Sunday, August 1, 2010

பூவரசி தொடர்பு! ஒத்துக்கொண்ட ஆதித்யா அப்பா!




"எனக்கும் சிறுவன் ஆதித்யா கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லீங்க. நான் நிரபராதி. ஆதித்யாவோட அம்மா அனந்தலட்சுமி ஹவாலா மோசடி பண்ணினதால யாரோ குழந்தையை கொலை செஞ்சிருக்காங்க. ஜெயக்குமார் என்னை கர்ப்பமாக்கி ஏமாற்றினதை மறைக்க... இந்தக் கொலையில் சம்பந்தப்படுத்தி என்னை பலிகடாவாக்கிடுச்சு ஜெயக்குமார் குடும்பம்'' -சிறுவன் ஆதித்யா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பூவரசி இப்படி கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய... இவ்வழக்கு மீண்டும் பரபரப்பாகியிருக்கிறது.

சிறுவன் ஆதித்யாவை தொலைத்து விட்டேன்... ஆதித்யாவின் அப்பா ஜெயக்குமாரே மகனை கொன்றுவிட்டார்... என்று முன்னுக்கு முரணான ஸ்டேட்மென்ட்களை கொடுத்த பூவரசி கடைசியாகத்தான் காதலன் ஜெயக் குமாரை பழிவாங்க... அவரது மகன் ஆதித்யாவை கொலை செய்து சூட்கேஸில் வைத்து வீசியதாக ஒப்புக்கொண்டார். ஆனால் இப்போது... இப்படி!

பூவரசிக்கும் ஜெயக்குமாருக்கும் அப்படி என்னதான் தொடர்பு? ஜெயக்குமாரின் குழந்தையை பூவரசி ஏன் கொலை செய்ய வேண் டும்? -இதுவரை இந்தக் கேள்வி களுக்கு மீடியாக்களிடம் வாய் திறக்காத ஆதித்யாவின் தந்தை ஜெயக்குமாரை தேடிச்சென் றோம்.

காலிங்பெல்லை அழுத்தியதும் சோகம் அப்பிய முகத்துடன் கதவைத் திறந்த சிறுவன் ஆதித்யாவின் தாய் அனந்தலட்சுமி, "நக்கீரன்' என்றதும் உள்ளே அழைத்தார். பேசத் தொடங்கு வதற்கு முன்பே அவரின் கண்களில் பீறிட்டு வருகிறது அழுகை. துக்கம் குறையாத குரலில் ""ஹவாலா மோசடின்னா என்னங்க? ம்... இப்படி ஒரு கொலையையும் செஞ்சுட்டு என் கணவர் மேல பழியைப் போட்டவ... இப்போ என் மேலயும் அபாண்டமா பழியை சுமத்தி நொந்த மனசை இன்னும் நோகடிக்கிறா.

வர்ற செப்டம்பர் 25-ந் தேதி அவனுக்கு நாலாவது பிறந்த நாள். எங்களோட ரெண்டு பிள்ளைங்களோட பிறந்தநாளையும் ஏதாவது ஒரு ஆதரவற்ற குழந்தைகள் மையத்துலதான் கொண்டாடுவோம். ஆனா இந்த வருஷம் அந்தப் படுபாவி பூவரசியால...'' என்று அவர் குமுறும்போது நம் நெஞ்சமும் கனத்துவிடுகிறது.

அருகிலிருந்த ஜெயக்குமாருக்கு மகனை பறிகொடுத்த சோகம்... "அதுக்கு நீதாண்டா காரணம்' என்று போலீஸ் விசாரணையில் பூவரசியின் வாதம்... என தலை துவண்டு போயிருந்தவர், மெல்ல பேசத் தொடங்கினார்.

""அவ்வளவு பிரிலியண்டான பிள்ளைங்க ஆதி. "மம்மி வயித்துல ஒரே புழுக்கமா இருந் துச்சு ஏ.சி. வேற இல்ல... அதான் வெளியில வந்துட்டேன்'பான். "வயித்துக்குள்ள இருக்கும் போது பாய் பட்டன், கேர்ள் பட்டன்னு ரெண்டு இருந்துச்சு. அதுல பாய் பட்டனை ப்ரஸ் பண் ணினதாலதான் நான் பையனா பொறந்தேன்'னு ரொம்ப ஸ்வீட்டா பேசுவான். ஒரு நல்ல அறிவாளியா வரவேண்டிய ஒரு பிள்ளையை இப்படி அநியாயமா...'' என்று குலுங்கிக் குலுங்கி அழுதவரை ஆசுவாசப்படுத்தினோம்.

