Sunday, August 8, 2010

கள ஆய்வில் இம்முறை இடம்பெறுவது.... நெல்லை மண்டலம்.


சபாஷ் சரியான போட்டி... என்ற பிரபல சினிமா வசனத்தைத்தான் நினைவுபடுத்துகிறது தமிழக அரசியல் களம். எதிர்க்கட்சித் தலைவர் எந்த இடத்தில் கூட்டம் திரட்டி கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தினாரோ அதே இடத்தில் அதற்குப் பதில் தரும் வகையில் கூட்டம் திரட்டி பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்தியிருக்கிறார் ஆளுங் கட்சியின் தலைவர். நாளொரு போராட்டத்தை எதிர்க்கட்சி நடத்த, எதிர்க்கட்சித் தலைவரைக் கண்டித்து ஆளுங்கட்சியின் இளைஞரணி மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தியிருக்கிறது. இந்தப் போட்டா போட்டிக்கு என்ன காரணம் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

இன்னும் ஒரேயொரு சட்டமன்றக் கூட்டத் தொடர் மட்டும்தான் மிச்சமிருக்கிறது. அதன்பின், அடுத்த ஐந்தாண்டுகள் சட்ட மன்றமும் ஆட்சி நிர்வாகமும் யார் கையில் என்பதை நிர்ணயம் செய்யும் பொதுத்தேர்தல் வந்துவிடும். அதற்காகத்தான் இருபெரும் கட்சிகளும் வரிந்து கட்டுகின்றன. இரண்டு கட்சிகளுடன் கூட்டணியில் உள்ள கட்சிகளும் தேர்தல் கணக்குகளில் தீவிரமாக இருக்கின்றன. கட்சிகள் வேகம் காட்டி வரும் நிலையில், மக்களிடம் அவற்றிற்கு என்ன செல்வாக்கு இருக்கிறது என்பதை உங்கள் நக்கீரன் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இந்தக் கள ஆய்வில் இம்முறை இடம்பெறுவது.... நெல்லை மண்டலம்.

மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் தாமிரபரணியின் பாசனப் பகுதிகளை உள்ளடக்கிய திருநெல்வேலி மாவட்டமும், கரிசல் பூமியான விருதுநகர் மாவட்டத்துடன், மதுரையின் எல்லையில் உள்ள சிலபகுதிகளுமே நமது கள ஆய்வில் நெல்லை மண்டலம் என வரையறுக்கப்பட்டுள்ளது. திரு நெல்வேலி, தென்காசி, விருதுநகர் ஆகிய 3 நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்ட இம்மண்டலத்தில் ஆலங்குளம், திருநெல்வேலி, அம்பா சமுத்திரம், பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி, திருமங்கலம், திருப்பரங்குன்றம் என 18 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.

வேளாண்மை, தீப்பெட்டி-பட்டாசு தொழில், பீடி உற்பத்தி, சிறு வணிகம் உள்ளிட்டவையே மக்களின் வாழ்வாதாரமாக உள்ள இந்த மண்டலத்தில் திருநெல்வேலி-தென்காசி நாடாளு மன்றத் தொகுதிகள் ஒரு மாவட்டத்திலும், விருது நகர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சட்ட மன்றத் தொகுதிகள் விருதுநகர்-மதுரை மாவட் டங்களுக்குள்ளும் அடங்கியிருப்பதால் அரசியல் ரீதியான மக்களின் மனநிலையில் பல வித மாற்றங்களைக் காண முடிகிறது. நமது நேரடி கள ஆய்வில் இதனை வெளிப்படுத்திய இந்த மண்ட லத்து மக்கள், தேர்தலில் எடுக்கவிருக்கும் முடிவு தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

கட்சிரீதியாக யாருக்கு எவ்வளவு செல்வாக்கு என்பது வரைபடம் மூலம் காட்டப்பட்டுள்ளது.


திருநெல்வேலி-தென்காசிநிரந்தரத் தொழிற் சாலை, தொலை நோக்குத் திட்டங்கள் எதுவுமின்றி விவசாய மண்ணையே நம்பி நிற்கும் விவசாயத் தொழிலாளர்கள் 8 லட்சம் பேர் இந்த இரண்டு எம்.பி. தொகுதிக்குட்பட்ட 12 சட்டமன்றத் தொகுதிகளில் இருக்கிறார்கள். அதுபோல, பீடித் தொழிலாளர்கள் 5 லட்சம் பேர் உள்ளனர். மற்ற அமைப்புசாரா தொழிலாளர்களை யும் கணக்கிட்டால் உழைப்பை நம்பி அன்றாடம் பிழைப்பு நடத்தும் தொழிலாளர் வர்க்கத்தைக் கொண்ட பகுதியாக இது இருக்கிறது.

