Thursday, August 19, 2010

யுத்தம் 80 - நக்கீரன் கோபால்




சிறை வளாகத்திற்கு வெளியே காத்திருந்த நேரத்தில் 2 பேர் எங்களை நோக்கி வந்தனர். பனியன்- வேட்டி- தலைப்பாகை என்ற உடையில் இருந்த அவர்களைப் பார்க்கும்போது கூலி வேலை செய்பவர்களைப் போல இருந்தார்கள். சிறைக்கு வெளியே ஒரு டீக்கடை முன் நாங்கள் நின்றுகொண்டிருந்தோம். எப்போது உள்ளேயிருந்து எங்களுக்கு அனுமதி கிடைக்கும்ற பரிதவிப்பில் நாங்கள் இருந்தோம்.

அவர்கள் 2 பேரும், ஆளுக்கொரு நாற் காலியை எடுத்துக் கொண்டு வந்தார்கள். எங்கள் பக்கத்தில் வந்த தும், ""சார்... வணக்கம்'' என்றார்கள். பதிலுக்கு நானும் உடனே வணக்கம் சொன்னேன்.

""நீங்க ரொம்ப நேரமா வெயிட் பண்ணிக்கிட்டிருக்கிறதை கவனிச்சிக்கிட்டிருந்தோம். அதனாலதான் சேர் எடுத்துக்கிட்டு வந்தோம். இதிலே உட்காருங்க.''

""வாங்கண்ணே... நீங்க எங்கே இருந்து வர்றீங்க.. என்ன வேலை செஞ்சுக்கிட்டீருக்கீங்கண்ணே?'' -என்றேன்.

""இதோ இங்கேதான்...'' என்று சிறை வளாகத்திற்கு சற்று தூரத்தில் இருக்கும் ஒரு பில்டிங்கை காட்டினார்கள். அது "இந்து' பத்திரிகையின் கோவை அலுவலகம்.

""இந்து ஆபீசில்தான் பேக்கிங் வேலை பார்த்துக் கிட்டிருக்கோம். உங்களைப் பார்த்ததும் வந்தோம் . சேரில் உட்காருங்க. டீ சாப்பிடுங்க.''

""பரவாயில்லீங்க... உள்ளேயிருந்து அனுமதி வரும்னு காத்துக்கிட்டிருக்கோம். அதனால உட்கார நேரமில்லை. டீ மட்டும் வாங்கிக் கொடுங்க.''

நான் கேட்டதும் அவர்களுக்கு அத்தனை சந்தோஷம். எங்களுக்கு டீ வாங்கிக் கொடுத்தார்கள். சாப்பிட்டோம்.

மணி 3.30. எங்களுக்கு சிறை நிர்வாகத்திடமிருந்து அனுமதி கிடைத்தது. நான், ப.பா.மோகன், அவரது ஜூனியர்கள் ஆகியோர் சிறை வளாகத்திற்குள் சென்றோம். மகரனும், நண்பர் சுடரோனும், கோவை முகவர் வெங்கடாச்சலமும் வெளியில் காத்திருந்தார்கள். சிவாவின் விடுதலையை எதிர்பார்த்து பத்திரிகையாளர்கள் வரத் தொடங்கிவிட்டார்கள். தம்பி சிவாவை எப்போது வெளியே கொண்டு வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு எங்களைப் போலவே அவர்களுக்கும் இருந்தது.

நிமிடங்கள் கரைந்துகொண்டே இருக் கின்றன. 10-ஆவது நிமிடம். என் லைனுக்கு சிவாவின் துணைவியார் ஜெயந்தி வருகிறார்.





அழுதபடியே அவரது குரல் கேட்கிறது. ""அண்ணே... .. மாமா இறந்துட்டாங்க''. -சிவா அப்பாவின் உயிர் பிரிந்துவிட்டது. ""தன் மகன் விடுதலையாகி வருவான்'' என்ற நம்பிக்கையோடு உயிரைத் தாங்கிப் பிடித்துக்கொண்டிருந்தவருக்கு நம்பிக்கைப் போனதால்தான் இறந்துவிட்டாரோ! "சிறை நிர்வாகம் சிவாவை விடுதலை செய்யாதா? அவரை உள்ளே வைத்துக்கொண்டே இல்லை என்று சொன்னதிலிருந்து, ஏதோ திட்டம் போடுகிறார்களோ' என்ற சந்தேகம் கிளம்பியது.

