Thursday, August 5, 2010

ராஜபக்சேவுக்கு போன தமிழர்கள் பணம்!


""ஹலோ தலைவரே... தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி பற்றி காங் கிரஸ் கட்சியிலிருந்தே கருத்துகள், விமர்சனங்கள் வந்துக் கிட்டே இருப்பதன் பின்னணி பற்றித்தான் முதல் தகவல்.''

""சோனியா முடிவு செய்த கூட்டணி பற்றி யாரும் பேசக்கூடாதுன்னு தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு உத்தரவு போட்டிருக்காரே?''

""தமிழக காங்கிரசுக்குள் எத்தனை தலைவர்கள் இருக்காங்கன்னு தொண்டர்களாலேயே கணக்கு சொல்ல முடியாது. முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்தான் தி.மு.க.வை தொடர்ந்து விமர்சித்துக்கொண்டிருக்கிறார். மதுரையில் நடந்த காங்கிரஸ் கட்சி கூட்டத்திலும் அதே பாணியில் இளங்கோவன் பேச, உடனே ஆரூண் எம்.பி அதற்குப் பதில் சொல்லும்விதத்தில், இந்தக் கூட்டணிதான் வலிமையானது. இது நீடிக்கணும்னு சொன்னார். ஆரூணுக்கு எதிரா கோஷங்கள் கிளம்பிடிச்சி. தி.மு.க கூட்டணியை ஆதரித்து யார் பேசினாலும் அவங்களை எதிர்த்து கோஷம் போடுறதுக்காக ஒரு டீம் ரெடி பண்ணப்பட்டு, இளங்கோவன் பேசும் கூட்டங்களுக்கு அவரோடு அனுப்பப் படுதாம்.''

""ராகுல்காந்தி விருப்பப்படிதான் இளங்கோவன் இப்படி தொடர்ந்து பேசுறதா அவர் வட்டாரத்திலிருந்து சொல்லப்படுதே?''

""விசாரித்தவரைக்கும் அப்படி எதுவும் இல்லை. உண்மை என்னன்னா, சசிகலா கணவர் எம்.நடராஜன், கொல்கத்தாவில் உள்ள தாஜ் பெங்கால் ஓட்டலில் அந்த மாநில கவர்னரா இருக்கும் பிரதமரின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை சந்தித்துப் பேசியிருக்கிறார். சோனியாவுக்கு எம்.கே.நாராயணன் வேண்டியவர் என்பதால, அவர்கிட்டே நடராஜன், தமிழக அரசியல் சம்பந்தமான சில சதவீத கணக்குகளைச் சொல்லி, அ.தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி அமைந்தால் வலிமையானதா இருக்கும்னு சொல்லியிருக்கிறார். அவ்வளவுதான். நட ராஜனும் இளங்கோவனும் கான்டாக்ட்டில் இருப்பதால, நாராயணனை சந்தித்தது சம் பந்தமா இளங்கோவன்கிட்டே நடராஜன் சொல்லியிருக்காராம். எம்.பி. பதவியும் இல் லாமல் மந்திரி பதவியும் இல்லாமல் தி.மு.க. மேலே வெறுப்பா இருக்கும் இளங்கோவன், தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி தொடர்வதால ரொம்ப ஆதங்கத்தோடு அதற்கு எதிரா பேசிக்கிட்டிருக்கிறார்.''