ஆளுங்கட்சி-எதிர்க்கட்சி இரண்டிலுமே தனிப்பட்ட செல்வாக்கு கொண்ட பிரமுகர் களைவிட, கட்சியின் செல்வாக்கே இங்கு வாக்கு பலமாக இருக்கிறது. 2006 சட்டமன்றத் தேர்தலில் வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய இரண்டு தொகுதிகளைத் தவிர மற்ற தொகுதிகள் அனைத்தும் தி.மு.க. கூட்டணிக்கு சாதகமாக அமைந்தது. 2009 எம்.பி. தேர்தலில், தென் மண்டலத்தில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்ற ஒரே தொகுதி, இம்மண்டலத்திலுள்ள தென்காசி தொகுதிதான்.

நெல்லை மாவட்டத்தில் ஜாதிரீதியான பலத்தைக் கணக்கிட்டால் முக்குலத்தோர், தலித், நாடார், பிள்ளை, முதலியார், முஸ்லிம், கிறிஸ்தவர் என்ற வரிசைப்படி செல்வாக்கு அமைந்துள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் இந்த 3 கட்சிகளும் ஜாதி வாக்குகளை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்வதில் போட்டி போடுகின்றன. தற்போது தே.மு.தி.க.வும் இந்த வரிசையில் இடம்பிடிக்கத் தொடங்கியிருக்கிறது.

கொடியங்குளம் கலவரமும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சூழல்களும் தலித் மக்களான தேவேந்திரகுல வேளாளர் சமுதா யத்தினரை அ.தி.மு.க.விடமிருந்து வெகு தொலைவுக்கு கொண்டு செல்ல, முக்குலத்தோர் சமுதாயத்தினர் அ.தி.மு.க.வை தங்களுக்கான கட்சியாகக் கருதி வாக்களித்தனர். இம் மாவட்டத்தில் உள்ள முக்குலத்தோர் சமுதாயத்து அ.தி.மு.க. பிரமுகர்கள் அண்மைக்காலமாக மாற்று முகாம்களுக்கு தாவுவதும், கட்சிப் பணிகளில் பழைய சுறுசுறுப்பைக் காட்டாமல் ஒதுங்கியிருப்பதும் அ.தி.மு.க.வின் பழைய செல்வாக்கு நீடிக்கிறதா என்ற கேள்வியை எழுப்புவதாக இருக்கிறது. இது ஆளுந்தரப்புக்கு சாதகமாக உள்ளது.

அதேநேரத்தில், இரண்டாவது பெரிய சமுதாயமான தலித் மக்களில் பெரும்பான் மையாக உள்ள தேவேந்திர குல வேளாளர்களின் வாக்குவங்கி புதியதமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பக்கம் இருக்கிறது. அ.தி.மு.க.வும் புதிய தமிழகமும் அமைத்திருக்கும் கூட்டணி, எதிர்க்கட்சி அணிக்கு புதிய பலத்தைக் கொடுத்துள்ளது. இந்த புதிய உறவு, முக்குலத்தோரிடம் அதிருப்தியையும், கட்சிசாராத தலித் மக்களிடம் வரவேற்பு பெறாத நிலைமையையும் உருவாக்கியிருப்பதை கவனிக்க வேண்டியுள்ளது. தலித் மக்களில் மற்ற இரண்டு பிரிவினரான ஆதி திராவிடர்களும் அருந்ததியர்களும் தி.மு.க. அணிக்கு சாதகமாக இருக்கிறார்கள்.


