Sunday, August 1, 2010

குளிர் காய கலவர நெருப்பு?


விருதுநகர் மாவட்டம் -வத்றாப் புதுப்பட்டி.

பத்து ஆண்டுகளுக்கு முன் சாதிக் கலவரம் மூண்டு ஏழு பேரைப் பறிகொடுத்த கிராமம். ஆதிதிராவிடர்களுக்கும், தேவேந்திரர்களுக்கு மிடையே இங்கு அவ்வப்போது பகைமையும், வன்மமும் தலைதூக்கினாலும் கூட, ஒருமனதாக தேவேந்திரர் ஒருவரை அடுத்தடுத்து பேரூராட்சித் தலைவர் ஆக்கியதில் இருதரப்பும் கரம் கோர்த்தே நின்றது. நீடித்து வந்த இந்த ஒற்றுமையைக் குலைக்கும் விதமாகத்தான், பேருந்து ஒன்றில் பயணித்தபோது வாய்ச் சண்டையில் ஆரம்பித்த விவகாரம் ஒன்று அடிதடியில் முடிந்தது. இதில் தாக்கப்பட்ட குமாருக்காக, தேவேந்திர மக்கள் ஆதி திராவிடர்களோடு மோத ஆயத்தமாக, ஸ்பாட்டுக்கே வந்த வத்றாப் இன்ஸ்பெக்டர் ஆதம் அலி, "சாதாரண விஷயத்தைப் பெரிதுபடுத்தலாமா? உயிரை விட ஏன் துடிக்கிறீர்கள்?' என்று கடுமையாக எச்சரிக்கிறார். அவரது அறிவுரைக்கு செவி சாய்க் காமல் உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்த இருதரப்பும் அரிவாளைத் தூக்க... நிலைமையைச் சமாளிக்க இன்ஸ்பெக்டர் ஆதம்அலி வானத்தை நோக்கிச் சுட வேண்டியதாயிற்று. இந்தக் களேபரத்தில் பால்காரர் கருப்பையா வெட்டப்பட்டு பிணமானார்.

கைது நடவடிக்கைகள், அதிக அளவில் காக்கிகளைக் குவித்து பந்தோபஸ்து போட்டும் கூட, "பலியான தேவேந்திரர் உயிருக்கு பழிக்கு பழி வாங்காமல் ஓய மாட்டோம்' என ஒரு கும்பல் வெறித்தனமாகப் புறப்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில்தான், பக்கத்து கிராமமான மாத்தூரில் இரவு நேரத்தில் வெடிகுண்டு வீசி ராமு என்ற சலவைத் தொழிலாளியைக் கொன்று விடுகிறார் கள். முக்குலத்தோரான முத்துராஜுக்கும் வெட்டு விழுகிறது. இருட்டில் அடையாளம் தெரியாமல் சாதி மாறி விழுந்த இக்கொலை பிற சமுதாய மக்களையும் உஷ்ணப்படுத்த, ஐ.ஜி. கிருஷ்ணமூர்த்தியே வ.புதுப்பட்டிக்கு வந்து விசாரணை மேற்கொண்டிருக்கிறார்.

கடும் பீதி நிலவிய வ.புதுப்பட்டிக்கு நாம் சென்றபோது பெரியவர் ஒருவர்,

""தலித்து மக்கள் ஜனாதிபதியாக்கூட ஆயிருக்காங்க. பெரிய பெரிய ஜட்ஜா இருக்காங்க. சட்டமேதை அம்பேத்கர் பிறந்த சமூகம் இது. படித்து முன்னேறிக்கிட்டிருக்கிற இந்தக் காலகட்டத்துல உப்புப் பெறாத விஷயத்துக்கெல்லாம் அருவாளத் தூக்கிட்டு அலையுறது ரொம்பக் கேவலமா இருக்கு. இந்த ரெண்டு கொலையவும் சாக்கா வச்சு இந்த விருதுநகர் மாவட்டத்துல பெரிய அளவுல சாதிக் கலவரத்த தூண்டிவிட ஒரு கட்சி தயாராயிட்ட தா பேசிக்கிறாங்க. கலவர நெருப்புல குளிர் காயறதுன்னா அந்தக் கட்சிக்கு அம்புட்டு சுகம். அத இந்த நாடு பார்க்காம இல்ல. அதோடு கூட்டணி சேர்ந்துருக்கறவங்க இந்தப் பிரித் தாளும் சூழ்ச்சில சிக்கிடக்கூடாது'' என்றார் பதற்றத்துடன்.

விருதுநகர் மாவட்ட எஸ்.பி. பிரபாகரன் நம்மிடம் ""கலவரத்தை உண்டுபண்ண யார் முற்பட்டாலும் அவர்கள் மீது காவல்துறை கடு மையா நடவடிக்கை எடுக்கும். குற்றச் செயலில் ஈடுபடுவோருக்கு நிச்சயம் நீதிமன்ற தண்டனை வாங்கிக் கொ டுப்போம்'' என்றார் உறுதியுடன்.

ஒருதாய் மக்களாக வாழ கிராமங்கள் உறுதி பூண வேண்டிய தருணம் இது.

No comments:

Post a Comment