""கட்சிக் கூட்டங்களில் மட்டும் பேசிக்கிட்டிருந்தவர் இப்ப பொதுக்கூட்டங்களிலும் காரசாரமா பேச ஆரம்பிச்சிட்டாரே?''
""மதுரையில் நடந்த முன்னாள் அமைச்சர் கக்கன் நூற்றாண்டுவிழா பேச்சு பற்றித்தானே சொல்றீங்க தலைவரே... தி.மு.க.வை பொதுவா விமர்சிச்சிகிட்டிருந்த இளங்கோவன் அந்தக் கூட்டத்தில், மத்திய மந்திரியா ஆன ஒருவர், பார்லிமெண்ட்டுக்கே போக மாட்டேங்குறார்னு அழகிரியை மனசில் வச்சிக்கிட்டுப்பேச அது மேடையிலிருந்த மற்ற காங்கிரஸ் தலைவர்களுக்கே ரொம்ப தர்மசங்கடத்தை உண்டாக்கிடிச்சி. கட்சிக்கூட்டங்களில் காங்கிரஸ் தொண்டர்களுக்கு உணர்வேத்துற மாதிரி பேசுறது வேற, பொதுக்கூட்டங்களில் தோழமைக் கட்சியினர் பற்றி பேசுறது வேறன்னு ஜி.கே.வாசன், ப.சிதம்பரம், தங்கபாலு மூணு பேரும் இளங்கோவன் பேச்சு பற்றி தங்களுக்குள்ளே விவாதிச்சதோட, இதையெல்லாம் ராகுல் சொல்லித்தான் இளங்கோவன் பேசுவதாகவும் ஒரு பில்டப் நடக்குது. அ.தி.மு.க.வோடு காங்கிரஸ் கூட்டணி அமைப்பதில்லைங்கிறதில் ராகுல் 100% உறுதியா இருக்காரு. தனிச்சி நிற்கலாமான்னு யோசிச்சு அவர் மேற்கொண்ட ஆய்வுகள் சாதகமா இல்லை. அதனால, தி.மு.க.வுடன்தான் கூட்டணின்னு தன் அம்மா பாணியிலேயே ராகுல் செயல்படுறாருன்னு மூணு தலைவர்களும் டெல்லி நிலவரம் பற்றி பேசியிருக்காங்க.''

""அப்படின்னா இளங்கோவன் நிலவரம்?''

""கூட்டணி பற்றி யாரும் பேசக்கூடாதுன்னு தங்கபாலு பேட்டி கொடுத்தது இளங்கோவனுக்காகத் தான். ஆனால், பல காரணங்களால் விரக்தியில் இருக்கும் இளங்கோவன் தரப்போ, தொடர்ந்து தி.மு.க. விமர்சனங்களை வேகப்படுத்துற ஐடியாவில் இருக்குதாம். இந்தப் பிரச்சினையை உடனடியா மேலிடத்திடம் கொண்டுபோகவும் தமிழக காங்கிரஸ் தரப்பால் முடியலை. பார்லிமெண்ட்டில் எதிர்க்கட்சிகள் அனல் கிளப்பிக்கிட்டிருக்கிற நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியாவும், ராகுலும் எங்கேன்னு கட்சிக்காரர்களுக்கே தெரியாமல் இருந்தது. சோனியாவின் அம்மா உடல்நலம் சரியில்லாமல் அமெரிக்காவில் அட்மிட்டாகியிருந்தார். அவருக்கு ஃப்ளு காய்ச்சல். சீரியஸா இருக்காங்க. அதனால சொந்த நாடான இத்தாலிக்கே அனுப்பிட்டாங்க. சோனியா, பிரியங்கா, ராகுல் மூவரும் அவரைப் பார்ப்பதற்காகத்தான் ரகசிய பயணம் மேற்கொண்டாங்க. ஆயுதபேரம், மோசடின்னு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய சந்திராசாமியார் டெல்லி ஆஸ்பிட்டலில் ஐ.சி.யூ. வார்டில் அட்மிட்டாகியிருக்கிறார். அவருக்கும் ஃப்ளு காய்ச்சலாம்.''

""பரபரப்புன்னு சொன்னதும் இன்னொரு விஷயம் ஞாபகத்துக்கு வருதுப்பா... அரசு விழாவில் தி.மு.க. ஆட்சியைப் புகழ்ந்து பேசிய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. ராஜசேகரன் கட்சி மாறப் போறதா அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாயிடிச்சே.. ..''

