Friday, August 27, 2010

கிரீன்பீல்டு விமான நிலையம்! மக்கள் மனநிலை!


""எங்க பிள்ளைங்க எல்லாம் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்துதான் ஸ்கூலுக்கு போறாங்க. இங்க கவர் மெண்டுல வேலை பார்க்குறவங்க யாரும் கிடையாது. எந்த ஆட்சியிலயும் எந்த பேங்க்கும் விவசாயத்துக்கு கூட லோன் தரல. அவ்வளவு ஏன் சார் சுதந்திரம் வாங்கி அறுபது வருஷம் ஆகுது. இதுவரைக்கும் எங்க ஊருக்கு அரசாங்க பஸ்ஸே வந்ததில்லை.

ஆனா இப்ப வெளிநாட்டுக்கு பறக்குற ஏரோப்ளேன் வந்து எங்க வயக்காட்டுல எறங்கப் போறதா சொல்றாங்க. பஸ்ஸே வராத ஊருக்கு எதுக்கு சார் ஏரோப்ளேன்'' என நம்மிடம் ஆவேசமாக கேள்வி கேட்கிறார் கொட்டையூர் கிராமத்தைச் சேர்ந்த ரேவதி.

இந்த கொட்டையூரோடு சேர்த்து சென்னையின் சர்வதேச தொழில் நகரமாக மாறியுள்ள ஸ்ரீபெரும் புதூர், அதை தொட்டுக் கொண்டிருக்கும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த கடம்பத்தூர் பகுதியில் உள்ள முப்பது கிராமங்களையும் முழுமையாக கைப்பற்றி தமிழகத்துக்காக ஒரு பெரிய விமான நிலையத்தை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் சிங்கூர் என்ற இடத்தில் நானோ கார் தயாரிக்க டாடா நிறுவனத்திற்கு விவசாய நிலங்களை கையகப்படுத்தி கொடுக்க அந்த மாநில அரசு முடிவு செய்தபோது, ஒரு பெரும் எதிர்ப்பலை எழுந்தது. அதைப் போன்ற எதிர்ப்பு இந்த விமான நிலைய அமைப்பு திட்டத்திற்கும் கிளம்பியுள்ளது. தமிழகத்தின் சிங்கூர் என சொல்லு மளவிற்கு அ.தி.மு.க., கம்யூனிஸ்ட்கள், பா.ம.க. என தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சிகள் வீடு வீடாக சென்று மக்களை எதிர்ப்பியக்கத் திற்காக திரட்டிக் கொண்டிருக்கின்றனர். அந்த முப்பது கிராம மக்களும் அவர்களை வாருங்கள் என வரவேற்றுக் கொண்டிருக் கிறார்கள்.

அந்த மக்களை நாம் சந்தித்தபோது புலியிடமிருந்து தனது உயிரைக் காப்பாற்ற தப்பியோடும் மானின் பயத்துடன், ஒரு பெரிய எதிர்ப்பியக்கத்தில் வேகமாக செயல்படும் அறிவுஜீவியின் புத்திசாலித் தனத்தையும் அந்த பாமர மக்களிடம் பார்க்க முடிந்தது.

பூதேரிபண்டையைச் சேர்ந்த உண்ணாமலை ""நான் இருக்கிறது குடிசை வீடுதாங்க. பத்து பதினைஞ்சு அடி பள் ளத்தை மேடாக்கி ஆயிரக்கணக்கில் செலவு செஞ்சு வீடு கட்டியிருந்தோம். அதுவே 5 சென்ட் அளவுக்கு இருக்குது. இந்த ஊர்ல விவசாய கூலியாதான் வாழ்ந்துகிட்டிருக் கோம். இந்த ஊரை விட்டு காலி பண்ண சொன்னா இதுபோல ஒரு வீடு கிடைக்கலாம். ஆனால் இந்த ஊரை விட்டு போனால் 45 வயசான எனக்கு கம்பெனி யில எவன் வேலை கொடுப்பான். சோனியா காந்தி தான் அவங்க வீட்டுக்காரரு இங்க செத்துப் போனதால் இங்க ஏர்போர்ட் கொண்டு வரணும்னு பிடிவாதம் பிடிக்கி றாங்களாம். வீட்டுக்காரரு சாவுக்காக இலங்கையில இருக்கிறவங் களையெல்லாம் அழிச் சாங்களாம். அடுத்தபடியா எங்க ஊரையெல்லாம் கொள்ளை கேட்க வர்றாங்க. இது இன்னா சார் நியாயம்'' என்கிறார் கோபமாக.

