Thursday, August 19, 2010

வகுப்பு பேதமில்லாத இந்தியா உருவாகும் - என்.என்.ராவ்

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் வழங்கி யுள்ள நிலையில் அதுபற்றிய விவாதங் கள் நாடு முழுவதும் நடந்து வருகின்றன.

டிசம்பர் மாதம் முதல் பயோ மெட்ரிக் முறையில் சென்சஸ் எடுக்கும் பணி தொடங்க உள்ளது. அந்தப் பணியோடு சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்துக் கொள்ள லாம் என்கிற மத்திய அமைச்சரவை குழுவின் பரிந்துரையை சரத்யாதவ், முலாயம்சிங், லாலு உள்ளிட்ட தலைவர்கள் பாராளுமன்றத்திலும் கடுமையாக எதிர்க்கிறார்கள்.

இந்த நிலையில் தமிழகம் வந்திருந்த தேசிய பிற்படுத்தப் பட்டோர் ஆணையத்தின் தலைவரும் ஓய்வு பெற்ற ஐகோர்ட் தலைமை நீதி பதியுமான எம்.என். ராவ், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்து நக்கீரனுடன் பேசினார்.

பயோ மெட்ரிக் முறையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பின் போதே சாதி வாரி கணக்கெடுப்பையும் நடத்தலாம் என்கிற அமைச்சரவை குழுவின் முடிவை நீங்கள் ஏற்கிறீர்களா?

நீதிபதி எம்.என்.ராவ் : சாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பை பயோ மெட்ரிக் முறையி லான கணக்கெடுப்போடு சேர்ப்பது என்பது நடைமுறை யில் பெரும் சிக்கல்கள் நிறைந் தது. பயோ மெட்ரிக் சென்சஸ் எடுப்பதற்கு நிறைய கால அவகாசம் தேவைப்படும். 2001-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பினை தலைமை ஏற்று நடத்திய சென்சஸ் அமைப்பின் முன்னாள் பதிவாளர் டாக்டர் விஜயா உன்னியும் இதை அழுத்தமாக எதிர்க்கிறார்.

பயோ மெட்ரிக் முறையிலான கணக்கெடுப்பில் எந்த சாதி என்கிற விவரம் மட்டுமே கேட்க முடியும். ஆனால் தனியாக ஒரு கணக்கெடுப்பை நடத்தும்போது... பாலின விகிதம், படிப்பறிவு, ஆயுள் காலம், தொழில், வீடு மற்றும் அதில் உள்ள வசதிகள், சொத்துகள் உள்ளிட்ட புள்ளி விவரங்களை சேகரிக்க முடியும்.

பயோ மெட்ரிக் கணக்கெடுப்பில் சாதிவாரி கணக்கெடுப்பை சேர்க்கக்கூடாது என்பதற்கான மற்றொரு முக்கிய காரணம் அதன் ரகசியம் காப்பதில் உள்ள சிக்கல். பொதுவாக சென்சஸ் புள்ளி விவரங்களுக்கு 1948-ம் ஆண்டு சென்சஸ் கணக்குகள் சட்டம் பாதுகாப்பாக இருக்கிறது. பயோமெட்ரிக் கணக்கெடுப்பு 2003-ம் ஆண்டு குடியுரிமை விதிகளின் கீழ் நடத்தப்படுகிறது. இதில் ரக சியம் காக்கும் தன்மை குறைவாகவே உள்ளது. இவற்றை எல்லாம் குறிப்பிட்டு பயோ மெட்ரிக் கணக்கெடுப்போடு சேர்க்காமல் தனி யாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும்படி மத்திய அமைச்ச ரவைக் குழுவுக்கு நாங்கள் கோரிக்கை வைத்திருக்கிறோம்.

சாதிவாரி கணக்கெடுப்பு இந்தியாவை பிளவுபடுத்திவிடும் அபாயம் இருப்பதாகக் கூறி சிலர் இதை எதிர்க்கிறார்களே?

நீதிபதி எம்.என்.ராவ் : இது முற்றிலும் தவறான வாதம். இந்தியா போன்ற சாதிய கட்டுமானங்கள் நிறைந்த நாட்டில் சாதிவாரியான கணக்கெடுப்பும் அதை அடிப்படையாக கொண்ட இடஒதுக்கீடும் அவசியம். குறிப்பாக இந்து மதத்தில் சாதியின் பெயரால் பல அடிமைத்தனங்கள் புகுத்தப்பட்டி ருக்கின்றன. அப்படிப்பட்ட நிலையில் அடிமைப்படுத்தப்பட்டி ருக்கும், கீழ் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் சாதிகளுக்கு உரிய நீதி கிடைத்திட செய்வதே சிறந்த ஜனநாயகமாக இருக்க முடியும்.