பிறகு... ""இங்க பாருங்க சார்... இனியும் பொய் சொல்லாதீங்க. இந்த மாதிரி எத்தனையோ கேஸ்களை பார்த்துட்டோம். உங்கள் புள்ள ஆதித்யா மேல நீங்க உண்மையிலேயே அன்பும் பாசமும் வெச்சிருந்தா இனியும் மறைக்காம உண்மையைச் சொல்லுங்க'' என்று நாம் கேட்டதும் , ஒரு சிறிய அமைதிக்குப் பிறகு ""ஒரே ஆபீஸ்ல ஒர்க் பண்ணிக்கிட்டிருந்தாலும் பூவரசிக்கும் எனக்கும் எந்தப் பழக்கமும் இல்லாமத்தான் இருந்தது. 2009 மார்ச் மாசம்தான் எனக்கு கீழ அஸிஸ்டெண்ட் சேல்ஸ் மேனேஜரானா பூவரசி. ரொம்ப பிர்லியண்டா ஒர்க் பண்ணுவா. அப்போதான் எங்க ரெண்டுபேருக் குள்ள அடிக்கடி பேசக்கூடிய சூழல் ஏற்பட் டுச்சு. அப்போதான் "எங்கப்பா, அம்மா, அண்ணன், தம்பி எல்லோரும் ஆக்ஸி டெண்ட்ல இறந்துட்டாங்க. எனக்குன்னு யாரு மே இல்ல. ஹாஸ்டலில் தங்கிதான் வாழ்க் கையை ஓட்றேன். இதனால எட்டு தடவை சூஸைட்பண்ணிக்க ட்ரைபண்ணியிருக்கேன்'னு சொன்னா. அப்போதான் அவமேல எனக்கு இரக்கம் வர ஆரம்பிச்சது.

அந்த இரக்கம்தான் அடிக்கடி ஃபோன்ல... நேர்ல சந்திச்சு பேசிக்கக்கூடிய நட்பை உருவாக்கி கடைசியில் அடிக்கடி செக்ஸ் வெச்சுக்கிற லெவ லுக்கு கொண்டு போயிடுச்சு'' என்று உண்மையை நம்மிடம் ஒப்புக்கொண்டவர், மேலும் தொடர்ந்தார்.


""நான் வேலை பார்த்துக்கிட்டிருந்த ஆபீஸ்லயிருந்து வேற ஒரு இன்சூரன்ஸ் கம்பெனியில வேலைக்கு ஜாயின்ட் பண்ணினேன். அங்க சனிக் கிழமையில் ஆதித்யாவை ஆபீசுக்கு கூட்டிக்கிட்டு வரும்போது அவனை அவ வெளியில் கூட்டிட்டுப் போய் வருவா. போரூர் மணப்பாக்கத்துல தனக்குன்னு ஒரு வீடு கட்டிக்கிட்டிருக்கிற பூவரசி, வேலை செஞ்ச ஆபீஸ்ல ப்ராப்ளம்னு வேலையை விட்டு நின்னவ... வீட்டுக்காகவும் செலவுக்காகவும் அடிக்கடி பணம் கேட்டு டார்ச்சர் கொடுக்க ஆரம்பிச்சா. நானும் கஷ்டப்படுறாளேங்கிறதுக்காக பணம், மனைவியின் நகைகளை கொடுத்திருக்கேன். முத்தூட் ஃபைனான்ஸ்லதான் அடகு வெச்சிருக்கா.

ஒரு கட்டத்துல என் மனைவிக்கு சந்தேகம் வந்துடுச்சு. இனிமே என் மனைவியும் குடும்பமும் முக்கியம்னு நான் அவளை அவாய்டு பண்ண ஆரம்பிச் சிட்டேன். பணம் கொடுக்கிறதையும் நிறுத்திட்டேன். பணம் கேட்டு நச்சரிச்சதால அவளுக்கு வேலையை வாங்கிக் கொடுத்துட்டா பிரச்சினை முடிஞ்சதுன்னு மதுரையில எங்க பிரான்ச் ஆபீசுக்கு ரெகமண்ட் பண்ணினேன். ஆனா உழைக்காம எங்கிட்டே யிருந்து பணம் கிடைக்குதுங்கிற சுகத்துல... அவள் சோம்பேறியாகி நான் சொன்ன வேலைக்கும் போக மறுத்துட்டா. ஆனா அவளை அவாய்டுபண்ணி பணம் கொடுக்கிறதை நிறுத்த ஆரம்பிச்சதும் என் மேல உள்ள கோபத்தை துளிக்கூட வெளிப்படுத்தாம இருந்தா. அதனால தான் அவளை நம்பி என் குழந்தையை கொடுத் தனுப்பினேன். ஆனா... இப்படி வெளிப்படுத்து வான்னு'' ...குமுறி அழ ஆரம்பித்தவரிடம் ""உங்க குழந்தையை பூவரசி கொலை பண்றதுக்கு நீங்களும் ஒரு காரணம்தானே?'' என்று நாம் கேட்டவுடன் கைகளை முகத்தில் மறைத்துக் கொண்டு அழுகிறார் ஜெயக்குமார்.

ஒன்றும் தெரியாத பச்சிளம் குழந்தையை கொடூரமாகக் கொன்ற கொலைக்கு எந்த காரணங்களையும் சொல்லி நியாயப் படுத்த முடியாது.

No comments:

Post a Comment