மாலை 4.15 மணி. சிவப்பு விளக்கு சுழல ஒரு கார் வருகிறது. அதிலிருந்து டி.ஐ.ஜி. எஸ்றா இறங்குகிறார். பின்வாசல் வழியாக அவர் சிறைக் குள் நுழைய, நம் சந்தேகம் வலுத்தது. அதோடு ஒரு பழைய சம்பவமும் நினைவுக்கு வந்தது. நமது திருச்சி-பெரம்பலூர் மாவட்ட நிருபராக ரொம்பவும் துணிச்சலுடன் செயல்பட்டவர் தம்பி செல்வராஜ். துணிவுடன் செய்திகளை வெளியிட்டதற்காகவே படுபாவிகள் சிலர் அவரது உயிரைப் பறித்தார்கள். அவர் நிருபராக இருந்தபோது, திருச்சி மத்திய சிறைச்சாலைக்குள் மாட்டுகறி சமைப்பது, பணம் வைத்து சீட்டாட்டம் ஆடுவது, கத்தி, பட்டா கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை கைதிகள் வைத்து சண்டை போடுவது இதுபற்றி யெல்லாம் விரிவான செய்தியை படங்களுடன் அனுப்பியிருந்தார். அது அட்டைப்படக் கட்டுரையாகவே வெளியானது. 1996-ல் அந்த கட்டுரை வெளியானபோது திருச்சி ஜெயில் சூப்பிரண்டாக இருந்தவர் இந்த எஸ்றாதான்.

அந்த செய்தியை மனதில் வைத்துக்கொண்டு நக்கீரனை பழிவாங்கத் துடிக்கிறார் என்ற செய்தி ஏற்கனவே நமக்கு வந்திருந்தது. அதற்காகத்தான் அவர் இங்கே வந்திருக்கிறாரா? 6 மணிக்கு சிறையின் கொடிகம்பத்தில் பறக்கும் தேசியக் கொடி இறக்கப்பட்டுவிடும். அதற்கு முன்பாக தம்பியை வெளியே கொண்டுவந்துவிடவேண்டும். உள்ளேயிருந்து எந்த ரெஸ்பான்சும் இல்லை.

மாலை 5.20 மணி. டி.ஐ.ஜி எஸ்றா வெளியே வருகிறார். ஜெயில் சூப்பிரண்டெண்ட் தாஸ் உடன் வருகிறார். எஸ்றாவை வழியனுப்பிவிட்டு சூப்பிரண்டெண்ட் திரும்பும்போது நான் உரக்க குரல் கொடுத்தேன். ""அண்ணே... சிவா அப்பா இறந்துட்டாரு. சிவாவை சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க. வரிசையா லீவு நாள் வருது. அவரால அவங்க அப்பா உடலைப் பார்க்க முடியாம போயிடும். டயம் ஆகுது. சீக்கிரம் அனுப்புங்க'' என்றேன். என் பக்கமே முகத்தை திருப்பாமல் வேகமாக உள்ளே போனார் சூப்பிரண்டெண்ட் தாஸ். நமது சந்தேகம் வலுவடைந்தது.

அந்த நேரத்தில், மனித நேயம் கொண்ட ஜெயிலர் செல்வின் நாங்கள் இருக்கின்ற இடம் அருகே வந்தார். ""யாருப்பா.. அங்கே கூட்டம் போடுறது.. போ.. போ..'' என்று யாரையோ விரட்டுவது போல சத்தம்போட்டுக்கிட்டே நாம் இருக்கும் பக்கம் வந்தவர் திடீரென ரகசிய குரலில்,

""தம்பி.. ஏதோ ஹண்ட்ரட் பார் டூ தவுஷனாம் (100/2000). கொள்ளேகால் கேஸாம்.. பெயில் எடுத்துட்டீங்களா.. ஏதோ சதி நடக்குது'' என்று சொல்லிவிட்டு மறுபடியும் உரத்த குரலில், ""யப்பா.. சொன்னா கேட்க மாட்டீங்களா? போ.. போ..'' என்று யாரையோ விரட்டுவதுபோல வேறு பக்கம் சென்றுவிட்டார். டி.ஐ.ஜி. எஸ்றா வந்து சென்றதன் நோக்கம் புரிந்துவிட்டது. அப்பா உடலைக்கூட சிவா பார்க்கக்கூடாது என்ற அரக்க மனதோடு சிறை நிர்வாகம் செயல்படுவது புரிந்தது.