பிறப்பில் ஆரம்பித்து திருமணம், இறப்பு வரை சாதியின் பெயரால்தான் இங்கே அடையாளப் படுத்தப்படுகிறார்கள். இப்போதும் பத்திரிகைகளில் வரும் மேட்ரி மோனியல் பகுதிகளில் பிரதானமாக இருப்பது சாதி தான். அதிலும் உட்பிரிவுகள் குறிப்பிடுகிறார்கள். இப்படி சாதியால் ஏற்கனவே பிரிக்கப்பட்டிருக்கும் இந்த நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு எந்தவிதத் திலும் புதிதாக பிரிவினையை உண்டாக்கிவிடாது.

சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் கிடைக்கும் எண்ணிக்கையை அரசியல் லாபத்துக்காக சாதிக் கட்சிகள் பயன்படுத்தும் வாய்ப்பிருக்கிறதே?

நீதிபதி எம்.என்.ராவ் : இந்த சாதிவாரி கணக்கெடுப்பின் போது கிடைக்கும் புள்ளி விவரங்களை மொத்தமாக வெளியிடப் போவதில்லை. குறிப்பாக குறிப்பிட்ட சாதியின் எண்ணிக்கை இவ்வளவு என்றெல்லாம் விவரங்கள் அளிக்கப்பட மாட்டாது. மொத்தமாக ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. எண்ணிக்கை எவ்வளவு என்று தான் கொடுக்கப் படும்.

இப்போதும் அரசியல் கட்சிகள் ஒரு தொகுதியின் பெரும்பான்மை சாதியைச் சேர்ந்தவரைத்தானே வேட்பாளர் ஆக்குகிறார்கள். எனவே இந்த கணக் கெடுப்பை சாதிக்கட்சிகள் தங்களுக்கான ஆயுதமாக பயன்படுத்துவார்கள் என்றெல்லாம் கவலைப்பட்டு எதிர்க்க தேவையில்லை.

சாதி வாரி கணக்கெடுப்பு அவசியம் என்பதற்கான உங்களின் வாதம் என்ன?

நீதிபதி எம்.என்.ராவ் : இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் முன்னோடியாக திகழும் மாநிலங்களில் ஒன்றாக இருக்கிறது தமிழகம். இடஒதுக்கீடு குறித்த விழிப்புணர்வு மற்ற மாநில மக்களை விட தமிழக மக்களுக்கு அதிகமாகவே இருக்கும். இடஒதுக்கீட்டினை அமல்படுத்த இந்த சாதிவாரி கணக்கெடுப்பு என்பது அவசியம். 1931-ம் ஆண்டுக்கு பிறகு சாதிவாரியான கணக்கெடுப்பே நடத்தப்படவில்லை என்பதால் இடைப்பட்ட காலத்தில் எந்த சாதி முன்னேறியிருக்கிறது, எந்த சாதி பின் தங்கிய நிலைக்கு போயிருக்கிறது என்பதையே கணக்கிட முடியாதே? முன்னேறிய சாதியை இட ஒதுக்கீட்டு சலுகையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றால் அதற்கும் சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்தானே? சமூகத்தில் பின் தங்கியவர்களைப் பற்றிய புள்ளி விவரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுத்து அவர்களை உயர்த்துவதன் மூலம் ஒரு கட்டத்தில் அனைவரும் முன்னேறியிருப்பார்கள். அப்போதுதான் வகுப்பு பேதமில்லாத இந்தியா உருவாகும். அதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு மிக அவசியம்.

மண்டல் கமிஷன் வழக்கிலும், சமீபத்தில் உயர்கல்வி இடஒதுக்கீடு வழங்குவது தொடர் பான அஷோக் குமார் தாக்கூர் வழக்கிலும் சுப்ரீம் கோர்ட் சாதிவாரியான புள்ளிவிவரங்களே மத்திய அரசிடம் இல்லை என்பதை சுட்டிக்காட்டியிருக்கின்றன. மத்திய, மாநில அரசுகள் நலத்திட்டங்களை அமல்படுத்தவும் ஒவ்வொரு சாதியின் நிலைமை என்ன என்பதை அறிந்து கொள்ள வேண் டியது அவசியம்.

No comments:

Post a Comment