Friday, August 27, 2010

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!


""அதனாலதாம்ப்பா.. மழைக்குத் தாங்காமல் பார்லி மெண்ட் கட்டிடமே ஒழுகுது'' என்றார் ஒரு வடநாட்டு எம்.பி. ஆச்சரியக் கிண்டலுடன். அண்மையில் டெல்லியில் மழை பெய்தபோது நாடாளுமன்றக் கூட்டம் நடந்துகொண்டிருந்தது. புகழ்பெற்ற நாடாளுமன்றக் கட்டிடத்தில் மழைநீர் கசிந்தபோது, வடநாட்டைச் சேர்ந்த எம்.பிக்கள் இதற்கு என்ன காரணம் என்று வேடிக்கையாக விவாதித்துக்கொண்டிருந்தபோது, தமிழ்நாட்டு எம்.பி.க்களின் குரல்தான் காரணம் என்ற பேச்சு வந்தது. அவர்கள் வேடிக்கையாகப் பேசினாலும், அதில் உன்னிப்பாக கவனிக்க வேண்டிய அம்சம் ஒன்றிருக்கிறது.

மருத்துவபடிப்பில் (எம்.பி.பி.எஸ்.) சேர்வதற்கு இந்தியா முழுவதும் பொதுநுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என்ற அகில இந்திய மருத்துவக் கவுன்சிலின் முடிவை மத்திய அரசு ஏற்றுக்கொள்வதாக வெளியான அறிவிப்புதான் இந்த விவாதத்தின் பின்னணி. நுழைவுத் தேர்வு என்பது கிராமப்புற ஏழை- நடுத்தர-ஒடுக்கப்பட்ட சமுதாயங்களின் மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்குப் பெருந்தடையாக இருப்பதால் அதனைத் தமிழகம் ரத்து செய்துவிட்டது.

இதற்கு ஜனாதிபதி ஒப்புதலும் பெறப்பட்டு, 2007-ஆம் ஆண்டு முதல் +2 தேர்வு முடிவு அடிப்படையிலேயே மருத்துவ-பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளுக்கான கவுன்சிலிங் நடை பெற்றுவருகிறது.

அதேநேரத்தில், இந்தியாவின் பிற மாநிலங்களில் உள்ள மாணவர்கள் அந்தந்த மாநில அரசின் நுழைவுத் தேர்வுடன் மத்திய அரசின் எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற மருத்துவ நிறுவனங்களில் சேர்வதற்குத் தனித்தனியாக நுழைவுத் தேர்வுகளும் எழுதி வருகிறார்கள். இதற்குப் பதி லாக ஒரே நுழைவுத்தேர்வு முறையைக் கொண்டு வரவேண்டும் என வட நாட்டைச் சேர்ந்த சிலர் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசா ரணைக்கு வந்தது. அந்த மனுவுக்குப் பதில் அளித்த மத்திய அரசு, நாடு முழுவதும் பொது நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும் என்ற அகில இந்திய மருத்துவக் கவுன்சிலின் பரிந்துரையை ஏற்பதாக தெரிவித்த பதில்தான் தமிழகத்தைக் கொந்தளிக்க வைத்தது.

சமூகநீதிக் கொள்கை களை மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருந்து தமிழகம் நடை முறைப்படுத்திவரும் நிலையில், மத்திய அரசின் இந்த முடிவு தமிழகத்தில் உயர்கல்வி வாய்ப்பைப் பெற்றுவரும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களையும் கிராமப்புற ஏழை மாணவர்களையும் பாதிக்கக்கூடியதால் உடனடியாக இம்முடிவை கைவிடவேண்டும் என பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதினார்.

கி.வீரமணி, ராமதாஸ் உள்ளிட்ட சமூகநீதிப் போராட்டத் தலைவர்களும் பொதுநுழைவுத்தேர்வு முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா, இம்முடிவை மத்திய அரசு ரத்து செய்யாவிட்டால் நாடு தழுவிய போராட்டம் நடைபெறும் என எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டார். நாடாளுமன்றத்திலும், ராஜ்ய சபாவிலும் தி.மு.க., அ.தி.மு.க. எம்.பி.க்கள் ஒரே குரலில் பேசினர்.

முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கருத்துகேட்டு அதனடிப்படையில் கொடுத்த ஆய்வறிக்கையின் படிதான் நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதன் பயனை அந்த ஆண்டு நடந்த பொதுத்தேர்வு முடிவுகளைக் காட்டியே நிரூபித்தார் அனந்தகிருஷ்ணன்.

""2007-ல் நடந்த பொதுத்தேர்வில் அதற்கு முந்தைய ஆண்டைவிட சுமார் 6% மாணவர்கள் அதிகமாக வெற்றிபெற்றிருந்தனர். கல்வியில் பின்தங்கியிருந்த மாவட்டங்களான வேலூர் , கிருஷ்ணகிரி, தர்மபுரி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 7% முதல் 14% வரை தேர்ச்சி விகிதம் உயர்ந்தது. விருதுநகர், நெல்லை, கோவை, தூத்துக்குடி போன்ற கல்வியில் முன்னேறி வந்த மாவட்டங்களிலும் தேர்ச்சி விகிதம் மேலும் உயர்ந்தது.