""தலைவரே... .. புதுக்கோட்டையில் முன்னாள் அமைச்சர் ரகுபதிக்கு மணிவிழா. அழகிரியும் நேரில் வந்து வாழ்த்தினார். ஸ்டாலினும் நேரில் வந்து வாழ்த்தினார். அன்னைக்கு சாயங்காலம் சமத்துவபுரம் திறப்பு, நலத் திட்ட உதவிகள்னு அரசு சார்பிலான விழா நடந்தது. அதில்தான் ஆலங்குடி சி.பி.ஐ. எம்.எல்.ஏ. ராஜசேகரன் பேசுறப்ப, மக்கள் நலத்திட்டங்களை அதிகம் நிறைவேற்றுவது கலைஞர் அரசுதான். அந்தத் திட்டங்கள் மக்கள்கிட்டே போய்ச் சேருது. என் தொகுதிக்கான திட்டங்கள் பற்றி கோரிக்கை வைத்தேன். அதையும் உடனடியாக நிறைவேற்றியிருக்காங்க. அதனால, இந்த அரசை நான் பாராட்டாம இருக்க முடியாது. பாராட்டுறேன்னு பொது மேடையில் சொன்னார். இதையடுத்துதான், மன்னார்குடி கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ சிவபுண்ணியம் பாராட்டி யதுபோல ஆலங்குடி எம்.எல்.ஏ. பேச்சும் பரபரப்பாயிடிச்சி. அவர் கட்சி தாவுற ஐடியாவில் இல்லையாம். தன்னோட மகன் திருமணத்தை அடுத்த மாதம் நடத்துறார் எம்.எல்.ஏ. அதற்கு துணை முதல்வர் ஸ்டாலினின் தேதியை எதிர்பார்த்துக்கிட் டிருக்கிறார். அதுதான் பேச்சின் பின்னணியாம்.''

""விடுதலைப்புலிகள் இயக்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்த கே.பி. என்கிற குமரன் பத்மநாபாவுக்கு இலங்கை அரசு திடீர் முக்கியத்துவம் கொடுப்பதன் பின்னணி என்னன்னு விமர்சனங்கள் கிளம்பியிருக்குதே!''

""தலைவரே.. ... புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் தங்கள் தாய்நாட்டின் விடுதலைக்காக அனுப்பிய நிதியைக் கையாண்டவர் கே.பி. இப்ப இலங்கை அரசிடம் சிக்கியிருக்கும் கே.பி., அந்தப் பணத்தையெல்லாம் ராஜ பக்சேகிட்டே கொடுத்துட்டாராம். சிங்கள அரசிடம் சிக்கிய -சரணடைஞ்ச புலிகள் பலர் சித்ரவதைக்குட்பட்டு கொலை செய்யப் பட்டாங்க. ஆனா, கே.பி.யைப் பொறுத்தவரை அவர் உயிரோடு இருப்பதற்கும், தாய்லாந்தில் உள்ள மனைவி, மகளுடன் பேசுவதற்கும், அவர்கள் இலங்கை வந்து கே.பி.யை சந்திப்ப தற்கும் சுதந்திரம் இருக்குன்னா அதற்கு காரணம் இந்த பணம்தானாம். அதனாலதான் வடகிழக்கு மாகாணங்களில் மேம்பாடு என்ற பெயரில் உருவாக்கப்பட்டிருக்கும் நர்டோ அமைப்பிலும் கே.பி.க்கு இடம் கொடுக்கப்பட்டிருக்குது. உலகத் தமிழர்களின் பணமெல்லாம் ராஜபக்சே கையில் சிக்கியிருக்குதாம்.''

""நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் புதுசா ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்காரே?''

""நடிகை அசின் ஒரு இந்திப் பட ஷூட்டிங்கிற்காக இலங்கைக்குப் போனது பற்றி எதிர்ப்பு கிளம்ப, கலைக்கு மொழி-இன பேதம் கிடையாதுன்னு அசினுக்கு சப்போர்ட்டா பேசினார் சரத். ஏற்கனவே இலங்கையில் நடந்த திரைப்பட விழாவை பாலிவுட் நட்சத்திரங்கள் புறக்கணிக்க ணும்னு தமிழ்த்திரையுலகம் தீர்மானம் போட்டப்ப சல்மான்கானும் விவேக் ஓபராயும் அதை மீறி கலந்துக்கிட்டாங்க. இப்ப, சல்மான்கான் நடிக்க ப்ரியதர்ஷன் டைரக்ட் செய்கிற "புல்லட் ட்ரெய்ன்' படத்தின் நாயகியாக ப்ரியாமணி புக் செய்யப்பட்டார். அதற்கு சல்மான்கான், இப்ப தான் தமிழ் நடிகை த்ரிஷாவை இந்திக்கு கொண்டுவந்தீங்க. அடுத்ததா, ப்ரியாமணியா? பாலிவுட் நடிகர்களை தமிழர்கள் புறக்கணிப்பாங்க. நீங்க தமிழ் நடிகைகளை இந்தியில் அறி முகப்படுத்துவீங்களான்னு ப்ரிய தர்ஷனிடம் எதிர்ப்பு காட்டி யிருக்கிறார். படத்தின் தயாரிப் பாளரும் தமிழ் நடிகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க, ப்ரியா மணிக்கு பதில் கங்கனா ரண வத்தை ஒப்பந்தம் பண்ணியிருக் காங்க.''

