Monday, August 30, 2010

2011ல் தமிழக முதல்வர் விஜகாந்த்தான்...


சென்னை: எந்தக் கூட்டணி எப்படி அமையும் என்ற 'கெஸ்'ஸில் மக்கள் இருக்க, புதிய திருப்பமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் , காங்கிரஸ் தலைவர்களான ஜி.கே.வாசன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் கூடி திடீரென ஆலோசனை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் புதிராக பார்க்கப்படுகிறது.

இன்று ஜி.கே.மூப்பனார் எனப்படும் கருப்பையா மூப்பனாரின் 9வது நினைவு தினமாகும். இதையொட்டி இன்று தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் பல்வேறு கட்சியினரும் வந்து அஞ்சலி செலுத்தினர்.

மூப்பனாரின் நினைவு தினத்தையொட்டி தீப்பந்தம் ஏந்தி அமைதி ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலம் முடிவில் தீப்பந்தம் மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே.வாசனிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஜி.கே.வாசன் வழங்கினார்.

மூப்பனாரின் நினைவு தினத்தையொட்டி 'மூப்பனாரின் வாழ்க்கை வரலாறு' எனும் புத்தகத்தை திரைப்பட பாடலாசிரியர் வாலி வெளியிட்டார்.

துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திருநாவுக்கரசர், தேமுதிக தலைவர் விஜயகாந்த், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இசையமைப்பாளர் தேவா ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

திருப்புமுனை சந்திப்பு

மலர் வளையம் வைக்க வந்த விஜயகாந்துடன், இளங்கோவன், வாசன், திருமாவளவன் ஆகியோர் தனியாக அமர்ந்து சிறிது நேரம் ஆலோசனை நடத்தினர்.

இளங்கோவன் திமுகவுக்கு கடுமையான எதிர்ப்பாளர். வாசன் அப்படி இல்லை. திமுகவை எதிர்க்கவில்லை. அதேசமயம், திமுகவுடன் அவர் மிகவும் நெருக்கமானவராக இருப்பவரும் இல்லை. திருமாவளவன், திமுக கூட்டணியில் இருப்பவர். விஜயகாந்த் கூட்டணி அரசியலுக்கு பச்சைக் கொடி காட்டி விட்டவர். எனவே இவர்களின் இந்த திடீர் சந்திப்பு பல யூகங்களையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

மூப்பனாரை தனது குருக்களில் ஒருவராக கருதுகிறேன் என பலமுறை முன்பு விஜயகாந்த் கூறியுள்ளார். மூப்பனார் உயிருடன் இருந்தபோது அவருடன் நெருக்கமாக இருந்தவர். அந்த வகையில் வாசனும், விஜயகாந்த்துக்கு நெருக்கமானவராகவே கருதப்படுகிறார்.

இளங்கோவனும் நீண்ட காலமாக விஜயகாந்த்துடன் நட்பில் இருப்பவர்தான். சமீபத்தில் விஜயகாந்த்தின் பிறந்த நாளன்று அவரை சந்தித்து, விஜயகாந்த் ரொம்ப நல்ல தலைவர், அவர் வளர்ந்து வரும் முக்கியத் தலைவர் என்று 'ஐஸ்' பெட்டிகளை தூக்கி தலையில் வைத்து விட்டு வந்தவர்.

இப்படிப்பட்டவர்கள் திடீரென சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பு புதிய அரசியல் கூட்டணிக்கான முதல் படியா என்ற கேள்வியும் எழுகிறது.

தனது தலைமையில்தான் கூட்டணி அமைய வேண்டும் என்று விஜயகாந்த் கூறி வருகிறார். எனவே வாசனையும், திருமாவளவனையும் விஜயகாந்த் தலைமையின் கீழ் கொண்டு வர இளங்கோவன் பாடுபடுகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

எனவே இந்த சந்திப்பு எதேச்சையாக நடந்ததா அல்லது திட்டமிட்ட சந்திப்பா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

அரசியலாச்சே, எது வேண்டுமானாலும் நடக்கலாம், என்ன நடக்கிறதென்று பொறுத்திருந்து பார்ப்போம்.

