Saturday, August 21, 2010

நாட்டுக்கோழியில் கலப்படம்!


வெள்ளாட்டுக் கறியை மட்டுமே சாப்பிட் டுப் பழகியவர்கள், செம்மறி உட்பட வேறு எந்த ஆட்டுக்கறிகளையும் தொட்டுக்கூடப் பார்க்க மாட்டார்கள்.

அதைப்போலவே நாட்டுக் கோழிக்கறியை மட்டுமே சாப்பிட்டுப் பழகியவர்கள் பிராய்லர் உட்பட வேறு எந்த கோழிக்கறியையும் முகர்ந்து கூடப் பார்க்கமாட்டார்கள்.

""நாட்டுக்கோழிக் கறிங்கிறது மருந்து மாதிரி... மாதிரியென்ன மருந்தேதான். நாட்டுக் கோழிக் குஞ்சை நச்சுப் பிட்டுப் போட்டு ரசம் வச்சு, புள் ளைப் பெத்தவளுக்கு குடுக்கிறமே எதுக்காக? உடம்பு வலியை உடனே இல்லாமப் பண்ணிப்பிடும். நாட்டுக் கோழிக் கழுத்தை அறுக்கப்பிடாது. அறுத்தா ரத்தம் போயிடும். தலையைத் திருகணும். உசுரு போனதும் மசுரைப் பறிச்சுப்புட்டு அரைச்ச மஞ்சளைப் பூசிப் புட்டு நெருப்புல வாட்டோணும். அப்பவே வாசனை தூக்கும். உடம்புக்கும் நல்லது. கொழம்பு கொதிக்கும் போதே ஏழு ஊருக்கு வாசனை போகும். இப்ப நாட்டுக்கோழினு கிலோ 200 ரூபாய்க்கி என்கிட்ட விக்கிறியே... பார்க்கிறதுக்கு நாட்டுக்கோழி மாதிரியேதான் இருக்கு. போன ஞாயித்துக்கெழமை தந்தியே... தீயில பொசுக்கும்போதும் வாசனை வரலை. கொழம்பும் ருசிக்கலை. கறியும் சவசவன்னு சக்கை மாதிரி இருந்துச்சு. நெஜத்தைச் சொல் லுப்பா... இது நாட்டுக்கோழியா டூப்ளிகேட்டா?'' திண்டுக்கல் மார்க்கெட் கோழிக்கடையில் பரிதாப மாகக் கேட்டார் ஒரு பெரியம்மா.

""இது நெஜமாகவே நாட்டுக்கறிதான்... நம்பி வாங்கிட்டுப் போங்க'' என்று உயிரோடு எடை போட்டுக் கொடுத்து அனுப்பினார் கடைக்காரர்.

உண்மையில் இப்போது கோழிக்கடையில் விற்பனையாகிக் கொண்டிருப்பது நாட்டுக்கோழி தானா?

நமக்கு வேண்டிய கோழிக்கடைக்காரர் திண்டுக்கல் ரவியிடம் கேட்டோம்.

""ஒரிஜினல் நாட்டுக்கோழி, விற்றால் ஒரு கிலோவுக்கு 20 ரூபாய் லாபம் கிடைக்கும். இந்த டூப்ளிகேட் நாட்டுக்கோழியில் கிலோவுக்கு 80 ரூபாய் லாபம் கிடைக்கிறது. பிராய்லர் உற்பத்தியாகும் கோழிப்பண்ணைகளில்தான் இந்த கலப்பின நாட்டுக்கோழியும் உற்பத்தியாகிறது... என்ன செய்ய? இதிலயும் கலப்படம்தான்'' என்றார் அவர்.

நாமக்கல், பல்லடம், கரூர், திருப்பூர், கோவையில் உள்ள கோழிப்பண்ணைகளில் உற்பத்தி செய்வது போலவே திண்டுக்கல் கோழிப்பண்ணையிலும் கலப்பின நாட்டுக்கோழி உற்பத்தி செய்கிறார்கள்.

""இதில் ரகசியமெல்லாம் ஒண்ணுமில்லைங்க. பிராய்லர் கோழியை விட மட்டமானது கிரிராஜா கோழி. கிரிராஜா கோழியோடு நாட்டுச் சேவலை பழகவிட்டு, கிரிராஜா கோழி போடுற கிராஸ் முட்டைகளை மிஷின் மூலம் பொறிக்க வச்சு, அந்தக் குஞ்சுகளை தலா 25 ரூபாய்க்கு தர்றாங்க. அந்தக் குஞ்சுவை பிராய்லர் குஞ்சுகளுக்கு போடுற தீவன மும், ஊசி, மாத்திரை, வேதிப்பொருளும் போட்டு பெருக்க வச்சு கடைகளுக்கு சப்ளை செய்றோம். பார்க்கிறதுக்கு நாட்டுக்கோழி மாதிரி இருக்கும்'' என்கிறார்கள் கோழிப்பண்ணைக்காரர்கள்.

""பிராய்லர் கோழியைப் போலவே மலட்டுத் தன்மையை உருவாக்குவதுதான் இந்த கிரிராஜா கலப்பினக் கோழிகளும். பெண்களையும் ஆண் களையும் மலடுகளாக மாற்றுவதோடு, 10 வயது குழந்தைகள் கூட வயதுக்கு வருகிறார்களே அதற்கும் இந்த வேதிப்பொருள், ஊசி, மாத்திரை மூலம் வளரும் கோழிகள்தான் காரணம்'' என்கிறார் கால்நடை மருத்துவப் பல்கலைக் கழக இணை பேராசிரியர் டாக்டர் பீர்முகம்மது.

கோழிக்கறிப் பிரியர்களே ஜாக்கிரதை!

No comments:

Post a Comment