கொள்ளேகால் வழக்குதான் நாம் முதன்முதலில் பெயில் எடுத்த வழக்கு. அதை வைத்து ஏன் சிக்கல் பண்ண நினைக்கணும்? டக்கென்று எனக்கு யோசனை உடனடியாக மகரனைப் பிடித்தேன். ""தம்பி.. நீங்கபோய், நமக்கு டீ வாங்கிக் கொடுத்த அந்த 2 பேரும் இருக் காங்களான்னு பாருங்க. அவங்க இல்லைன்னா, உடனே இந்து ஆபீசுக்குப் போய் ஃபேக்ஸ் நம்பரை வாங்கிக் கொடுங்க'' என்று சொல்லிவிட்டு, சென்னை அலுவலகத்தில் இருந்த தம்பி சிவக்குமாரை தொடர்புகொண்டேன். தம்பி.. கொள்ளேகால் பெயில் ஆர்டர் காப்பி உடனே வேணும். மகரன் ஒரு ஃபேக்ஸ் நம்பர் சொல்லுவாரு. அதற்கு அனுப்பி வையுங்க'' என்றேன்.

இந்து அலுவலத்திற்குப் போய் ஃபேக்ஸ் நம்பர் கேட்டார் மகரன். அங்கே எடிட்டராக இருக்கும் ராமகிருஷ்ணன் யோசித்திருக்கிறார். எனக்கு இந்த தகவல் தெரிந்ததும் உடனே இந்து என்.ராமுக்கு போன் செய்தேன். மணி 5.30 ஆகிவிட்டதையும், 6 மணிக்குள் தம்பி சிவாவை வெளியே கொண்டு வர வேண்டிய அவசரத்தையும் சொல்லி, அவங்க கோவை ஆபீஸ் ஃபேக்ஸ் பயன்படுத்திக்க அனுமதிக்கும்படி கேட்டேன். சட்டென நிலைமையைப் புரிந்துகொண்ட என்.ராம், ""நீங்க புரசீட் பண்ணுங்க கோபால். நான் ராமகிருஷ்ணன்கிட்டே டைரக்ஷன் கொடுத்திடுறேன்'' என்றார். அடுத்த சில நிமிடங்களில், சென்னையிலிருந்து அவர் கோவைக்கு உத்தரவிட, நமக்கு ஃபேக்ஸ் நம்பர் கிடைத்தது.

உடனடியாக நமது சென்னை அலுவலகத்திற்கு அதைக் கொடுத்து, ஃபேக்ஸ் அனுப்பச் சொன்னோம். ஃபேக்ஸை ரிசீவ் பண்ண நண்பர் சுடரோனும், மகரனும் கோவை இந்து அலுவலத்திற்குப் போய்விட்டனர். நிமிடங்கள் வேக வேகமாகக் கரை கின்றன.

""ஃபேக்ஸ் வந்திடிச்சா..'' பதட் டத்துடன் கேட்கிறேன்.

அட்வகேட்டின் ஜூனியர்கள் திருஞானசம்பந்தமும் லெனினும் மகரனிடமிருந்து அதை வாங்கி வருவதற்காக வேகமாக ஓடுகிறார்கள். இருவரும் ஃபேக்ஸ் காப்பியை வாங்கிக் கொண்டு வந்தார்கள். சிறைச்சாலையின் மெயின் கதவை அடித்து தட்டுகிறோம். கதவு திறந்ததும், இதோ கொள்ளேகால் கேஸ் பெயில் ஆர்டர் என்று தருகிறோம்.

சூப்பிரண்டெண்ட் உள்ளிட்ட எல்லோருக்கும் ஷாக். இந்த ஆர்டரை காரணம்காட்டி நாம் காலங்கடத்த ப்ளான் பண்ணியிருந்தோம். இது எப்படி இவர்களுக்குத் தெரிந்தது என்று குழம்பிக்கொண்டி ருந்தார்கள். அப்போது மணி 5.45.

