Thursday, August 12, 2010

திடீர் திருப்பம்! கட்சிகளின் விதவிதமான மூவ்!


""ஹலோ தலைவரே... காங்கிரஸ் தலைமையில் கூட்டணின்னு பா.ம.க. நிறுவனர் ராமதாஸிடமிருந்து புதுக்குரல் ஒலித்திருப்பதைக் கவனிச்சீங்களா?''

""அதோடு, தே.மு.தி.க. இடம்பெறும் அணியில் நீங்க இடம்பெறுவீங்க ளான்னு கேட்டதற்கு, அரசியலில் நிரந்தர நண்பனுமில்லை, எதிரியு மில்லைன்னு ராமதாஸ் பதில் சொல்லியிருக்காரே.. தே.மு.தி.க. சம்பந்தமான கேள்விகளுக்கே பதில் சொல்லமாட்டேன் என்றிருந்த ராமதாஸின் விரதம் கலைந்திருக்குதே.. இதற்கெல்லாம் பின்னணி என்னவாம்?''

""பா.ம.க. பெருந்தலைகளிடம் விசாரித்தேங்க தலைவரே.. ...காங்கிரஸ் சைடிலிருந்து அன்புமணிகிட்டே அகமது பட்டேல் பேசிக்கிட்டிருக்கிற தகவல் கிடைச்சது. நாங்க எங்கே இருந்தாலும் அங்கே நீங்களும் இருக்க ணும்னு சொன்ன அகமது பட்டேல், எங்ககூட விஜயகாந்த்தும் வருவார், உங்க இரண்டுதரப்புக்கும் வருத்தங்கள் இருந்தாலும் அதையெல்லாம் மறந்துட்டு எங்களோடு கைகோர்க்கணும்னு சொல்லியிருக்காராம். அதோடு, காங்கிரசோடு பா.ம.கவும் தே.மு.தி.க.வும் ஒரே அணியில் இருப்பது பற்றி விஜயகாந்த்கிட்டேயும் பேசிட்டதா அன்புமணி கிட்டே அகமது பட்டேல் சொல்லியிருக்காரு.''

""விஜயகாந்த் என்ன சொன்னாருன்னு அன்புமணி கேட்டிருப்பாரே?''

""அவர் கேட்பதற்கு முன்னாடி, அகமது பட்டேலே அதையும் சொல்லிட்டாராம். கொல்லைப்புறவாசல் வழியா பார்லிமெண்ட் போனவர்னு சொன்னதைத்தவிர, பா.ம.க. வைப் பற்றி நான் எந்த விமர்சனமும் செய்யலைன்னு விஜயகாந்த் சொன்னதாகவும், பா.ம.க.தான் தன்னை கூத்தாடின்னும் தொப்புளில் பம்பரம் விட்டவன்னும் கடுமையா பேசியதாகக் குறைப்பட்டுக் கொண்டதையும் அன்பு மணிகிட்டே சொன்ன அகமதுபட்டேல், விஜயகாந்த்தைப் பொறுத்தவரை, அரசியல் மேடைகளில் இந்த மாதிரியான விமர்சனங்களெல்லாம் சகஜம்னு நினைக்கிறார். ஒரே அணியில் இருப்பதில் அவருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. நீங்களும் இதே முடிவுக்கு வாங்க. உங்க அப்பாகிட்டே பேசுங்க. நம்ம 3 கட்சிகளும் கூட்டணியை உறுதி செய்தபிறகு, தனி அணியா, தி.மு.க. அணியா, அ.தி.மு.க. அணியான்னு முடிவு செய்வோம்னு சொன்னாராம்.''

""அன்புமணி இந்த விவரங்களை சொன்னப்ப, ராமதாஸின் ரியாக்ஷன் என்ன?''

""கலைஞரை சந்திக்க பா.ம.க.வின் ஐவர் குழு அப்பாயிண்ட்மெண்ட் கேட்டு டென்ஷனாக வே இருந்த ராமதாஸ், காங்கிரஸ் சைடிலிருந்து இப்படி ஒரு அழைப்பு வந்ததில் ரொம்பவே ரிலாக்ஸாகிட்டார். தே.மு.தி.க.வோடு ஒரே அணியில் இருக்க முடியுமான்னு முதலில் யோசித்த ராமதாஸ், காங்கிரசோட கணக்குகளைப் பற்றி அன்புமணி மூலமா கேள்விப்பட்டதும், சரிங்கிற மனநிலைக்கு வந்துட்டாராம். அதன் எதிரொலிதான், அர சியலில் நிரந்தர நண்பனுமில்லை, எதிரியுமில் லைங்கிற பதில். கூட்டணி அமைவதில் ஆர்வம் காட்டும் ராமதாஸ், சில பிரமுகர்கள் மூலமாக தே.மு.தி.க.வில் முக்கியத் தலைவர் ஒருவரிடம், எப்படியாவது இந்தக் கூட்டணி உருவாக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளாராம்.''

