Sunday, August 8, 2010

தமிழகத்தில் பாகிஸ்தான் கைவரிசை!


கம்பளி, பெட்ஷீட்களை தோளில் சுமந்தபடி, கன்னியா குமரியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வந்தான் அந்த வட நாட்டு வாலிபன். ""பீ.பீ. ரெண்டு குவார்ட்டர் தே தோ'' என்ற படி புத்தம் புதிய ஆயிரம் ரூபாய் நோட்டை நீட்டினான்.

நோட்டை வாங்கிப் பார்த்த டாஸ்மாக் ஊழியர் பத்மகுமாருக்கு சந்தேகம் பிறந்தது. நோட்டை எந்திரத்தில் வைத்து சோதித்தார். சந்தேகம் தீர்ந்தது. அந்த நோட்டு கள்ளநோட்டு. சக ஊழியர் மூலம் போலீசுக்குத் தகவல் கொடுத்தார் பத்மகுமார். தாமதிக்கவில்லை போலீஸ்.

டி.எஸ்.பி. ராதாகிருஷ்ணன் தலைமையில் வந்த போலீஸ், அந்த வடநாட்டு வாலிபனை, அவன் தங்கியிருந்த லாட்ஜுக்கு தள்ளிக்கொண்டு போனது. அந்த அறையில் இருந்த அவனது கூட்டாளிகளான முகம்மது முஸ்தபா ஷேக், முகம்மது சலிக் ஷேக், முகமது அஷ்ரா ஜல்ஷேக், மஜிபுர் ஷேக், நாஜிக் ஷேக், அன்பது ஷேக், முகம்மது மத்யூர் இஸ்லாம் ஆகியவர்களையும் கைது செய்தது. அவர்களிடம் இருந்த 6 லட்சத்து 21 ஆயிரத் திற்கான கள்ள நோட்டுகளையும் நல்ல நோட்டுகளாக அவர்கள் மாற்றிய 8 ஆயிரத்து 600 ரூபாயையும் கைப்பற்றினார்கள்.

இந்தக் கும்பல் ஜார்கண்ட் மாநிலம் பியாக் பூரைச் சேர்ந்தது. இவர்களுக்கு கள்ள நோட்டுகளை சப்ளை செய்து, கமிஷன் அடிப்படையில் தமிழகத் திற்கு அனுப்பியவன் கொல்கத்தாவைச் சேர்ந்த ஷேக். ""இந்த ஷேக்தான் கள்ளநோட்டை அச்சடிக்கிறானா? ""இல்லை சார்... பாகிஸ்தானில் இருந்து வருகிறதாம்'' -இது போலீசாரிடம் அந்தக் கும்பல் சொன்ன தகவல்.

""இவர்கள் ஜார்கண் டில் இருந்து சென்னைக் கும், சென்னையில் இருந்து குமரிக்கும் வருவதற்கு ரயில் டிக்கெட்டைக்கூட கள்ள நோட்டைக் கொடுத்துதான் எடுத்திருக் கிறார்கள். வந்த முதல்நாளே 11 நோட்டுகளை மாற்றியிருக்கிறார்கள்'' என்கிறார் எஸ்.பி.ராஜேந்திரன்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமநாதபுரம், திருவாடானை, ராமேஸ்வரம், கீழக்கரை, பரமக்குடி பகுதிகளில் இரண்டு மூன்று மாதங்க ளாகவே 1000 ரூபாய், 500 ரூபாய் கள்ள நோட்டுகளின் நடமாட்டம் அதி கரித்துக்கொண்டிருக்கிறது.

ஏ.டி.எம். சென்டர்களில் எடுக்கும் நோட்டுக்களில்கூட கள்ள நோட்டுகள் கலந்திருக்கின்றன.

""ஏ.டி.எம்.மில் மட்டுமில்லை... வங்கியில் பணம் போட்டுவிட்டு வந்த அரைமணி நேரத்தில் வங்கியிலிந்து போன்வரும். "நீங்க டெபாசிட் செய்த தில் 5 ஐநூறு ரூபாய் நோட்டுகள் கள்ள நோட்டுகள். நீங்கள் எங்கள் ரெகுலர் கஸ்டமர் என்பதால் போலீசில் புகார் செய்யவில்லை. உடனே நல்ல நோட்டு களை கொடுத்துவிட்டு, இதை வாங்கிச் செல்லுங்கள்' என்பார்கள். பதட்டத் தோடு போய் மாற்றிக் கொடுப்போம். இல்லையென்றால் போலீஸ் நம்மை அல்லவா கைது செய்வார்கள்'' என்கிறார்கள் இராமநாதபுரம் வியாபாரிகள்.