""சார்.. சிவா அப்பா இறந்துட் டாரு. இவர் ஒரே பையன். ஈமக்கிரியை இவர்தான் செய்யணும்.'' ..-நிலைமையை நான் விளக்கிக்கொண்டிருந்தபோதே, ஜெயிலர் செல்வின் சிவாவை ரெடி பண்ணி, வாசலில் நிறுத்தி வைத்திருந்தார். எல்லா கேஸ்களிலும் பெயில் பெற்றதற்கான டாக்குமென்ட்டுகள் சரியாக இருந்ததையடுத்து, சிவாவை ரிலீஸ் செய்தது சிறைத்துறை. மணி சரியாக மாலை 5.55.

11 மாதங்கள், 11 நாட்கள் கழித்து விடுதலையான சிவாவை அப்படியே கட்டித்தழுவினேன். அவரது கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. எனக்கும் சந்தோஷத்தில் கண்கள் கலங்கின. வாசலுக்கு வந்ததும் சால்வையைப் போர்த்தி வாழ்த்தினோம். காத்திருந்த பத்திரிகையாளர்கள் கொத்தாக சிவாவை சூழ்ந்து கொண்டார்கள். சிறையின் கொடிக்கம்பத்திலிருந்து தேசியக்கொடி இறங்குவதைப் பார்க்க முடிந்தது.

விடுதலை பெற்ற மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை. சிவாவிடம் அவரது அப்பா இறந்த செய்தியை மெதுவாகச் சொன்னோம். விடுதலையான நேரத்தில், காதில் விழுந்த அதிர்ச்சி செய்தி அவரை கதற வைத்துவிட்டது. நானும் ப.பா.மோகனும் மிகுந்த சிரமப்பட்டு ஆறுதல் படுத்தினோம்.

சிவா அப்பா இறந்த தகவலை மைசூர் கோர்ட், மைசூர் போலீஸ் கமிஷனர் அலுவலகம் ஆகியவற்றிற்கு தந்தி மூலமாகத் தெரிவித்து, காரியங்கள் முடியும்வரை நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரினோம். கோவைக்குப் புறப்பட்டு வந்துகொண்டிருந்த தம்பி காமராஜ், சிவா அப்பாவின் மரணச் செய்தியைக் கேட்டதும், காங்கேயத்தில் எங்களுடன் சேர்ந்து கொள்வதாகத் தெரிவித்தார்.

கோவையிலிருந்து சிவாவுடன் புறப்பட்ட நாங்கள், காங்கேயத்தில் தம்பியையும் அழைத்துக் கொண்டு பெருங்கருணைபாளையத்திற்குள் நுழைந்தோம். கிராமமே திரண்டிருந்தது. சிறை மீண்ட சிவாவை வரவேற்பதற்காக காத்திருந்தவர்கள், அவரது அப்பாவின் மரணத்தால் துக்கத்தில் மூழ்கியிருந்தனர். உற்சாகமாக முழங்க வேண்டிய வாத்தியக்கருவிகள் சோக ராகத்தை இசைத்துக் கொண்டிருந்தன.

உறவினர்களும் அக்கம்பக்கத்தவர்களும் சூழ்ந்திருக்க, சிவா அப்பாவின் உடல் அசைவற்றுக் கிடந்தது. பெரிய மலர் மாலையை , சிவா அப்பாவின் உடல் மீது வைத்து அஞ்சலி செலுத்தினேன். துக்கம் தாங்காமல் சிவா கதறி அழ, அவரது தோளைப்பிடித்து ஆறுதல் படுத்தினார் தம்பி காமராஜ். மகனின் விடுதலைக்காக சந்தோஷப் படமுடியாமல், கணவரைப் பறிகொடுத்துவிட்டு அழுதுகொண்டிருந்த சிவாவின் அம்மா சிவா கதறுவதைப் பார்த்ததும், ""நீ அழாதேப்பா.. உன்னை அழைத்து வருவேன்னு ஆசிரியர் சொன்னார். அதுவரைக்கும் அப்பா உசுரை காப்பாத்தி வைக்கணும்னு என்கிட்டே சொல்லியிருந்தார். அவர் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாத்திட்டார். நான்தான் என் தெய்வத்தை காப்பாத்த முடியாம போயிட்டேன்'' என்று அழுதுகொண்டே சொன்னது எல்லோரையும் கலங்கவைத்துவிட்டது.

ஜெயலலிதா ஆட்சியின் கொடுமையினால் மேலும் ஓர் உயிரைப் பறிகொடுத்தது நக்கீரன் குடும்பம். கொடுமைகள் அத்துடன் நின்றதா?

-யுத்தம் தொடரும்

No comments:

Post a Comment