து கொள்ளவில்லை.

""ஐம்பதாண்டுகள் கலைப்பணியாற்றிய நடிகர்கள் கேரளாவிலேயே இருக்கும் போது தமிழரான கமலுக்கு எப்படி பாராட்டுவிழா நடத்தலாம்? இந்த விழாவை கேரள நடிகர் சங்கமான "அம்மா' அமைப்பு புறக்கணிக்கும். விருப்பமுள்ளவர்கள் தனிப்பட்ட முறையில் கலந்து கொள்ளலாம்'' என நடிகர்சங்க தலைவர் இன்னோசென்ட் அறிக்கைவிட்டார்.

"கேரளத்தை சொந்தமாக கொண்ட எம்.ஜி.ஆரை "புரட்சித் தலைவர்' என இதயத்தில் வைத்து கொண்டாடியதோடு, ஆட்சியிலும் அவரை அமரவைத்து அழகுபார்த்தவர்கள் தமிழர்கள். அந்த பரந்த மனப்பான்மை கேரள நடிகர் சங்கத்திற்கு ஏன் இல்லை? கமலுக்கு நடக்கும் பாராட்டு விழாவில் எல்லோரும் கலந்து கொள்ள வேண்டும்' என மலையாளத்தின் பிரபல நடிகர் திலகன் பதிலடி கொடுத்தார். இதனால் பரபரப்பும் சர்ச்சையும் ஏற்பட்ட நிலையில்....

"வெறும் நடிகர் என்பதற்காக மட்டுமல்ல... பல்வேறு திறமைகள் கொண்ட தேசத்தை தாண்டியும் புகழ் பெற்ற இந்தியன் என்கிற முறையிலேயே கமலுக்கு கேரள அரசு பாராட்டுவிழா நடத்துகிறது. எனவே இதை சர்ச்சையாக்க வேண்டாம்' என அரசு சார்பில் விளக்கம் கொடுத்தும் கூட கேரள நடிகர்கள் புறக்கணித்து விட்டனர்.

"யாத்ரா மொழி' எனும் மலையாள படத்தில் நடிப்பதற்காக போன நடிகர்திலகம் சிவாஜியை "கேரள நடிகர் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்தால்தான் நடிக்கமுடியும்' என நெருக்கடி கொடுத்தவர்கள் தான். அவர்களுக்கு நம்மைப்போல எப்போதுமே மொழிகளுக்கு அப்பாற்பட்டு திறமையை மதிக்கும் மனோபாவம் இருந்ததில்லை. ஆனால் இன்றைய தேதியில் தமிழ் சினிமாவில் கேரளாவைச் சேர்ந்தவர்கள் எவ்வளவோ பேர் முன்னணி நட்சத்திரங்களாக, தொழில் நுட்ப கலைஞர்களாக இருக்கிறார்கள். தமிழக மக்கள் அவர்களின் திறமைக்கு உரிய மரியாதை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இலங்கைக்கு சென்ற அசின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற விஷயத்தில் கூட நம்ம நடிகர் சங்கம் எப்படி எப்படியெல்லாம் பல்டி அடித்தது என்பதை பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம். ஆனால் தனிப்பட்ட முறையில் கமல் விழாவுக்கு போகலாம் என்று கேரள நடிகர் சங்கம் சொல்லியும் கூட நடிகர் சங்க முடிவுக்கு கட்டுப்பட்டே ஆகவேண்டும் என்கிற உறுதியில் மலையாள நட்சத்திரங்கள் விழாவுக்கு போகவில்லை. இதன்மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்னன்னா... மலையாள நடிகர் சங்கம் போல நமது சங்கமும் ஒற்றுமையோடும், கட்டுப்பாட்டோ டும் இருக்க வேண்டும். ஆளுங்கட்சி, எதிர் கட்சி என்கிற எந்த பாகுபாடுமில்லாமல் செயல்படும் அந்த சங்கத்தைப் போல, அரசு விழாவையே புறக்கணிக்கும் துணிச்சலைப் போல நமது சங்கமும் சுயமாக இயங்கும் அமைப்பாக மாறவேண்டும்'' என விவரித்தார் நமது நடிகர் சங்க சீனியர் பிரமுகர் ஒருவர்.

நடிகர் சங்கத்தலைவர் சரத்திடம் இதுகுறித்து கேட்டோம். ""கமலுக்கு கேரள அரசு பாராட்டு விழா நடத்தியது தெரியும். ஆனால் அதில் ஏற்பட்ட சர்ச்சைகள் குறித்து முழு விபரமும் எனக்கு தெரியாது. தெரியாத விஷயத்தில் எப்படி கருத்து சொல்ல முடியும்?'' எனக் கேட்டார் சரத்.

விழா முடிந்த மறுநாள்.... சென்னையில் நடிகர் ஜெயராம் கொண்டாடிய ஓணம் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தை தெரிவித்து தமிழரான கமல் தனது பெருந்தன்மையை காட்டிவிட்டார்.

கேரள நடிகர்களோ தலைகவிழ்ந்து நிற்க வேண்டும்.

No comments:

Post a Comment