கள்ளநோட்டுப் பிரச்சினை பெரிதானதால் 27.7.10-லிருந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டது க்யூ பிராஞ்ச் போலீஸ். கீழக்கரை, ஏர்வாடி பகுதியில் கள்ளநோட்டுப் பேர்வழி என்று அடையாளம் காணப்பட்ட பாலகிருஷ்ணனுக்கு போன் போட்ட க்யூ பிராஞ்ச் அதிகாரி ""என்னையும் உங்கள் குழுவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு லட்சத்திற்கு நான் எவ்வளவு நல்ல நோட்டுத் தரணும்? எங்கே வரணும்?'' என்றார்.

""அறுபதாயிரத்தோடு ராம்நாடு சின்னக்கடை தெருவுக்கு வாங்க'' என்றார் பாலகிருஷ்ணன்.

சின்னக்கடை தெருவில் வசமாக மாட்டிக்கொண்ட பால கிருஷ்ணனை, தூக்கி வந்து முறைப்படி விசாரித்தார்கள் இன்ஸ்பெக் டர் ரவியும், எஸ்.ஐ. பரக்கத்துல்லாவும். அவர் கொடுத்த தகவலால் ஏர்வாடி ஹோட்டல் அதிபர் மகன் செய்யது முகம்மது அல்தாப்பும், ராமநாதபுரம் சிவக்குமாரும், கீழக்கரை அபுதாகீரும் சிக்கினார்கள்.

இவர்களிடம் இருந்து 1 லட்சத்து 63 ஆயிரத்துக்கான கள்ள நோட்டுகளை மட்டும் கைப்பற்ற முடிந்தது.

""எங்கே பிரிண்ட் பண்றாங்களோ தெரியாது சார்... பாகிஸ்தான்ல இருந்தும், பங்களாதேஷ்ல இருந்தும், மேற்கு வங்களாம், உத்தர்பிரதேஷ், ஜார்கண்ட் வழியா சென்னை, கேரளா வந்து கன்னியாகுமரிக்கு வருது. எங்களுக்கு கன்னியாகுமரியில இருந்துதான் வருது. ராமநாதபுரம், கீழக்கரை, சித்தார்கோட்டை, தொண்டி ஏரியாவுக்கு நிறைய ஹவாலா பணம் வரும். அந்த சப்ளையர்களிடம் உடனுக்குடன் நாங்க கை மாற்றிவிடுவோம். இந்த மூணு, நாலு மாசத்துல 10 கோடி ரூபாய் அளவுக்கு புழக்கத்தில் விட்டிருக்கிறோம்'' என்றார்களாம் பிடிபட்டவர்கள்.

இவர்கள் பிடிபட்ட இரண்டாம்நாளே, செய்தித்தாள்களில் விஷயம் வெளியானதால், இவர்களுடைய கஸ்டமர்கள் எச்சரிக்கையாக தலைமறைவாகிவிட்டார்கள்.

இவர்களுக்குப் பிறகு, சென்னை தாம்பரத்தில் ஜமீல் என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

""சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் ஊர்களைக் குறிவைத்தே கள்ளநோட்டுக் கும்பல் செயல்படுது. ரியல் எஸ்டேட்காரர்கள், நகைக் கடை, கல்விக்கடை முதலாளிகள் இந்த நெட் வொர்க்கில் தொ டர்பில் இருப்ப தாகத் தெரிகிறது. தகுந்த ஆதாரம் தேடிக்கொண்டிருக்கிறோம். நிச்சயம் முக்கியப் புள்ளிகள் மாட்டுவார்கள்'' என்கிறார்கள் க்யூ பிராஞ்ச் அதிகாரிகள். இராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளை பார்த்தாலே, சராசரி மக்கள் மிரள்கிறார்கள். அந்த அளவுக்கு கள்ள நோட்டுப் புழக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment