Monday, September 6, 2010

ஆப்பம், இறால் குழம்பு கேட்டு விமானத்தை இயக்க மறுத்த பைலட்


கடந்த 29ம் தேதி பகல் 2.15 மணிக்கு கொச்சியில் இருந்து ஏர் இந்தியா விமானம் (ஐ.சி-519) சென்னை வழியாக பெங்களூர் புறப்பட இருந்தது.

அந்த விமானத்தை கேப்டன் தினகரன் என்பவர் இயக்க வேண்டி இருந்தது. ஆனால் அவர் அன்று காலை 11.30 மணிக்குதான் இன்னொரு விமானத்தை இயக்கிக் கொண்டு கொச்சி வந்து சேர்ந்தார்.

உடனடியாக மற்றொரு விமானத்தை இயக்க வேண்டி நிலையில் அவரும் விமான சிப்பந்திகளும் விமான நிலையத்துக்கு அருகே உள்ள ஹோட்டல் அபாதுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அங்கு தனக்கு ஆப்பமும், இறால் குழம்பும் வேண்டும் என்று விமானி கேட்டார். ஆனால் அந்த உணவுகள் அங்கில்லை.

இருந்தாலும் ஆப்பம், இறால் குழம்பு தான் வேண்டும் என்று பிடிவாதம் பிடித்த தினகரன், ஹோட்டலில் இருந்த வேறு எந்த உணவையும் உண்ண மறுத்துவிட்டார்.

இதையடுத்து இறால் மீன் வரவழைக்கப்பட்டு கறி தயார் செய்யப்பட்டது. ஆனால், தான் கேட்ட நேரத்தில் அந்த உணவு கிடைக்காததால் அதை உண்ண மறுத்தார் தினகரன்.

மேலும் நான் இன்னும் சாப்பிடவில்லை, இதனால் விமானத்தை இயக்க முடியாது என்று மறுத்தார்.

இதையடுத்து அந்த விமானம் மாலை 4 மணிக்குப் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், 4.30 மணிக்கு பசி பொறுக்காமல் விமான நிலையத்துக்குள் இருந்த ஒரு உணவகத்தில் சாப்பிட்டு முடித்த விமானி, தனக்கு மிகவும் டயர்டாக இருப்பதாகக் கூறி விமானத்தை இயக்க மறுத்தார்.

இந் நிலையில் 5.30 மணி ஆகிவிட்டது. அப்போதும் விமானம் புறப்படாததால் ஆத்திரமடைந்த 138 பயணிகளில் பலர் கொச்சி விமான நிலையத்தின் துணை மேலாளரின் அறை முன் போராட்டம் நடத்தினர்.

அப்படி இப்படி என மணி இரவு 7.30 ஆகியும் விமானத்தை இயக்க விமானி மறுத்தார். இதையடுத்து அங்கிருந்த டூட்டி மேனேஜர்கள் விமானியில் காலில் விழாத குறையாக கெஞ்சியதையடுத்து விமானத்தை இயக்க அவர் ஒப்புக் கொண்டார்.

ஆனால், அதற்குள் அந்த விமானத்தின் பேட்டரிகளில் பிரச்சனை ஏற்பட்டுவிட, புதிய பேட்டரியை சென்னையிலிருந்து வந்த இன்னொரு விமானத்தில் வரவழைத்தனர்.

அதைப் பொறுத்திய பின் கிட்டத்தட்ட 7 மணி நேரம் தாமதமாக இரவு 9 மணிக்கே அந்த விமானம் புறப்பட்டுச் சென்றது.

இந்தப் பிரச்சனையால் ஏர் இந்தியாவின் ஒரு சர்வதேச விமானம் உள்ளிட்ட அடுத்தடுத்து கிளம்ப இருந்த 3 விமானங்களும் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன.

கடந்த ஒரு வாரமாக மூடி மறைக்கப்பட்ட இந்த விவகாரம் இப்போது தான் வெளியில் வந்துள்ளது.

No comments:

Post a Comment