""பா.ம.க.வையும் தே.மு.தி.க.வையும் ஒரே கூட்டணியாக தங்கள் பக்கம் வைத்துக்கொள்ள நினைக்கும் காங்கிரசோட கணக்கை தே.மு.தி.க. எப்படி பார்க்குது?''

""அவங்க ரொம்ப உன்னிப்பா பார்க்குறாங்க. தே.மு.தி.க.வுக்கு கிடைத்திருக்கும் தகவல் என் னன்னா, 2014-ம் வருசம் நடக்கும் எம்.பி. தேர்தலில் காங்கிரசுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவைத்து, தன் தலைமையில் இந்திய அரசு அமையணும்ங்கிற கணக்கில் இருக்கிறார் ராகுல்காந்தி. அதற்கு முன் னோட்டமா, காங்கிரசை தனித்து களமிறக்கிப்பார்க் கும் முயற்சியாக 3 மாநிலங்களைத் தேர்ந்தெடுத்தார். முதலில், உ.பி. அங்கே முலாயமையும் மாயாவதி யையும் தவிர்த்துவிட்டு காங்கிரஸ் களமிறங்கியது. ராகுல் கணக்கு ஒர்க் அவுட் ஆகலை. அடுத்ததா, மேற்குவங்கம். அங்கே உள்ளாட்சித் தேர்தலில் மம்தாவின் திரிணாமூல் காங்கிரசோடு சேராமல் தனித்து நின்றது காங்கிரஸ். டெபாசிட்டே பறிபோயிடிச்சி. இரண்டு இடங்களிலும் ராகுல் ஃபார்முலா தோற்றாலும், தமிழ்நாட்டிலும் அதே ஃபார்முலாப்படி தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சிகளும் இல்லாமல் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைக்கலாமானு ராகுல் யோசிக்கிறார் என்பதுதான் தே.மு.தி.க. சொல்லும் தகவல்.''

""அதனாலதான் பா.ம.க.வையும் தே.மு. தி.க.வையும் ஒரே கூட்டணியில் கொண்டு வரும் முயற்சியில் காங்கிரஸ் தீவிரமா இருக்குதா? இதற்கு தே.மு.தி.க தரப்பில் என்ன ரெஸ்பான்ஸ்?''

""தமிழகத்தில் ராகுலின் பார்வைபட்ட முதல் கட்சி தே.மு.தி.க.தான். பண்ருட்டி ராமச்சந்திரனின் டெல்லி சோர்ஸ்கள் மூலம், எம்.பி. தேர்தலின் போதே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு முடிவு அமையாமல் போயி டிச்சி. இப்போது, அ.தி.மு.க.வுடன் தே.மு. தி.க. பேசிக்கிட்டுத் தான் இருக்குது. திருச்சியில் 14-ந் தேதி நடக்கும் கண்டனப் பொதுக்கூட்டத்தில் கூட்டணி பற்றி அதி காரப்பூர்வமா ஜெ. அறிவிக்கப்போவதற்காக, அ.தி.மு.க. சைடிலிருந்து தே.மு.தி.கவை நெருக்குறாங்க. இதே நேரத்தில் காங்கிரஸ் தரப்பிலிருந்து முயற்சிகள் தொடர்ந்துக் கிட்டே இருக்குது. தே.மு.தி.க.வும் காங்கிரஸ் கூட்டணியை எதிர்காலக் கணக்குகளின் அடிப்படை யில் விரும்புவதால் பேச்சுவார்த்தைகள் நடக்குது. போனவாரம்கூட ராகுல் சைடிலிருந்து சில முக்கியமான சிக்னல்கள் வந்திருக்குதாம்''.

""என்ன சிக்னல்?''

""அ.தி.மு.க.வையும் தி.மு.க.வையும் மாறி, மாறிப் பார்த்துவிட்ட தமிழக மக்கள், மூன்றாவதா ஒரு கட்சியை மாற்று சக்தியா எதிர்பார்க்கிறாங்க. இது தமிழக நடுத்தர மக்களின் எதிர்பார்ப்பு. காங்கிரஸ் கட்சி, நடுத்தர மக்களின் கட்சி. தே.மு.தி.க.ங்கிறது அடித்தட்டு மக்களின் கட்சி. இரண்டும் சேர்ந்தால் தமிழக அரசியலோட முடிவுகளே மாறும். தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக் கும் வெறும் 15 லட்சம் வாக்குகள்தான் வித்தியாசம். காங்கிரஸ் சப்போர்ட் இல்லைன்னா, இந்த வித்தி யாசத்தை தி.மு.க.வால் எதிர்கொள்ள முடியாது. காங்கிரஸ் தனி அணியா நின்றால், வழக்கத்தைவிட கூடுதல் ஓட்டு வாங்கும். இதற்கு 1989 தேர்தல்தான் உதாரணம். அதுபோல, இந்த முறை காங் கிரஸ் அணியில் தே.மு.தி.க.வும் பா.ம.க.வும் நின்றால் , நம்ம தயவு இல்லாமல் யாரும் ஆட்சியமைக்கமுடியாது. கூட்டணி மந்திரி சபை, துணைமுதல்வர் பதவி, முக்கிய இலாகான்னு பேரம் பேசலாம்ங்கிறது டெல்லியிலிருந்து வந்திருக்கும் சிக்னலாம்.''

""இந்த சிக்னலை தே.மு.தி.க. எப்படி பார்க்குது?''

""தி.மு.க.வுடனான உறவை காங்கிரஸ் முறித்தால்தான் மற்ற மூவ்களை மேற் கொள்ள முடியும். மத்தியில் ஒரு வருடமே ஆட்சி செய்திருக்கும் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு தி.மு.க.வின் தயவு ரொம்பவும் தேவை. மம்தா, சரத்பவார், மாயாவதி போன்ற நிலையில்லாத உறவுகளை நம்பி காங்கிரசால் பயணம் செய்ய முடியாது. ராகுலின் கணக்குகளை வைத்து ரிஸ்க்கான மூவ்களை சோனியா மேற்கொள்வாரா? ராகுல் போவது ராங் ரூட். அதேபோல கலைஞரும் ஜெ.வும் கண்டுக்காததால்தான் காங்கிரஸ் கூட்டணின்னு ராமதாஸ் சொல்கிறார். இதைப் பற்றியெல்லாம் கூர்ந்து கவனித்து, தேர்தல் நேரத்தில் எது சாத்திய மாகவும் சாதகமாகவும் இருக்குமோ அந்த முடிவை எடுப்போம்னு குடும்பத்தினரிடம் விஜயகாந்த் சொல்லியிருக்காராம்.''

""தி.மு.க. தயவில்தான் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடக்குதுன்னு தே.மு.தி.க. தரப்பு நினைக்குது. ஈ.வி.கே.எஸ். இளங்கோவனோ மாநிலத்தில் காங்கிரஸ் தயவில் நடக்கும் தி.மு.க. ஆட்சியைப் பற்றித் தொடர்ந்து விமர்சனம் செய்துக்கிட்டிருக்காரே?''

""ஆமாங்க தலைவரே... .. ஜாடை மாடையா விமர்சனம் செய்துக்கிட்டிருந்த இளங்கோவன், சமீபநாட்களா நேரடி அட்டாக்கில் ரொம்ப தீவிரமா இருக்கிறார். சென்னையில் நடந்த கட்சிக்கூட்டத் தில், காங்கிரஸ் போட்ட பிச்சையால்தான் தி.மு.க. ஆட்சி நடக்கிறது. நீங்க முதல்வர், உங்க மகன் துணைமுதல்வர்னு குடும்பத்தினர் பதவியை அனுபவிக்க காரணம் காங்கிரஸ் தான். காமராஜர் படிப்பை இலவசமா கொடுத்தாரு. அரிசியை இலவசமா கொடுத்திருந்தாருன்னா தமிழக மக்கள் அதை தின்னுட்டு, மாடு மாதிரி சுத்திக்கிட்டிருந் திருப்பாங்க. பொறம்போக்கு பயலுகளெல்லாம் பல்கலைக் கழக துணைவேந்தராவது காமராஜர் ஆட்சியில் நடக்கலை. என்னோட பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியின் அடிமட்டத் தொண்டர்களிலிருந்து தலைவர்கள் வரை அங்கீகாரம் இருக்குது. இதையெல்லாம் டெல்லியில் கோள்மூட்டி சரிபண்ணலாம்னு நினைக்காதே.. உங்க கட்சியின் பேச்சாளர் எங்க தலைவர்கள் ராஜீவ் பற்றியும் ராகுல் பற்றியும் பேசியது சம்பந்தமான சி.டி. ஆதாரம் இருக்குதுன்னு ஆவேசமா பேசினார் இளங்கோவன்.''

