Wednesday, August 11, 2010

நக்கீரனின் தேர்தல் கள ஆய்வில் இம்முறை இடம்பெறுவது.. குமரி மண்டலம்.


இருக்கும் கூட்டணியில் எழுகின்ற சலசலப்புகளை அடக்கி, கூட்டணியை இறுக்கமாக்கும் முயற்சிகள் ஒரு அணியிலும், புதியபுதிய கட்சிகளை கூட்டணிக்குள் சேர்ப்பதற்கான மரியாதை நிமித்தமான சந்திப்புகளை நடத்துவது இன்னொரு அணியிலுமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆட்சி மீதான அதிருப்திகள் சின்னதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும் அதைப் போராட்ட வடிவமாக்கி மக்களின் கவனத்தை ஈர்ப்பதற் கான வியூகங்களை வகுக்கிறது எதிர்க்கட்சி. ஏற்கனவே தொடங்கப்பட்ட திட்டங்களை விரைந்து முடித்தும், புதிய திட்டங்களைத் தொடங்கியும் மக்களைக் கவர நினைக்கிறது ஆளுங்கட்சி. இரு தரப்பிலும் காட்டப்படும் இந்த வேகத்திற்கு முக்கிய காரணம், நெருங்கி வந்துகொண்டிருக்கும் சட்டமன்றத் தேர்தல்தான்.

தமிழக வாக்காளர்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை மண்டலவாரியாகத் துல்லியமாக காட்டிவரும், நக்கீரனின் தேர்தல் கள ஆய்வில் இம்முறை இடம்பெறுவது.. குமரி மண்டலம்.

நெல்லை மண்டலத்தின் இரண்டாம் பகுதி என குமரி மண்டலத்தைச் சொல்லலாம். தமிழகத்தின் தெற்கு எல்லை. மூன்று கடல் தாலாட்டும் இந்த தமிழ் நிலம், இந்தியாவின் தெற்கு முனையாகவும் இருக்கிறது. கூப்பிடு தூரத்தில் கேரள மாநிலம். மக்களின் தமிழ்ப் பேச்சில் மலையாள வாடை. மேற்கு தொடர்ச்சி மலையின் இனிமையான சாரல். இப்படி இயற்கையின் வரப்பிரசாதமாக அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டமும், கடலோர மாவட்டமான தூத்துக்குடியும் இந்த மண்டலத்திற்குள் வரையறுக்கப் பட்டுள்ளன.

தூத்துக்குடி, கன்னியா குமரி ஆகிய 2 நாடாளு மன்றத் தொகுதிகளுக் குட்பட்ட விளாத்திகுளம், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி, கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 12 சட்டமன்றத் தொகுதிகள் இம்மண்டலத் திற்குள் அடங்குகின்றன.

தமிழகத்தில் உள்ள மற்ற மண்டலங் களைவிட இந்த மண்டலத்தில்தான் தேசியக் கட்சிகளின் கொடி உயரப் பறக்கிறது. அத னால் இங்கு அரசியல் தட்பவெப்பம் சற்று மாறுதலாகக் காணப்படுகிறது. நமது களஆய்வில் இந்த மண்டலத்தில் அரசியல் கட்சிகளுக்கு என்ன செல்வாக்கு என்பதை வரைபடம் காட்டுகிறது.






