Monday, August 16, 2010

சரண்யா பேய்! அலறும் கிராமம்!


திருமயத்தில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் 10-வது கி.மீட்டரில் இருந்தது அந்தக் கோணாப்பட்டு.

""இந்த ஊர்லயா இறங்கறீங்க. பாத்துத் தம்பி. ஏதோ இளம்பெண் ஆவி ஒண்ணு பகல்லயே சுத்துதாம். ஜாக்கிரதை''’என தன் பங்குக்கு திகில் ஊட்டி... நம்மை இறக்கிவிட்டார் அந்த பஸ் கண்டக்டர்.

கோணாப்பட்டு என்ற அந்த செட்டிநாட்டு கிராமத்தின் அத்தனை வீடுகளின் முகப்பிலும் வேப்பிலைக் கொத்துக்கள் செருகப்பட்டிருந்தன. வீடுகள் கதவடைத்திருக்க.... வெறிச்சோடிய வீதிகளில் நிசப்தம் மட்டுமே நடமாடிக் கொண்டிருந்தது.

அப்போது ஒரு பெரியவர்... நெற்றி முழுக்க விபூதிப்பட்டையும் குங்குமத்தோடும் வர.. அவர் இடுப்பைச் சுற்றி வேப்பிலைக் கொத்துக்கள் தென்பட்டன. மனிதர் நடமாடும் வேப்பமரம் போல் இருந்தார்.

""ஐயா என்ன இது கோலம்?''’ என்றோம்.

நம்மை ஏற இறங்கப் பார்த்த அவர் “""வெளியூர் புள்ளையா? அதான் உனக்கு ஊர் நிலவரம் புரியலை. இந்தா முதல்ல ஒரு கொத்து வேப்பிலையை பைல செருகிவச்சுக்க...''’என ஒரு கொத்தை இடுப்பில் இருந்து உருவிக் கொடுத்தார். பிறகு அந்த திகில் கதையையும் விவரித்தார்.
""இங்க சேகன் தெருவில் இருக்கும் கண்ணனோட மக சரண்யா.. இங்க இருக்கும் சரஸ்வதி ஸ்கூல்ல டென்த் படிச்சிது. ரொம்ப அழகான துருதுருப்பான பிள்ளை. நிறைய மார்க் வாங்கி ஸ்கூல்லயே முதல் மாணவியா பாஸாச்சு. படிப்பை அதே ஸ்கூல்ல தொடரணும்னு அந்தப் பிள்ளை அடம் பண்ண... அவங்க அப்பாவோ... தரமான ஸ்கூல்ல படிம்மான்னு கோட்டையூர்ல இருக்கும் சிதம்பரம் செட்டியார் ஸ்கூல்ல பிளஸ்-1 வகுப்பில் சேர்த்துவிட்டார். தினமும் பஸ்ல போய்ட்டுவந்த அந்தப் புள்ளைக்கு தனியா.. வெளியூர் போய்ட்டு வர்றது கஷ்டமா இருந்துச்சு போலிருக்கு. என்ன நினைச்சிதோ தெரியலை. போன 24-ந் தேதி வீட்டில் தூக்குப்போட்டு செத்துடுச்சு. இதைப்பார்த்து ஊரே துக்கப்பட்டு அழுதுச்சு. அப்புறம்...''’’என லேசாய் அவர் சஸ்பென்ஸ் வைக்க...

ஆர்வம் தாங்கமாட்டாமல் ""அப்புறம்?'' என்றோம்.

""அந்தப் பிள்ளை குறைச்ச வயசில் செத்ததால் அது ஆவியா சுத்த ஆரம்பிச்சிடிச்சி. சரண்யா செத்துப்போன மறுநாளே.. சரண்யா மேல் அதிக பாசம் வச்சிருந்த அவங்க சித்தி கல் யாணி... திடீர்னு வாந்தி எடுத்து மயங்கி விழுந்திருக்காங்க. அப்பவே உயிர் போய்டிச்சி. அப்புறம் இதே ஊர் டெலிபோன் ஆபீஸ்ல வேலை பார்க்கிற ஒரு பெண்ணு.... திடீர்னு வெறிச்சி வெறிச்சி பார்த்தபடி மயங்கி விழுந்திருக்கு. இப்ப அது உடம்பு சரியில்லாமக் கிடக்கு. தனியா உட்கார்ந்து படிச்சிக்கிட்டு இருந்த அழகுமீனாங்கிற மாணவி உடம்பில் அந்த ஆவி புகுந்து ஆட்டம்போட ஆரம்பிச்சிடிச்சி. இங்க இருக்கும் கணக்கு வாத்தியார் ராமு வீட்டுக் கதவை நடு ராத்திரி யில் இந்த ஆவி தட்டி.. "சார் எனக்கு கணக்கு சொல்லிக் கொடுங்க'ன்னு கேட்டுச்சாம். அவர் பயந்துபோய் வீட்டுக்குள் இருக்கும்போது அவர் கழுத்தை யாரோ நெரிக்கிறாப்ல இருந்துச்சாம்.