""அவர் குறிப்பிடும் பேச்சாளர் மேலேதான் தி.மு.க. தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்குதே?''

""தலைவரே... ஒழுங்கு நடவடிக்கைக்குள்ளான அந்தப் பேச்சாளர், வாகை முத்தழகன். அவரை நான் தொடர்பு கொண்டு என்ன பேசுனீங்கன்னு கேட்டேன். அவரு, ராதாபுரத்தில் பஸ்ஸ்டாண்டு கட்ட 1 ஏக்கர் நிலம் போதும். ஆனா, ஜெ. ஆட்சியில் அதைக்கூட ஒதுக்கலை. எங்க கட்சி எம்.எல்.ஏ. அப்பாவுதான் தன் சொந்த நிலத்தைக் கொடுத்தாரு. பஸ் ஸ்டாண்டுக்கு நிலம் கொடுத் ததற்காக உங்க அப்பா, அம்மா பெயரை பஸ் ஸ்டாண்டுக்கு வைக்கவான்னு பஞ்சாயத்து தலைவர் கேட்டப்ப, எங்க தலைவ ரோட பெற்றோர் பெயரை வையுங்கன்னு சொன்னவர் அப்பாவு. இந்தப் பின்னணி தெரியாமல், காமராஜர் பெயர் வைக்கலைன்னு இளங்கோவன் பேசுவது பொருத்தமான்னு கூட்டத்திலே பேசினேன்னு சொன்னார்.''

""இளங்கோவனோ, வாகை முத்தழகன் தன் பேச்சில், ஜெ அன்னைக்கு ராஜீவை வான்னு கூப்பிட்டார். இப்ப ராகுலை வான்னு கூப்பிடுறாருன்னு பேசியதா குற்றம்சாட்டுறாரே?''

""முத்தழகன் அதை மறுக்கிறார். ராஜீவ் கொலையால் ஆட்சிக்கு வந்த ஜெ., ராஜீவின் ரத்தத்தால் ஒண்ணும் நாங்க ஆட்சிக்கு வர லைன்னு பேசுனவர்தானேன்னு பேசினேன். இது தப்பான்னு கேட்கிறார். வாகை முத்தழ கன் மேலே ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருப் பது பற்றி, டி.ஆர்.பாலு மூலமாக சோனியா காந்திக்கு தெரிவித்திருக்கும் தி.மு.க. தலைமை, இளங்கோவனுடைய பேச்சுகள் பற்றியும் புகாரா தெரிவித்திருக்குது. ஏற்கனவே இளங் கோவன் மேலே இதுபோன்ற புகார்கள் போனப்ப, உடனே தமிழக சி.எம்.மை நேரில் பார்க்கும்படி இளங்கோவனுக்கு சோனியா உத்தரவிட்டிருந்தார். இளங்கோவனோ, சி.எம். அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்கலை. அதனால தான் தொடர்ந்து பேசுறேன்கிறாராம்.''

""அறிவாலயத்தில் நடந்த தி.மு.க. சொற் பொழிவாளர்கள் கூட்டத்திலும் டென்ஷன், சுவாரஸ்யம் எல்லாம் இருந்ததாமே?''





""க.சுப்பு பேசுறப்ப, இலவச டி.வி. கொடுத்துவிட்டு, தலைவர்களின் பேச்சையும் லைவ் ரிலே பண்ணிவிடுவதால் எங்க பேச்சுக்கு எதிர்பார்ப்பு இல்லை. சினிமாக்காரங்களைத் தான் கூட்டத்துக்கு கூப்பிடுறாங்கன்னு சொன் னார். தி.மு.க. கொ.ப.செ.வான மத்திய அமைச் சர் ஆ.ராசா, அமெரிக்காவில் மீடியா பெரியள விற்கு வளர்ந்திருந்தாலும், அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஒபாமா தெருத்தெருவா போய் மைக் பிடித்து பேசித்தான் ஆட்சியைப் பிடித்தார்னு சொல்லி, சுப்புவுக்கு நம்பிக்கை கொடுக்கும் விதத்தில் பேசினார். சிம்பம்பட்டி ஆறுச்சாமிங்கிறவர், தன் மாவட்டத்தில் உடல் நலம் குன்றிப்போன பேச்சாளர் பற்றிப்பேசி யாரும் கண்டுக்கலைன்னு சொல்ல, கலைஞர் பேசுறப்ப... ஒரு பேச்சாளர் இப்படி ஆனது பற்றி தலை மைக்கழகத்திற்கு தெரிவிக்காதது யார் தவறுன்னு கேட்டதோடு, கஷ்டப்படும் பேச்சாளர்களுக்கு செய்துள்ள உதவிகளையும் குறிப்பிட்டார்.''