தூத்துக்குடி


விவசாயம், தொழிற்சாலைகள், மீன்பிடிப்பு, உப்பளம் இவற்றை மையமாகக் கொண்ட தூத்துக்குடி மாவட்டத்தில் 3 சட்டமன்றத் தொகுதிகள் (தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம்) ஆளுந்தரப்பின் வசமும், 3 சட்டமன்றத் தொகுதிகள் (ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம், கோவில்பட்டி) எதிர்த்தரப்பின் வசமும் இருப்பதிலிருந்தே இம்மாவட்டத்தில் இரு கழகங்களும் சமபலத்துடன் களம் காண்பதைப் புரிந்துகொள்ள முடியும். நாடார், தலித், முக்குலத்தோர், மீனவர்கள், நாயக்கர், ரெட்டியார் என்ற வரிசையில் சமுதாய வாக்குகளின் பலம் இம்மாவட்டத்தில் உள்ளது. மெஜாரிட்டியான நாடார் சமுதாயத்தின் வாக்குகளைப் பெறுவதில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியே முன்னிலையில் இருக்கிறது. இந்த சமுதாயத்தில் இருந்த அ.தி.மு.க.வுக்கான வாக்குவங்கி மெல்ல மெல்லக் குறைந்துள்ளது. வெங்கடேச பண்ணையார் என்கவுன்ட்டரில் தொடங்கி அனிதா ராதாகிருஷ்ணன் கட்சி மாறுதல் வரை பல கார ணங்கள் இதன் பின்னணியில் உள்ளன.

மீனவர் சமுதாயத்தினர் பாரம்பரியமாக அ.தி.மு.க.வுக்கு வாக்களித்து வருபவர்கள். மத்திய அரசின் மீன்பிடி மறுசீராய்வு கமிட்டியின் அறிக்கையால் ஏற்படவிருந்த பாதிப்புகளை தி.மு.க. முன்முயற்சியெடுத்து தடுத்து நிறுத் தியதன் மூலமாக, தி.மு.க.வுக்கு இம்மக்க ளிடம் புதிய செல்வாக்கு கிடைத்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அ.தி.மு.க.வுக்கு எதிரான நிலையையே மேற்கொண்டு வந்துள்ளனர் இம்மாவட்டத்தில் உள்ள தலித் மக்கள். அதற்கு முக்கிய காரணம், இம்மாவட்டத்தில் உள்ள கொடியங்குளத்தில் ஜெ ஆட்சியின்போது நடந்த தாக்குதல்தான். இச் சம்பவத்தைத் தொடர்ந்து இப்பகுதியில் பெரும் வளர்ச்சியடைந்த புதிய தமிழகம் கட்சியின் பக்கம் தலித் மக்களான தேவேந்திரகுல வேளாளர் களின் வாக்கு வங்கி உறுதியாக உள்ளது. தற்போது அ.தி.மு.க.வுடன் புதிய தமிழகம் கைகோர்த்துள்ள நிலையில், இழந்த தலித் செல்வாக்கை அ.தி.மு.க. மீண்டும் பெறலாம் என்ற எதிர்பார்ப்பு மிகுந்துள்ளது. அதே நேரத்தில் கட்சி சாராத தலித் மக்கள் இந்த புதிய உறவை ரசிக்கவில்லை என்பதை நமது ஆய்வில் அறிய முடிந்தது.

முக்குலத்தோர் வாக்குவங்கியை அ.தி.மு.க. தன் வசம் வைத்திருக்க, சிறுபான்மை வாக்குகளை தி.மு.க. வசப் படுத்தியுள்ளது. தெலுங்குபேசும் ரெட்டியார், நாயக்கர் சமு தாயத்தினரின் வாக்குகள் தி.மு.க., தே.மு.தி.க., ம.தி.மு.க. என்ற வரிசையில் பிரிகிறது. தீப்பெட்டித் தொழிற்சாலைகள் நிறைந்த கோவில்பட்டி பகுதியில் கம்யூனிஸ்ட்டுகளின் செங்கொடி பறக்கிறது. தூத்துக்குடி உள்ளிட்ட நகரப் பகுதிகளில் பா.ஜ.க.வுக்கு ஓரளவு செல்வாக்கு உள்ளது.

