Sunday, August 29, 2010

""அ.தி.மு.க.விலும் பேசுகிறார்கள்!'' -கொ.மு.க. ஈஸ்வரன் பேட்டி!

""கொங்கு மண்டல கட்சியான "கொங்கு நாடு முன்னேற்றக் கழகம்' தற்போது அதன் சக்தியை இழந்து பலவீனமான கட்சியாக மாறிவிட்டது. வருகிற சட்டமன்ற தேர்தலில், இல்லாத செல்வாக்கைச் சொல்லி கூட்டணி பேசி தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளை யும் ஏமாற்றப் பார்க்கிறது...'' -இப்படி கொ.மு.க. பற்றி கடும் விமர்சனங்களை நக்கீரன் ஆகஸ்ட் 21-24 இதழில் பேட்டியாக கூறியிருந்தார் கவுண்டர் சமுதாயத்தின் மற்றொரு பிரதான அமைப்பாக செயல்படும் "தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை'யின் தலைவர் உ.தனியரசு. இந்நிலையில் எங்களின் இளைஞர் பலத்தைப் பற்றி பேசும் தகுதி தனியரசுக்கு துளியும் இல்லை என காட்டமாகவே கூறுகிறார் கொங்கு நாடு முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளரான ஈஸ்வரன். அவரைச் சந்தித்தோம்.

உங்கள் கட்சிக்கான பலம் என்ன?

ஈஸ்வரன்: கொங்கு சமுதாய மக்கள்தான். ஆரம்பத்தில் கொங்கு வேளாள கவுண்டர் பேரவையாக செயல்பட்டு வந்தோம். மூன்று வருடங்களுக்கு முன்பு கோவை கருமத்தம்பட்டி யில் லட்சக்கணக்கான கொங்கு இன மக்களை ஒன்றுதிரட்டி கொ.மு.க.வை தொடங்கினோம். அதன் தொடர்ச்சியாக வந்த பாராளு மன்ற தேர்தலில் 6 லட்சம் ஓட்டுக்கள் பெற்றோம். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி களின் வெற்றி கனவை உடைத்து பல தொகுதிகளின் முடிவுகளை மாற்றி னோம். இப்போதும் கூடுதல் பலத்துடன் உள்ளோம்.

வளமான பகுதியாக உள்ள கொங்கு மண்டலம் ஆளும் அரசால் புறக்கணிக்கப்படுகிறது என்று எதை வைத்து கூறுகிறீர்கள்?

ஈஸ்வரன்: பொருளாதார ரீதியாக இப்பகுதி வளர்ந்து வருகிறது என்றால் அதற்கு காரணம், மக்களின் கடுமையான உழைப்புத்தான். அரசுக்கு ஏற்றுமதி, இறக்குமதி, வரி இனங்களில் அதிக வருவாய் கொடுப்பதும் இங்குதான். ஆனால் அரசு கொங்கு மண்டலத்திற்கு தனி கவனம் செலுத்தி புதிய திட்டங்கள் எதையுமே செய்யவில்லை. விவசாயம் தான் நாட்டின் உயிர்மூச்சு. இன்று உயிர் விடும் நிலையில் விவசாயிகள் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கோழிப்பண்ணை உள்ளிட்ட தொழில் களை விவசாயத்தில் சேர்க்க வேண்டும். விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப் பட வேண்டும். புதிய நீர்ப்பாசன திட்டங்கள் எதுவும் இல்லை. விவசாயத்திற்கு அடுத்தபடியாக ஜவுளி, பெரும்பாலான விசைத்தறிகள் நசிந்து விட்டது. நூல் விலை கடுமையாக ஏறிவருகிறது. பவர்கட் பிரச்சினையால் சிறு, குறு தொழில்கள் அழிவை நோக்கிப் போய்விட்டன. இதையெல்லாம் கணக்கில் எடுக்காமல் புறக்கணிக்கிறார்கள்.

கட்சி, ஆட்சி நிர்வாகத்தில் கவுண்டர் சமுதாயத்தினர் கூடுதலாகவே இருக்கும்போது சரியான பிரதிநிதித்துவம் இல்லை என்று எப்படி கூறுகிறீர்கள்?

