Saturday, August 21, 2010

யுத்தம் 81 - நக்கீரன் கோபால்


வீரப்பன் விவகாரத்தை வைத்து நக்கீரன் குடும்பத்தினர் அனைவரையும், தனது ஏவல்துறையாக மாற்றியிருந்த காவல்துறையினரின் பூட்ஸ்காலுக்குக் கீழே போட்டு நசுக்க வேண்டும் என்ற பழிவெறியுடன் ஜெயலலிதா செயல்பட்டுக்கொண்டிருந்தார். அதே நேரத்தில், ஜெயலலிதாவின் தலைமையிலான தமிழக அரசுக்கும் எஸ்.எம்.கிருஷ்ணா தலைமையிலான கர்நாடக அரசுக்கும் சவால் விடும் வகையில் வீரப்பனின் அந்த அதிரடி கடத்தல் சம்பவம் நடந்தது.

கர்நாடகத்தில் ஜனதா கட்சியின் மூத்த தலைவ ரான ராமகிருஷ்ண ஹெக்டே முதல்வராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் மந்திரியாக இருந்தவர் நாகப்பா. ஜனதா கட்சி பிறகு ஜனதாதளமாக மாறியபிறகு, அதில் பணியாற்றி வந்தார். கர்நாடக மக்களிடம் நல்ல பெயர் எடுத்தவர். பிரச்சினையில்லாத அமைச்சராக இருந்தவர். அவரைத்தான் வீரப்பனும் அவனது ஆட்களும் கடத்தி, இரு மாநில அரசுகளுக்கும் சவால் விட்டிருந்தனர்.

இதற்குமுன் வீரப்பன் பல முறை ஆட்களை கடத்தியிருக்கிறான். 91-96 ஜெ ஆட்சிக்காலத்தில் நடந்த கடத்தல்களின்போது, அரசாங்கமே பணமூட்டையுடன் ஆட்களை அனுப்பி கடத்தப்பட்டவர்களை மீட்டு வந்ததை அரசுதரப்பே ஒப்புக்கொண்டிருக்கிறது. 97-ல் கர்நாடக வனத்துறையினர் 9 பேரை வீரப்பன் கடத்தியபோதும், 2000த்தில் ராஜ்குமார் உள்ளிட்டவர் களைக் கடத்தியபோதும் இருமாநில அரசுகளின் அதிகாரப்பூர்வத் தூதராக நக்கீரன், உயிரைப் பணயம் வைத்து காட்டுக்குள் சென்று, மீட்பு முயற்சியில் ஈடுபட்டு, கடத்தப்பட்டவர்களில் ஒருவர் உயிர்கூட பலியாகாமல் பத்திரமாக மீட்டு வந்தது. அதனால், நாகப்பா கடத்தலின்போது, நக்கீரன் பக்கம் தமிழக- கர்நாடக மக்களின் பார்வை திரும்பியிருந்தது.

நாம் இந்த மீட்பு முயற்சியில் ஈடுபடமுடியாது என்பதைத் தெளிவாகத் தெரிவித்துவிட்டோம். அதற்கு முக்கிய காரணம் உண்டு. நாம் தூதுப்பயணம் மேற் கொண்டபோது தமிழக முதல்வராக இருந்த கலைஞர் நமக்கு அரசுத்தூதர் என்ற அந்தஸ்தைக் கொடுத்தார். கர்நாடகமும் அதே அந்தஸ்தைக் கொடுத்தது. ஆனால், ஜெயலலிதா ஆட்சியின் அணுகுமுறை வேறுமாதிரியானது.