வயலூர் தி.மு.க. கிளை செயலாளரான முருகன் ""கடற்கரை யோரத்தில் அமைந்துள்ளதால் எல்லா பருவகாலங்களிலும் தவறாமல் மழை பெய்யும் பூமி இது. சென்னை நகருக்கு மினரல் வாட்டர்களை தரும் அனைத்து கம்பெனிகளும் இங்குதான் அமைந்துள்ளது. அந்த அளவிற்கு நிலத்தடி நீர்வளம் கொழிக்கும் முப்போகமும் விளையும் விவசாய பூமி இது. விவசாய குடும்பங்களில் கூட சாகும் நிலையில் இருப்பவர் கூட சாவதற்கு முன்பு தனது நிலத்தை ஒருமுறை சுற்றி பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவார். அதேபோல் தன்னுடைய உடலை தனது விவசாய நிலத்தில் உள்ள மேடான பகுதியான தலைமேடு பகுதியில்தான் புதைக்க வேண்டும் என்றும் சொல்வார். அப்படி விவசாயம் அவர்கள் உடம்பில் ஊறிப் போன ஒரு தொழில். இந்த நிலங்களை தங்கள் வாழ்க்கைக்கு தொடர்பேயில்லாத விமான நிலையத்திற்காக இழப்பதற்கு யாரும் சம்மதிக்கமாட்டார்கள்'' என்கிறார் மக்களின் மனதை அறிந்தவராக.

வடமங்கலம் பஞ்சாயத்து தலைவரும் எம்.ஜி.ஆரின் நெருக்கமான தொண்டருமான அ.தி.மு.க.வைச் சேர்ந்த சாமிநாதன், ""எதை செய்தாலும் மக்களின் மனநிலையை அறிந்து செய்ய வேண்டும் என எம்.ஜி.ஆர். அடிக்கடி சொல்வார். அவரது ஆட்சிக்காலத்தில் மேய்க்கால் புறம்போக்கு நிலத்திற்கு பட்டா கொடுக்கக்கூடாது என ஒரு சட்டம் இருந்தது. இந்த ஊரே மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில்தான் அமைந்திருந்தது. நாம் தொகுப்பு வீடு கட்டி தர வேண்டுமென்றால் பட்டா வேண்டும் என எம்.ஜி.ஆரை கேட்டபோது கொஞ்சம் கூட தயங்காமல் மாவட்ட கலெக்டரை கூப்பிட்டு பட்டா வழங்க சொன்னார். இந்த விமான நிலையம் கட்டுவதால் 30,000 குடும்பங்கள் தங்களது சொத்துக்களையும் அடையாளத்தையும் ஒட்டுமொத்தமாக இழந்து விடுவார்கள். அவர்கள் இந்த அரசுக்கு நிரந்தர எதிரிகளாக மாறிவிடுவார்கள். இது அரசுக்கு தேவையா?'' என கேள்வி எழுப்புகிறார்.

பா.ம.க.வைச் சேர்ந்த இல.சடகோபன் ""விமான நிலையம் அமைக்க இடம் சென்னை நகரில் இல்லையா? செங்குன்றம் சோழவரம் பகுதியில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் பயன்படுத்திய பழைய விமான நிலையம் ஒன்று உள்ளது. அந்த விமான நிலை யத்தைச் சுற்றி ஆயிரக்கணக் கான ஏக்கரில் அரசு பால் பண்ணைக்காக மாடுகள் அங்கு வளர்க்கப்படுகிறது. அங் குள்ள நிலங்கள் எல்லாம் வனத் துறைக்கு சொந்தமான நிலங்கள். அதில் 6,000 ஏக்கரை வைத்து புதிய விமான நிலையம் அமைக்க லாம். சென்னை-கல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து மிகக் குறுகிய தொலைவில் விமான நிலையம் அமைக்காமல் கண்ணை விற்று சித்திரம் வாங்கும் கதையாக இந்த பகுதியில் விமான நிலையம் அமைப்பது ஏன்'' என ஆவேசப்படுகிறார்.

நாம் சென்ற முப்பது ஊர்களிலும் உள்ள பொதுமக்கள் அனைவரும் ஒரு சென்ட்டுக்கு 2 லட்ச ரூபாய் கொடுத்தாலும் சரி, நாங்கள் பிச்சை எடுத்து வாழும் நிலைமை வந்தாலும் சரி, இந்த மண்ணை விட்டு நாங்கள் வெளி யேற மாட்டோம். எங்களை துப் பாக்கியால் சுட்டுக் கொல்லட்டும். ஒட்டுமொத்த ஊரையும் பெட் ரோல் ஊத்தி கொளுத்தட்டும். நாங்கள் பிணமாகத்தான் இந்த ஊரை விட்டு போவோம்'' என ஆவேசமுடன் பேசுகிறார்கள் பொதுமக்கள்.

தமிழக வளர்ச்சிக்கு தேவை யானது விமான நிலையம் என் றாலும் மக்கள் மனநிலையையும் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசு எண்ணிப் பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

No comments:

Post a Comment