ஈஸ்வரன்: தி.மு.க.விலும் சரி, அ.தி.மு.க.விலும் சரி... அவர்கள் கட்சியின் ஒன்றிய, நகர, மாவட்டச் செயலாளர்களை கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் கள் நியமிக்கிறார்கள் என்றால் அது அவர்களின் கட்சி வளர்ச்சிக்கு அதேபோல்தான் எம்.எல்.ஏ.வாக இருந்தாலும் அமைச்சர்களாக இருந்தாலும் அது அவர்கள் கட்சி சார்ந்தவர்களாக உள்ளார்கள். கவுண்டர் சமுதாயத்தின் மீது அவர்களுக்கு பாசம் இல்லை. அரசு பொறுப்புகளில் எங்கள் சமுதாயம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. அரசு தேர்வாணைய குழுவிலேயோ, பல்கலைக்கழக சிண்டிகேட் மெம்பர்களிலேயோ இப்படி பலவற்றில் எங்களுக்கான அடையாளம் இல்லை.

நீங்கள் நடத்துவது சாதி கட்சிதானே உங்களுக்கு எப்படி மற்ற சமூகத்தினர் ஓட்டுப் போடுவார்கள்?

ஈஸ்வரன்: சாதி கட்சியாகத்தான் தொடங் கினோம். பெரும்பான்மை எங்கள் சமூகம்தான். ஆனால் இப்போது எங்கள் கட்சியில் இருபது சதவீதம்பேர் மற்ற சமூகத்தின் உறுப்பினர்களாக, நிர்வாகிகளாக உள்ளார்கள். கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து சாதி மக்களுக்கும் நாங்கள் போராடுகிறோம்.

கவுண்டர் சமுதாய மக்கள் தங்கள் சாதி பலத்தை தெரிந்துகொள்ளத்தான் சென்ற பாராளுமன்ற தேர்தலில் உங்களுக்கு ஓட்டுப் போட்டார்கள். இப்போது கொ.மு.க.வை மறந்து விட்டார்கள் என கூறப்படுகிறதே?

ஈஸ்வரன்: நிச்சயமாக இல்லை. மேற்கு மண்டலத்தில் நாங்கள்தான் மாற்று சக்தி என்பதை உணர்ந்ததால் மக்கள் எங்களுக்கு வாக்களித்தார்கள். அப்போது 6 லட்சம் ஓட்டு. இப்போது 12 லட்சம் ஓட்டாக கூடுதல் பலத்துடன் உள்ளோம். வரும் தேர்தலில் 15 லட்சம் ஓட்டு எங்கள் பக்கம் இருப்பதை காட்டுவோம்.

உங்கள் சமுதாயத்தில் உள்ள பெரும் பணக்காரர்கள் மூலம் பல கோடிகள் வாங்கி செலவு செய்வதால் சென்ற தேர்தலில் லட்சக்கணக்கான ஓட்டுக்கள் பெற முடிந்தது என்ற கருத்து உள்ளதே...?

ஈஸ்வரன்: இது பொய் குற்றச்சாட்டு அவ்வளவுதான் சொல்ல முடியும்.

வரும் சட்டமன்ற தேர்தலில் உங்கள் கட்சியின் வியூகம் என்ன?

ஈஸ்வரன்: பிரதான அரசியல் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடப் போகிறோம். எங்களின் வாக்கு வங்கி 50 தொகுதிகளில் உள் ளது. எங்களோடு அணி சேரும் கட்சி யே ஆட்சி மாற்றத்தைக் கொடுக்கும். 30 தொகுதிகள் வரை எங்களுக்கு 25 ஆயிரம் ஓட்டுக்கள் உள்ளது.

எந்த கட்சியுடன் கூட்டணி சேர முடிவெடுத்துள்ளீர்கள்?

ஈஸ்வரன்: அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ் என எதுவாக இருப்பினும் எங்கள் கோரிக்கைகளை, எங்களின் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளும் கட்சியாக இருக்க வேண்டும். கொங்கு மண்டல மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அ.தி.மு.க. கூட்டணிக்கு போகப் போவதாகவும் செங் கோட்டையன் உங்களோடு பேசுவ தாகவும் கூறப்படுகிறதே...?

ஈஸ்வரன்: ஆமாம் செங்கோட் டையன் மட்டுமல்ல... தி.மு.க.வில் சு.முத்துச்சாமி, என்.கே.கே.பி.ராஜா உள்ளிட்ட பலரும் என்னோடு தொடர்பில் உள்ளார்கள். இப்போது எந்த கட்சியுடனும் பேசுவோம்.

கூட்டணியில் எவ்வளவு சீட் எதிர்பார்க்கிறீர்கள்?

ஈஸ்வரன்: சீட் கணக்கு டிமாண்ட் எதுவும் நாங்கள் வைக்க வில்லை. எங்கள் வாக்கு பலத்தை அடிப்படையாக வைத்து பேசுவோம். இணக்கமான கூட்டணி அமைந்தால் குதிரை பேரம் பேச மாட்டோம்.

No comments:

Post a Comment