நாடார் சமுதாயத்தினரின் வாக்குகளை தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி பெருமளவில் கொண்டிருந் தாலும், கள் இறக்க இதுவரை அனுமதி வழங்கப் படாததால் ஏற்பட்டுள்ள அதிருப்தியை தனக்கு சாதகமாக்குவதில் அ.தி.மு.க. தீவிரமாக இருக்கிறது. முஸ்லிம் மக்களின் வாக்கு வங்கியை சமுதாய ரீதியாக ஒருங்கிணைக்கும் முயற்சியில் த.மு.மு.க.வின் மனிதநேய மக்கள் கட்சி தீவிரமாக உள்ள அதே நேரத்தில், தி.மு.க. அரசுதான் தங்களுக்கு சாதகமானது என்ற எண்ணம் முஸ்லிம் மக்களிடம் இருப்பது ஆளுங்கட்சிக்கு பலம். பாளையங்கோட்டை உள்ளிட்ட கிறிஸ்தவர்கள் நிறைந்துள்ள பகுதிகளில் பெரும்பாலான வாக்குகள் தி.மு.க. பக்கமே இருக்கிறது. விவசாயத் தொழிலாளர்கள், பீடித் தொழிலாளர்கள் நிறைந்த பகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனி செல்வாக்குடன் திகழ்கின்றன.

ம.தி.மு.கவின் வாக்குவங்கி முக்கியத் துவம் பெறும் மண்டலமாக இது இருக்கிறது. வைகோவின் சொந்த மாவட்டம் என்பதும் இதற்கு முக்கிய காரணம். இரண்டு கழகங் களையும் அதனுடன் கூட்டணியில் இருப்பவர் களையும் விரும்பாதவர்களின் வாக்குகளை அறுவடை செய்யும் கட்சியாக தே.மு.தி.க. இருக்கிறது. காங்கிரசின் பாரம் பரியமான வாக்குகள் தி.மு.க அணிக்கு பலம்.

விலைவாசி உயர்வு, மின்வெட்டு, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகிய பொதுவான பிரச்சினைகளுடன், கோம்பை ஆறு, வாழமலை ஆறு, உள்ளாறு ஆகியவற்றில் தடுப்பணை கட்டி, பாசனப் பகுதிகளை மேம்படுத்தவேண்டும் என்ற கோரிக்கை இன்று வரை கவனிக்கப்படாமல் இருக்கிறது. தி.மு.க. அரசு வாக்களித்த, பூக்களிலிருந்து சென்ட் எடுக்கும் தொழிற்சாலை இது வரை அமைக்கப்படவில்லை. நாங்குநேரி தொழில்நுட்ப பூங்கா திட்டமும் நிறைவடையவில்லை. இவையெல்லாம் ஆளுங்கட்சிக்கு பாதகமான அம்சங்கள்.

அரசின் இலவச திட்டங்கள், கட்சிக்கு அப்பாற்பட்டு கலைஞருக்கு உள்ள செல்வாக்கு இவையெல்லாம் ஆளுந்தரப்புக்கு சாதகமாக இருப்பதால் தேர்தல் ரேஸில் லேசாக மூக்கை முன் நீட்டுகிறது தி.மு.க.

விருதுநகர்

தீப்பெட்டித் தொழிலும் பட்டாசுத் தொழிலும் நிறைந்துள்ள கரிசல் பூமி. தொகுதி சீரமைப்பின்படி விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளில் சமுதாய ரீதியாக மெஜாரிட்டி பலம் கொண்டவர்கள் முக்குலத்தோர். இரண் டாமிடத்தில் நாயக்கர் சமுதாய வாக்குகளும், அதையடுத்து நாடார் வாக்குகளும், பின்னர் தலித் வாக்குகளும் வரிசை கட்டி நிற்கின்றன. உரசினால் பற்றிக்கொள்ளும் என்கிற அளவில் சாதிக்கலவர அபாயம் நிறைந்த பகுதி என்பதால், அரசியல் கட்சிகள் மிக ஜாக்கிரதையாகவே இந்த வாக்குகளை அறுவடை செய்வதில் கவனம் செலுத்துகின்றன.