நாங்க வளர்ந்துட்டோம்-பண்ருட்டியார்

இதற்கிடையே, கோவை சவுரிபாளையத்தில் நடந்ததேமுதிக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், தேமுதிக வளர்ந்து விட்டதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

மக்களின் பல்வேறு பிரச்னைகளுக்காக தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம், ஊர்வலம் ஆகியவற்றை நடத்தி வருகிறது. இதில், தங்களை வருத்தி தான் செய்கின்றனர். மக்களுக்கு பிரச்சனைகள் வருவதுபோல் நடப்பதில்லை.

தே.மு.தி.க. வுக்கு என்றுமே வன்முறை மீது நம்பிக்கை இல்லை. கட்சி ஆரம்பிக்கப்பட்டபோது, 70 கட்சியோடு 71 ஆக இருக்கும் என அரசியல் விமர்சனம் செய்தனர். ஆனால், 71ல் 7 மறைந்து ஒன்றுவது கட்சியாக தமிழகத்தில் வளர்ந்துள்ளது தே.மு.தி.க.

அண்ணாவுக்கு அடுத்து எம்.ஜி.ஆர். வந்தார். அடுத்து தலைமுறையாக விஜயகாந்த் உருவெடுத்துள்ளார். தமிழகத்தில் மக்களின் பல்வேறு பிரச்னைகள் கட்டாயம் தீர்க்க வேண்டிய உள்ளன. வறுமையை ஒழிப்பதற்காக அ.தி.மு.க., தி.மு.க., போட்ட திட்டங்களால் 20 சதவீதமாக இருந்த வறுமை 22.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. கவர்ச்சி திட்டங்களை அவர்கள் போட்டனர். வளர்ச்சி திட்டங்களை போடவில்லை என்றார்.

மெகா கூட்டணி அமையும்-மச்சான் சுதீஷ்

இதேபோல சேலம் மாவட்டம் எடப்பாடியில் நடந்த தேமுதிக பொதுக்கூட்டத்தில் தேமுதிக இளைஞர் அணி செயலாளரும், விஜயகாந்த்தின் மச்சானுமான சுதீஷ் பேசுகையில்,

நான் தமிழகத்தின் பல பகுதிகளுக்கு சென்று பல பொது கூட்டங்களில் கலந்துகொண்டு வருகிறேன். ஆனால் இன்று நடக்கும் இந்த பொதுக்கூட்டத்தை பார்க்கும்போது எனக்கு பிரமிப்பாக உள்ளது. காரணம் இங்கு ஒரு மாநாடு நடப்பது போன்ற கூட்டம் அலைமோதுகிறது. இதுவே வரும் 2011ல் தமிழக முதல்வர் விஜகாந்த்தான் என்பதற்கு ஓர் முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

மேலும் தே.மு.தி.க.வின் வளர்ச்சியை பார்த்து. தி.மு.கவும், அ.தி.மு.கவும் அஞ்சி நிற்கின்றன. தமிழகத்தில் சில அரசியல் கட்சிகள் அப்பாவி பொதுமக்களின் ஓட்டுகளை பணம்கொடுத்து வாங்குகின்றன. அவர்கள் ஓட்டுக்காக வழங்கும் பணம் தற்காலிகமாக உயர்ந்துவருவதற்கு காரணம் தே.மு.தி.க வின் வளர்ச்சிதான். அவர்கள் தொகையை உயர்த்த உயர்த்த தே.மு.தி.க வளர்ந்து கொண்டே போகிறது என்று அர்த்தம்.

விஜயகாந்த்துக்கு 5 ராசி

அடுத்ததாக வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று நமது தலைவர் 14வது முதல்வராக வருவார். அவருக்கு எப்போதும் 5ஆம் எண் ராசியானது. அதற்காக அ.தி.மு.க, ,தி.மு.க தவிர்த்த பிற கட்சிகள் தே.மு.தி.க தலைமையில் மெகா கூட்டணி அமைத்து எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று நமது தலைவர் முதல்வராக அமர்வார் அப்போது நடைபெறும் வெற்றிப் பொதுக்கூட்டத்தில் நான் மீன்டும் உங்களை வந்து சந்திபேன் என்றார் சுதீஷ்.

No comments:

Post a Comment