Thursday, August 5, 2010

கட்சிகளின் செல்வாக்கு! தேர்தல் வரலாற்று ஆய்வு!


கடந்த இதழில் தமிழக அரசியலில் கூட்டணி சித்தாந்தம் தொடங்கியபிறகு தேர்தல் களங்களில் எந்தெந்த கட்சிகள் எவ்வளவு வாக்குகளைப் பெற்றன என்ற ஆய்வினை வெளியிடத் தொடங்கினோம். காமராஜர் சகாப்தம், எம்.ஜி.ஆர். சகாப்தம் என இரு கட்டங்கள் வெளியிடப் பட்டன. எம்.ஜி.ஆர் மறைவுக்குப்பிறகு நடந்த தேர்தல் நிலவரத்தையும், பிளவுபட்ட அ.தி.மு.க இணைந்த பிறகு நடந்த தேர்தலின் நிலவரத்தையும் இந்த இதழில் வெளியிட்டுள்ளோம்.


எம்.ஜி.ஆர் மறைவுக்குப்பின்


உடல்நலக்குறைவால் 1987-ல் எம்.ஜி.ஆர். மரண மடைந்தார். இதன்பின் அவரது மனைவி ஜானகி அம்மாள் முதல்வரானார். இதனால் அ.தி.மு.க. இரண்டானது. ஜானகி அணி, ஜெயலலிதா அணி என உருவாகியது. சட்டமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்கப்படாததால் ஜானகி அரசு கலைக்கப்பட்டு கவர்னர் ஆட்சி அமலானது. அ.தி.மு.க.வின் தேர்தல் சின்னமான இரட்டை இலை முடக்கப்பட்டது. இந் நிலையில் 1989-ல் நடந்த பொதுத்தேர்தலில் 13 ஆண்டுகளுக்குப் பின் தி.மு.க. வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக கலைஞர் முதல்வரானார்.அ.தி.மு.க. ஆதரவு வாக்குகள் இரண்டாகப் பிரிந்த தாலும், காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டதும் தி.மு.க.வின் நிலையான வாக்கு வங்கியும் அக்கட்சிக்கு சாதகமான அம்சங் களாயின. அ.தி.மு.க. தொண்டர்களில் பெரும்பாலானவர்கள் ஜெ. அணி பக்கமே இருக்கிறார்கள் என்பதை அந்தத் தேர்தல் முடிவு காட்டியது. ஜானகி அணி பெயரளவுக்கே இருந்தது. பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி, தமிழகத்தின் மீது தனி அக்கறை செலுத்தி பலமுறை தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்ததால் காங்கிரஸ் 22% வாக்குகளைப் பெற்றது. தி.மு.க. கூட்டணியில் இருந்த கம்யூனிஸ்ட்டுகள், ஜனதாதளம் ஆகியவை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் பெரும்பாலானவற்றில் வெற்றி பெற்றன.பிரிந்து நின்றதும், கூட்டணி அமைக்காததும்தான் தோல்விக்கு காரணம் என்பதை உடனடியாக உணர்ந்த அ.தி.மு.க.வின் இரு அணிகளும் மீண்டும் இணைந்து, இரட்டை இலைச் சின்னத்தைப் பெற்று மதுரை கிழக்கு, மருங்காபுரி இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்றது. 1989 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்ததால் 39 எம்.பி. தொகுதிகளில் வெற்றி கிடைத்தது. மத்தியில் இருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி, தி.மு.க. அரசைக் கலைத்தது அ.தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி.


அ.தி.மு.க. இணைந்த பிறகு...