நாகப்பா கடத்தல் சம்பவம் நடந்தபோது தினமணியில் நண்பர் குணசேகரன் எழுதிய ஒரு கட்டுரையில் அதைத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். 108நாள்கள் நீடித்த கன்னட நடிகர் ராஜ்குமாரின் கடத்தல், உச்சநீதிமன் றம் வரை சென்று ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையே ஈர்த்தது. தூதர்களை அனுப்பிப் பேசுவதற்கு கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தார் ஜெயலலிதா. அரசுத் தூதராகச் சென்ற நக்கீரன் கோபாலைப் பின்தொடர்ந்து அதிரடிப்படை யை அனுப்பி வீரப்பனைச் சுட்டுக் கொன்றிருக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார் என்றும் அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. பத்திரிகை நாகரிகம் கருதி, ஜெ.வின் எதிர்ப்பை மென்மையான வார்த்தைகளால் நண்பர் குணசேகரன் குறிப்பிட்டிருந்தாலும், அப்போது நக்கீரனை ஜெ. மிக மோசமான வார்த்தைகளால் வர்ணித்திருந்தார். அப்படிப்பட்டவரின் ஆட்சி யில் நாம் தூதுவராகப் போவதென்பது, கடத் தப்பட்டவர்களின் உயிரை மீட்கும் காரியமல்ல. நமது உயிரை நாமே மாய்த்துக்கொள்ளும் செயலாகவும் முடியலாம்.

ஜெ எப்போது என்ன பழியைப் போடுவார் என்பதை யாராலும் யூகிக்க முடியாது. தனது அரசியல் எதிரிகள், தனது ஆட்சியைப் பற்றிய உண்மையை எழுதும் பத்திரிகைகள் ஆகிய வற்றின் மீது அபாண்டமான பழியை சுமத்துவதில் ஜெ.வை மிஞ்ச இன்னொ ருவர் இந்தியாவில் இல்லை. அதற் கொரு உதாரணம், கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பா கடத்தப்பட்ட சம யத்தில், கோவாவில் கலைஞர் தொல்காப் பிய பூங்கா நூலை எழுதிக் கொண்டிருந் தார். தொடர்பில்லாத இரண்டு விஷயங் களுக்கிடையே முடிச்சுப் போட்டு, ஜெ வெளியிட்ட பகீர் அறிக்கையைப் படித்தாலே அவரது உள்மனம் எத்தனை ஆபத்தானது என்பது புரியும்.

"கடந்த சில நாட்களுக்கு முன்பு தி.மு.க. தலைவர் கருணாநிதி திடீரென ஓய்வு எடுக் கச் செல்கிறேன் என்ற போர்வையில் சென் னையிலிருந்து புறப்பட்டு சாலை வழியாக கர்நாடக மாநில தலைநகரான பெங்களூருக் குச் சென்றார். அப்போது தமிழக முன்னாள் அமைச்சர் துரைமுருகனும் உடன் சென்று இருந்தார். பின்னர் 10-8-2002 அன்று அவர்கள் சென்னை திரும்பியுள்ளனர்.

இங்கே உன்னிப்பாக கவனிக்கவேண்டிய விஷயம் என்னவெனில், முன்னாள் அமைச்சர் துரைமுருகனும் சந்தன கடத்தல் வீரப்பனும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுதான். தி.மு.க. தலைவர் கருணாநிதியும் முன்னாள் அமைச்சர் துரைமுருகனும் பெங்களூர் பயணம் மேற்கொண்ட பின்னர்தான் 25-08-2002 அன்று கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பா கடத்தப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

இந்நிலையில், 30-08-2002 அன்று தி.மு.க தலைவர் கருணாநிதி 5 நாள் சுற்றுப்பயணமாக கோவா புறப்பட்டுச் சென்றுள்ளார். இப்போதும் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தி.மு.க. தலைவர் கருணாநிதி யுடன் சென்றிருப்பதாக அறிகிறேன். முதலில் பெங்களூர் செல்லத் திட்டமிட்டிருந்தார்கள். பின்னர் பயண ஏற்பாடுகளை ரத்து செய்துவிட்டு கோவா சென்றுள்ளனர். நேரடியாக பெங்களூர் பயணம் மேற்கொண்டால் சந்தேகம் வரும் என்பதற்காக கோவா செல்வது போல காண்பித்து பெங்களூர் செல்லவிருக்கிறார்கள் என்று கருதவேண்டியுள்ளது.

பெங்களூர் சென்று சந்தன கடத்தல் வீரப்பனை சந்திக்க முயற்சிக்கிறார்களா? அல்லது வீரப்பனின் தூதுவர் யாரையாவது சந்திக்கிறார்களா என்பது குறித்தும், அவர்களுக்கிடையே உள்ள மர்மமான உறவுகள் குறித்தும் உண்மை நிலையைக் கண்டறிய நான் தமிழக காவல்துறையினரைப் பணித்துள்ளேன். உண்மை விரைவில் வெளியாகும்.'