இதேபோல் சரண்யா கூட படிச்ச சூரக்குடி பொண்ணு ஒண்ணு... திடீர்னு மயங்கிவிழுந்து இப்ப சீரியஸா இருக்குதாம். இங்க ரோட்டில் போற வர்ற பலர் மயங்கி விழறாங்க. அந்தப் பொண்ணோட ஆவி இப்ப உக்கிரமா இருக்கு. அது எத்தனை பேரை பழிவாங்கப் போகுதோ தெரியலை. தம்பீ... யாராவது சின்னப் பொண்ணுங்க எதிர்ல வந்தா... வேப்பிலையை கைல வச்சிக்கிட்டு... ஏதாவது கடவுள் பேரை உச்சரி''’என்று ஏகத்துக்கும் உப கதைகளுடன் நம்மை வியர்க்கவைத்தார் அவர்.

நாம் கேமாராவை எடுக்க... ‘""அடப் போப்பா. நீ என்னைப் படம் எடுத்து புக்கில் போட்டா... அந்த சரண்யா புள்ளை ஆவி.. என்னை உண்டு இல்லைன்னு ஆக்கிடும்''’என்றபடி எஸ்கேப்பானார்.

அப்போது ஒரு வீட்டுத் திண்ணையில் இருந்த ஒரு நாய் நம்மை தீவிரமாய் முறைத்து நம் எலும்புவரை ஜில்லிட வைக்க... ’ச்சூ ச்சூ’ என அதை விரட்டிவிட்டு.. அந்த வீட்டின் கதவைத் தட்டினோம். கதவைத் திறந்த ராஜம் ""என் மகதான் அழகுமீனாள். உடம்பில் ஆவி புகுந்து பாடாப்படுத்திடிச்சி. படுஞ்சி கிராமத்துப் பூசாரிக்கிட்ட போய் மந்திரிச்சி கயிறு கட்டிட்டு வந்தோம். இப்ப கொஞ்சம் பரவால்ல''’என்றபடி கதவைத் தாழிட்டுக்கொண்டார்.


கணக்கு ஆசிரியர் ராமுவைத் தேடி அவரது பள்ளிக்குப் போனோம். அங்கிருந்த ஆசிரியர்கள் ""ராமு சாருக்கு அப்படி எதுவும் நடக்கலை. அவர் வெளில போயிருக்கார்''’ என்றனர்.

சேகன் தெருவில் இருக்கும் மாணவி சரண்யாவின் வீட்டுக்குச் சென்றோம். சோகத்தோடு நம்மிடம் பேசிய அவர் அம்மா காளியம்மாள் ""அன்னைக்கு காரைக்குடி கிளம்பினேன். அப்ப எங்க சரண்யா.. ஸ்கூலுக்கு சில நோட்புக் வேணும். வாங்கிட்டு வாம்மான்னு எழுதிக்கொடுத்து... நல்லாதான் வழியனுப்பிச்சுச்சு. திடீர்னு என்ன நினைச்சிதோ தெரியலை. நான் திரும்பிவந்து பாக்கறப்ப தூக்கில் தொங்குது. என் மக ஆவியா அலையறதா ஊர்ல பலரும் பயப்படறாங்க. அதான் நாங்களே பூசாரியை வச்சி பூஜைபோட்டோம். வேறு என்ன சொல்றது?''’-மகளின் நினைவுகள் கண்ணீராய் அந்தத் தாயின் கண்களில் கசிகிறது.

""சரண்யாவின் சித்தி இறந்தது எப்படி?'' என்றோம். இதற்கு பதில் தந்த சரண்யாவின் பெரியம்மா சித்ரா ""அவங்களுக்கு மனநோய் இருந்தது. அதற்கான மாத்திரையை அதிகமா சாப்பிட்டு.. பழைய மாவு தோசையை சாப்பிட்டதால் வாந்தி எடுத்து மயங்கினாங்க. அது ஒவ்வாமையால் ஏற்பட்ட மரணம்... அவ்வளவுதான்''’’ என்றார் நம்மிடம்.

ஊரில் டீக்கடை வைத்திருக்கும் பழனி யப்பனோ ""யாரோ கிளப்பிவிட்ட வதந் திங்க இது. இயல்பா பலருக்கும் ஏற்பட்ட உடல்நலக்குறைவை... சரண்யாவின் மரணத் தோட சம்பந்தப்படுத்தி.. பீதியைக் கிளப்பறாங்க. இவங்களால பூசாரிகளுக்கும் மந்திரவாதிகளுக்கும் தான் வருமானம். இன்னொரு வருத்தம்... இந்த ஆவி பீதியால்... எங்க பகுதியில் எந்த வேப்பமரத்திலும் இலைகளே இல்லை. எல்லா மரமும் மொட்டையா இருக்கு'' என்கிறார் சிரித்தபடி.

வேலையற்ற வீணர்களின் மூளை யற்ற வதந்திகளை வேடிக்கையாகக் கூட நம்பிடலாமா?

No comments:

Post a Comment