
ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குப் போவதென்பது தினமும் போருக்குச் செல்வது போலத்தான்.
இலங்கை ராணுவத்தினரின் துப்பாக்கிச் சூடு ஒரு பக்கமென்றால், அங்குள்ள மீன வர்களின் தாக்குதல் என்பது மறுபக்கம். கச்சத்தீவு ஒப்பந்தப் படி எங்களுக்கு எல்லை தாண்டிச் சென்று மீன்பிடிக்க உரிமையுண்டு என்று தமிழக மீனவர்கள் ஒருபக்கம் சட்டம் பேச, எங்கள் எல்லைக்குள் வந்தால் அடிப்போம், உதைப்போம் நிர்வாணப் படுத்துவோம், ஏன் சிறை கூட பிடிப்போமென்று சமீபகாலமாக நடைமுறைப்படுத்தி வரும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.
இலங்கை மீனவர்களெனும்போது அதில் சிங்கள மீனவர்களோடு, ஈழ மீனவர்களும் அடக்கம் என்பது தான் வருத்தமான செய்தி.
இதற்கு முடிவு கட்டும் விதத்தில், இருநாட்டுப் பிரதிநிதிகளின் பங்களிப்போடு செயல்படும் "நிரபராதி மீனவர்கள் விடுதலைக்கான கூட்டமைப்பு' யோசித்ததன் விளைவு, ஈழ கடற்பரப்பில் இயங்கிக் கொண்டிருக்கும் மீனவர் சங்கப் பிரதிநிதிகளை, தமிழக மீனவர்களோடு மனம் விட்டு கலந்துரையாட ஏற்பாடு செய்தனர். இதற்கான அனுமதியை பெரும்பாடுபட்டு இலங்கை அரசிடம் பெற்றனர். மூன்று சிங்களவர் உட்பட மொத்தம் 22 மீனவ சங்கப் பிரதிநிதிகள் கடந்த 16-ந்தேதி விமானம் மூலம் திருச்சி வந்து சேர்ந்தனர்.
இவர்களுக்கெல்லாம் தலைமையேற்று வந்திருக்க வேண்டிய யாழ்குடா நாட்டு மீனவ சம்மேளனத் தலை வர் தவரத்தினத்தை, அவர் ஈழ ஆதரவாளர் என்பதால் கொழும்பு விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தி விட்டது இலங்கை அரசு.
திருச்சியிலிருந்து இரவு 10 மணிக்கு ராமேஸ்வரம் வந்து சேர்ந்தனர் ஈழ மீனவப் பிரதிநிதிகள். முழுக்க முழுக்க தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் எல்லாம் நடப்பதால், எந்த உதவியையும் தமிழக அரசு செய்யவில்லை.
17-ந்தேதி காலை ராமேஸ்வரத்திலுள்ள பல்வேறு மீனவர் சங்கப் பிரதிநிதிகளும், இலங்கைப் பிரதிநிதிகளும் சந்தித்து அறிமுகப் படுத்திக் கொண்டனர்.
அவர்கள் கலந்துரையாடுவதற்கு முன்பு கிடைத்த நேரத்தில், நாம் அவர்களுடன் அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினோம்.
மீன்வள ஆய்வாளரும், யாழ் பல்கலைக் கழகப் பேராசிரியருமான சிலுவைதான், ""மன்னாரிலிருந்து யாழ்ப்பாணம், பேசாளை, வடமராச்சி பகுதி வரைக்குமுள்ள பகுதிக்குள் தான் தமிழக மீனவர்கள் எல்லை கடந்து வருகிறார்கள். இதுக்குக் காரணம் அங்குதான் "பிரான்பேங்க்' என்றழைக்கப்படும் இறால் உற்பத்தி அதிகமுள்ளது. தமிழக மீனவர்கள் எங்களைப் போல் பாரம்பரிய முறையில் மீன்பிடிப்பதில்லை. உலக அளவில் தடைசெய்யப்பட்ட கொடிய வலைகளைப் பயன் படுத்துகிறார்கள். "ட்ராலர் நெட்' என்று அழைக்கப்படும் இரட்டை மடிகளைப் பயன்படுத்துகிறார்கள். அது மட்டுமில்லாது நாங்கள் விரித்து வைத்திருக்கும் சிறிய வலைகளை, தங்களது நவீன விசைப்படகுகள் மூலம் அறுத்து விடுகிறார்கள். பெரும்பாலும் நாங்கள் தமிழக மீனவர்களை தாக்குவ தில்லை. சிங்கள மீனவர்கள் சிலர் தாக்குகிறார்கள். தமிழக மீனவர்களும் எங்களைப் போல் பாரம்பரிய முறையில் மீன்பிடிக்க வேண்டும். தடை செய்யப்பட்ட வலைகளை தமிழக அதிகாரிகள் எப்படி அனுமதிக் கிறார்கள்?'' என்றார் நம்மிடம்.
