Friday, August 27, 2010

யுத்தம் 82 நக்கீரன் கோபால்


நாகப்பா விடுதலை என்ற செய்தி வெளிவந்த சில மணிநேரங்களில் அதே நாளிதழின் புதிய பதிப்பு வெளியானது.

""நாகப்பாவை வீரப்பனே சுட்டுக் கொன்றான்...'' என்ற தலைப்பிடப்பட்ட அந்த செய்தி தமிழகத் தையும் கர்நாடகத்தையும் ஒட்டு மொத்தமாக அதிரவைத்தது. தமிழக அரசின் அதிரடிப் படை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால், நாகப்பாவை விட்டுவிட்டு வீரப்பன் தப்பி ஓடிவிட்டதாக மார்தட்டிக்கொண்ட ஜெயலலிதா அரசும் காவல்துறை உயரதிகாரிகளும், நாகப்பா சுட்டுக் கொலை என்றதும் என்ன சொல்வ தென்று தடுமாறினார்கள். நாகப்பாவை வீரப்பனே சுட்டுக்கொன்றான் என் றால், அதிரடிப்படை மேற்கொண்ட நட வடிக்கையின் பயன் என்ன என்ற கேள்வி எழுந்தது.

வீரப்பனிடம் மாதக்கணக்கில் பிணைக்கைதியாக பத்திரமாக இருந்த நாகப்பாவை எப்படி திடீரென வீரப்பனே சுட்டுக் கொன்றிருப்பான்? நாகப்பாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளது. அதிரடிப் படையினர் மீது சந்தேகம் உள்ளது என்று நாகப்பாவின் உறவினர்களும் ஜனதாதளக் கட்சிக்காரர்களும் கொந்தளிப்பாயினர்.

நாகப்பாவைத் தேடி காட்டுக்குள் சென்றவர்களில் கொள்ளேகால் பகுதி ஜனதாதள பொறுப்பாளரான பொன்னாச்சி மகாதேவசாமியும் ஒருவர். வீரப்பனால் நாகப்பா சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதை அவரால் நம்பமுடியவில்லை. ""காட்டில் தனக்கு நேர்ந்த அனுபவங்களை முன்வைத்து, வீரப்பன் இந்தக்கொலையை செய்திருக்க மாட்டான்'' என்றார்.


""நான் நாகப்பா குடும்பத்துக்கு ரொம்பவும் நெருக்கமான நண்பன். அவர் பிணைக்கைதியாக இருந்தபோது மருந்து-மாத்திரைகளை எடுத்துக்கொண்டு காட்டுக்குள் போனேன். 25 நாட்களுக்கு மேலே சுற்றித் திரிஞ்சேன். அப்புறம் தான் ஒருநாள் மார்டன்னி வனப்பகுதியில் ஒரு உருவம் துணி துவைத்துக்கொண்டிருந்தது. பக்கத்திலேயே துப்பாக்கி இருந்தது. உற்றுப்பார்த்தபோதுதான் வீரப்பன் என்பது தெரிந்தது. நெருங்கிபோனால் சுட்டு விடுவார் என்பதால், கொஞ்ச தூரத்திலேயே நின்று, கைகளை உயர்த்தியபடி, "தலைவரே... உங்களைத்தான் பார்க்க வந்திருக்கேன்'னு கத்தினேன். உடனே வீரப்பனுக்கு பாதுகாப்பா இருந்த சேத்துக்குளி கோவிந்தன் உள்ளிட்ட வங்க என்னை நோக்கித் துப்பாக்கியைத் திருப்பிட்டாங்க. வீரப்பன் அவங்களை சும்மா இருக்கச் சொன்னார்.

சந்தேகப்படும்படியான ஆள் இல்லைன்னு தெரிஞ்சதும்தான் நாகப்பாகிட்டே என்னை அழைச்சிட்டுப்போனாங்க. நாகப்பா யாருக்கும் எந்த தீங்கும் செய்யாதவர் அவரை விட்டுடுங்கன்னு வீரப்பன்கிட்டே சொன்னேன்.

