Friday, August 27, 2010

நீதிபதியிடம் நீதி கேட்ட 7 வயது சிறுவன்!


பல நாட்களாக சொல்ல நினைத்து சொல்ல முடியாமல் தவித்த அந்த வார்த்தைகளை ஒருவழியாகச் சொல்லிவிட்டார் செந்தில்ராஜா.

""ரோகிணி, நாம கல்யாணம் பண்ணிக்கலாம்.''

உசிலம்பட்டி சி.எஸ்.ஐ. சென்டரில் டியூட்டராக பணிபுரிந்துகொண்டிருந் தார்கள் ரோகிணியும் செந்தில்ராஜாவும்.

செந்தில்ராஜாவையே வெறித்துப் பார்த்த ரோகிணி, ""உங்களுக்கு இன்னும் கல்யாணமே ஆகலை. எனக்கு கல்யாணமாகி பையன் இருக்கிறான். இப்ப நான் விதவை. அப்புறம்... நீங்க கள்ளர் சாதி இல்லையா, நான் நாடார் கம்யூனிட்டி. இதுவும் ஒரு பிரச் சினை. வேண்டாம் ராஜா... உங்க சாதியில உங்க மாதிரி படிச்ச மாப்பிள்ளைக்கு நிறைய வர தட்சணையும் நகையும் சீரும் செய்வாங்க. எதுக்காக என்னை மாதிரி ஒரு விதவை யை, -அதுவும் குழந்தையுள்ள விதவை யை விரும்பணும்? வேண்டாங்க...'' -மிகத் தெளிவாகச் சொன்னார் ரோகிணி.

""உன் குணம் புடிச்சிருக்கு ரோகிணி. அதைவிட... ஒரு விதவைக்கு வாழ்க்கை கொடுக்குறோம்ங்கிற சந்தோஷம் இருக்கு. ரெண்டுபேருமே பட்ட தாரிகள். ரெண்டு பேரும் வேலை செய் றோம். நமக்கு எதுக்கு சீர் வரிசை, நகைநட்டு? சாதி ஒரு பிரச்சினைதான். வீட்டுக்குத் தெரிஞ்சா அனு மதிக்கமாட்டாங்க. நாம கல்யாணம் பண்ணிக்கிட்டா நம்ம வீடுகள்ல நம்மளைச் சேர்க்கமாட்டாங்க. பரவாயில்லை... நாம கல்யாணம் பண்ணிக்கலாம். சந்தோஷமா இருக்கலாம். உன் மகனுக்கு நானே ஒரு நல்ல தந்தையாக இருப்பேன். இன்னும் ஒண்ணோ, ரெண்டோ குழந்தைகள் பெத்துக்கிறலாம்'' -தெளிவாகவே பதில் சொன்னார் செந்தில் ராஜா.






""அப்ப ஒண்ணு செய்யலாம்... இன்னும் கொஞ்சநாள் காதலர்களாக இருப்போம். நம்ம காதல் வலுப்பட்டால் கல்யாணம் பண்ணிக்க லாம் இல்லைனா ஒதுங்கிக்கலாம்'' என்றார் ரோகிணி.

""நீ மறுத்தாலும் நான் ஏதாவது ஒரு விதவையைத்தான் திருமணம் செய்துகொள்வதாக இருக்கிறேன். இது உறுதி'' என்றார் செந்தில்ராஜா.

சுமார் ஒருமாதம் கழித்து, மதுரையில் ஒரு பெருமாள் கோயிலில் ரோகிணி-செந்தில்ராஜா திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து 7 ஆண்டுகள் குறையாத காதலோடு தான் வாழ்ந்திருக்கிறார்கள். பையன் ராஜரோசனுக்கு இப்போது 7 வயது. கடந்த ஒண்ணரை ஆண்டுகளாக பிரச்சினை.

கணவர் மீது 4 முறை, உசிலம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் பயனில்லா மல் போனதால், மகன் ரோச னோடு மதுரை வந்து மாவட்ட நீதிபதி ரத்தினராஜனிடம் புகாரை நீட்டினார் ரோகிணி.

அந்தத் தந்தையிடம் தன் தாயும், தானும் படும்பாட்டை தேம்பியபடியே சொன்னான் ராஜரோசன்.