எம்.ஜி.ஆர். காலத்திலிருந்து அ.தி.மு.க. கோட்டை என பெயர் பெற்ற விருதுநகர் ஏரியாவில் மெல்ல மெல்ல ஓட்டை போட்டு வருகிறது தி.மு.க. அரசியல் கட்சி பிரமுகர்களின் தனிப்பட்ட செல்வாக்கு இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தி.மு.க அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்., காங்கிரஸ் எம்.பி. மாணிக் தாக்கூர், தே.மு.தி.க.வின் மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் ஜாதி பலத்தாலும் பணபலத்தாலும் தேர்தலுக்கான காய்களை நகர்த்தி வருகிறார்கள். இதுபோல அ.தி.மு.க.வுக்கு பெயர் சொல்லும் வகையில் லோக்கல் பிரபலங்கள் யாருமில்லாதது மைனஸ் பாயிண்ட் என்றாலும், எம்.ஜி.ஆருக்காகவும் இரட்டை இலைச் சின்னத்துக்காகவுமே இன்றளவும் அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்போர் நிறைந்திருப்பது அக்கட்சியின் பலமா, அதிர்ஷ்டமா என்று அந்தக் கட்சிக்காரர்களே விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தனிப்பட்ட முறையில் அதிக வாக்குபலத்தைக் கொண்ட கட்சியாக அ.தி.மு.க.வே இங்கு விளங்குகிறது. எனினும், 6 சட்டமன்றத் தொகுதிகளில் திருமங்கலம், சாத்தூர், அருப்புக்கோட்டை ஆகிய 3 தொகுதிகள் தி.மு.க. வசமும், விருதுநகர், சிவகாசி இரண்டும் ம.தி.மு.கவிடமும், திருப்பரங்குன்றம் மட்டும் அ.தி.மு.க. வசமிருப்பது, அக்கட்சிக்கு உள்ளூர் பிரபலங்கள் இல்லாததன் பலவீனத்தை வெளிப்படுத்துகிறது.

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தலித் வாக்குகளில் பெரும்பாலானவை தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தினருடையது. புதிய தமிழகத்துடனான கூட்டணியால் அவை தங்களுக்குச் சாதகமாக திரும்பும் என நம்புகிறது அ.தி.மு.க. அதே நேரத்தில், அ.தி.மு.க.வை தங்கள் சமுதாய கட்சியாக கருதிவரும் முக்குலத்தோரிடம் இதற்கு பரவலான ஆதரவை காணமுடியவில்லை. டாக்டருக்கு ஜெ தரும் மரியாதையை, அ.தி.மு.கவில் உள்ள முக்குலத்தோர் எங்களுக்குத் தருவார்களா என்ற சந்தேகம் புதிய தமிழகத்தின் தொண்டர்களுக்கும் இருக்கிறது. சாத்தூரில் போட்டியிட்டு ஜெயித்து முதல்வரானவர் காமராஜர் என்பதால் அந்த சென்ட்டிமென்ட்டில் இம்முறை சாத்தூரில் வைகோ போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு ம.தி.மு.க.வினரிடம் உள்ளது. தேர்தல் களத்தில் வியூகம் வகுத்து செயல்படுவதில் வல்லவரான தி.மு.க. அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். என் னென்ன அஸ்திரங்களை எடுக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஆளுந்தரப்பிடம் உள்ளது.

காமராஜர் பிறந்த மண் என்பதால் காங்கிரசுக்கு இருக்கும் நிலையான செல்வாக்கும், ம.தி.மு.க.வின் வாக்குவங்கியும், தே.மு.தி.க.வின் சீரான வளர்ச்சியும் தேர் தல் களத்தில் முக்கிய சக்திகளாக இருக்கும். மாநிலம் தழுவிய பிரச்சினைகளான விலைவாசி, மின்வெட்டு ஆகியவற்றுடன் சாத்தூரில் சிறப்புபொருளாதார மண்டலம் அமையாதது, சிப்காட் தொழிற்சாலைகளைக் கொண்டுவராதது, சிவகாசியில் நலிந்துவரும் தீப்பெட்டி-பட்டாசு-அச்சுத் தொழில் ஆகியவற்றின் மேம்பாட்டுக்கு கவனம் செலுத்தாதது, அருப்புக்கோட்டை விசைத் தறி நெசவுத் தொழில் சம்பந்தமான பிரச்சினைகளைத் தீர்க்காதது உள்ளிட்டவையும் குடிநீர் பிரச்சினை யும் ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையை உண்டாக்கியிருக்கும் நிலையில், மக்கள் நலத் திட்டங்களால் பலன் பெற்றவர்களின் ஆதரவு ஆளுங்கட்சிக்கு சாதகமாக உள்ளது.

நெல்லை மண்டலத்தில் உள்ள 18 சட்டமன்றத் தொகுதிகளில் இரு அணிகளுமே வரிந்து கட்டுகின்றன. கூட்டணி மாற்றங்கள், சமுதாய ரீதியான வாக்குகளின் ஒருங்கிணைப்பு, உள்ளூர் பிரச்சினைகளின் தாக்கம் இவற்றைப் பொறுத்தே முடிவுகள் அமையும் என்பது நமது நேரடி கள ஆய்வு வெளிப்படுத்தும் யதார்த்த நிலவரம்.

(வரும் இதழில் குமரி மண்டலம்)

No comments:

Post a Comment