Thursday, August 19, 2010

விஜயகாந்த் கோட்டையில் ஓட்டை!


கடந்த 6-ந் தேதி காலை.. அரைநாள் சூட்டிங் விசிட்டாக விருத்தாசலத்துக்கு வந்தார் விஜயகாந்த். பத்தரை டூ பன்னண்டு ராவுகாலம் என்பதால்... கெஸ்ட் ஹவுஸுக்குள்ளேயே இருந்தார். சரியாக 12.05-க்கு புறப்பட்டு விருத்தகிரீஸ்வரர் கோயிலுக்கு அவர் வர... படப்பிடிப்பு டீம் ரெடியாக இருந்தது. விஜயகாந்த் இயக்கத்தில் உருவாகும் "விருத்தகிரி'’ படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக தொடங்கியது. கோயிலின் வடக்கு கோபுரவாசல் வழியாக... தன் சினிமா ஜோடியுடன் கோயிலுக்குள் விஜயகாந்த் நுழைய... கேமரா அந்தக் காட்சிகளை விழுங்கியது. சாதாரணமாக கோயிலுக்குள் நுழைந்த விஜயகாந்த்... வெளியே வரும்போது அரசவேடத்தில் வெளியே வருகிறார். இதையும் கேமரா படம்பிடிக்க.. பேக்கப் சொல்லிவிட்டு... அங்கிருந்து மதியம் 2 மணிக்கே சென்னைக்குக் கிளம்பிவிட்டார்.

""கேப்டனை இந்த விருத்தகிரீஸ்வரர்தான் இப்ப எம்.எல்.ஏ.வா ஆக்கியிருக்கார். நாளை அவரை இதே கடவுள் முதல்வராக்கப் போகிறார் என்பதை சிம்பாளிக்காகக் காட்டும் காட்சிதான் இப்ப படமாக்கப்பட்டிருக்கு''’ என்றார் படப் பிடிப்புக் குழுவில் இருந்த ஒரு துணை இயக்குநர்.

லோக்கல் தே.மு.தி.க. பிரமுகர் ஒருவரோ ""தொகுதி முழுக்க சீர்கெட்டுக் கிடக்குது. பொது மக்கள் எங்கக்கிட்ட... எம்.எல்.ஏ. என்ன பண்றார்னு கோபமாக் கேட்கறாங்க. என்ன பதில் சொல்றதுன்னு தெரியலை. இப்ப சூட் டிங்கிற்கு வந்தவர் கட்சிக்காரங்களைக் கூட சந்திக்காமக் கிளம்பிட்டாரு'' என்றார் ஆதங்க ஆதங்கமாய்.


பொதுமக்கள் அவர் மீது கோபப் பட என்ன காரணம்? களமிறங்கினோம்.

நெய்வேலி கவிதா சொல்கிறார் : ""தன் சொந்த செலவிலும் எம்.எல்.ஏ. நிதியிலும் அரசுக் கல்லூரிக்கும் அரசு மருத்துவமனைக்கும் கட்டிடங்கள் கட்டிக்கொடுத்த விஜயகாந்த்தைப் பாராட்டணும். அதே சமயம் என்.எல்.சி.க்கு நிலம்கொடுத்த பலருக்கு அதற்கான தொகைவரலை. அதைப் போராடி வாங்கிக் கொடுப்பேன்னு சொன்னார் விஜயகாந்த். சொன்ன தோட சரி. மணிமுத்தாறு ஆற்றில் தரைப்பாலம் கட்ட ஏற்பாடு பண்றேன்னார். அதுவும் நடக்கலை. அதேபோல் இங்க பெண்கள் கல்லூரி, வேளாண்மை கல்லூரியெல்லாம் கேட்டோம். முயற்சி பண்றேன்னார். அதையும் பண்ணலை. முதனை கிராமத்தில் இருக்கும் சம்பையா கோயிலுக்கு தன் மனைவியோட அவர் வந்தபோது... அவரை ஜனங்க மகிழ்ச்சியா வரவேற்றாங்க அப்ப அந்தக் கோயிலை அழகா கட்டிக்கொடுப்பேன்னு சொன்னார். அதையும் செய்யலை'' என்றார்.

கட்சியின் ஒ.செ.வாக இருந்த பட்டி லெனின் என்பவர் கட்சிப்பணியாக டூவீலரில் போனபோது விபத்தில் சிக்கி இறந்துவிட்டார். பிறகு?

""எங்க எம்.எல்.ஏ. விஜயகாந்த் அந்த லெனின் வீட்டுக்கே வந்து ஆறுதல் சொன்னார். லெனின் மனைவி சந்திரலேகாவிடம்.. "கவலைப்படாதே.. உன் இரண்டு பிள்ளைகளின் படிப்பு செலவு உட்பட எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன்'னு சொல்லிட்டுப் போனார். ஆனா ஒரு சின்ன உதவிகூட லெனின் குடும் பத்துக்குக் கிடைக்கலை. அந்தப் பிள்ளைகள் ஸ்கூலுக்கு பீஸ் கட்டமுடியாம தவிக்குதுங்க'' என்றார்கள் பட்டி கிராமத்தினர்.