""இப்பல்லாம் அப்பா தினம் ராத்திரில குடிச்சுக் குடிச்சிட்டு வர்றார். அம்மாவை போட்டு அடியடினு அடிக்கிறார். சிகரெட் டால சூடு வைக்கிறார். எனக் கும்தான்... சாப்பிடும்போது என் தட்டுல ஒன் பாத்ரூம் போறார். அப்புறம் அதை கீழ கொட்டாம சாப்பிடச் சொல்லி அடிக்கிறார். "ஒரு லட்ச ரூபாய் என் மாமா தர்றேன்றார். இவனை அவருக்கு வித்திடலாம்'ன்றார். இந்த பேப் பர்ல கையெழுத்து போடுடினு அடிக்கிறார். செத்துப்போடி... இல்லேனா உன் சாதிக்காரன் யாரையாச்சும் கூட்டிக்கினு ஓடுடினு திட்டுறார். அப்பா இல்லாதப்ப இந்த அப்பா வேணாம்... வாம்மா நாம ஓடிப்போலாம்னு சொன்னா... அம்மா வரலை. எப்ப பார்த்தாலும் அழுகுறாங்க... பாவம் அம்மா.''

ராஜரோசன் சொன்னதைக் கேட்ட நீதிபதியின் கண்களும் குளமாகிவிட்டதாம். நீதிபதியைச் சந்தித்துவிட்டு, இலவச சட்டக்குழு வக்கீல் முத்துக்குமாருடன் தென்மண்டல ஐ.ஜி.யை பார்ப்பதற்காக புறப்பட்ட ரோகிணியை நாம் வழி மறித்தோம்.

""ஒரு விதவைக்கு வாழ்க்கை கொடுக்கிறேன்னு சொல்லி என்னை திருமணம் செய்துகொண்டார். முதல் 4 வருஷமா அவர் அம்மா எங்களை ஏத்துக்கொள்ளலை. என் மூத்த மகனை அனாதை ஆசிரமத்தில் சேர்த்துவிட்டேன். அதன் பிறகுதான் என் மாமியார் மயிலம்மாள் என் கணவரை நச்சரிக்க ஆரம் பித்தார். "இவளைக் கட்டிக்கினதால என்ன பிரயோஜனம். அடிச்சு விரட்டிவிடு... தலையை முழுகு. உனக்குப் பிறந்த இந்தப் பயலை நம்ம சொந்தக்காரர் விலைக்கு கேக்குறாரு. ஒரு லட்சம் தருவாரு. அவருக்குப் புள்ளையில்லை. புள்ளையா எழுதிக் குடு... இவளையும் விரட்டிப் பத்திட்டு வா... 100 பவுன் போட்டு உனக்கு பொண்ணு குடுக்க நம்ம சாதியில ரெடியாயிருக் காங்க'ன்னு சொல்லிச் சொல்லி மனசை மாத் திடுச்சு. அப்புறம் தான் முழு குடிகார னா மாறினாரு. அடி, உதை, சூட் டையெல்லாம் தாங்கிட்டு கூலி வேலைக்குப் போறேன் நான். ஆனால் இந்த சின்ன மகன்... பாதிச் சாமத்துல பயந்து பயந்து அலறுறான்... அப்பா வெட்ட வர்றார்... கொல்ல வர்றார்னு கத்துறான். 8 வருஷமா இல்லாத சாதிப்பாசம் என் கணவருக்கு இப்ப வந்திடுச்சு. என்னாலயும் இவர்ட்ட அடி, உதை பட முடியலை. 4 தடவை உசிலம்பட்டி போலீஸ்ல புகார் செஞ்சேன். அவங்க சாதிக்காரங்க நாற்பது, ஐம்பது பேரு வந்து போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு சமாதானப்படுத்திடுவாங்க. அதனாலதான் இப்ப நீதிபதி ஐயாகிட்ட வந்தேன்'' -கண்ணீரைத் துடைத்துக்கொண்டார் ரோகிணி.

ரோகிணியின் கணவர் செந்தில்ராஜாவைத் தொடர்பு கொள்வதற்காக... அவரது எண்ணுக்கு போன் செய்தோம். தொடர்புகொள்ள முடியவில்லை. அவரைச் சந்திப்பதற்காக உசிலம்பட்டிக்குச் சென்றோம். வீடு பூட்டிக் கிடந்தது. தாயும் மகனும் தலைமறைவாகிவிட்டனர்.

அக்கம்பக்கத்தினரோ... ""மதுரை போலீசார் வழக்குப் பதிஞ்ச தாக்கல் கிடைத்ததுமே எங்கேயோ கிளம்பிவிட்டார்கள். பாவம்யா அந்தப் பொண்ணு...'' -பரிதாபப்பட்டார்கள்.

No comments:

Post a Comment