""கலைக்கு மொழி கிடையாதுன்னு சொன்ன சரத்குமார், இந்தியில் தமிழ் நடிகை ப்ரியாமணி கலைச்சேவை செய்ய ஆதரவுக்குரல் கொடுக்கலாமே?''

""அதைத்தான் தமிழ்த் திரையுலகம் கேள்வியா எழுப்புது. தலைவரே... அடுத்த மேட்டருக்கு வர்றேன். ஐ.ஏ.எஸ். அதிகாரி உமா சங்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதால், அவரை சில ஐ.ஏ. எஸ்.அதிகாரிகள் சந்தித்து, ஆதரவா பேசிட்டு வர்றாங்க. கிறிஸ்தவ அமைப்புகளும் இந்த விவகாரம் சம்பந்தமா முதல்வர்கிட்டே பேச முடிவு செய்திருக்குது. ஐ.ஏ.எஸ். உமாசங்கர் போலவே லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணையை எதிர்கொள்ளும் ஐ.பி.எஸ். அதிகாரி ஏ.கே.விஸ்வநாதன், ஒரு சின்ன விருந்து வைத்து, ஐ.பி.எஸ். அதிகாரிகளை அழைத்து தனக்கு ஆதரவாக செயல்படும்படி பேசியிருக்காரு.''

""எனக்கு கிடைச்ச ஒரு தகவலை சொல்றேம்ப்பா.. ..செல்வாக்கு மிக்க குடும்பத்தைச் சேர்ந்த அந்த புது ஹீரோ நண்பர்களுக்கும் பேரறிஞர் பெயரிலான நகரைச் சேர்ந்த ஒரு பெண் காக்கி அதிகாரியின் மணவாளரின் நண்பர்களுக்கும் 5 ஸ்டார் ஹோட்டல் டான்ஸில் ஒரு பெண்ணைத் தொட்டது சம்பந்தமா அடிதடி. மணவாளர் தரப்புக்குத்தான் அதிக அடியாம். அதனால் பதிலுக்குப் பதில் ஃபைட் எப்போது வேண்டுமானாலும் நடக்க லாம்ங்கிற பயத்தில், ஸ்டார் ஹோட்டல்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டிருக்குது.''

""நான் சொல்லப்போறது, அரசியலில் அபூர்வமான தகவல். மறைந்து 10 வருடமாகியும் கட்சிக்காரர்கள், பொதுமக்களால் மறக்கப்பட முடியாதவராக விளங்கும் நாஞ்சிலாரோட 10-வது நினைவுநாள் போன 1-ந் தேதி நடந்தது. அவரோட உதவியாளர் சின்னிகிருஷ்ணன் வழக்கம்போல் அன்னதானம், இலவச உதவிகள், கண்சிகிச்சை முகாம் எல்லாத்துக்கும் ஏற்பாடு செய் திருந்தார். அமைச்சர்கள் நெப்போலியன், பரிதி, ஐ.பெரியசாமி, எம்.பி. டி.ஆர்.பாலு உள்பட கட்சிக் காரர்களும் பொதுமக்களும் அதிகளவில் வந்திருந் தாங்க. அப்ப ஒரு கட்சிக்காரர், எனக்கு நாஞ்சிலாரைத் தெரியாது. இருந்தாலும் உதவி கேட்போம்னு ஊரிலிருந்து சிலரை அழைச்சிட்டு வந்து பார்த்தேன். எந்த ஊர்னுகூட கேட்கலை. கட்சிக் கரைவேட்டியைப் பார்த்ததும், வரவேற்று உபசரித்து கோரிக்கை மனுவை வாங்கிப் பார்த்தார். உடனே உதவியாளர் சின்னியைக் கூப்பிட்டு, இதை செஞ்சு கொடுப்பான்னாரு. காரியம் ஈஸியா முடிஞ்சிடிச்சி. நாஞ்சிலார் மாதிரி இப்ப உள்ள மந்திரிகளும் செயல்பட்டா நல்லாயிருக்குமேன்னு உருக்கமா பேசிக்கிட்டிருந்ததை கட்சிப்பிரமுகர்கள் உன்னிப்பா கேட்டுக்கிட்டிருந்தாங்க.''

No comments:

Post a Comment