-இதுதான் ஜெ.வின் அறிக்கை. பற்றி எரிகின்ற குடிசையில், பீடியைப் பற்றவைத்து புகைவிடும் பொறுப்பற்றவனின் செயல்போல இருந்தது ஒரு மாநில முதலமைச்சரின் அறிக்கை. வீரப்பனும் துரைமுருகனும் ஒரே சாதி என்பதாலேயே, துரை முருகனை அழைத்துக்கொண்டு பெங்களூர் சென்ற கலைஞர், வீரப்பனை சந்தித்து நாகப்பாவைக் கடத்தச்சொன்னார் என்ற ஜெயலலிதா அறிக்கையின் ஒரே நோக்கம், எப்படியாவது கலைஞரின் மீது பழியைத் தூக்கிப்போட்டு இருமாநிலங்களிலும் பதற்றத்தை உண்டாக்கிவிடவேண்டும் என்பதுதான்.

ஜெ.வின் அண்டப்புளுகு அறிக்கைக்கு தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் பதிலறிக்கை கொடுத்தார். திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு திறந்த புத்தகம். சூழ்ச்சிகளுக்கோ, சூதுகளுக்கோ, திரைமறைவு வேலைகள் செய்வதற்கோ தி.மு.க.விற்குத் தெரியாது. ஜெயலலிதா தன்னிடமுள்ள காவல்துறையினரை வைத்து எந்த விசாரணை வேண்டுமானாலும் செய்யட்டும்.

இரண்டு நாட்களுக்கு முன் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தி வெளிநாட்டைச் சேர்ந்தவர், அவர் இந்தியாவினுடைய பிரதமராவதை ஏற்க முடியாது, காங்கிரஸ் கட்சிக்கு இது கேவலமானது என்றெல்லாம் பத்திரிகை நிருபர்கள் மத்தியிலே டெல்லியில் பேட்டி அளித்ததையொட்டி, இந்தியா முழுவதும் காங்கிரஸ்காரர்கள் ஜெயலலிதாவின் கொடும்பாவியை எரித்து தங்களுடைய எதிர்ப்புகளைத் தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள். இதைக் கண்டு அதிர்ச்சி யடைந்த ஜெயலலிதா மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக இப்படிப்பட்ட அபாண்டமான ஒரு பழி யைக் கலைஞர் மீது திட்டமிட்டு கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஜெயலலிதா தன் போலீஸை வைத்து விசாரணை நடத்தினால் அவரது முகத்திரைதான் கிழிபடும்' என்று பேராசிரியர் தெரிவித்திருந்தார்.

சிக்கிக் கொண்டிருக்கும் கர்நாடக முன்னாள் மந்திரி யைக் காப்பாற்றுவது பற்றி எந்தக் கவலையும்படாமல், வீரப்பன் பிடியில் ஓர் உயிர் மாட்டிக்கொண்டிருக்கும் நிலையில், அதை வைத்து இங்கே என்னென்ன விதத்தில் அரசியல் செய்யலாம் என்பதுதான் ஜெ.வின் திட்டமாக இருந்தது. வீரப்பனின் கடத்தல் சம்பவத்திற்கு கலைஞர்தான் காரணம் என்று கூசாமல் பழிபோடும் ஜெயலலிதா, நக்கீரன் தூதுப் பயணம் மேற்கொண்டால் என்ன செய்வார்? ராஜ்குமார் மீட்பு முயற்சி நடந்துகொண்டிருந்தபோது, நக்கீரன் கோபாலைப் பின்தொடர்ந்து அதிரடிப்படையை அனுப்பி வீரப்பனைச் சுட்டுக்கொன்றிருக்கவேண்டும் என்றவர் இப்போது நம்மையும் சுட்டுவிட்டு, வீரப்பன் சுட்டுவிட்டான் என்று அதிரடிப்படை மூலம் சொல்ல வைக்க எவ்வளவு நேரமாகும்?