இந்த உயர்வுக்கு காரணம், தமிழ்வழிக்கல்வி பயிலும் மாணவர்களின் தேர்ச்சிவிகிதம்தான். நுழைவுத்தேர்வு ரத்து என்றதும் +2 பொதுத்தேர்வில் நன்கு கவனம் செலுத்தி படிக்க ஆரம்பித்துவிட்டனர் மாணவர்கள். நுழைவுத்தேர்வு என்கிற கூடுதல் சுமை குறைந்தது. தேர்ச்சி விகிதம் உயர்ந்ததற்கும் 200-க்கு 190 மதிப்பெண்களுக்கு மேல் அவர்கள் பெறுவதற்கும் இதுதான் அடிப்படை'' என்பதே அனந்தகிருஷ்ணனின் கருத்து. கடந்த இரண்டாண்டுகளாக அரசுப் பள்ளியில் படிக்கும் பின்தங்கிய-ஏழை மாணவர்களே பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்து வருவதற்கும் நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது முக்கிய காரணமாகும். இதனால், மருத்துவம்-பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் கிராமப்புற பின்தங்கிய மாணவர்கள் அதிகளவில் சேர்வதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை உயர்கல்வி உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் 69% இடஒதுக்கீடு நடை முறைப்படுத்தப்படுகிறது. மத்திய அரசின் பொதுநுழைவுத் தேர்வு நடைமுறைக்கு வந்தால் பெரும்பாலான மாநிலங்களைப்போல 50% க்கு மேல் இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடியாது. இதனால், தொழிற்கல்வி பெறும் முதல் தலைமுறையினர் பலரும் பாதிக்கப்படுவார்கள். கிராமப்புற மாணவர்கள் தமிழ் வழியிலேயே படிக்கிறார்கள். அவர்களுக்கு இந்தியிலும் ஆங்கிலத்திலும் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டால் வெற்றிபெறுவது கடினம். வடநாட்டவர்களுக்கே எளிதாக வாய்ப்பு கிடைக்கும். இதனால், இந்திய அளவில் தமிழக மாணவர்கள் ஓரங்கட்டப் படுவதுடன், தமிழ் தெரிந்த டாக்டர்களை நாளடைவில் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கும். மருத்துவம் போலவே பொறியியல், வேளாண்மை போன்ற தொழிற்கல்விகளுக்கும் பொதுநுழைவுத் தேர்வு என மத்திய அரசு முடிவெடுத்தால் அனைத்து துறைகளிலும் தமிழகம் பாதிக்கப்படும் அபாயம் உண்டு. கல்வியில் மாநில அரசுக்குள்ள உரிமைகள் மொத்தமாக பறிபோகும்.

இத்தகைய ஆபத்துகளைக் கொண்ட பொது நுழைவுத்தேர்வுக்கு தமிழகத்திலும் டெல்லியிலும் நமது மாநில அரசியல் பிரமுகர்கள் ஒருமுகமாக எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து, மத்திய அரசு தனது முடிவை நடைமுறைப்படுத்துவதை காலவரையின்றி ஒத்திவைத்துள்ளது. அனைத்து மாநில நலன்களையும் கருத்தில்கொண்டே செயல்படுவோம் என மத்திய அரசின் குரலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் ஒட்டுமொத்த நலனுக்காக தமிழக எம்.பி.க்களின் கட்சி கடந்த ஒருமித்த குரலை கிண்டல் செய்த வடஇந்திய எம்.பிக்களோ, தங்களின் சம்பள உயர்வுக்காக கட்சிகளை மறந்து கைகோத்து, நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். இது பொது மக்களிடையே கிண்டலுக்குள்ளானது.

""உயிர்நாடியான பிரச்சினைகளில்கூட, நாடாளுமன்றத்தில் தி.மு.க. மீது அ.தி.மு.க.வும் அ.தி.மு.க. மீது தி.மு.க.வும் குற்றம்சாட்டிப் பேசுவதே வழக்கமாக இருந்த நிலையில், ஒருமித்த குரலால் இருகட்சியினரும் பொதுநுழைவுத்தேர்வு அபாயத்திற்கு அணை போட்டிருக்கிறார்கள். இரு கட்சியினரும் ஒரே குரலை வலுவாக ஒலித்தால் டெல்லியின் பிடிவாதமும் அலட்சியமும் மாறும் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிற நிலையில், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அமல்படுத்துவது, முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது, தமிழக மீனவர்கள் மீதான இலங்கைப் படையினரின் தாக்குதல்களை நிறுத்துவது உள்ளிட்டவற்றிலும் இதே பாணியைக் கையாண்டு மத்திய அரசை வழிக்குக் கொண்டு வரலாமே'' என்கிறார்கள் இரு கட்சிகளுக்கும் மாறி மாறி வாக்களிக்கும் தமிழக மக்கள்.

No comments:

Post a Comment