""தற்போது இலங்கை நிலவரம் எப்படியுள்ளது'' என்றோம். ஈழ மீனவர் குழுவின் தலைவராக வந்தி ருக்கும் யாழ்ப்பாணம் வடமராச்சியைச் சேர்ந்த சூர்யகுமாரன் நம்மிடம், ""இந்தியாவும் எங்களை கைவிட்ட பிறகு, உயிர் வாழ்வதற்காக இலங்கை அரசுக்கு கட்டுப்பட்டு வாழுகிறோம். சுருக்கமாக சொன்னால் நாங்கள் சிங்களர்களாக மாறி வருகிறோம். நான் இந்த வயதில் தாடி வைத்திருப்பதற்கு என்ன காரணமென்று நினைக்கிறீர்கள். வன்னி முகாமிலிருந்து என் மகனைக் காணோம். அதுபோல என் மகளையும் காணோம். அவர்கள் உயிரோடு இருப்பார்களென்று இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறேன். என்னைப் போல பல பெற்றோர்களின் நிலை இதுதான்!'' என்றார் கண்கள் கலங்க.
நம்மிடம் பேசிய ஈழப்பிரதிநிதிகள் சிலர், ""தயவு செய்து எங்களது போட்டோவையோ, பேச்சையோ புக்ல போட்றாதீர்கள். நாங்கள் திரும்ப கட்டு நாயகாவில் இறங்கி வீட்டுக்கு செல்லோணும். எங்க கூடவே மூன்று சிங்களவர்களும் வந்திருக்காகள். எல்லாம் ஒரு கண்காணிப்புதான். எங்களுக்கு இன்றுவரை இருக்கும் ஒரே கேள்வி இதுதான். யுத்தத்தின் கடைசி நாட்களில் குழந்தைகள், பெண்கள் என்று பார்க்காமல் கொத்துக் குண்டுகளையும், நெருப்புக் குண்டுகளையும் போட்டு கொன்றார்களே. அதை ஏன் உங்களால் தடுக்க முடியவில்லை? திருமா வளவன், கனிமொழி எல்லாம் ஆறுதல் சொல்ல வந்தார்கள். உடன் வந்த சிங்கள அதிகாரிகள் முன் அவர்களால் ஏதாவது பேச முடிந்ததா, கனிமொழியால் அழத்தான் முடிந்தது. இப்போது நாங்கள் இரவு 7.30-க்கு மேல் வெளியே செல்லக்கூடாது. வீட்டிற்கு வந்துவிட வேண்டும்'' என்றவர்களிடம், ""இலங்கை ராணுவத்தில் சீனக்காரர்கள் அதிகம் இருக்கிறார்களாமே?'' என்றோம்.
""எங்கட நாட்டில் 17 நாட்டுக்காரர்கள் -அதுவும் இந்தியா உட்பட அங்கு இருக்கிறார் கள். 2 லட்சம் தமிழர்களை இந்த 17 நாடுகளும் சேர்ந்துதான் கொன்றன'' என்றனர்.
""தமிழ்ப் பெண்களை சிங்களர்கள் கட்டாயத் திருமணம் செய்து கொள்கிறார் களாமே'' என்றதற்கு,
""இது முழுக்க வதந்திதான். கலப்புத் திருமணம் என்பது யுத்த காலத்திலும் நடந்தது. இப்போதும் நடக்கிறது. கட்டாயத் திருமணமெல் லாம் இல்லை. இப்போது வன்னி பகுதியில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளம் விதவைகள் இருக்கிறார்கள். பெற்றோரை இழந்த குழந்தை கள், பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள். புலம்பெயர்ந்த தமிழர்கள் செய்யும் உதவியால் தான் இன்று எங்கள் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
நாங்கள் இன்று தங்கச்சிமடம் பகுதியில் மீனவ மக்களை சந்திக்க சென்றோம். அங்கு பள் ளிப்பிள்ளைகள் எங்களை கைதட்டி வரவேற்றார் கள். நீண்ட காலத்திற்கு பிறகு சந்தோஷமாக இருந்தது. இலங்கை சென்றதும், மீண்டும் துக்கம்தான் எங்களை துரத்தும்'' என்றனர் விரக்தியாக.
No comments:
Post a Comment