""ம்...''

""கலைஞரின் உழைப்பால் ஒன்றியச் செயலாளர் களெல்லாம் ஸ்கார்ப்பியோ காரில் போகும் நிலை மைக்கு வந்து, அந்தக் காரில் கடவுள் துணைன்னு எழுதி வைத்திருப்பதைக் குறிப்பிட்டு, பகுத்தறிவு கொள் கையை வளர்க்கணும்னு சொன்னார் சாவல்பூண்டி சுந்தரேசன். அ.தி.மு.க.வில் இருந்து வந்தவர்களில் முத்து சாமி மட்டும்தான் பேசினார். கலைஞரின் பல சாதனை களில் ஒன்றே ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டு மணிக் கணக்கில் பேசுகிற ஆற்றல் தி.மு.க. பேச்சாளர்களுக்கு உண்டு. அ.தி.மு.க.விலிருந்து வந்த நாங்கள் தி.மு.க. வினரைவிட திறமையானவர்கள். எங்க ஆட்சியில் எந்த சாதனையும் இல்லாதப்பவே மணிக்கணக்கில் பேசுவோம்னு சொல்ல, கலைஞர் உள்பட எல்லாத் தலைவர்களும் ரசித்து சிரிச்சாங்க. எதிர்பார்ப்பு இல்லாமல் கட்சிக்கு வந்திருப்பதா சொன்ன குஷ்பு, தலைமை விரும்புவதை செயல்படுத்த தயாரா இருக்கேன்னு சொன்னார். பேச்சாளர்களுக்கு இரண்டு நாள் ஊட்டியில் பயிற்சி முகாம்ங்கிற அறிவிப்பு பலருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்குது.''

""அதைவிட அவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியைக் கொடுத்த செய்தி ஒன்றை நான் சொல்றேன்... வழக்கமா இதுபோல அறிவாலயத்தில் நடக்கிற கூட்டத்துக்கு வந்தால் 2 ஆயிரம் ரூபாய் அன்பளிப்பு கொடுக்கப்படுமாம். இந்த முறை 5 ஆயிரம். அதோடு, வி.ஐ.பி. சூட்கேஸ், அதற்குள்ளே டைட்டான் வாட்ச், போத்தீஸ் சில்க்ஸில் வாங்கப்பட்ட வேட்டி, சட்டை இருந்ததை நம்பமுடியாத ஆச்சரியத்தோடு பார்த்துக்கிட்டே இருக்காங்க தி.மு.க பேச்சாளர்கள்.''

மிஸ்டுகால்!


வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கேட்டு அரியலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் காடுவெட்டி குரு பேசியதன் அடிப்படையில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோல, சேலத்தில் அன்புமணி பேசியது பற்றியும் காவல்துறை ஆய்வு செய்து வருகிறதாம்.


ம.தி.மு.க.வின் மாநிலக் கட்சி அந்தஸ்தை தலைமைத் தேர்தல் ஆணையம் ரத்து செய்தாலும், அக்கட்சியின் பம்பரம் சின்னம் அடுத்த 6 ஆண்டுகளுக்கு நீடிக்கும். இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து, உச்சநீதிமன்றம் செல்லத் தயாராகி வருகிறார் வைகோ.



புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றைத் தொடர்ந்து அ.தி.மு.க. கூட்டணிக்கு விடுதலைச் சிறுத்தைகளையும் எப்படியாவது கொண்டு வந்துவிடவேண்டும் என்று காய் நகர்த்தி வருகிறது அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். காலத்தில் அ.தி.மு.க.வுக்கு இருந்த தலித் வாக்குவங்கியைத் திரும்பப் பெறவே இந்த தீவிர முயற்சியாம். திருச்சி ஆர்ப்பாட்டக் கூட்டத்திலும் தலித் பிரச்சினைகளை ஒருங்கிணைத்துப் பேச திட்டமிட்டுள்ளாராம் ஜெ.

No comments:

Post a Comment