கவனை கிராமத்தைச் சேர்ந்தவர்களோ ‘""தே.மு.தி.க. கட்சிக்காரர் பாலகிருஷ்ணனின் மனைவி விஜயலட்சுமி கொல்லப்பட... அவரது இரண்டு பிள்ளைகளும் அனாதரவானது. இதை அறிந்த விஜயகாந்த் அந்தப் பிள்ளைகளை தத்து எடுத்துக்கொள்வதாக அறிவிச்சார்.. அந்தப் பிள்ளைகளுக்கும் சரியான அரவணைப்பு அவர் தரப்புக்கிட்ட இருந்து கிடைக்கவில்லை'' என்கிறார்கள்..

வழக்கறிஞரான பூமாலை குமாரசாமியோ ""தொகுதிக்கு அதைச் செய்வேன்.. இதைச் செய்வேன்னு பொய் வாக்குறுதிகளை வழங்கி ஓட்டுவாங்கி ஜெயித்த விஜயகாந்த் பெரிதா எதையும் செஞ்சிக் கிழிக்கலை. . அவங்க ஆளுங்களோ.... கேப்டன் வைக்கும் கோரிக்கை களை இந்த அரசு காது கொடுத்துக் கேட்கறதில்லைன்னு கதை விடறாங்க. மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி விஜயகாந்த் போராட்டம் நடத்த வேண்டியதுதானே. சட்ட மன்றத்தில் குரல்கொடுக்க வேண்டியதுதானே? அவரைப் பொறுத்தவரை நடிப்புதான் பிரதான தொழில். சூட்டிங் இல்லாதபோதுதான் மத்த தைப் பத்தி யோசிப்பார். ஊழலை ஒழிக்கிறதுதான் தன்னோட லட்சியம்னு வீரமுழக்கம் செய்த விஜய காந்த் வாழ்க்கையில் எப்படி நடந்துக்குறார்? எம்.எல்.ஏ. நிதியில் நடக்கும் அத்தனை வேலைகளுக்கும் கமிஷன் அவருக்குப் போகுதா இல் லையா? இல்லைன்னு சொல்லச் சொல்லுங்க பார்ப்போம்''’ என்கிறார் காட்டமாய்.

சரி.. தொகுதியில் தே.மு. தி.க.வின் நிலவரம் எப்படி?

""அதை ஏன் கேக்கறீங்க. அந்தப் போஸ்டரைப் பாருங்க. அந்தக் கட்சியின் நிலவரம் புரியும்'' என அந்த விருத்தாசலப் பிரமுகர் சொல்ல... போஸ்டரைக் கவனித்தோம்.

’"சாதிவெறி பிடித்தும்.. தே.மு.தி.க. தலித் பொறுப்பாளர்களை நீக்கியும்.. .தொகுதியைச் சீரழித்துவரும் ஒ.செ. முத்துக் குமாரை வன்மையாகக் கண்டிக்கிறோம் -இப்படிக்கு... காமராஜ், (ஒ.து.செ. ராசேந்திரப்பட்டினம்.)'’ என்றிருந்தது.

விஜயகாந்த்தின் சொந்தத் தொகுதியிலேயே தே.மு.தி.க.வின் நிலை இப்படியா? என திகைத்த நாம்..


விருத்தாசலத்தில் இருக்கும் விஜயகாந்த்தின் எம்.எல்.ஏ.அலுவலகத்துக்குச் சென்றோம். அங்கிருந்த அலுவலக உதவியாளர் சுந்தர்ராஜன் “""கட்சிக்குள்ள இருக்கும் சலசலப்பெல்லாம் கேப்டன் வந்தா சரியாயிடும். பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களை உடனுக்குடன் எங்க கேப்டனுக்கு அனுப்பிடறோம். இந்த ஒன்றிய செயலாளர் லெனினின் பசங்களுக்கு இன்னும் படிப்புச் செலவுக்கு பணம் போகலைங்கிற விசயம் நீங்க சொல்லித்தான் தெரியுது. உடனே அதைக் கொடுத்துடறோம். சம்பையா கோயிலைக் கட்டுவதற்கும் நிதி ஒதுக்கப்பட்டிருக்கு. விரைவில் அது கட்டப்படும். மற்றபடி ஆகவேண்டிய வேலைகள் நடந்துக்கிட்டுதான் இருக்கு'' என்றார் நம்மிடம் பொத்தாம் பொதுவாய்.

கூட்டணி எதுவுமில்லாமல் நின்று வென்று, விருத்தாசலம் தொகுதி என் கோட்டை என்றார் விஜயகாந்த். அங்கு ஓட்டைகள் பெருசாகிக்கொண்டே இருக்கின்றன.

No comments:

Post a Comment