விவசாயத்திற்கான மும்முனை மின்சாரத்தில் வெட்டு, விலைவாசி ஏற்றம், மணல் கொள்ளை இவற்றால் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பது ஆளுங்கட்சிக்கு பெரும் சவாலாக உள்ளது. அதேநேரத்தில், 100 நாள் வேலைத்திட்டம், கலைஞர் காப்பீட்டுத் திட்டம், திருமண உதவித்திட்டம் ஆகியவை இத்தனை ஆண்டுகளாக இரட்டை இலைக்கு வாக்களித்து வந்த கிராமப்புற பெண்களை சூரியன் பக்கம் திரும்ப வைத்திருப்ப தையும் களத்தில் காண முடிந்தது. திருமண உதவித்திட்டம், கர்ப்பிணிப் பெண்களுக்கான உதவித் திட்டம் போன்றவை அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் வந்தால் நின்றுபோய்விடுமோ என்ற தயக்கமும் கிராமப்புற பெண்களிடம் இருப்பதை அவர்களின் பேச்சு எதிரொலிக்கிறது.

அடிப்படை பிரச்சினைகளை முன்வைத்து எதிர்க்கட்சியும், திட்டங்களை முன்வைத்து ஆளுங்கட்சியும் செயல்படுவதால் போட்டி பலமாகவே இருக்கிறது. சமுதாயரீதியான வாக்குகளை ஒருங்கிணைத்துப்பெறுகின்ற சக்தி யாரிடம் கூடுதலாக இருக்கிறதோ அவர்களுக்கே இந்த மாவட்டத்தில் வெற்றி வாய்ப்பு.


கன்னியாகுமரி


நாஞ்சில் நாடு எனப்படும் குமரி மாவட்டம் இயற்கை அன்னையின் மடியில் படுத்து தாலாட்டு கேட்கும் அதிர்ஷ்டம் வாய்ந்த மண். பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகள் இம்மாவட்டத்தின் நீர் ஆதாரங்களாக இருக்கின்றன. ஆனால், அண்மைக்காலமாகத் தலைதூக்கியுள்ள ரியல் எஸ்டேட் தொழிலால் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள் ளது. பணப்பயிரான ரப்பர் மரத் தோட்டங்களும், பெண்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் முந்திரி ஆலை, செங்கல் சூளை ஆகியவைதான் தற்போது இம்மாவட்டத்தின் முக்கிய தொழிலாக இருக்கிறது.

மாவட்டத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் இந்து நாடார் சமுதாயத்தினரே அதிகம். அடுத்ததாக, கிறிஸ்தவ நாடார்கள் உள்ளனர். மூன்றாவதாக, மீனவர்களின் வாக்குவங்கி உள்ளது. பத்மநாபபுரம், குளச்சல், விளவங்கோடு இந்த 3 தொகுதிகளிலும் வெற்றி-தோல்வியை மாற்றக் கூடிய சக்தியாக நாயர் சமுதாயத்தினரின் வாக்கு கள் உள்ளன. கன்னியாகுமரி, நாகர்கோவில் தொகுதிகளில் பிள்ளைமார் சமுதாயத்தினரும், தலித் சமுதாயத்தினரும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இவர்களைத்தவிர, மலைவாழ் மக்கள் உள்ளிட்ட பிற சமுதாயத்தினரின் வாக்குகளையும் அரசியல் கட்சிகளால் அலட்சியப்படுத்தி விடமுடியாது.

தமிழகத்தில் ஜாதிகணக்கைத் தாண்டி, மதரீதியாக வாக்குகள் ஒருங்கிணையும் மாவட்டமாக குமரி மாவட்டம் இருப்பதால், இங்கு அதிக அளவில் உள்ள இந்து நாடார் சமுதாயத்தினரின் வாக்குகளைக் கூடுதலாகப் பெறும் கட்சியாக பா.ஜ.க. இருக்கிறது. தனிப்பட்ட பலமிக்க கட்சியாக இம்மாவட்டத்தில் விளங்கும் பா.ஜ.க. கடந்த எம்.பி. தேர்தலின்போது தி.மு.க. கூட்டணி யை எதிர்த்து 2-வது இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது. மற்ற கட்சிகளில் உள்ள இந்துக்களும்கூட பா.ஜ.க.வுக்கு ஆதரவான மன நிலையில் இருப்பதை குமரி மாவட்டக் களத்தில் காண முடிகிறது.