அ.தி.மு.க. அணிகள் இணைந்தபிறகு சந்தித்த பொதுத் தேர்தலான 1991 தேர்தலில் ராஜீவ் மரணத்தால் ஏற்பட்ட அனுதாப அலை அ.தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியை பெரும் வெற்றி பெறச் செய்தது. மிருகபல மெஜா ரிட்டியுடன் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு அமைய, தி.மு.க. சார்பில் இரண்டு எம். எல்.ஏக்கள் மட்டுமே சட்டமன்றத்திற்குள் நுழைய வேண்டியதாயிற்று. வன்னியர் சங்கமாக இருந்து அரசியல் கட்சியான பா.ம.க. இந்தத் தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிட்டு 1 சீட்டைப் பெற்றது. வடமாவட்டத்தில் தனி செல்வாக் குள்ள கட்சியாக பா.ம.க. உருவானது.1993-ல் 9 மாவட்டச் செய லாளர்களுடன் தி.மு.க.விலிருந்து வெளியேறிய வைகோ தொடங்கிய ம.தி.மு.கவினால் தி.மு.க நெருக் கடிக்குள்ளானது. கட்சியைப் பலப்படுத்த கலைஞர் எடுத்த முயற்சிகள் பலனளித்தன. ம.தி.மு.க.வால் 3.5% வாக்கு வங்கியைத் தாண்ட முடியவில்லை. இந்த காலகட்டத்தில் மேலிடத்தின் கூட்டணி முடிவால், காங்கிரசிலிருந்து பிரிந்த த.மா.கா.வுடன் கூட்டணி அமைத்த தி.மு.க., ஜெ.வை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்தது. 2001 தேர்தலில் காங்கிரஸ், த.மா.கா., கம்யூனிஸ்ட்டுகள், பா.ம.க. என மெகா கூட்டணியுடன் அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியமைக்க, 2006-ல் மீண்டும் தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது.கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் தேசிய கட்சியான பா.ஜ.க., இரு கழகங்களுடன் மாறி மாறி கூட்டணி அமைத்து தனது வெற்றிக்கணக்கைத் தொடங்கி, கூட்டணி இல்லாத நிலையில் அந்தக் கணக்கை மூடிவிட்டது. நடிகர் விஜயகாந்த்தின் தே.மு.தி.க. இரு கழகங்களை விரும்பாதவர்களின் விருப்பத்திற்குரிய கட்சியாக மாறியது. விடுதலைச்சிறுத்தைகள், புதியதமிழகம் ஆகிய தலித் அமைப்புகள் வட-தென் மாவட்டங்களில் முக்கிய சக்தியாக வலுவடைந்தன. சாதிக்கட்சிகள் பல தோன்றியபோதும் அவை ஒரு தேர்தலுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல் முடங்கின.தற்போதைய நிலையில், தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் தேர்தலுக்குத் தேர்தல் மாறி மாறி ஆட்சியைப் பிடிக்கின்றன. இதில் காங்கிரசுடனான உறவு முக்கிய பங்கு வகித்தாலும் அக்கட்சியின் வாக்குவங்கி வளர்ச்சி காணவில்லை. 2009 நாடாளுமன்றத்தேர்தலில் பா.ம.க.வுக்கு ஏற்பட்ட தோல்வி அதன் செல்வாக்கு பற்றி கேள்வியை எழுப்பியுள்ளது. தே.மு.தி.க. யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற கேள்வி அரசியல் தளத்தில் முக்கியமானதாக இருக்கிறது. தலித் அமைப்புகளுடனான கூட்டணி என்பது பெரிய கட்சிகளால் தவிர்க்க முடியாத அம்சமாக இருக்கிறது. கம்யூனிஸ்ட்டுகளும், ம.தி.மு.க.வும் சில தொகுதிகளில் மட்டும் செல்வாக்கு பெற்ற கட்சிகளாக இருக்கின்றன. .


தி.மு.க.-அ.தி.மு.க. இடையிலான செல்வாக்கு வித்தியாசம் மிகக் குறைவாகவே இருப்பதால் கூட்டணி பலமே தேர்தல் முடிவுகளில் முக்கிய பங்காற்றுகிறது. அதனால் தான் கூட்டணி மாற்றம் ஏற்படுமா, புதிய கட்சிகள் உள்ளே வருமா, பழைய கட்சிகள் வெளியேறுமா என்ற கேள்விகள் இரு அணிகளிலும் வலுப்பெற்று, ஊடகங்கள் வாயிலாக தமிழக மக்களிடம் விவாதப்பொருள் ஆகியுள்ளது.

No comments:

Post a Comment