Monday, August 23, 2010

இந்தியாவை தோற்கடித்த இலங்கை, பாக். நடுவர்-கேவலமாக விமர்சித்த இலங்கை ரசிகர்கள்


கொழும்பு: இலங்கையில் இந்திய அணி தொடர்ந்து சரிவுகளையும், சர்ச்சைகளையும், அவமானங்களையும் சந்தித்து வருகிறது. நேற்று தம்புல்லாவில் நடந்த முக்கியப் போட்டியில், இலங்கை மற்றும் பாகிஸ்தான் நடுவர்களின் தவறான முடிவுகளால் இந்தியா தோல்வியுற்றது. அதேபோல சிங்கள ரசிகர்களும் இந்திய வீரர்களே கேவலமாக கேலி செய்து அவமானப்படுத்தினர்.

மோசமான ஆட்டம்:

இலங்கைக்குப் போயுள்ள இந்திய கிரிக்கெட் அணி முத்தரப்பு தொடரில் விளையாடி வருகிறது. இதன் இறுதிப் போட்டியில் நுழையும் அணி எது என்பதை நேற்றைய போட்டி முடிவு செய்தது.

இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்குள் முதல் ஆளாய் நுழையும் என்பதால் இந்தியா வெற்றி முனைப்புடன் இறங்கியது. ஆனால் தவறான நடுவர்களின் தீர்ப்பும், இந்திய அணியினரின் மோசமான ஆட்டமும் இந்தியாவை தோல்வியில் தள்ளி விட்டு விட்டது.

முதலில் பேட் செய்த இந்தியா 33.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்து வெறும் 103 ரன்களை மட்டுமே எடுத்தது.

முன்னணி வீரர்களான ஷேவாக் 12, ரோஹித் சர்மா 11, திணேஷ் கார்த்திக் 9, ரெய்னா 8 ஆகியோர் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். யுவராஜ் சிங் மட்டும் சற்று போராடி 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் டோணியின் பங்கு 10. ஜடேஜாவின் பங்கு முட்டை. இதனால் இந்தியா மோசமான ரன்களுடன் இன்னிங்ஸை முடித்தது.

இலங்கைத் தரப்பில் திஷரா பெரைரா 5 விக்கெட்களை வீழ்த்தினார். மலிங்கா, குலசேகராவுக்கு தலா 2 விக்கெட்கள் கிடைத்தன. மாத்யூஸ் ஒரு விக்கெட் எடுத்தார்.

பின்னர் ஆடிய இலங்கை அணி 15.1 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டும் இழந்து 104 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

இந்தத் தோல்வி காரணமாக, அடுத்து நடைபெறவுள்ள நியூசிலாந்துடனான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நியூசிலாந்துடன் நடந்த முதல் போட்டியில் இந்தியா 200 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது நினைவிருக்கலாம்.

நடுவர்களின் தவறான தீர்ப்புகள்:

நேற்றைய போட்டியில் நடுவர்கள் வழங்கிய நான்கு தீர்ப்புகள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. இதில் மூன்று தீர்ப்புகளை உள்ளூர் நடுவரான குமார தர்மசேனா அளித்தார். இன்னொரு தீர்ப்பை பாகிஸ்தான் நடுவர் ஆசாத் ராஃப் வழங்கினார்.

யுவராஜ் சிங் பெரிய ஸ்கோரை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தபோது அவருக்கு எல்பிடபிள்யூ கொடுத்து விட்டார் ஆசாத். ஆனால் அது எல்பிடபிள்யூ இல்லை என்பது வீடியோ பதிவில் தெளிவாகத் தெரிந்தது.

ஷேவாக் 12 ரன்களில் இருந்தபோது குலசேகரா பந்தை சந்தித்தபோது அதையும் எல்பிடபிள்யூ என்று கூறி அவுட் ஆக்கினார் தர்மசேனா.

இதேபோல திணேஷ் கார்த்திக், குலசேகரா பந்தை அடிக்க முயன்றார். பந்து பேட்டில் படவே இல்லை. ஆனால் அதை சங்கக்காரா கேட்ச் செய்தார். உடனே அவுட் என்று கையைத் தூக்கி விட்டார் நடுவர் தர்மசேனா.

இதே முறையில்தான் ரெய்னாவையும் அவுட் ஆக்கினார் தர்மசேனா. இந்த நான்கு அவுட்கள்தான் இந்தியாவின் பேட்டிங் வரிசையை தடுமாற்றத்தில் ஆழ்த்தி விட்டது.

இரண்டு நடுவர்களுமே தேவையில்லாமல் இந்தியாவுக்கு தோல்வியைக் கொடுத்து விட்டதாக இந்திய ரசிகர்கள் குமுறல் வெளியிட்டுள்ளனர்.

தொடரும் இலங்கையின் முரட்டுத்தனம்:

நேற்றைய போட்டியில் இலங்கை வீரர்கள், இந்திய வீரர்களுடன் மோதுவது போலவே முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர். இவர்கள் இப்படி நடப்பது இது முதல் முறையல்ல.

முதல் போட்டியில் ஷேவாக் சதம் அடித்து விடக் கூடாது என்ற சின்னப்புத்தி காரணமாக, பந்து வீச்சாளர் சூரஜ் ரந்தீவ் வேண்டும் என்றே நோபால் போட்டார். நேற்றைய போட்டியில் இந்திய வீரர்களுடன் மோதல் போக்கில் ஈடுபட்டனர் இலங்கை வீரர்கள். நியூசிலாந்து போட்டியிலும் கூட அவர்கள் அதுபோலவே நடந்து கொண்டது நினைவிருக்கலாம்.

அநாகரீகமான சிங்கள ரசிகர்கள்:

வீரர்கள் தான் இப்படி என்றால் ரசிகர்களும் மகா கேவலமாக நடந்து கொண்டனர். இந்திய வீரர்களை கேவலமாகவும், அநாகரீகமாகவும் விமர்சிக்கும் வகையிலான அட்டைகளை தூக்கிக் காண்பித்தபடி இருந்தனர்.

இதற்கு முன்பு டெஸ்ட் போட்டியின்போது யுவராஜ் சிங்கை கேலி செய்து 3 சிங்கள ரசிகர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.

மொத்தத்தில் இலங்கை வீரர்களும் சரி, ரசிகர்களும் சரி, இந்திய வீரர்களை திட்டமிட்டு அவமானப்படுத்தும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக ரசிகர்கள் குமுறுகின்றனர்.

பேச வராத டோணி-புறக்கணித்த மீடியா:

இதற்கிடையே போட்டி முடிவடைந்ததும் டோணியின் கருத்தை அறிவதற்காக இந்தியாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் காத்திருந்தனர். ஆனால் டோணி வரவில்லை. என்ன செய்கிறார் என்று பார்த்தபோது சக வீரர்களுடன் கால்பந்து விளையாடப் போய் விட்டார் டோணி.

இதையடுத்து பத்திரிக்கையாளர்கள் காத்திருப்பதாக அவருக்கு தகவல் அனுப்பப்பட்டது. அப்படியும் அவர் வரவில்லை. மேலும் சில முறை தகவல் அனுப்பியும் டோணி வரவில்லை. இதனால் கடுப்பான பிரிண்ட் மீடியாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் அனைவரும் டோணி பிரஸ்மீட்டைப் புறக்கணித்து விட்டு வெளியேறினர்.

No comments:

Post a Comment