நெல்லை நமக்கு எல்லை, குமரி நமக்கு தொல்லை என்று ஒருகாலத்தில் கருதிய தி.மு.க இப்போது இங்கு கணிசமான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. ஜெ. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மதமாற்றத் தடைச் சட்டத்திற்குப் பிறகு, கிறிஸ்தவ சமுதாயத்தினர் தங்களுக்கு தி.மு.கதான் பாதுகாப்பு என்று கருதியதே இந்த வளர்ச்சிக்கு காரணம். சுனாமி குடியிருப்பு, மீன்பிடிப்பவர்களுக்கான பாதுகாப்பு போன்ற அம்சங்களால் மீனவர்கள் மத்தியிலும் தி.மு.க.வுக்கு புது செல்வாக்கு கிடைத்துள்ளது. பாரம்பரியமாக அ.தி.மு.க.வுக்கு வாக்களித்து வந்த மீனவர்களில் ஒரு பகுதியினர் தே.மு.தி.க. பக்கம் சாய்ந்திருப்பது விஜயகாந்த் கட்சிக்குப் பலம்.

காங்கிரசின் பாரம்பரிய வாக்குகளில் சரிவு ஏற்பட்டிருந்தாலும், பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சி என்ற அளவில் அதற்கு கணிசமான வாக்குவங்கி இன்னமும் இருக்கிறது. தொகுதியில் செல்வாக்கு பெற்றிருந்த கம்யூனிஸ்ட்டுகள் தற்போது அதை தக்கவைத்துக்கொள்ளப் போராடுகிறார்கள். அவர்களின் செல்வாக்கான திருவட்டாறு தொகுதி மறுசீரமைப்பில் காலியாகிவிட்டது. விளவங்கோடு, திருவட்டாறு பகுதி விவசாயிகளுக்கான தண்ணீரை நெய்யாறு இடதுகரை வாய்க்காலில் கேரள அரசுதான் திறந்துவிடவேண்டும். தோழர்கள் தங்கள் கட்சியின் ஆட்சி நடைபெறும் மாநிலத்தை வலியுறுத்தாமல் இருப்பதோடு, இதற்காக காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தும்போது அதற்கு எதிராக களம் இறங்குவது விவசாயிகளிடம் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.

சுற்றுலாத்தலங்கள் நிறைந்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ்ராஜன் அத்துறைக்கு அமைச்சராக இருக்கிறார். எனினும், சுற்றுலாவில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி எதுவும் இல்லை என்ற அதிருப்தி மக்களிடம் உள்ளது. மந்திரி தனது ஆதரவாளர் களைத் தவிர மற்றவர்களைக் கண்டுகொள்வதில் லை என்ற பேச்சும் உள்ளது. இத்தகைய அதிருப்தி யை சாதகமாக்கிக் கொள்வதில் அ.தி.மு.க.வைவிட தே.மு.தி.க. முன்னிலையில் இருக்கிறது.

பெரிய தொழிற்சாலைகள் எதுவும் இல்லாத நிலையில், குமரி மாவட்ட இளைஞர்கள் வெளி மாவட்டங்களுக்கு வேலை தேடிச் சென்றவண்ணம் உள்ளனர். ரப்பர் தொழிற்சாலை தொடங்கப்படும் என்ற தி.மு.க.வின் வாக்குறுதி நிறைவேறவில்லை. இத்தகைய அதிருப்திகள் இருந்தாலும், தி.மு.க. அரசின் திட்டங்களும், அ.தி.மு.க.வின் பலவீன மான நிலைமையும், பா.ஜ.க.வின் தனிப்பட்ட செல்வாக்கினால் வாக்குகள் பிரிவதும் ஆளுந்தரப்புக்கு தற்போது சாதகமானதாக இருக்கிறது.

குமரி மண்டலத்தில், கன்னியாகுமரி மாவட்டம் தி.மு.க-காங்கிரசுக்கு கைகொடுக்கும் வகையிலும், தூத்துக்குடி மாவட்டம் கடும்போட்டி நிலவும் களமாகவும் உள்ளது.

-(வரும் இதழில், தமிழகம் முழு நிலவரம்)

No comments:

Post a Comment