அவரும், "எஸ்.டி.எஃப்.பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரண்டு மாநில அரசாங்கங்களும் வாக்குறுதி அளித்தபடி உதவிகளை செய்யட்டும். நாகப்பாவை விட்டுடுறேன்'னு சொன்னார். அவர் எப்படி நாகப்பாவை சுட்டுக் கொன்றிருக்க முடியும்? இது அதிரடிப்படை போலீஸ் வைத்த குறிதான்'' என்றார் மகாதேவசாமி.


தூதர்களை அனுப்ப வேண்டும் என்று வீரப்பன் தொடர்ந்து வலியுறுத்தியபோதும், கடைசிவரை தூதரை அனுப்பாமல் தமிழக அரசு காட்டிய பிடிவாதம்தான் தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த தலைவரின் உயிரைப் பறித்துவிட்டது என்று கன்னட அமைப்பினர் அங்குள்ள தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை ஆரம்பித்தனர்.

தமிழகத்தை ஆளும் ஜெ. அரசை நோக்கியே கர்நாடக மக்களின் ஒட்டுமொத்த கோபமும் திரும்பியதால், ஜெ. பதட்டமானார். அடுத்தவர்கள் மீது வீண்பழி சுமத்தத் தயங்காத அவர், தன்னை நோக்கி உண்மையான பழி வருகிறது என்றதும் அடுத்தடுத்த நாட்களில் அவரிடமிருந்து மறுப்பறிக்கைகள் வெளியான படியே இருந்தன.

""சில விஷமத்தனமான சக்திகள் இப்படிப்பட்ட வதந்திகளை பரப்பி, பிரச்சினையை உண்டாக்குவது துரதிர்ஷ்டவசமானது. இது முழுவதும் பொய்யான செய்தி. கர்நாடக அரசு கேட்டுக் கொண்டதற் கிணங்க தமிழக அதிரடிப்படை வாபஸ் பெறப்பட்டபின், கர்நாடகப் பகுதியில் அது எந்தவிதமான நட வடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. கர்நாடக எல்லைக்குள் 40 கி.மீ தூரத் தில் உள்ள பகுதியில் நடந்த சம்பவத்திற்கும் தமிழக அதிரடிப்படைக்கும் எவ்வித தொடர்புமில்லை'' என்றார் ஜெயலலிதா.

ஆரம்பத்தில், நாங்கள்தான் நாகப்பாவை மீட்டோம் என்று பத்திரிகைகளில் செய்தி வரச்செய்த ஜெ.அரசு, அதன்பிறகு நாகப்பாவைக் கொன்றது எங்கள் அதிரடிப்படை அல்ல என்று அலற ஆரம்பித்தது.

தமிழக அதிரடிப்படையைச் சேர்ந்த அதிகாரிகளும், ""நாகப்பா கொலைக்கு வீரப்பன்தான் காரணம். அவன் ஒரு கொலை வெறியன். கொள்ளைக்காரன். தான் கேட்டதெல்லாம் கிடைக்கவில்லை என்ற கோபத்தில் அவனே இந்தக் கொலையைச் செய்திருப்பான். தனது தம்பி அர்ஜுனனை நாகப்பாதான் சங்கர்பித்ரி மூலம் சயனைடு வைத்துக் கொன்றதாக ஏற்கனவே ஒரு பேட்டியில் வீரப்பன் சொல்லியிருக்கிறான். அந்தக் கோபமும் இந்தக் கொலைக்கு காரணமாக இருக்கும்'' என்றார்கள்.

நாகப்பா மரணத்திற்கு உண்மைக் காரணம் என்ன என்பதை ஆய்வு செய்யும் நடவடிக்கைகளில் மீடியாக்கள் தீவிரமாக இருந்த நேரத்தில்தான், கர்நாடக அரசுக்கு வீரப்பனிடமிருந்து ஒரு கேசட் வந்திருப்பதாக தகவல் பரவியது. பத்திரிகையாளர்கள் கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவை தொடர்புகொண்டு, அந்த கேசட்டில் வீரப்பன் என்ன பேசியிருக்கிறான் என்று கேட்டபடியே இருந்தனர்.

வீரப்பனிடமிருந்து வந்திருந்த அந்த முக்கியமான ஆடியோகேசட், மீடியாக்களுக்கு போட்டுக் காட்டப்பட்டது. தமிழும் கன்னடமும் கலந்து வீரப்பன் அதில் பேசியிருந்தான்.