நம்பகத்தன்மையற்ற அரசை நம்பி நாம் களமிறங்கத் தயாராக இல்லை. நாகப்பாவைக் காப்பாற்றுவதைவிடவும் வீரப்பனைத் தேடும் வேலையில்தான் தமிழக அதிரடிப் படையினர் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். வீரப்ப னோ, தன் கோரிக்கை களை நிறைவேற்றவேண் டும் என்பதில் குறியாக இருந்தான். அதிரடிப் படையால் பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், காவிரியில் தமிழகத்துக்கு உடனடி யாக தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்பதுதான் இந்தக் கடத்தல் சம்பவத் தில் அவன் வைத்த முக் கிய கோரிக்கைகள். தான் சொல்லும் நபர்களைத் தான் காட்டுக்கு அனுப்பி வைக்குமாறும் அவனிட மிருந்து கர்நாடக அரசுக் குத் தகவல் வந்திருந்தது. தமிழக அரசும் ஏற்றுக்கொள்ளும் நபரைத்தான் தூதுவராக அனுப்ப முடியும் என்பதால் கர்நாடக அரசு ரொம்பவே யோசித்தது. தூதுவரை அனுப்பு வதில் ஏற்பட்ட காலதாமதத்தால் கர்நாடகத் தின் பல பகுதிகளிலும் கலவரம் வெடித்தது. அந்தக் கலவரச்சூழலுக்கு நடுவில்தான் நமது பெங்களூர் நிருபர் தம்பி ஜெ.பி.யும், தம்பி ஆத்தூர் சேகரும் சிவா வழக்கு தொடர்பாக ரிஸ்க்கான பயணத்தை மேற்கொண்டு, அவரை விடுவிப்பதில் துணை நின்றனர்.

இந்த நிலையில், வீரப்பனிடமிருந்து அடுத்தடுத்த கேசட்டுகள் கர்நாடக அரசுக்கு வந்தது. அதில், அதிரடிப்படையின் தேடுதல் வேட்டையை உடனடியாக நிறுத்தவேண் டும். தூதரை அனுப்ப வேண்டும். இல்லை யென்றால் நாகப்பாவின் தலை பார்சலில் வரும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தான். இந்த கேசட் விவகாரம் கர்நாடகாவில் பெரும் கொந்தளிப்பை உண்டாக்கியது. கடத்தப்பட்ட நாகப்பா, ஜனதாதளக் கட்சிக் காரர். முதல்வர் கிருஷ்ணா, காங்கிரஸ்காரர். கட்சி வேறுபாட்டால்தான் தூதரை அனுப் பாமல் காலதாமதம் செய்கிறார். தமிழ்நாட் டில் ஆட்சி செய்யும் ஜெயலலிதாவோ நாகப்பாவின் உயிரைப் பற்றி கவலையே படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. ஜனதாதளக் கட்சியைச் சேர்ந்தவர்களும், நாகப்பாவின் குடும்பத்தினரும் சொந்த முயற்சியில் காட்டுக்குள் நுழைந்து, வீரப்பனை சந்திக்க நினைத்தனர்.

உண்மையில், ஜெ அரசாங்கத்தின் பிடி வாதத்தாலும், ஒத்துழைப்பின்மையாலும் தான் கர்நாடக அரசால் தூதரை அனுப்ப முடியவில்லை. அதிரடிப்படையை அனுப்பி வீரப்பனைப் பிடிக்கும் நடவடிக்கைகளே தீவிரமாயின. அதிரடிப்படையின் முயற்சிகள் மாதக் கணக்கில் தொடர்ந்துகொண்டிருந்த நிலையில், 2002 டிசம்பர் 8-ந் தேதி மாலை மலரில் ஒரு தலைப்புச் செய்தி வெளியானது.

தமிழக அதிரடிப்படை தாக்குதல்! நாகப்பா விடுதலை! வீரப்பன் தப்பி ஓட்டம்!

நாகப்பா விடுவிக்கப்பட்டாரா? சுட்டுக் கொல்லப்பட்டாரா?

-யுத்தம் தொடரும்

No comments:

Post a Comment