""நான் வீரப்பன் பேசுறேன்.. வியாழக்கிழமை காலைல 9 மணி இருக்கும். மனசுக்கு ஒரு மாதிரியா இருந்துச்சி. சகுன மும் சரியில்லை. சேத்துக்குளி கோவிந்தன்கிட்டே.. இங்கே யிருந்து கிளம்பலாம்டா அப்படீன்னேன். அவன் சாமான்சட்டுகளைக் கட்டினான். அதெல்லாம் கிடக்கட்டும்டா.. திரும்பி வந்து எடுத்துக்கலாம். மொதல்ல பெரியவரை (நாகப்பா) கூட்டிக்கிட்டு கிளம்புடான்னேன்.

அப்ப திடீர்னு எஸ்.டி.எஃப்.காரன் ரெண்டு பேரு எங்களை சுட ஆரம்பிச்சானுங்க. படக்குன்னு குதிச்சி நானும் கோவிந்தனும் புதருக்குள்ளே மறைஞ்சோம். கோவிந்தன் பதிலுக்கு சுட ஆரம்பிச்சான். அதுல 2 எஸ்.டி.எஃப்.காரன் அடிபட்டு விழுந்தான். பெரியவர் மட்டும் பாறை மேலேயே நின்னார். "பெரியவரே.. பெரியவரே.. கீழே குதிங்க. பயப்படாம குதிங்க'ன்னு சொல்லும்போதே சடசடசடனு ஆயிரக்கணக்கான துப்பாக்கித் தோட்டாக்கள் சீற, உடனே நாங்க ஓடினோம். ஓடிக்கிட்டே திரும்பி பாறையை பார்த்தப்போ பெரியவரை காணலை. நாங்க ஓடி வந்துட் டோம்.

அப்புறம் கடந்த மூணு நாளா பேப்பர்ல சேதி வரும்னு பார்த்தேன். பெரியவரைப் பற்றி ஒண்ணும் வரலை. இப்ப நாகப்பா என்னோட கட்டுப்பாட்டுல இல்லை. பெரியவரை நான் கொல்லலை. நான் பிடித்த பிணைக் கைதிகள் யாரையும் நான் கொல்லலை. இனிமேலும் அப்படி செய்ய மாட்டேன். இதுக்கெல்லாம் காரணம் தேவாரமும் ஜெயலலிதாவும்தான். என் மேல் எந்தப் பழியும் வரக்கூடாதுங்கிறதாலதான் இந்தக் கேசட்டைப் பேசி அனுப்புறேன்.''

-வீரப்பனின் குரல் மீடியா வழியாக கர்நாடகாவில் பரவியபோது, கொந்தளிப்பு மேலும் அதிகமானது. உண்மையைக் கண்டறி வதற்காகவும் நாகப்பாவுக்கு ஈமக்கிரியைகள் செய்வதற்காகவும் அவருடைய உறவினர்கள் செங்கடி வனப்பகுதிக்குள் கலங்கிய கண்களோடு சென்றார்கள்.

அடர்ந்த மரப்புதர்களுக்கிடையே ஒற்றை யடிப்பாதையில் பயணித்து, நாகப்பா சுடப்பட்ட இடத்தில் , விளக்கேற்றி வைத்து, மலர்களைத் தூவியபடி, கண்ணீர் அஞ்சலி செலுத்தினார் கள். சுடப்பட்ட ஸ்பாட்டை அவர்கள் சுற்றிப் பார்த்தபோது, நாகப்பாவின் உடல் கிடந்த இடத்திலிருந்து 500 அடி தொலைவிலேயே சில துணிமூட்டைகளோடு, ஒரு டைரியும் கிடந்தது. இது.. தலைவரோட கையெழுத்துதாங்க என்றபடி கட்சிக்காரர்களும் உறவினர்களும் அதனைப் புரட்டினர். சுடப்படுவதற்கு முதல்நாள் வரை அவர் டைரி எழுதியிருக்கிறார்.

டைரி எடுக்கப்பட்ட இடத்திற்கு அருகில் துப்பாக்கிக்குண்டுகள் சிதறிக் கிடப்பதைப் பார்த்த ஒருவர், இதுபற்றி குரல் கொடுக்க.. அருகிலுள்ள மரங்களிலும் பாறைகளிலும் துப்பாக்கிகள் துளைத்திருப்பது தெரிந்தது. நாகப்பாவின் மருமகனும் டாக்டருமான கிரண்பட்டீல், "ஒரு டாக்டர்ங்கிற முறையில் என் மாமனார் உடலை போஸ்ட் மார்ட்டம் செய்தப்ப பக்கத்திலேதான் இருந்தேன். 10, 15 அடி தூரத்தி லிருந்துதான் அவரை சுட்டிருக்காங்க. அவரோட கை, கால்களெல்லாம் கட்டப் படலை. அவரைக் காப்பாற்றணும்ங்கிற எண்ணமில்லாமல் சுடணும்ங்கிற எண்ணத்திலேயே சுட்டிருக்காங்க. ஏ.கே.47 தோட்டாதான் பாய்ந்திருக்குது.

5-ந் தேதியன்னைக்கு நெல்லூர் ரோட்டில் உள்ள கவுதலி கிராமத்தில் ஒரு ஜீப்பை ஓட்டிக்கிட்டு மோகன் நிவாஸ் போனதை அங்கேயிருக்கிறவங்க பார்த்திருக்காங்க. அதுக்கு முன்னாடி நொக்கலிங்கிற இடத்தில் முண்டாசு கட்டிக்கிட்டு ஸ்கூட்டரில் போயிருக்கிறார். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது அதிரடிப்படைதான் என் மாமனாரைக் கொன்னிருக்குன்னு தெரியுது. இதை நாங்க விடப்போறதில்லை. தமிழக அதிரடிப்படைதான் கொலை செய்திருக்குங்கிறதை நிரூபிப்போம்'னு மீடியாக்கள்கிட்டே கிரண் பட்டீல் பேசினார்.

கண்ணீரும் வேதனையும் பொங்க பேட்டியளித்த நாகப்பாவின் மனைவி, ""தமிழ்நாட்டில் கலைஞர் கருணாநிதி ஆட்சி நடந்திருந்தா தூதரை அனுப்பி என் புருஷன் உயிரைக் காப்பாத்தியிருப்பார். இந்தம்மாகிட்டே உதவி கேட்டு போனோம். உதாசீனப்படுத்திட்டாங்க. இப்ப என் புருஷனோட உயிர் போயிடிச்சி'' என்றார்.

நாகப்பாவைக் கொன்றது வீரப்பனா, அதிரடிப்படையா என்ற விவாதங்கள் கர்நாடகத்திலும் தமிழகத்திலும் தொடர்ந்துகொண்டிருந்தபோது, நமக்கு வேண்டிய பலரும் தொடர்புகொண்டார்கள்.
""அண்ணே... இதுக்கு முன்னாடி வீரப்பன் பலரைக் கடத்தினப்ப, கலைஞர் ரொம்ப சாதுர்யமா மனிதாபிமானத் துடன் நடந்து கொண்டார். இரண்டு மாநிலமும் உங்கள தூதரா அனுப்பி வச்சிச்சி, உயிரைப் பணயம் வச்சி காட்டுக்குப்போய் அவன்கிட்டே சாதுர்யமா பேசி, பிடிபட்டிருந்தவங்களை உயி ரோடு பத்திரமா மீட்டுட்டு வந்தீங்க. ஆனா, இப்ப தூதரையே அனுப்பமாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சி, அநியாயமா ஒரு உயிரைக் கொன்னுட்டாங்களே'' என்றார்கள் வேதனைக் குரலில்.

அடுத்தவரின் வேதனைகள் பற்றிக் கவலைப்படாமல், யாருடைய உயிர் போனாலும் பரவாயில்லை, என்னோட பிடிவாதம்தான் முக்கியம் என்றளவில் ஆட்சி நடத்திக்கொண்டிருந்த ஜெ.வின் அரசாங்கம், பழிவெறியோடு நக்கீரன் மீது அடுத்த பாய்ச்சலை ஆரம்பித்தது.

-யுத்தம் தொடரும்

No comments:

Post a Comment